அன்றைக்கு இருந்த நேர்மையான கோயில் கணக்குகள்!



கல்வெட்டு சொல்லும் கதைகள்

- கோடியக்கரை

மூவர் முதலிகளுள் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் கடுமையான வேடுவர்கள் வாழும் கொடுமையான இரண்டு கானகத்துப் பகுதியில் திகழும் கோயில்களில் முறையே உமாதேவியோடும், காடு கிழாள் எனப்பெறும் துர்க்கா தேவியோடும் பெருமான் யார் துணையும் இன்றி இருப்பது கண்டு மனம் பதைக்கிறார்:

‘‘மோதி வேடுவர் கூறை கொள்ளும்
முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் ஏது காவல்கொண்டு
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே’’
‘‘இடுகு நுண் இடை மங்கை தன்னொடும்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே’’
- என்றெல்லாம் திருமுருகன்பூண்டியிலும்,
‘‘கொடியேன் கண்கள் கண்டன கோடிக்
குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக
இருந்தீரே’’
‘‘கையார் வளைக் காடு காளொடும்
உடனாய்க்
கொய்யார் பொழிற் கோடியே
கோயில் கொண்டாயே’’

- எனத் திருக்கோடிக்கரை குழகர் கோயிலிலும் பாடிப் பரவியிருப்பது நம்மையும் அச்சங் கொள்ளத்தான் செய்யும்! சோழ நாட்டின் தென்கோடியில் திகழும் கடற்துறை ஊரே, கோடியக்கரை என்பதாகும். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களான திருமறைக்காடு எனப்பெறும் வேதாரண்யத்திற்கும், அகத்தியர் வழிபட்டு ஈசனின் மணக்கோலக் காட்சி கண்ட அகத்தியான் பள்ளிக்கும், தெற்காக வங்கக்கடலின் கரையில் காட்டுப் பகுதிக்குள் கோடிக் குழகர் கோயில் திகழ்கின்றது.

மணற்பாங்கான நெய்தல் நிலத்து மறைக்காடு, உப்பளங்கள் நிறைந்த அளநாட்டுப் பகுதி, மான்களும், குதிரைகளும், குரங்குகளும், கானகத்துப் பறவைகள் பலவும் வாழும் காடு ஆகியவை கடந்து சென்றால், காடு கிழாளோடு உறையும் குழகரை நாம் தரிசிக்கலாம். சோழர் கல்வெட்டுகளும், பாண்டியர் கல்வெட்டுகளும் கோடியக்கரை சிவாலயத்து ஈசனை திருக்கோடி குழகர் என்றே குறிக்கின்றன. தற்காலத்தில் அமுத கடேஸ்வரர் என்றும், குழகேஸ்வரர் என்றும் போற்றுகின்றனர்.

இத்தலத்து இறைவியை அஞ்சனாட்சி என்றும் மைத்தடங்கண்ணி என்றும் பக்தியோடு விளிக்கின்றனர். தல விருட்சமாக குரா மரமும், தீர்த்தங்களாக கடல் - அக்னி தீர்த்தமாகவும், கோயில் கூபம் - அமுதக் கிணறு என்றும் அழைக்கப்பெறுகின்றன. சண்டீச நாயனார் புராணத்தில் சிறுவன் விசாரசருமன் செய்த சிவபூஜையை அவன் தந்தை எச்சதத்தன் குரா மரத்தில் ஏறி மறைந்திருந்தவாறு கண்காணித்ததை நினைவுப்படுத்துவதாகவே இத்தலத்து தல மரம் விளங்குகின்றது.

திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுத கலசத்தை வாயுதேவன் தேவருலகத்திற்கு எடுத்துச் சென்றபோது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாயிற்று என்றும், அச்சிவலிங்கமே இத்தலத்து மூலவராம் அமுத கடேஸ்வரர் என்றும் தலபுராணம் கூறுகின்றது. சுவேத முனிவரின் மகன், பிரம்மன், இருடிகள், நாரதர், இந்திரன், குழக முனிவர் எனப் பல்லோரும் வழிபட்டுய்ந்த தலம் இதுவெனவும் கூறுகின்றது. இக்கோயிலிலுள்ள ஒரு செப்புப் பிரதிமத்தினை கோளக மகரிஷி எனக் கூறுகின்றனர். மகா மண்டபத்தில் குழக முனிவரின் திருவுருவம் உள்ளது.

ஆறு நிலைகளுடன் கிழக்கு ராஜகோபுரம் திகழ, எடுப்பான மதில், திருச்சுற்று, பரிவாராலயங்கள் ஆகியவற்றுடன் திருக்கோயில் கற்றளியாக விளங்குகின்றது. பிராகாரத்தில் அமிர்த விநாயகர், ஒரு முகம் ஆறு கரங்களுடனும், மயில் வாகனத்துடனும் முருகப்பெருமான். கோளிலித் தலமென்பதால் ஒரே வரிசையில் திகழும் நவகிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன், சண்டீசர் ஆகிய பரிவாரங்களோடு விமான கருவறையில் கோடிக்குழகர் சிவலிங்கமாக அருள்பாலிக்கின்றார்.

முக மண்டபத்தில் மைத்தடங்கண்ணியாம் உமாபரமேஸ்வரியின் திருக்கோயிலும், காடுகிழாளின் திருக்கோயிலும் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. துர்க்கா தேவியே இங்கு காடுகிழாளாக கோயில் கொண்டிருந்திருக்க வேண்டும். அதனால்தான் சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வருகை புரிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், காடுகளோடும் உடனாய் கோயில் கொண்டிருந்த திறத்தை தம் தேவாரப் பாடலில் பதிவு செய்துள்ளார். பின்னாளில் இக்கோயில் பலமுறை திருப்பணிகளுக்கு உள்ளானதால் பண்டைய காடுகிழாளின் திருமேனி மறைந்து தற்போது புதிய அம்மன் திருமேனியே அத்தேவியாக வழிபடப் பெற்று வருகின்றது.

விமானத்து கோஷ்ட மாடங்களில் கணபதி, ஆலமர் செல்வர், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகிய தெய்வத் திருமேனிகள் இடம் பெற்றுள்ளன. பாண்டிய மன்னர்கள் இக்கோயிலை ஒரு முறை புதுப்பித்து பணி செய்துள்ளனர். கிழக்கு ராஜகோபுர நிலைவாயிற் பகுதியில் செண்டு கோல் நடுவில் திகழ இருபுறமும் இரண்டு மீன்கள் காணப்பெறும் பாண்டியர் இலச்சினை உருவம் சிற்பமாகக் காணப்பெறுகின்றது. திருச்சுற்றில் தேவியுடன் திகழும் ஐயனார் திருவுருவம் திகழ்கின்றது. இக்கோயிலினை 1910ம் ஆண்டுக்குப் பிறகு நகரத்தார்கள் திருப்பணி செய்துள்ளனர்.

அப்போது பழைய சோழர், பாண்டியர் கட்டிடப் பகுதிகளை முழுவதுமாகப் பிரித்து புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளனர். நற்பேறாக தெய்வத் திருமேனிகளை மாற்றம் செய்யாமல் அப்படியே இடம் பெறுமாறு செய்துள்ளனர். ஆனால், இவ்வாலயத்தில் திகழ்ந்த சோழர், பாண்டியர்கால ஆறு கல்வெட்டுகளை முற்றிலுமாக அழித்து விட்டனர். 1904ம் ஆண்டு அக்கல்வெட்டுகளை ஆங்கிலேயர் ஆட்சிக்கால கல்வெட்டு இலாக்காவினர் படி எடுத்து அவற்றின் நகல்களை தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 17ல் பதிப்பித்துள்ளனர். அப்பணிகள் நிகழாது போயிருக்குமானால் இவ்வாலயத்து வரலாறு நமக்குக் கிடைக்காமலேயே ேபாயிருந்திருக்கும்.

மூன்றாம் ராஜராஜசோழனின் பதினான்காம் ஆட்சியாண்டில் (கி.பி. 1229) இக்கோயில் காணியுடைய திருநறையூர் நாட்டு நந்தி நல்லூருடையான் என்பான் ஒரு நந்தா விளக்கு வைத்து அதற்கான நிவந்தமும் அளித்துள்ளான். ஆலயத்து காணி பெற்றவர்கள் கூட அறக்கொடை வைத்தது இக்கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது. சுந்தரபாண்டியன் காலத்தில் இவ்வாலயத்தில் பொறிக்கப் பெற்றிருந்த ஒரு கல்வெட்டுச் சாசனத்தில் கடல் வட்டத்து பரதவர் எனப்பெறும் மீனவர்கள் ஒன்றிணைந்து இறைவனின் பூசனைகளுக்காக வைத்த முதலீடு பற்றி விவரிக்கின்றது.

அச்சாசனத்தில் தொண்டி எனப்பெறும் பாண்டி நாட்டு துறைமுக பட்டிணத்திற்கு பவித்திர மாணிக்கப்பட்டிணம் என்ற மற்றொரு பெயர் இருந்தமையும், இச்சாசனத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவர் பெயர் பந்தன்கூத்தன் என்பதும் அறிய முடிகிறது. மூன்றாம் ராஜேந்திர சோழ தேவரின் இருபத்திரண்டாம் ஆண்டு (கி.பி. 1268) பொறிக்கப் பெற்ற இவ்வாலயத்து கல்வெட்டு சாசனமொன்றில் கோடிக்குழகர் கோயிலுக்கென ‘‘திருவாய்ப்பாடி’’ என்ற பெயரில் நந்தவனம் ஒன்றினை திருச்சத்தி முற்றத்து முதலியார் சந்தானத்து சோமநாத தேவர் என்பவர் அமைப்பதற்காக திருக்கோடி குழகர் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவகன்யிகள் எனப்பெறும் ஆலயத்து நிர்வாகிகள் நிலம் விற்றுக் கொடுத்தது குறிக்கப் பெற்றுள்ளது.

மூன்றாம் ராஜேந்திர சோழ தேவரின் முப்பத்து இரண்டாம் ஆண்டு (கி.பி. 1276) சாசனமொன்றில் திருவாய்ப்பாடி எனும் நந்தவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் ஜீவிதத்திற்காக விடப்பெற்ற நிலத்தை வேறு ஒரு அறக்கட்டளைக்கு ஏதுவாக மாற்றி, அவர்களுக்கு வேறு ஒரு இடத்தில் நிலம் பரிவர்த்தனையாக அளிக்கப் பெற்றது பற்றி விவரிக்கப் பெற்றுள்ளது. சிவாலயத்திற்கென அமைக்கப்பெற்ற திருநந்தவனத்திற்கு ‘‘திருவாய்ப்பாடி’’ என கண்ணனின் ஊரினைப் பெயராக இட்டமையும், நந்தவனம் பராமரிப்பவர்களுக்காக ஜீவிதமாக வேலிக்கணக்கில் நிலங்களை அளித்தமை பற்றியும் இக்கல்வெட்டுகள் குறிப்பிடுவது சுவைபயப்பவையாம்.

ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1319) கமுதவன் ஆண்டாள் பெற்றான் என்ற பிராமணன் ஒருவன் திருக்கோடி குழகர் முன்பு ஒரு நந்தாவிளக்கு எப்போதும் எரிப்பதற்காக 150 வராகன் பொன்னை கோயிலுக்கு முதலீடாக அளித்தமையும் அதனைப் பெற்றுக் கொண்ட இக்கோயில் சிவபிராமணர்கள் அம்முதலீட்டின் வட்டியாக விளக்கெரிக்க ஒப்புக் கொண்டமையும் இவ்வாலயத்து கல்வெட்டொன்றில் கூறப் பெற்றுள்ளது.

குழகர் கோயிலில் உள்ள ஒரு பாண்டிய மன்னனின் ஆணையைக் குறிப்பிடும் கல்லெழுத்து சாசனத்தில் அம்மன்னவனின் பதினேழாம் ஆட்சியாண்டு வரை கோயில்களின் பணிகளுக்காக அளிக்கப் பெற்ற தொகையில் குழகர் கோயிலில் 55 பொன்னும், திரு அகத்தியான்பள்ளி திருக்கோயிலில் 63 பொன்னும் எஞ்சியிருந்தமையால் அத்தொகைகளைப் பதினெட்டாம் ஆட்சியாண்டு முதல் இருகோயில்களிலும் பூஜைகளுக்கும், திருப்பணிகளுக்கும் பயன்படுத்த அரசன் அனுமதித்தது கூறப் பெற்றுள்ளது. கோயில் கணக்குகள் எத்தனை நேர்மையாகக் கையாளப் பெற்றன என்பதற்கு இச்சாசனம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

‘‘பாரூர்மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால்
ஏரார் பொழில் சூழ்தரு கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார்
சீரூர் சிவலோகத்து இருப்பவர் தாமே’’

- என்பது நம்பியாரூரரின் தேவாரம். அந்த பத்தும் பாடி பரமன் அருள் பெற்றுய்வோம்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்