வேங்கட ரமணா, ஸ்ரீநிவாசா மலையப்பா...!



திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒரு தனி மரபே இருக்கிறது. அதாவது நேரடியாக திருமலையேறி அவரை தரிசிக்கக் கூடாதாம். முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாளை சேவிக்க வேண்டும், பிறகு அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும். அதற்குப் பிறகு திருமலையேறி, வராக தீர்த்தக் கரையில் கோயில் கொண்டிருக்கும் வராகரை தரிசிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் மலையப்பன் என்று சொல்லப்படும் ஏழுமலையானை, கோவிந்தனை, வேங்கடவனை சேவிக்க வேண்டும்!
 
இந்த நடைமுறை இப்போதைய வழக்கமல்ல; பகவத் ஸ்ரீராமானுஜர் காலத்திலிருந்து அவர் தொடங்கி, பின்னால் வந்த அனைத்து ஆசார்யார்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம். முதலில் கோவிந்தராஜப் பெருமாளை ஏன் தரிசிக்க வேண்டும்? இவர் வேங்கடவனின் அண்ணன் என்று போற்றப்படுகிறார். சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் தில்லை திருச்சித்திரகூடத்தானான கோவிந்தராஜனே இவர் என்று புராணம் சொல்கிறது.

அதாவது, தில்லை கோவிந்தராஜன் இந்தப் பகுதிக்கு வந்திருந்தபோது, இந்த இடத்தின் எழிலில் மனதைப் பறிகொடுத்து இங்கேயே தங்கிவிட்டதாகவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவருக்காக ஒரு கோயில் எழுப்பப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அதே சயன கோலத்தில் அற்புதமாக தரிசனம் தருகிறார், இந்த திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளும். இவருடைய கோயில் மிகப் பெரியதாக விளங்குகிறது. பளபளக்கும் கலசங்களுடன் மின்னும் ராஜகோபுரத்தினுள் சென்றால் வலது பக்கத்தில் நரசிம்மர் நமக்கு ஆசியளிக்கிறார்.

அடுத்து இரு புறங்களிலும் மணவாள மாமுனிகள், ரங்கநாதசுவாமி, சக்கரத்தாழ்வார், கோதண்டராமர் ஆகியோர் சந்நதிகள் நம்மை வாழ்த்தி மூலவர் அருளாசி பெற அன்புடன் உள்ளே அனுப்பி வைக்கின்றன. கோதண்டராமர் வித்தியாசமான கோலத்தில் அருள்கிறார். கண்கள் இரண்டும் ஜொலிக்கின்றன. வட இந்தியப் பாணியில் காட்சிதரும் இவரை அயோத்தியின் சக்கரவர்த்தி என்று விவரிக்கிறார்கள். காசியைச் சேர்ந்த பைராகி மடம் எனப்படும் பூகா மடத்தின் ஆதரவில் இந்த ராமர் கோயில் துலங்குகிறது.

இவருக்கு எதிரே பூகா தீர்த்தம் அமைந்துள்ளது. ராமர் அபிஷேகத்துக்கு இந்த தீர்த்தத்திலிருந்துதான் நீரெடுத்துச் செல்கிறார்கள். இன்னும் உள்ளே சென்றால், புண்டரீகவல்லித் தாயாரை சேவிக்கலாம். தாயாரின் உற்சவ விக்ரகம் மஹாலக்ஷ்மியாக வணங்கப்படுகிறது. தாயாரின் கருணை ததும்பும் விழிகள் பரிவுடன் நோக்குவதிலேயே வேங்கடவனின் தரிசனம் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கை வலுப்பெறுகிறது. அனந்தாழ்வார், மதுரகவி ஆழ்வார், கூரத்தாழ்வார், ராமானுஜர், கல்யாண வெங்கடேஸ்வரர் ஆகியோர் அடுத்தடுத்து கொலுவிருந்து தாயாரின் அருளை மேலும் உறுதிப்படுத்துகிறார்கள்.

பின்னால் யாகசாலை. கருவறையை வலம் வந்தால் சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் கருடாழ்வாரும் அதனை வலியுறுத்துகிறார்கள். கருவறையில் கோவிந்தராஜப் பெருமாள் சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். கடைக்கண்ணால் நம்மைப் பார்க்கிறாரோ! ‘கவலைப்படாதே, வந்த வேலை மனநிறைவாக முடியும்’ என்று ஆசிர்வதிக்கிறாரோ! தில்லை கோவிந்தராஜனை தரிசித்தவர்கள், இந்தத் திருவுருவைக் காணும்போது, சிதம்பரத்தில்தான் இருக்கிறோமோ என்று வியப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அதே தத்ரூப அமைப்பு. இவர் காலடியில் மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் தம் அகங்காரத்தை சமர்ப்பித்து சரணடைந்திருக்கிறார்கள்.

திருப்பாற்கடல் காட்சியாக, ஆதிசேஷன் மீது, நான்கு திருக்கரங்களுடன் சயனித்திருக்கிறார் பெருமாள். திருமலையில் வேங்கடவன் கோயில் கொள்வதற்கு முன்னாலேயே இவர் இங்கே, திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டதால் இவரை ஏழுமலையானுக்கு அண்ணன் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், மலைமீது தம்பிக்கு வசூலாகும் காணிக்கைகளை தினமும் பல்லக்கு மூலமாக சுமந்து வந்து இந்த அண்ணனிடம் சமர்ப்பிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. தம்பியின் வருமானத்தை முறைப்படுத்திப் பாதுகாக்கும் ஆடிட்டர், இந்த அண்ணன்! மொத்தப் பணம், நகைகள், பிற காணிக்கைகளைக் கொண்டுவரும் அந்த சம்பிரதாயம் இப்போது மாறி, கணக்கு மட்டும் சமர்ப்பிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

இதனாலேயே முதலில் இவரை தரிசித்து வேங்கடவரை தரிசிக்க அனுமதி பெற வேண்டும் என்பது சம்பிரதாயமாம். இந்த கோவிந்தராஜர் 1500 ஆண்டுகளுக்கு முந்தி இங்கு கோயில் கொண்டவர் என்கிறார்கள். இதே கோயிலில் ருக்மிணி, சத்யபாமா சமேதராக பார்த்தசாரதிப் பெருமாளை அமர்ந்த கோலத்தில் தரிசிக்கலாம். கையில் செங்கழுநீர் புஷ்பத்துடன் ஆண்டாள், வித்தியாசமாக கோவிந்தராஜருக்கு வலது பக்கத்தில் சந்நதி கொண்டிருப்பதும் தனி விசேஷம்தான். கோவிந்தராஜரை தரிசனம் பண்ணிவிட்டு, அடுத்ததாக திருச்சானூரில் கோலோச்சும் அலர்மேல்மங்கைத் தாயாரை சேவிக்கலாம். தனித்திருந்து,

திருமாலின் பெருமைகளை விளங்க வைத்துக் கொண்டிருக்கிறார், அலர்மேல்மங்கை என்னும் இந்த பத்மாவதி தாயார். இந்தத் தலத்துக்குள் நுழையும்போதே தண்ணென்று தென்றல் வீசுகிறது. அது, பத்மஸரோவரம் என்ற பத்மாவதி தீர்த்தத்திலிருந்து புறப்பட்டு வந்து, நம்மை அரவணைத்துக் குளிர்விக்கிறது. சற்றுத் தொலைவிலுள்ள ஸ்வர்ணமுகி ஆற்றிலிருந்து இந்த தீர்த்தத்துக்கு நீர் வருவதாகச் சொல்கிறார்கள். கார்த்திகை மாதம் சுக்ல பட்ச பஞ்சமி நாளன்று தாயார் பிரம்மோத்ஸவ கொண்டாட்டத்தின்போது இங்கே தீர்த்தவாரி நடக்கிறது.

படிகளேறி கோயிலுக்குள் நுழையுமுன் இடது பக்கத்தில் அத்தாணி மண்டபம். உள்ளே தாயார் திவ்ய தரிசனம் தருகிறார். இந்த உற்சவரின் சிரசின் மீது தங்கத் தாமரை கவிழ்த்து வைத்து அலங்காரம் செய்திருக்கிறார்கள். வெண் பட்டாடை அணிவித்து வைரப் பதக்கமும் மங்கலத் தாலியும் நகைகளும் பூட்டி பேரழகு செய்திருக்கிறார்கள். இந்த அன்னை மேளதாளங்கள் முழங்க, தீவட்டி ஒளி வழிகாட்ட, பிராகார வலம் வருகிறாள். தாயாருக்கு வெள்ளிக்கிழமைகள் விசேஷம். குறிப்பாக தை வெள்ளிக்கிழமைகள் அதி விசேஷம். திருமணம், பிள்ளைப்பேறு வேண்டும் பெண்கள், மஞ்சள் கயிற்றை தாயாருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

இப்படி ஆயிரக்கணக்கில் சேரும் சரடுகளை தாயாரைச் சுற்றி வைத்து, வேறு அலங்காரங்களும் செய்து அர்ச்சனை, தீபாராதனை செய்கிறார்கள். இவ்வாறு சரடு சமர்ப்பிக்கும் பெண்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுகின்றன. இந்த தலம் கிருஷ்ணர், தாயார் கோயிலுக்காகத் தந்த இடம் என்கிறார்கள். இதற்கு சாட்சியாக கோபுரத்துக்கு நேராக கிருஷ்ணர் விக்ரகம் ஆசியளிக்கக் காணலாம். அண்ணன் பலராமருக்கு, ‘தவம் செய்ய சிறந்த தலம் இது’ என்று பூமியைச் சுட்டிக் காட்டி கிருஷ்ணர் யோசனை சொல்ல, அதன்படி பலராமர் தவம் மேற்கொண்ட தலம். அதே கோலத்தில் கிருஷ்ணரை இங்கே தரிசிக்கலாம்.

பலராமர் பாதரட்சையுடன் காணப்படுகிறார். அதாவது யாத்திரைக்குக் கிளம்பி வரும் கோலம். ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சௌந்திரராஜப் பெருமாளையும் இங்கே தரிசிக்கலாம். தாயாரின் சந்நதியில் நித்ய கல்யாணப் பெருமாளாக நிவாசன் சேவை சாதிக்கிறார். பத்மாவதி தாயாரை சுயம்பு வடிவம் என்கிறார்கள். இந்தத் தலம் புரம் என்றும் அழைக்கப்படுகிறது. அதர்வண வேதத்தில் உள்ள 5119 மந்திரங்களில், 5000 மந்திரங்கள் அலர்மேல் மங்கைத் தாயாரைப் போற்றியதாக உள்ளன; தமிழ்ச் சித்தர்கள் இந்தத் தாயார் மீது 2019 பாடல்கள் இயற்றிப் பரிமளித்திருக்கிறார்கள்;

முக்கியமாக அகஸ்தியர், போகர் இருவரும் திருமலையிலேயே தாயாரை தரிசித்துப் பாடியிருக்கிறார்கள் என்றெல்லாம் புகழப்படும் இந்த பத்மாவதி தாயாரை முழுமையாக, மனதார தரிசித்து விட்டு விண்ணோக்கி உயர்ந்து நிற்கும் வேங்கடவனை தரிசிக்கப் புறப்படலாம். பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமரின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்தபோது, கலியுகம் பிறந்தது. அந்தக் கணத்திலிருந்தே எங்கும் அநியாயங்கள், அதர்மங்கள், அக்கிரமங்கள் என்று மனிதநேயமே இற்றுப் போகும் அளவுக்குக் கொடுமைகள் விளைந்தன.

எந்த யுகத்திலும் அராஜகத்தைக் கண்டு கண்ணீர் வடித்து இறையருளால் அதனைக் குறைக்கவோ அல்லது முற்றிலும் நீக்கவோ விழையும் முனிவர்கள், இந்த கலித் துவக்கத்திலும் அதே முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதன்படி காஷ்யப மகரிஷியின் தலைமையில் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்கள். அப்போது அங்கே வந்தார் நாரதர். ‘‘இந்த யக்ஞத்தின் பலனை யாருக்கு அளிக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டார். அவர்களோ, ‘‘வழக்கம்போல பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருக்கும்தான்’’ என்று பதிலளித்தார்கள்.

உடனே நாரதர், ‘‘நீங்கள் நடத்தும் இந்த யாகம் கலியுக ஆரம்பத்திலேயே கொடுமைகள் தலைவிரித்தாடுவதைக் கண்டு அஞ்சி, அதைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான். வன்முறைக்கு வன்முறையே சரியான பதில் என்ற தீய கலாசாரம் வளர ஆரம்பித்திருக்கிறது. இந்த சமயத்தில் பொறுமையுடன், மக்களின் அடங்கா மனதால் ஏற்படும் அவலங்களை சகித்துக் கொண்டு நிதானமாக, அக்கறையுடன் அறிவுறுத்தி அவர்களைச் சற்றும் உதாசீனப்படுத்தாமல் திருத்தும் மென்மையான சுபாவம் கொண்டவர்தான் இப்போதைய நிலைமையை சீர்படுத்தக்கூடியவர்.

நீங்கள் குறிப்பிட்ட மும்மூர்த்திகளில் இந்த குணம் கொண்டவர் யார் என்பதைத் தீர்மானித்து அவருக்கே அவிர்பாகம் அளியுங்கள்’’ என்று யோசனை சொன்னார். மூவரில் யார் மிகவும் பொறுமைசாலி என்பதை சோதித்தறிய, பிருகு முனிவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். முதலில் பிரம்மலோகம் சென்றார் முனிவர். அங்கே அவர் பிரம்மனால் அலட்சியப்படுத்தப்பட்டார். அடுத்து சிவலோகத்தில் முன்னறிவிப்பின்றி தான் வந்ததற்காக ஈசனால் விரட்டப்பட்டார். மூன்றாவதாக வைகுண்டம் வந்த அவர், அங்கும் மஹாவிஷ்ணு தன்னை புறக்கணிப்பதைக் கண்டு,

ஏற்கெனவே அவமானப்பட்ட வேதனைகள் மொத்தமாக கோபமாகப் பொங்கி எழ, கலியின் விளைவாக, மஹாவிஷ்ணுவின் மார்பில் காலால் எட்டி உதைத்தார். திடுக்கிட்ட விஷ்ணு உடனே பதறிப்போய் ஆதிசேஷனிலிருந்து இறங்கி வந்து முனிவரின் கால்களைப் பற்றிக் கொண்டு, ‘‘ஐயோ, கடினமான என் மார்பில் உதைத்த தங்கள் மென்மையான பாதம் வலிக்குமே, இந்த நிலைக்கு ஆளாக்கிய என்னை மன்னித்துவிடுங்கள் ஐயனே’’ என்று சொல்லி வருந்தினார். இதைக் கண்டு பதறிப் போனார், பிருகு. ‘தெய்வம் இப்படியும் இறங்கி வருமா? என்ன அபவாதம் செய்துவிட்டேன்... கலியுகம் என் புத்தியையும் பேதலிக்கச் செய்துவிட்டதே...’ என்று மெய் நடுங்கக் கதறினார்.

இந்த பொறுமையின் பூஷணமே, சகிப்புத்தன்மை மிக்க இந்த நிறைகுடமே கலியுலகின் கண்கண்ட தெய்வமாக விளங்கத் தகுதியானவர் என்று தீர்மானித்தார். அதேசமயம், மஹாவிஷ்ணு அவரை மன்னிக்க முன்வந்தாலும், கலியின் பாதிப்போ என்னவோ, மஹாலக்ஷ்மி, பிருகு மீது கடுங்கோபம் கொண்டாள். அவரைவிட தன் பதியின் மீது கூடுதல் கோபம். தான் வீற்றிருக்கக் கூடிய நாராயணனின் திருமார்பை ஒரு முனிவர் தன் காலால் உதைத்தும் அதனால் நான் அவமரியாதை அடைந்தும், திருமால் முனிவர் பாதங்களைப் பிடித்துக் கெஞ்சிய சுயமரியாதையற்ற செயலைக் கண்டு அதிக கோபம் கொண்டாள்.

உடனே இறைவனைப் பிரிந்தாள். இதற்கிடையில் பூலோகத்தில், வேதவதி புது அவதாரம் கொண்டாள். இந்த வேதவதி, ராமாயண காலத்தில் ராமனை மணக்க விருப்பம் தெரிவித்தவள். அவள் மஹாலக்ஷ்மியின் அதாவது சீதையின் அம்சமாகவே இருந்தாலும் அந்த அவதாரத்தில் ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என வாழ்ந்து காட்டிய ராமன் அவளை மறுத்தான். ஆனாலும், கலியுகத்தில் திருமாலாக தான் தோன்றி அவளை மணப்பதாக வாக்களித்தான். அந்த வேதவதி, ஆகாசராஜன் என்ற மன்னன் நடத்திய புத்திர காமேஷ்டி யாகத்தில் குழந்தையாகத் தோன்றி அவனாலேயே பத்மாவதி என்ற பெயரில் வளர்க்கப்பட்டாள்.

லக்ஷ்மி போனதும் வைகுண்டமே வாசமிழந்தது. திருமால் மனம் வருந்தி தன் மனைவியைத் தேடி பூவுலகிற்கு வந்தார். திருமலையில் ஒரு புற்றில், நிவாசனாக எழுந்தருளினார். ஒரு பசு அவருக்காக தினமும் பால் சொரிய, இந்த மர்மத்தை அறிய அதனைத் தொடர்ந்த மக்கள் புற்றினைக் கண்டு அதனை கோபத்துடன் இடிக்க முற்பட, உள்ளே நிவாசன் மயக்க நிலையில் இருந்ததைக் கண்டு திகைத்தனர். இதேசமயம், கிரேதாயுகத்தில், பகவான் கிருஷ்ணனை சீராட்டி, பாராட்டி வளர்த்த யசோதை, அவன் ருக்மிணி, சத்யபாமாவைத் திருமணம் செய்து கொண்ட திருநிகழ்ச்சியைக் காண முடியாத ஏக்கத்தில் இருந்தாள்.

 அவள் அதை கிருஷ்ணனிடம் ஏக்கமாக தெரிவித்தபோது, ‘‘கலியுகம் உனக்காகக் காத்திருக்கிறது அம்மா. அங்கே எனக்கு மட்டுமல்லாமல், என்னைப் பார்க்க வரும் லட்சோப லட்சம் மக்களுக்கு நீதான் அமுது படைக்கப் போகிறாய். அதுமட்டுமல்ல அங்கே நித்தம் நடக்கும் நூற்றுக்கணக்கான என் திருமணங்களை நீ கண்குளிரக் காணப் போகிறாய்’’ என்று சொல்லி ஆறுதளித்தார். அதன்படி யசோதை, வகுளமாலிகையாக திருமலையில் வராக மூர்த்திக்கு சேவை செய்து கொண்டிருந்தாள். நிவாசன் புற்றிலிருந்து வெளிப்பட்டதை அறிந்த வகுளமாலிகை அவனைத் தன் மகனாகவே பாவித்து, அமுதூட்டி மகிழ்ந்தாள்.

அவனது வாலிப வளர்ச்சி கண்டு பெருமை கொண்டாள். தன் பிரம்மச்சார்யம் நிறைவு பெறும் காலம் நெருங்கியதும் அதே பகுதியில் வாழ்ந்த ஆகாசராஜனின் மகளான பத்மாவதியை  ஸ்ரீநிவாசன் கண்டு காதல் வயப்பட்டான். விவரமறிந்த வகுளமாலிகை, ஆகாசராஜனிடம் பேசி இருவர் திருமணத்தையும் நடத்திப் பார்த்து மகிழ்ந்தாள். பத்மாவதியை மணந்தாலும் வைகுண்டத்து மஹாலக்ஷ்மியை ஸ்ரீநிவாசனால் மறக்க இயலவில்லை. அந்த காலம் வரையிலும் அவர்மீது கோபம் கொண்டிருந்த மஹாலக்ஷ்மி, அவரைப் பார்க்க மறுத்தார்.

ஆனால், பிருகு முனிவர் அப்படி நடந்துகொண்டதற்குக் காரணம் மும்மூர்த்திகளில் பொறுமைசாலியை அறியத்தான் என்பதை நாரதர் மற்றும் முனிவர்கள் அன்னைக்கு விளக்கிச் சொல்ல, பிருகு முனிவரும் தாயாரின் பாதத்தில் வீழ்ந்து மன்னிப்பு கோரினார். ‘இதெல்லாம் எம்பெருமானின் திருவிளையாடலே’ என்று கூறி முனிவரை சமாதானப்படுத்திய மஹாலக்ஷ்மி, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைத் தண்டின் வழியே பிரவேசித்து மலர்மேல் அமர்ந்து நிவாசனை நோக்கினாள். மஹாலக்ஷ்மியைக் கண்டு கொண்ட திருமால் பரவசமடைந்தார். அந்த அலர்மேல் மங்கையை உடனழைத்துக் கொண்டு வந்தார்.

அவளை வகுளமாலிகையும், பத்மாவதியும் அன்போடு வரவேற்று அணைத்துக் கொண்டார்கள். தான் தொண்டு புரிந்து வந்த வராக மூர்த்தியிடம் தன் பிள்ளை  ஸ்ரீநிவாசனுக்கும் மருமகள் பத்மாவதிக்கும் அங்கே தங்கிட இடம் அளித்து உதவுமாறு வகுளமாலிகை கேட்டுக் கொண்டாள். வராகரும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்தார். ஸ்ரீநிவாசன், வேங்கடவனாக, ஏழுமலையானாக, கோவிந்தனாக, மலையப்பனாக வெங்கடாசலபதியாக அங்கே கோயில் கொண்டார். சுமார் ஐந்து மணிநேரம் நடந்து மலை உச்சியை அடைந்துவிட்ட பிறகு, ‘அப்பாடா!’ என்ற நிம்மதிப் பெருமூச்சு கொள்வது உண்மைதான்.

பெருமாளை தரிசித்துவிடலாம் என்ற சந்தோஷம், ஐந்து மணிநேரப் பயணத்தை மேற்கொண்ட கால்களை மென்மையாகப் பிடித்துவிடுகிறது! அதோடு இவ்வாறு ஏறி ஏழாவது மலை உச்சியை அடைய முதன்முதலாகப் படிகள் அமைத்துக்கொடுத்த அஹோபிலம் மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீ அதிவண் சடகோப யதீந்திர மகாதேசிகன் அவர்களுக்கு நம் நன்றி நமஸ்காரத்தைத் தெரிவித்துவிடுவோம். மலைமேல் அடுத்ததாக நாம் தரிசிக்க வேண்டியது, வராஹப் பெருமாளை. இவர்தான் வேங்கடவனுக்கு இடம் அளித்து, அவர் உலகெங்கும் சிறப்பு பெற வழிவகுத்தவர். இந்த வராஹப் பெருமாளிடம்தான் வகுளமாலிகை சேவை புரிந்து வந்தார்.

இந்த வகுளமாலிகைதான் இப்போதைய ஸ்ரீநிவாசனின் தாயார்; கிரேதாயுகத்தில், யசோதையாக பகவான் கிருஷ்ணரை ‘வளர்த்தவர்’; அந்த மகனுடைய திருமணத்தைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே என்று ஏங்கியவர்; இப்போது வகுளமாலிகையாக, ஸ்ரீநிவாசனாகத் தனக்குக் கிடைத்த கிருஷ்ணரின் திருமணத்தைக் கண்டு மகிழ்ந்தவர். இப்படி  நிவாசன் என்ற வேங்கடவனுக்கு இடமும் பிராபல்யமும் அளித்த வராஹப் பெருமாளை தரிசிக்க வேண்டியது பக்தரின் முதல் கடமைதானே? அதற்கு முன் அவரது கோயிலுக்கு முன்னால் விளங்கும் வராஹ தீர்த்தத்தில் கை-கால் கழுவி, தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டு, முடிந்தால் நீராடிவிட்டு, வராஹரை தரிசிக்கலாம்.

வராஹர் லேசாக சாய்ந்தபடி ஆரோகணித்திருக்கிறார். ‘எங்களுக்கெல்லாம் நல்வழி காட்டுகிற, வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை ஏற்படுத்தித் தரும் ஏழுமலையானை தரிசிக்க, அவருக்கு இடமளித்து, எங்களுக்கு வாய்ப்பளித்த வராஹப் பெருமாளே, நமஸ்காரம்’ என்று உள்ளம் நெகிழ்ந்து வணங்குகிறோம். இனி கதாநாயக தரிசனம்தான். குறிப்பிட்ட திவ்ய தரிசன வாசல் வழியாக நுழைந்து அங்கே ஏற்கெனவே இருக்கக்கூடிய மக்கள் வரிசை ஜோதியில் கலந்து கொள்ள வேண்டியதுதான். ‘கோவிந்தா...’ கோஷமும் சுவாமியை தரிசிக்கப் போகிறோம் என்ற ஆனந்தத் தவிப்பும் அதிகரிக்கின்றன.

ராஜகோபுர அடியில் மெல்லிய நீரோடை. காத்திருந்து, நடந்து வந்த பாதங்களைக் குளிர்ச்சியாக, மென்மையாக வருடி, அதுவரை பட்ட கஷ்டங்களையும் எரிச்சல், கோபங்களையும் சமாதானப்படுத்துகிறது. உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் திரும்பி மேல் நோக்கினால், அங்கே, கோபுர உட்சுவரில் ஒரு கடப்பாரை பொருத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பக்கத்திலேயே ‘அனந்தாழ்வான் கடப்பாரை’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். கடப்பாரை இங்கே வந்த கதை என்ன? அனந்தாழ்வான், வேங்கடத்தானுக்கு மலர் அர்ப்பணிக்கும் கைங்கர்யம் செய்து வந்த ஒரு தொண்டர். தன்னை சிரமப்படுத்திக் கொண்டு இறைவனுக்கு சேவை செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

அன்றலர்ந்த மலர்களைப் பறித்து பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தானே ஒரு நந்தவனத்தை அமைக்க முயற்சித்தார். பிறர் உதவியை நாடாமல் தானே செய்ய வேண்டும் என்று வேகமாகப் பணியில் இறங்கினார். (முன்பொருமுறை, இவரது குருவான ராமானுஜர் திருமலை அடிவாரத்தில் முகாமிட்டிருந்தபோது அவருக்குப் பணிவிடை செய்ய அனந்தாழ்வானே மலையிறங்கி வந்தார். ‘‘நீங்கள் ஏன் வந்தீர்கள்? யாரேனும் சிறுவரை அனுப்பியிருக்கக் கூடாதா?’’ என்று ராமானுஜர் பரிவுடன் கேட்டார்.

‘‘இந்த மலை முழுவதும் தேடிப் பார்த்தேன் ஐயனே, என்னைவிட சிறியவர் என்று யாரையும் நான் காணவில்லை’’ என்று பதிலளித்த அனந்தாழ்வானை அப்படியே அணைத்து நெகிழ்ந்தார் ராமானுஜர்). அவரது மனைவி அப்போது நிறைமாத கர்ப்பிணி. தன் கணவருக்காகத் தானும் கூடமாட உதவி செய்தார். தான் வேறு, தன் மனைவி வேறல்ல என்று கருதிய அனந்தாழ்வான், உடல் நலிய, மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க மனைவி பணியாற்றுவதைத் தடுக்கவில்லை. அம்மையார் சிரமப்படுவதை ஒரு சிறுவன் பார்த்தான். அவனுக்கு மனசு பதைபதைத்தது. ஓடோடி வந்தான். அவர் எடுக்க குனிந்த ஒரு பாறையை, தான் முன் சென்று பற்றி, தூக்கி, சுமந்து வந்தான்.

தொலைவிலிருந்து அதைப் பார்த்த அனந்தாழ்வான் கோபம் கொண்டார். ‘நானும் என் மனைவியும் மட்டும் மேற்கொள்ளும் கைங்கர்யம் இது. மூன்றாவது மனிதரின் உதவி தேவையில்லை’ என்று சொன்னபடி, ஓடோடி வந்து அந்தச் சிறுவனை விரட்டினார். அப்போதைக்கு அங்கிருந்து போவதைப் போல போக்குக் காட்டினாலும் மயங்கித் தள்ளாடிய பெண்மணி மீது பரிவு கொண்டு, மீண்டும் வந்து உதவினான் சிறுவன். தான் பலமுறை சொல்லியும் கேட்காத அந்தச் சிறுவன் மீது கடுங்கோபம் கொண்டார் அனந்தாழ்வான்.

உடனே தான் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு கடப்பாரையை அவன் மீது வீசினார். அது சரியாக அவனது முகவாய்கட்டையில் பட்டு, குருதியை வெளிப்படுத்தியது. அலறி, அழுதபடி அந்தச் சிறுவன் ஓடிப் போனான். மறுநாள் அனந்தாழ்வான், மனைவியுடன் வேங்கடவன் கோயிலுக்குள் போய் அவனைத் தரிசித்தபோது திடுக்கிட்டார்.  பெருமாளின் முகவாய்க் கட்டையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது! உடனே விஷயத்தைப் புரிந்து கொண்டு, அப்படியே நெடுஞ்சாண்கிடையாக பெருமாள் முன் மன்னிப்பு தண்டனிட்டார்.

பிறகு பச்சைக் கற்பூரம் கொண்டு வந்து, அப்பி, ரத்தப் பெருக்கை நிறுத்தினார். அந்த வழக்கம்தான், இப்போதும் பெருமாளுக்கு முகவாய்க்கட்டையில் பச்சைக் கற்பூரம் அப்பும் நித்திய கைங்கர்யமாகவே ஆகிவிட்டது. அப்படி அனந்தாழ்வான் எறிந்த கடப்பாரைதான் இப்போது நம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்து, நேராக வேங்கடவன் தரிசனம்தான்.பொதுவாகவே இந்தப் பெருமாளுக்கு கண்கள் மறைத்தபடி திருமண் இட்டிருப்பார்கள். ஆனால், முக்கால் கண்கள் நம்மைப் பார்க்கும்படியாகவும் வாரத்தில் ஒருநாள் அலங்காரம் செய்கிறார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும், இப்படி தரிசனமளிக்கும் பெருமாளை கண்குளிர காணலாம்.

இதற்கு ‘நேத்ர தரிசனம்’ என்று பெயர். பெருமாள் நம்மை நேரடியாகப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கம் மறைந்து அவர் விழிகளில் நாம் நிறைந்திருக்கும் அனுபவத்தால் மெய்சிலிர்ப்பது உண்மை. அலங்காரமும் கவசங்களும் இல்லையா, கிட்டத்தட்ட அவரது முழு உருவத்தையுமே நம்மால் தரிசிக்க முடியும். எப்பேர்பட்ட பாக்கியம் இது! பெருமாளை கொஞ்சம் கிட்டத்தில் சென்று தரிசிக்கும்போது ஒரு படி குறுக்கிடும். விஷயம் தெரிந்தவர்கள் இந்தப் படியை மிதிக்காமல் தாண்டிச் செல்வார்கள். ஆனால் இந்தப் படிமீது ஏறி நின்றால் பெருமாளை இன்னும் வசதியாகக் காண முடியும் என்பதும் உண்மைதான். இந்தப் படிக்கு குலசேகரன் படி என்று பெயர்.

‘திருச்சந்நதியில் படியாய் அமைந்து உன் பவள வாய் காண்பேனே’ என்று தான் வேண்டிக் கொண்டதற்கிணங்க, அங்கே அவர் படியாய் அமைந்திருக்கிறார் என்பது ஐதீகம். இந்த விவரம் தெரிந்தவர்கள், அந்தப் படியைத் தாண்டிச் சென்று அவர் பெருமாளின் பவள வாய் காணும் இன்பத்துக்கு இடையூறு விளைவிக்காமல் இருப்பார்கள். அறியாதவர்கள் அப்படியே மிதித்து அந்தப் படியைக் கடந்தாலும் குலசேகர ஆழ்வார் அதற்காகவும் வருத்தப்பட மாட்டார். ஏனென்றால், பெருமாளுக்கு மட்டுமன்றி, பெருமாள் அடியார்களுக்காகவும் தன் வாழ்நாளில் அருஞ்சேவை ஆற்றியவர் அவர்.

ஆகவே தன்னை மிதித்துச் செல்லும் பாதம் பெருமாளை நோக்கிச் செல்லும் பாதம் என்பதாலேயே அவர் அந்த இம்சையையும் சுகமாக அனுபவிக்கிறார் என்றும் சொல்வார்கள். இந்தப் படி, பொன் தகடால் மூடப்பட்டிருக்கிறது. ‘ஜர்கண்டி’விரட்டலினூடே பெருமாளை ஓரிரு விநாடிகள் தரிசித்து விட்டு, வெளியே வந்தால் மடப்பள்ளி அருகே தீர்த்த பிரசாதம் கொடுக்கிறார்கள். சிலசமயம் துளசி தளங்கள் வழங்கி, சடாரியும் சாத்துகிறார்கள். இந்த மடப்பள்ளிக்குள் சென்றால் சமையலை மேற்பார்வையிட்டு, உரிய ஆணைகளைப் பிறப்பிக்கும் வகுளமாலிகையை தரிசிக்கலாம்.

பிரதட்சணத்தைத் தொடர்ந்தால் உறுதியாக வேலி அமைக்கப்பட்டிருக்கும் நீண்ட மண்டபத்தினுள், பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட பணம் எண்ணப்பட்டு தொகுக்கப்படுகிறது. இந்தப் பணிக்கு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் சிலரையும் மக்கள் பிரதிநிதியாக சேர்த்துக் கொள்கிறார்கள். இவ்வாறு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது; பெருமாளின் கருணையைப் பொறுத்தது. அடுத்து வலம் திரும்பி வடக்கு பிராகாரத்தை அடைந்தால், அங்கே பலர் மண்டபத்தின் மேலேறி வானோக்கிப் பார்ப்பார்கள்.

அவர்கள் தரிசனம் காண்பது, விமான வெங்கடேஸ்வரரை. பெருமாளின் ஆனந்த நிலைய விமானத்தில் வைகுண்டவாசனாகக் காட்சியளிக்கும் இந்த வெங்கடேஸ்வரரைப் பார்த்து, கருவறையில் நிறைவேறாத தரிசன ஏக்கத்தை இங்கே தீர்த்துக் கொள்ளலாம். இவருக்கு வெள்ளியாலான திருவாசி அமைத்து அடையாளம் காட்டியிருக்கிறார்கள். அம்புக்குறி வழிகாட்டலும் உண்டு. அடுத்து, மிக நீண்டதாக பக்தர் வரிசை. ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தும் உண்டியல் காவலர் பாதுகாப்போடு காட்சி தருகிறது. துணியால் மறைக்கப்பட்ட உண்டியல்.

மேலே நான்கு புறங்களிலும், கையை உயர்த்தி, விரல்களை மட்டும் விட்டு, காணிக்கைகளைப் போடக்கூடிய அளவுக்கு சிறு சிறு துவாரங்கள். உண்டியலை வலம் வந்து, பலிபீடம், கொடிமரம் அருகே வந்து, கீழே விழுந்து நமஸ்கரிக்கலாம். ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஊஞ்சல், 1139ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட, உபதேச கோலத்தில் காட்சி தரும் ராமானுஜரின் சிலா வடிவம், மூலவரின் கர்ப்பகிரகத்திலேயே இருக்கும் ராமர்-சீதை-லட்சுமணர், விநய ஆஞ்சநேயர், கையில் வெண்ணெயுடன் நர்த்தனமாடும் கண்ணன் ஆகியோரை நேரடியாக தரிசிக்க இயலாவிட்டாலும்,

அவர்கள் அங்கிருப்பதாகிய தகவலால் மனசுக்குள் தரிசித்துக்கொள்ளலாம்! பங்காரு வாசல் வழியாக வெளியே வருமுன், சின்னம்மா தேவி-திருமலா தேவி சமேதராக கிருஷ்ண தேவராயரை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம். 1517ம் ஆண்டு, தான் போரில் வெற்றி பெற்றதன் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இந்த மன்னர் ஆனந்த விமான நிலையத்திற்கு தங்க முலாம் பூசுவதற்காக 30,000 வராகன்களைக் காணிக்கையாக செலுத்தியிருக்கிறார். இவருக்கு மரியாதை செய்யும் வகையில், வருடந்தோறும் ஒருநாள், பெருமாள் உற்சவராக, இவர் இருப்பிடம் எழுந்தருளுகிறார்.

கோயில் மதில் சுவர்களிலும் பிற பகுதிகளிலும் காணப்படும் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் தமிழ் மொழியே பிரதான அங்கம் வகிக்கிறது. தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்று பல்வேறு தமிழ் நூல்களிலும் திருவேங்கடமுடையான் சிறப்பிக்கப்பட்டிருக்கிறான். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் என்று வைணவ அடியார்கள், மொத்தம் 204 பாடல்களால் திருமலையை, மலையப்பனைப் போற்றி வணங்கியிருக்கிறார்கள்.

வெளியே வந்த பிறகு கோயில் சார்பில் வழங்கப்படும் சிறு அளவான பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஜர்கண்டி விரட்டலால் மனசு கொஞ்சம் ஏக்கத்தால் வலிக்கும்தான். ஆனால் இப்படியாவது தரிசனம் காண முடிந்ததே என்ற ஆறுதல் நிறைவில் நாம் திருப்திபட்டுக் கொள்ளவும் வேண்டியதுதான். அல்லது அடுத்த முறை இந்த தரிசன அனுபவத்துக்கு முன்கூட்டியே நம் மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். ஸ்ரீராமானுஜர் முறைப்படுத்திய ஒழுங்குமுறைகள் இந்தக் கோயிலில் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. வைகானச ஆகமப்படி, தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

அவை: சுப்ரபாத சேவை, பிரதான அர்ச்சனை, நண்பகல் வழிபாடு, தோமால சேவை, திருவீசம், ஏகாந்த சேவை. பொதுவான இந்த ஆறு சேவைகளின் உட்பிரிவுகளாக கொலு பஞ்சாங்க ச்ராவணம், ஸஹஸ்ரநாமார்ச்சனை, கல்யாணோற்சவம், டோலோற்சவம், ஸஹஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், ஆர்ஜித வசந்தோற்சவம், திங்கட்கிழமைகளில் விசேஷ பூஜை, எட்டு இதழ் தாமரைத் திருவடி பூஜை (செவ்வாய்க் கிழமை), ஸஹஸ்ர கலசாபிஷேகம் (புதன்கிழமை), திருப்பாவாடை, பூலங்கி சேவைகள் (வியாழக்கிழமை), அபிஷேகம், நிஜபாத தரிசனம் (வெள்ளிக்கிழமை) என்று பல்வேறு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வழிபாடுகளில் முன்கூட்டியே குறிப்பிட்ட கட்டணம் கட்டியிருக்கும் பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்தப் பட்டியல் தவிர வேறு பல சேவைகளும் உள்ளன. பகலோ, இரவோ எந்த நேரத்தில் பெருமாள் தரிசனம் முடித்து, கோயிலை விட்டு வெளியே வந்தாலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசிக்கக் காத்திருப்பதைக் காண முடிகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து மிக அதிகமாக பக்தர்கள் இங்கே குழுமுகிறார்கள். அவர்கள் அளிக்கும் காணிக்கைகளின் மதிப்பு, தினமும் லட்சக்கணக்கில்.

இந்த காணிக்கைகளை வைத்து திருப்பதி-திருமலை தேவஸ்தானம், வேங்கடவன் கோயிலையும் அதன் சுற்றுப்புறத்தையும் மிகச் சிறப்பாகப் பராமரிப்பதோடு, ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர்களின் வசதிகளையும், தேவைகளையும் அதிகபட்ச அளவில் பூர்த்தி செய்து வருகிறார்கள். அதோடு, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள வசதிக் குறைவான கோயில்களை தத்தெடுத்துப் பராமரிக்கவும் செய்கிறார்கள் என்ற தகவலும் மன நிறைவைத் தருகிறது பெருமாளுக்குத் தெரியாதா, அவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய, உரியவர்களுக்கு அறிவுறுத்த மாட்டாரா என்ற நம்பிக்கையும் வலுக்கிறது. இன்னொரு முறை திருமலை சென்று வேங்கடவனை தரிசிக்கும்வரை கீழ்க்காணும் வேங்கடேச தியான ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்:

ஸ்ரீ சேஷா சலமூர்த்தி வேங்கடபதி: ஸர்வார்த்
தத: ப்ராங்முக:
தீர்த்தம் ஸ்வாமி ஸரோ, விமாநமதுலந்த்
வானந்த தாமேதிச
ஸ்ரீ வைகுண்ட மபாஸ்ய தத்ர ரஸிகே: பத்மோ
பரிஸ் தாக்யயா,
நாயக்யாஸ ஹமோத தேத்ரி ஜகதாம் பூத்யை
ப்ரஸந்ந: பர

பொதுப் பொருள்: திருமலை என்று பெயர்பெற்ற திருவேங்கடம் எனும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் திருவேங்கடநாதனே நமஸ்காரம். அலர்மேல் மங்கைத் தாயாருடன், ஆனந்த நிலைய விமான நிழலில், ஸ்வாமி தீர்த்தக் கரையில், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தரும் வேங்கடவனே நமஸ்காரம். தொண்டைமான் சக்கரவர்த்திக்கு காட்சி கொடுத்து அருளியவரே, ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தன் தேவியுடன், மூவுலகையும் காப்பதற்காக அவதரித்த பெருமாளே நமஸ்காரம்.

சுபஹேமா