சந்தோஷத்தை வெளியே தேடமுடியாது!



மன இருள் அகற்றும் ஞானஔி - 27

சலனமற்ற மனது ஆரோக்கியமாக இருக்கும். ஊசியில் நூல் நுழைவதற்கு இடம் அளிப்பதுபோல் மனதில் சிறு சலனத்திற்கும் இடம் அளித்தால், நம் கட்டுப்பாட்டில் மனம் இருக்காது. அதன்பின் ஒவ்வொன்றாக நம் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிச் செல்லும். வேகமாக காரை ஓட்டிச் செல்பவர் கட்டுப்பாடு இழந்தால் என்ன ஆகும்? விபரீதம்தான் பரிசாக கிடைக்கும்! இன்றைக்கு உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிற நீலத்திமிங்கலம் (Blue whale) என்ற மொபைல் ஃபோன்  விபரீத விளையாட்டு குறிப்பாக இளைஞர்களை, மாணவர்களைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறது.

ரஷ்யாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விபரீத விளையாட்டால் அகில உலகமும் ஆடிப்போயிருக்கிறது. ஒருவித போதையை இளைய சமுதாயத்திடம் ஏற்படுத்தி, நூற்றுக்கணக்கான உயிரை மாய்த்திருக்கிறான் இந்த ப்ளூவேல் அரக்கன். மனோதிடம் உள்ளவர்களிடம் எந்தச் சலனத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது. தனிமை, பொறுமையின்மை, பெற்றோரின் கண்காணிப்பு, அரவணைப்பு சரியாக இல்லாதிருத்தல் போன்றவைதான் மாணவர்களை பலவீனமாக்கி, இந்த விரும்பத்தகாதச் செயல்களில் ஈடுபடச்செய்கின்றன.

முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை அமைந்திருந்தது. யார், என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இப்போது ஒரு வீட்டில் மூன்று அல்லது நான்கு குடும்ப நபர்கள் மட்டுமே இணைந்து வாழ்கிறார்கள். அவர்களும் தனித்தனி தீவுகளாகவே இருக்கிறார்கள். இந்த அதிவேக உலகத்தில் யாரைப் பற்றியும் கவலைப்படுவதற்கு எங்கே நேரம் இருக்கிறது? இது தாய், தந்தை, பிள்ளைகள் உறவிலும் மிகக் கொடுமையாக பிரதிபலிக்கிறதே!

இதற்குத் தீர்வு தனிமனித சிந்தனை மேலோங்க வேண்டும். உடலும் உள்ளமும் நல்லவற்றில் மட்டுமே பற்று வைக்கவேண்டும். நம் கவனத்தை திசை திருப்பி மதிமயக்கி தவறான வழிக்கு இட்டுச்செல்ல சில சூழல்கள் உருவாகும். அதிலிருந்து நாம் தப்புவதற்கு ஒரே வழி ஆண்டவனிடம் பரிபூரண சரணாகதி அடைவதுதான். பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி சிற்றின்ப நுகர்விற்காக பேரின்பத்தை கைவிடாதீர்கள் என்று திருமழிசை ஆழ்வார் தன் நெஞ்சிடம் மன்றாடுகிறார். அவருடைய திருச்சந்த விருத்தத்தில் ஓர் அற்புத பாசுரம்:

அத்தனாகி அன்னைஆகி ஆளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழிந்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி? ஏழை நெஞ்சமே!

‘‘முக்தியை அளிப்பவனாகிய பரம்பொருளிடம் பக்தி செலுத்து. அவன் நமது பல பிறப்புக்களைப் போக்கி நம்மை ஆட்கொள்வான். தாயாய் தந்தையாய் சுற்றமாய் உற்றமாய் இருப்பவன் அவனே. அவனிடம் போய்ச்சேர்,’’ என்று திருமழிசை ஆழ்வார் சொல்கிறார். அப்படிச் சொல்லும்போது ஏழை நெஞ்சமே என்கிறார். திருமழிசை ஆழ்வாரின் நெஞ்சே ஏழையாக - பலவீனமாக - இருக்கிறது என்றால் சாமான்ய மனிதர்களாகிய நாமெல்லாம் எம்மாத்திரம்?

யோகத்திற்கும் போகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்ப வேட்கையில் மூழ்கியிருக்கும் நம்மால் எப்படி நம் நெஞ்சத்தைக் கட்டிப்போட முடியும் என்ற சந்தேகம் வரலாம். முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எல்லாம் படிப்படியாக நடக்கும் அல்லது நடப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும் என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கு இடமே இல்லை. கடவுளையும் இயற்கையையும் ஒருசேரக் கொள்வதே சன்மார்க்கம். பிறவி நோயைத் தீர்க்கும் மருந்தாக, பரிபூரணத்தை தருகின்ற விருந்தாக ஆன்மிக நெறிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.

சூழ்ச்சி, வஞ்சம், பழி, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் செய்யாதவனாக ஒருவன் வாழவேண்டும் என்பதை எடுத்து இயம்பும் அகத்தூய்மையின் ஆதாரமே சமயம். சந்தோஷத்தையும் மனநிம்மதியையும் நாம் வெளியில் தேடமுடியாது. அது நம்முக்குள்ளே இருக்கிறது. அதை வேறு எங்கும் போய்த்தேட வேண்டாம் என்கிறார் அப்பர் பெருமான் அவருடைய அற்புதமான தேவாரப் பதிகம்:

‘‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்படோம் நடலை அல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை’’
‘‘இறைவனிடம் பற்று வைத்தால் இன்பம்தான் எந்நாளும்,’’

என்கிறார் அப்பர். ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்தால் எமனைக் கண்டுகூட அஞ்ச வேண்டாம். நரகம் சொர்க்கம் என்ற பயம் தேவை இல்லை. மக்களை வழிநடத்தக்கூடிய சாமியார்கள்கூட ஒழுங்காக இல்லை என்றால் அவர்களுக்கும் மாமியார் வீடுதான் என்பதை காலம் சொல்லிக்கொண்டே வருகிறது. தவறான முன்மாதிரி, கடவுளின் தண்டனையில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது. அது யாராக இருந்தாலும் எத்துணை அதிகாரம் பெற்றவராக இருந்தாலும் இறைவனின் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மிகக் கடுமையாக இருக்கும்!

இஸ்லாம் சொல்வது போல் இறைவன் மிகப்பெரியவன். அவருடைய ராஜ்யத்தில் சமதர்மம்தான் வெல்லுமே தவிர சம்திங் வெல்லாது! ஒரு பாவ காரியத்தை செய்துவிட்டு கோயிலுக்குச் சென்று இறைவனுக்கு பரிகாரம் செய்துவிட்டால் தவறு மன்னிக்கப்படும் என்று சில மூடர்கள் நினைக்கிறார்கள். இறைவன் யாருக்கும்  பிஸினஸ் பார்ட்டனர் கிடையாது. அவனது சபையில் துலாக்கோல் மிகச் சரியாக இருக்கும். அவன் சந்நிதானத்திற்கு முன் நாம் சமர்ப்பிக்கவேண்டியது உண்மையான பணிவும் பக்தியும்தான்; பணம் அல்ல!

ஆழ்வார்கடியான் மை.பா.நாராயணன்