உதிக்கின்ற செங்கதிராய் விளங்குகின்ற உமையே!



அபிராமி அந்தாதி; சக்தி ரகசியம் - 4

பூஜையை, யாகத்தை, தியானத்தை (சமாதி) துவக்கும்போது முதலில் புறத்தில் சிவனாகிற சூரியனையும், அகத்தில் சக்தியாகிற உமையம்மையை ஒளி வடிவாகவும் (தீயாகவும்), உமையம்மையோடு நிலவில் கூடிய சிவனையும் புருவ நடுவில் தியானிப்பர் (சமாதி நிலை) இதையே தான் அபிராமி பட்டர் செய்தார்.

ஆகமமானது இதயத்தில் பூஜையையும், வயிற்றில் ஹோமத்தையும், புருவ நடுவில் சமாதியையும் (தியானத்தை) செய்யச் சொல்கிறது.
ஹ்ருந் நாபி பிந்து ஸ்தானானி
பூஜா ஹோம சமாதி ஸ்தானானி சங்க்கல்ப்ய
எந்த பூஜையை துவங்கினாலும், அந்தணர்கள் சந்தியாவந்தனம் என்ற அனுஷ்டானத்தை செய்து விட்டுதான் துவங்க வேண்டும் என்கிறது ஆகம நெறி. ‘வைதீகந்து புராகுர்யாத் பச்சாத் சைவிகம் ஆசரேத்’

‘‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித்
திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்
போது மலர்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென்கடிக்
குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி
என்தன் விழத்துணையே’’ (1)

உதித்தல் என்கின்ற செயல் சூரியன், சந்திரன், ஞானம் இவற்றோடு தொடர்புடையது. ‘உதிர்க்கின்ற செங்கதிர்’ (1) என்றும் - காலை சூரியன் ‘வந்துதித்த வெளிலாய்’ (99) மதிய சூரியன் ‘மறைகின்ற வாநிதியோ’ (20) மாலை மறையும் சூரியன் -என்று மூன்று நிலையிலும் உமையம்மையை வழிபடுகிறார்கள். சூரியனில் சிவனையும், கெளரி காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரில் சக்தியையும் வழிபடுகிறார்கள்.

ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கும்போது முதலில் சிவசூரியனையே பூஜிக்கின்றனர். பின்னரே மூலஸ்தானத்தில் சிவபெருமானை பூஜிக்கின்றனர். ஆலய நெறியிலும், வீட்டு வழிபாட்டு நெறியிலும் சூரியனே முக்கியத்துவம் பெறுகிறது என்பதால் இரு நெறியையும் சூட்டுகின்ற பொருளில் உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் என்று ஆரம்பித்தார், அபிராமி பட்டர்.

சுவாசினிகள் மட்டுமே உச்சித் திலகம் இட்டுக் கொள்வார்கள். சுவாசினி என்பதன் பொருள் பதி புத்திரவதி - யுக்தா என்று பொருள். கணவனோடும், புதல்வரோடும் நித்தியமாய் கூடி இருப்பதே அபிராமியின் தனி சிறப்பு. ஐந்து புதல்வர்களோடும், ஐந்து முகத்தோடு கூடிய சதாசிவத்தோடும் கூடியிருப்பதால் உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’’ என்று குறிப்பிடுகின்றார்.

உதிக்கின்ற செங்கதிர் என்ற பாடலில் உள்ள சொல்லானது சூரியனில் இருக்கின்ற உமையம்மையை காலந்தோறும் வழிபடுதல் என்பது அறிவையும், செயலையும், விழைவையும் விளைவிக்கும். அபிராமி பட்டரின் விழைவானது, அமாவாசையன்று சந்திரனை வானில் உதிக்கச்செய்வது. உதிக்கச் செய்வதற்கு அவர் செய்ய வேண்டிய செயலானது உமையம்மையை சதசூத்திர பிரமாணத்தின்வழி வழிபடுவது.

வழிபடுவதால் ஏற்படும் விளைவுதான், தன் இதயத்தில், ஞானத்தையும், உமையம்மையின் இதயத்தில் கருணையையும் உதிக்கச்செய்து, அதன்வழி விண்ணிலே நிலவை உதிக்க செய்து பரசமயத்தாரின் மனதில் (மக்கள் மற்றும் மன்னனுக்கு) ஞானத்தை உதிக்கச்செய்து, அதற்கான ஞான அனுபவத்தை பெறுவதற்காக, உதிக்கின்ற சூரியன் வடிவிலே, உமையம்மையின் உச்சித்திலகமாக திகழும் செங்கதிர் பரமனை (சிவ சூரியன்) முதலில் வணங்கி துவக்குகின்றார்.

அதன் பயனாக முடிவில் அவருக்குள் ஞானம் உதித்ததையும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே (பாடல் 100) என்பதன் மூலம் நமக்கு உறுதியும் செய்கிறார். வித்யா உபாசகர்கள் (உமையம்மையை முழு முதற் பொருளாக கொண்டு வழிபடுபவர்களுக்கு) முதலில் கணபதியையும், சிவ மூர்த்தங்களுள் ஒன்றையும் உபதேசித்த பிறகு உமையம்மை மந்திரத்தை உபதேசிப்பர். அப்படி இல்லை எனில் கேடு விளையும்.

‘உச்சித் திலகம்’ என்பது சீமந்த சடங்கில் ஆண் மகவு பெறும் பொருட்டு மனைவிக்கு கணவன் மட்டுமே வைக்கும் பொட்டாகும். அதைத்தான் ‘உச்சித் திலகம்’ என்று அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார். இதனால் கணபதியையும் (உச்சிஷ்டகணபதி), அவள் கணவனான சிவ சூரியனையும் வணங்குகின்றார்.

தாம் பின்பற்றுகிற முறையில் தவறு வந்தாலும், அம்பாளின் அருளை உறுதியாக பெறுவதற்கு உதவுகின்ற வகையில், அதிதேவதையான சிவனையும், உபதேவதையான கணபதியையும் முதலில் வரவழைத்து வணங்குகிறார். ஒரு தேவதையை உபாசிக்கும்போது அது முதலில் தடை செய்யும், பின்னர் எதிர்க்கும், அதன் பிறகே அது உபாசனையை ஏற்று அருள் செய்யும். அந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு கணபதியையும், எதிர்ப்பை நிவர்த்தி செய்ய சிவனையும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் வணங்குவார்கள்.

உபாசனை செய்வதால், ‘நன்றே வருகினும் தீதே விளையினும்’ (95) ‘மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே’ (45) என்ற பாடலின் மூலம் உறுதி செய்கிறார். பெண் தேவதைகளை வணங்குகின்றபோது புகுந்த வீடு, பிறந்த வீடு என்று இரண்டாகப்பிரித்து தியானித்து வணங்குவார்கள். பிறந்த வீட்டில் தான் விளங்கியும், புகுந்த வீட்டில் தான் ஒடுங்கி, தான் சார்ந்த கணவனை விளங்க செய்தும் அருள்புரிவாள்.

இலக்குமி, புகுந்த வீடான பாற்கடலில் பரந்தாமனுடனும், பார்வதி தன் புகுந்த வீடான ஹிமாச்சலத்தில் சிவபெருமானுடனும் வசிக்கின்றனர். ‘‘ஹரி: சேத் மகோததி: ஹர: சேத் ஹிமாசல:’’ இதை நன்கு உணர்ந்த அபிராமி பட்டர் உபாசனையில் சித்தி பெறுவதற்காக ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’ என்றும், ‘ஆதிக்கடவூரின் வாழ்வே’ என்றும் சொல்வதிலிருந்து தெரிகிறது.

தேவதைகளை உருவங்களாக வடிவமைத்து, நாம் வணங்குவதற்காக வழங்கும் சிற்பசாஸ்திரமானது நிறங்களையும் வலியுறுத்துகிறது - வெள்ளை சாத்வீக குணத்தையும், சிவப்பு ராஜஸ குணத்தையும், கருப்பு தாமச குணத்தையும் உணர்த்தும். மஞ்சள் (பொன் நிறம்) செல்வம் மற்றும் மங்களத்தையும், நீலம் வானமும் கடலும் போன்ற இறைவனின் பரந்தத் தன்மையையும், பச்சை வளம், செழிப்பையும் குறிக்கும்.

அந்தாதியில் ராஜஸ குணத்தை குறிப்பிடும்வகையில் ‘மாணிக்கம்’, ‘மாதுளம் போது’, ‘குங்கும தோய மென்ன’ என்ற று, சிவப்பு வண்ணத்தினால் மாணிக்கம் போன்று செவ்வொளி படர்ந்ததும், மாதுளம்பூ போன்று மென்மையானதும், குங்கும தோய மென்ன என்பதனால் குளிர்ச்சி பொருந்தியதாகவும், அவளுடைய திருமேனியை தியானிக்க வேண்டும்.

இதையே ‘விதிக்கின்ற மேனி’ என்றும், ‘பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே’ (பாடல் 6) என்றும் தெளிவு செய்கிறார் அபிராமி பட்டர். ‘பொன்பார் புனல் வெண்மை, பொங்கும் அனல் சிவப்பு வன்கால் கருமைவளர் வான் தூமம்’  என்கிறது சித்தாந்த சாஸ்திரம். அதாவது, பார் - பொன் நிறம், புனல் - வெண்மை, பொங்கும் அனல் - சிவப்பு, வன்கால் - கருமை, வளர் வான் - புகை நிறம் (பச்சையையும் குறிப்பிடுவதுண்டு)

ஸ்ரீவித்யா உபாசகர்கள் பூமியையும், காற்றையும் உமையம்மைக்கு கட்டுப்பட்ட சிவமாகவும் (சக்திபரம்), தீயையும் நீரையும் சிவனுக்கு கட்டுப்பட்ட உமையம்மையாகவும் (சிவபரம்), ஆகாயத்தை சக்தி, சிவம் இருவருக்கும் சமமாகவும் (சர்வ சமம்) என்றும் நினைத்து வணங்குவார்கள். இதையே அபிராமி பட்டர், ‘சக்தி தழைக்கும் சிவமும்’ (பாடல் 29) ‘சங்கரனார் மனன மங்களமாம்’ (பாடல் 44) ‘தில்லை ஊரர் தம் பாகத்து உமை’ (காப்பு) என்ற வரிகளால் வலியுறுத்தியுள்ளார்.

சிவப்பு நிறத்தை தியானித்து வணங்குவது சிவனுக்கு கட்டுப்பட்ட சக்தியைக் (சிவபரம்) குறிக்கும் என்பதனால் ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்ற பாடலில் சிவப்பு நிறத்தை ஐந்து வகையிலும் வலியுறுத்தியுள்ளார்: 1. உதிக்கின்ற செங்கதிர், 2. உச்சித் திலகம், 3. மாதுளம் போது, 4. குங்கும தோயம், 5. மாணிக்கம் அழல் வடிவிலுள்ள உமையம்மையை சிவனுக்கு கட்டுப்பட்ட சக்தியாய் (சிவபரமாய்) வணங்குவது என்பது நாம் எண்ணிய எண்ணத்தை விரைவாக முடிக்க உதவுகிறது. இது உமையம்மையின் ராஜஸ குணத்தை குறிப்பிடுவதாக அமைகிறது.

 ‘மின் கொடி’ (1), ‘மின் குறை காட்டி’ (72), ‘மின் போலும்’ (67), ‘மின் ஆயிரம் கூடி ஒரு மெய் வடிவாகி’ (55), ‘மின் அணையாளை’ (91) - மின்னலானது ஒரே நொடியில் தோன்றி மறையக்கூடிய பேராற்றலுடைய ஒரு சக்தி. அதையே அபிராமிபட்டர் ‘மின் கொடி’ என்று அபிராமி அம்மையின் ஆற்றலோடு ஒப்பிடுகிறார். துக்கத்தை நிவர்த்தி செய்து தேவைகள் அனைத்தையும் கொடுத்து மோட்சத்தையும் தரவல்லது.
செளந்தர்யலஹரியும் இதையே வலியுறுத்துகிறது. ‘பவானித்வம்’ - நான் நீயாக வேண்டும் என்ற பொருளுடைய பாடல் ஒரு நொடியில் அம்பாள் சாயுஜ்ய பதவி கொடுத்ததாக கூறுகிறது.

இதே கருத்தை எதிர்மறையாக ‘மாத்திரை பொழுது மனதில் வையாதார்’ (பாடல் 67), ஒரு நொடியாவது நினைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். மின் கொடி என்பது சுஷும்னா நாடி என்பதன் சூட்டு சொல்லாகும். சுஷும்னா நாடியானது பாதக்கட்டை விரல்களில் ஆரம்பித்து இரண்டாக இருந்தது ஒன்றாகி, மூன்றாக பிரிந்து (இடகலா, பிங்கலா, சுஷும்னா), கவிழ்ந்த தாமரை மொட்டு போல் திகழ்ந்து, தலை உச்சி முடிவில் ஒன்றாகி பரவி தாமரைத் தண்டு போல் உள்ளீடு அற்றதாகவும், மின்னல்போல் தோற்றம் கொண்டதாகவும் அதன் நடுவே பராசக்தி தியானிக்கப்படுகிறாள். இப்படி தியானிப்பது என்பது இறைவியோடு நேரடியான தொடர்பையும் அருள் அனுபவத்தை தரும்.

‘‘பாதாங்குஷ்ட த்வயாதாரப்ய
யாவதஸ்தி த்வி ரூபாம் ஊர்த்வம்
ப்ரம்ம பிலாந்தம் ஹ்ருத் கண்டா
திஷு இடா பிங்கலாப்பயாம்
சம்யுக்தாம் அதோ முக பத்ம
முகுல யுக்தாம் சுஷிர ரூபாம்
சுஷும் நாம் சஞ்ச் சிந்த்ய’’

‘மலர் கமலை’ என்பது இதய கமலத்தின் சூட்டு சொல். வேதத்தில் இதே கருத்தை நாராயணரை குறிக்கும் வகையில், நாரயண சூக்தம் - 13.2.6-8ல் சொல்லப்பட்டிருக்கிறது. அது உள்ளங்கால் முதல் உச்சந்தலைரை உடலை சூடுள்ளதாகச் செய்கிறது. அதன் நடுவில் மெல்லியதான அக்னி ஜ்வாலை மேல் நோக்கி அமைந்திருக்கிறது. கருத்த மேகத்தின் நடுவிலிருந்து ஒளிவீசுகின்ற மின்னல் கொடி போலும், செந்நெல்லின் உருவம் போல் மெல்லியதாயும், பொன்னிறமாயும், அணுவைப் போல் சூக்ஷ்மமாயும் அது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜ்வாலையின் நடுவில் பரமாத்மா நிலை பெற்றிருக்கிறார்.

ஸந்தா பயதி ஸ்வந்தேஹ மாபாத தலமஸ்தக : |
தஸ்ய மத்த்யே வஹானிசிகா அணீயோர்த்த்வா வ்ய வஸ்த்தித:
நீல தோயத் மத்த்யஸ்த்தாத் வித்யுல்லேகேவ
பாஸ்வரா நீவார சூகவத் தன்வீ பீதா பாஸ்வத்யணூ பமா
தஸ்யா சிகாயா மத்த்யே பரமாத்மா வ்யவஸ்த்தித:

-என்ற வேத வரிகள் மூலம் இவை நாராயணரை உறுதி செய்கிறது என்றாலும், அந்த நாராயணரையே பராசக்தியாக கருதுகிறது சாக்தம்.
‘தரங்கக் கடலுள் வெங்கட் பணியனையேல் துயில் கூறும் விழப்பொருளே’ (பாடல் 35) என்று அபிராமியே விஷ்ணு என்று நிறுவுகிறார் பட்டர். மேலும் திருக்கடையூர் தலபுராணத்தின்படி அலங்கார பிரியரான விஷ்ணு தனது நகைகளை எல்லாம் கழற்றி அதையே அபிராமியாக ஆவாகித்து பூஜை செய்தார். இதையே அபிராமி பட்டர் ‘நகையே’ (93) என்று அபிராமியை அழைக்கிறார்.

உமையம்மையின் வழிபாட்டு நூலான தேவி மாஹாத்மியம், கோபேச காளி - கோவத்தில் காளி, சமரேது துர்கா - போரில் துர்க்கை, போகே பவானி - இன்பம் துய்ப்பதில் பவானி, பும் சேதி விஷ்ணு - ஆணாக விஷ்ணு என்று வர்ணிக்கிறது. வித்யா உபாசகர்கள் உமையம்மையை ஏழு பருவம் உடையவளாகவும் தியானிப்பர். அந்த வகையில்

பேதை (வயது 7) தயங்கு நுண் நூல் இடையாள் (84)
பெதும்பை (வயது 11) மெல்லிய நுண்ணிடை (91)
மங்கை (வயது 13) சின்னஞ்சிறிய மருங்கினில் (53)
மடந்தை (வயது 19) மெலிகின்ற நேரிடை (72)
அறிவை (வயது 25) வந்திய வஞ்சி (5)
தெரிவை (26 முதல் 31) துடியிடை (38)
பேரிளம் பெண் (வயது 40) சிற்றிடையும் (85)
அதற்கு மேல் வயது உள்ளவளாக தியானிப்பதில்லை. இதையே சகஸ்ரநாமம் ‘வயோ வஸ்தா விவர் ஜிதா’ என்கிறது.

அபிராமி பட்டர் ‘மென்கடி’ என்று எதிர்மறையாய், அம்பாள் மீதுள்ள உரிமையால் குறிப்பிடுகிறார். ஆகமங்கள் மற்றும் சிற்பநூற்கள் இடையை விளக்கி வயதைச் சொல்வது உண்டு. அந்த வகையில் இந்த வயதிற்கு உடையவர்களை இந்த சொல்லால் சொல்ல வேண்டும் என்பது தனித்தனியே இருக்க, 40 வயதிற்கு உரிய சொல்லைப் பயன்படுத்தாமல் 7 வயதிற்குரிய மென் கடி என்று குறிப்பிடுவதன் காரணம் ‘காத்யாயினி சேவிதம்’ - ஏழு வயதுடைய பெண்ணாக இறைவனுக்கு தொண்டு செய்கிறாள் என்று திருக்கடையூர் தியானம் சொல்வதால்தான்.
காத்யாயினி சமேத ம்ருத்யுஞ்ஜயர் என்றும் பாலாம்பிகா சமேத காலசம்ஹார மூர்த்தி என்றும் சொல்லப்பட்டதிலிருந்து அறிய முடிகின்றது.

பாலாம்பிகையாக (7 வயதுடையவளாக) உமையம்மை திகழ்கிறார். அவளையே தன் காரியம் நிறைவேறும் பொருட்டு 40 வயதுடைய, மணமாகி சீமந்தமான பெண்ணாக அவர் தியானித்து வருகிறார். அப்படி வணங்குவதால் விரைவான பலன் கிடைக்கும் என்கிறது ஆகமம். அதனாலேயே மென்கடி என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார்.

அபிராமி என்ற சொல்லானது, விளையாட்டாய் இந்த உலகத்தை  எளிமையாக, புத்துணர்வோடும், மிகச் சரியாகவும், குறுகிய காலத்தில் கஷ்டப்படாமலும் படைத்து காத்து அழித்து மறைத்து அருளுவதாளும் ‘ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும்’ (26) வேலையை அகமகிழ்ச்சியுடனும் செய்வதாலும், மிகவும் அமைதியோடும், தெளிவோடும், ஒவ்வொரு ஆன்மாவின் உள்ளிருந்தும், புறமிருந்தும், அகம், புறம், இரண்டு இடத்திலும், விரவி இருந்து செய்வதனாலும் இறைவனோடு (சிவபெருமானோடு) ஒன்றாய் வேறாய், உடனாய் புணர்ந்து, பிரிந்தும், திரிந்தும், ‘பஞ்ச கிருத்யம்’ என்று சொல்லக்கூடிய ஆன்மாக்களுக்கான, உடல் (தனு) உள்ளம் (கர்ணம்), புற உலகு (புவனம்), அனுபவம் (போகம்) இவற்றை தருகிறார்.

பஞ்ச கிருத்தியங்களுக்காக தான் எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதனால் அபிராமி என்று பெயர் பெறுகிறாள்.
ரமு ரஞ்சனே - அக மகிழ்தல்
ரமுக்கிரிடாயாம் - விளையாடுதல்
ரமு ஆஸ்வாதனே - அமைதியுறல்
அபி அந்தர் முகே - உள்நோக்குதல்
அபி ரம்யதே இதி அபிராமி - மாறிக்
கொண்டேயிருக்கக் கூடியவள்.

‘என்தன்’ (1) - என் என்ற வார்த்தையால் உரிமை பொருளான உடலையும், தன் என்ற வார்த்தையால் உயிரையும், என்தன் என்ற வார்த்தையால் உடைமையாவற்றையும் குறிப்பிடுகின்றார். இவை எல்லாவற்றிற்கும், இறைவியை துணை என்கிறார். இதையேதான் மாணிக்கவாசகர், அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்ேற அணையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையே நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகனே - என்கிறார்.

‘விழு’ என்பதனால் உள்ளத்தில் நினைப்பதையும், நினைவுகளின் வழி தொகுத்த கருத்துகளையும், அப்படி தொகுத்தவற்றை தன் வாயின் வழி சொற்களாகவும், அந்த சொற்களின் வழி பிறர் செவி மற்றும் மனதிற்கு புலப்படும் வகையில் யாப்பில் அமைந்த பாட்டாகவும், இறைவியை பற்றி தான் உணர்ந்ததை பிறருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இறைவியை துணையாக உள்ளத்துள் ஞானஒளியையும் புறத்து பிறர் காணும்படி நிலவு ஒலியையும் உதிக்க தியானிக்கிறார்.

‘உதிக்கின்ற செங்கதிர்’ என்று ஆரம்பிக்கும் முதல் பாடலிலேயே இறைவனை புறத்தில் சூரியனில் சிவனை தியானித்தால் ‘நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே’ என்று அகத்தில் தான் மட்டும் காணும் வகையில் ஒளிர்கின்ற உமையம்மையின் அருள் உதிக்கும். அப்படி அகத்தில் அருள் ஒளி உதித்தால் புறத்தில் யாவரும் காண நிலவு உதிக்கும்!

(தொடரும்)