மகாளய அமாவாசையின் மகத்துவம் என்ன?



T.M.ரத்தினவேல்

புரட்டாசி மாதத்தில் அபரபட்சத்தில் கன்யா ராசியில் சூரியன் பிரவேசிப்பது மகாளயம் எனப்படும். மகாளயம் என்பதற்கு  ‘எல்லாப் பித்ருக்களும் கூடும் இடம், மிகவும் சந்தோஷமான காலம். மிகப்பெரிய இருப்பிடம் என்றெல்லாம்  மகரிஷிகளாலும், மாமுனிவர்களாலும் சொல்லப்படுகிறது. நம் முன்னோர்கள் எல்லாம் இந்த நாளில் திரளாக வந்து ஒன்று கூடுவதால், அதாவது லயமாவதால் ‘மகாலயம்’ என்றும் சொல்வார்கள். வானுலகில் வாழும் தேவர்களின் காலக்கணக்குப்படி, புரட்டாசி மாதம் என்பது தேவர்களுக்கு நடு இரவாகும்.

மிகவும் அமைதியாக இருக்கும் காலம். இதுவே பூவுலகில் தெய்வ வழிபாட்டுக்கும் பித்ருக்களை உபசரித்துத் திருப்தி செய்வதற்கும் மிகவும் உத்தமமான, உகந்த காலமாகக் கருதப்படுகிறது. இந்தக் காலத்தில் தர்மத்தின் காவலரானயம தர்மராஜா அங்குள்ள பித்ருக்கள் அனைவரையும் பூலோகத்திற்குச் செல்லும்படி கட்டளையிடுகிறார். அதன்படி பித்ருக்கள் அனைவரும் பூலோகத்திற்கு சந்தோஷமாக வருகிறார்கள். ‘‘இந்தப் புனிதமான நாளிலாவது நம் பரம்பரை வாரிசுகள் நமக்கு சிராத்தம் செய்ய மாட்டார்களா? நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க மாட்டார்களா?’’ என்று மிகவும் ஆவலோடும் ஏக்கத்தோடும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

மானிடர் வாழ்க்கையில் ‘சிராத்தம்’ செய்வது முக்கிய கடமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் மிகவும் பொறுப்போடும் அக்கறையோடும் சிராத்தம் செய்தால் பித்ருக்கள் மனம் மகிழ்ந்து ஆனந்தத்துடன் ஆசிர்வாதம் செய்துவிட்டுப் போவார்கள். நாம் அவர்களுக்கு நன்றியுடன் சிராத்தம் செய்யவில்லையென்றால், ‘இந்தப் புனித நாளில்கூட நம்மை நம் வாரிசுகள் நினைக்க மாட்டேன் என்கிறார்களே?’ என்று மனம் தொந்து வெறுப்புடன் சபித்துவிட்டுப் போவார்களாம். பல குடும்பங்களில் தீராத பிரச்னைகள் ஏராளமாக இருப்பதற்கும், வாழ்நாள் முழுவதும் துன்பங்களும் துயரங்களும் தொடர்ந்து வருவதற்கும் முன்னோர்களின் இப்படிப்பட்ட சாபமே காரணம்.

இந்தத் துன்பங்களிலிருந்து விடுபட்டு, பரிகாரம் தேட ஜோதிடர்களிடம் போனால், அவர்கள் நம் ஜாதகத்தைப் பார்த்து அலசி ஆராய்ந்துவிட்டு, அவர்கள் சொல்லும் முதற்காரணம் பெரும்பாலும் ‘‘முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விட்டீர்கள். உங்களுக்குப் பித்ருக்களின் சாபம் இருக்கு. அதுதான் உங்களை இப்படி, ஆட்டிப் படைக்கிறது. நிம்மதியை இழக்கச் செய்கிறது’’ என்றே கூறுவார்கள். நாம் நலமோடும் வளமோடும் நன்றாக வாழ வேண்டும் என்றால் பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறைவில்லாது செய்து அவர்களைத் திருப்தி செய்ய வேண்டும்.

வானுலகில் வாழும் தேவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்படும் வேள்விகள், யாகங்கள், நோக்கங்கள் மற்றும் வழிபாடுகள் போலவே நம் பித்ருக்களைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்படுபவை சிராத்தம், தர்ப்பணம் ஆகியவை. பித்ருக்களுக்குரிய சிராத்த, தர்ப்பணங்களை முறையாக சிரத்தையுடன் செய்ய வேண்டும். சிரத்தையுடன் செய்ய வேண்டியது என்பதால்தான் அது ‘சிராத்தம்’ என்று சொல்லப்படுகிறது. எல்லாப் பித்ருக்களும் ஒன்றாக வரும் இந்த ‘மகாளய’ காலத்தில், அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய காரியங்களைத் தவறாமல் செய்ய வேண்டும்.

இதன்மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்களும், துயரங்களும், தீராத பிரச்னைகளும் கண்டிப்பாக நீங்கும். நம் வாழ்வு செழிக்கும் நன்மைகள் பல வந்துசேரும். ஆதியில் பிரம்மதேவன் ஏழு பித்ருக்களைச் சிருஷ்டித்தார். அவர்கள்: அனலன், சோமன், யாமன், அரியமான், அக்னிஷ்வர்த்தன், பர்ஹிஷதன், கவ்யவாகன். இவர்களில் நால்வர் தேகத்தோடும் மற்றவர் தேகமின்றியும் இருப்பர். இவர்கள் ஏழு பேருக்கும் ‘ஸ்வதா’ என்பவள் தேவியாக விளங்கினாள். பிரம்ம தேவன் இந்தத் தேவர்களை பூர்வத்தில் சிருஷ்டித்துத் தம்மை பூஜிக்கக் கூறினார். பிரம்மன் வார்த்தையை மதியாது தங்களைத் தாங்களே பூஜித்துக் கொண்ட அவர்களை ‘ஞான வீணர்களாவீர்களாக!’ என பிரம்மதேவன் சபித்தான்.

பிறகு அத்தேவர்கள் சாப விமோசனம் வேண்ட பிரம்மன் ‘என் புத்திரர்களைக் கேட்டுத் தீர்க’ என்று மொழிய, அவர்கள் பிரம்ம புத்திரர்களை வேண்ட அவர்கள், ‘புத்திரர்களே, உங்களை அச்சாபம் பாதிக்காது. உங்கள் விருப்பத்தின்படி செல்க’ என்று கூறி சாபத்தை விளக்கினர். அப்பொழுது பிரம்மதேவன் விழித்து, ‘‘நீங்கள் அனைவரும் என் புத்திரர்களால் ‘புத்திரர்களே ஆவீர்’ என அழைக்கப்பட்டதால் அவர்கள் பிதுர்க்களாகவும், நீங்கள் புத்திரர்களாகவும் விளங்குவீர்களாக’ என்று அனுக்கிரகித்தார். இவர்களைப் பூஜிப்பதே பிதுர் பிரீதி ஆகும்.

வராக அவதாரமெடுத்துப் பூமியைத் தன் கொம்பில் தாங்கிய திருமால் தம் கொம்பில் மூன்று மண்கட்டிகளைக் கொண்டு  பூமியில் ‘கர்ப்பங்’களின் மேல் வைத்து ‘நானே பித்ருத்துக்களைச் செய்கிறேன்! என்றார். உடனே அவருடைய கோரப் பற்களிலிருந்து உண்டான அந்தப் பிண்டங்கள் தென்திசையை அடைந்தன. ‘இந்தப் பிண்டங்களே பிதா, பிதாமஹர் பிரபிதாமஹர் ஆகட்டும். நானே இந்த மூன்று பிண்டங்களிலும் உள்ளவனாகிறேன்’ என்றார் திருமால். இந்த நிமித்தமாக பித்ருக்கள் அனைவரும் ‘பிண்டம்’ என்கிற பெயரை அடைந்தனர்.

இவர்கள் தென்திசையில் வசிப்பதால் ‘தென்புலத்தார்’ எனப்பட்டனர்’’ என்று சிவ மகாபுராணமும், பிரம்ம கைவர்த்த புராணமும் கூறுகின்றன. சிராத்தம், சிராத்த வகைகள், சிராத்த காலம், செய்யும் முறைகள், சிராத்தப் பொருட்கள், தர்ப்பணம் செய்தல் போன்ற விபரங்களை எல்லாம் விஷ்ணு புராணம் தெளிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினைந்து நாட்கள் பிதுர் சிராத்தத்திற்குரிய நாட்களாக சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு திதியிலும் செய்யப்படும் சிராத்தத்திற்கு பலனும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதில் பிரதமையில் செய்யின் தனசம்பத்தும், துவிதியையில் பிரஜாலாபமும், திரிதியையில் வளர்ச்சி லாபமும், சதுர்த்தியில் சத்துரு நாசமும், பஞ்சமியில் சம்பத்தும், சஷ்டியில் புகழும், சப்தமியில் கணாதிபத்தியமும், அஷ்டமியில் சிறந்த புத்தியும், நவமியில் ஸ்திரீ சம்பத்தும், தசமியில் இஷ்ட சித்தியும், ஏகாதசியில் வேத சித்தியும், துவாதசியில் புரஜாவிருத்தி, மேதை, பசு, புஷ்டி சுவாதந்திரியம், தீர்க்காயுளும் உண்டு. சதுர்த்தசியில் யந்திரங்களால் இறப்பார்களுக்குச் சிராத்தம் செய்வது நலம். இப்படி இந்தப் பட்சம் முழுதும் சிராத்தம் செய்தால் வருஷம் முழுதும் சிராத்தம் செய்த பலனுண்டு.

இக்காலத்தில் யமபுரத்திலிருந்து பிதுர்க்கள் பூமியில் வந்து வசிப்பாராகையால் யமபுரம் சூன்யமாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் பரணியிலும், அஷ்டமியிலும், ‘கஜச்சாயை’யென்று கூறப்படும் திரயோதசியிலும், சிராத்தம் செய்தால், ‘கயா’வில் சிராத்தம் செய்த பலனுண்டு. இதில் அமாவாசை, பரணி, துவாதசி இவைகளில் திதி நட்சத்திர வார தோஷம் வருமின் வேண்டாம் என்கிறது பிரம்ம வைவர்த்த புராணம். சிராத்தம் என்பது பிதுர்க்களை எண்ணி, அவர்களைக் களிப்புறச் செய்யும் கர்மம் ஆகும். இது சுபமுகூர்த்தத்தில் செய்யின் அப்யுதயம் என்றும் நாந்தி என்றும் சொல்லப்படுகிறது.

அசுபத்தில் செய்தால் சுக்லை, ஏகோதிஷ்டம், சோடச்ச பிண்டீகரணங்கள் என இப்பெயர்கள் பெறும். இது புண்ணிய க்ஷேத்திரங்களில் செய்யப்படின் மிக்க பலன் தரும். அமாவாசை, சங்கிரமணம், மகாளய பட்சம், வியதிபாத யோகம், யுகாதி, மாதத்தின் முதல் நாள், கிரகண புண்ணிய காலம் போன்ற புண்ணிய காலங்களில் சிராத்தம் செய்தால் பித்ருக்கள் மிகவும் சந்தோஷமடைவார்கள். தர்ப்பணம் என்பது பஞ்சதீர்த்தம் என்று ஐந்து வகையாகச் சொல்லப்படுகிறது. அவை தேவ தீர்த்தம், ஆரிட தீர்த்தம், மானுஷ தீர்த்தம், பூத தீர்த்தம், பிதுர் தீர்த்தம் எனப்படும்.

தேவ தீர்த்தம் என்பது கைவிரல் நுனியில் விடுவது, ஆரிட தீர்த்தம் என்பது விரல்களின் இணைச்சந்தியில் விடுவது, மானுஷ தீர்த்தம் என்பது கனிஷ்டிகை மூலத்தில் விடுவது, பூத தீர்த்தம் என்பது மணிக்கட்டில் விடுவது. பிதுர் தீர்த்தம் என்பது தர்சன் அங்குஷ்டமிரண்டிற்கும் நடுவில் விடுவதாகும். மேற்கூறிய முறையில் தேவராதியர்களுக்கு ‘தர்ப்பணம்’ செய்யப்படுகிறது. புனித நீராடி பரிசுத்தமான வஸ்திரங்களை அணிந்து தேவதைகளுக்கும், ரிஷிகளுக்கும், பிதுர்களுக்கும் அவரவர்க்குரிய தீர்த்தத்தினாலே விதிப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும். இதன்படி பிதுர்க்கள், பிதாமகர், பிரபிதாமகர், மாதாமகர், மாத்ரு பிதாமகர், மாத்ரு பிரபிதாமகர் ஆகியவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

தர்ப்பணம் செய்யும்போது ‘‘தேவாசுர, யட்ச, நாக, கந்தர்வ, ராட்சஸ, பைசாச, குஹ்யக, சித்த, கூஷ்மாண்ட, தருக்களும், ஜலம், பூமி, காற்று இவைகளைப்பற்றிய ஜந்துக்களும் என்னால் கொடுக்கப்படும். இந்தத் தண்ணீரால் திருப்தியடைய வேண்டும். நரகங்களில் இருப்பவர்களின் சோர்வு நீங்குவதற்காக இந்தத் தண்ணீரை நான் விடுகிறேன். எனக்கு உறவினர்களாக இருப்பவர்களுக்கும், உறவினராகாதாருக்கும் ஜன்ம, ஜன்மாந்தரத்தில் பந்துக்களாக இருந்தவர்களுக்கும் என்னிடத்தில் தண்ணீரை வேண்டுவோருக்கும் எங்கேயாவது பசி தாகங்களால் வருந்தியிருப்போர்க்கும் நான் விடுகின்ற இந்த எள்ளுந் தண்ணீரும் திருப்தியை உண்டாக்கக் கடவன!’’ என்று சொல்வது வழக்கம்.

இதற்குப்பெயர் ‘காமிய தர்ப்பணம்’ இதனால் சகல லோகத்துக்கும் பிரீதியுண்டாகும். இதனால் பெரும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது விஷ்ணு புராணம். முன்னோர் சாபம் தீர்த்து அவர்களது பரிபூர்ணமான ஆசியால் நம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகச்செய்யப்படுவதே ‘நீத்தார் கடன்’ எனப்படும் சிராத்தம் ஆகும். அவரவர் இருக்குமிடங்களிலிருந்தே நீத்தார் கடன் செய்யலாம். புனிதத் திருத்தலங்களிலும், புனித நதிக்கரைகளிலும் நீத்தார் கடன் செய்வதின் மகிமையை நமது ஞான நூல்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன.

பின்வரும் புண்ணியத் திருத்தலங்களில், நதிக்கரைகளில் முன்னோர்களுக்கு ‘சிராத்தம்’ தந்தால் அனைத்துப் பாவங்களும் அழியும் பெரும் புண்ணியம் வந்து சேரும் என்று புராணங்கள் கூறுகின்றன
* காசிமாநகரிலே உள்ள கங்கைக் கரையில் சிராத்தம் செய்தால் மகா புண்ணியம் உண்டாகும். இங்குள்ள 64 தீர்த்தக்கட்டங்களிலும் நீராடுவது என்பது தற்காலத்தில் முடியாது. ஆகையால் அஸிசங்கட கட்டம், தசாசுவ மேத கட்டம், வருண சங்கம கட்டம், பஞ்ச கங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய இந்த ஐந்து ஸ்நானக் கட்டங்களிலே சிரத்ைதயோடு நீராடி, இறந்துபோன நமது மூதாதையர்களுக்கான திவசம், திதி, தர்ப்பணம் மூலம் பிண்ட தானங்களைச் செய்யலாம்.
* கயா திருத்தலம் காசிக்கு அருகில் உள்ளது. இங்கு விஷ்ணு பாதமும், வடஅட்சய விருட்சமும் உள்ளன. பங்குனி நதியில் நீராடி இங்கு சிரார்த்த காரியங்களை பக்தி சிரத்தையோடு முடித்து விஷ்ணுபாத தரிசனம் செய்தோர் மூதாதையர்களுக்கான சர்வ கடன்களையும் இப்பிறவியில் தீர்த்து முடித்த மிகப்பெரும் புண்ணியம் செய்தவர்களாகிறார்கள்.

* இமயமலையில் உற்பத்தியாகி வரும் கங்கை ஹரித்வாரில் பூமியை வந்தடைகிறது. கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ் போன்ற ஏராளமான புண்ணியத்தலங்கள் கங்கைக்கரையில் உள்ளன. இங்கு தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பு.
* காசியிலும் ஒருபங்கு அதிகம் திருக்கோகர்ணம் என்பர். மேலும் இதற்கிணையான தலம் மூவுலகிலும் இல்லை என்பார்கள். இத்தலத்தில் 33 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இவற்றுள் முக்கியமானது கோடி தீர்த்தம். இங்கு வந்து கோடி தீர்த்தத்தில் நீராடிய பின் கடலில் நீராட வேண்டும். பிறகு தர்ப்பணம் செய்தால் வாழ்வு வளம் பெரும்.

* வடக்கே அலகா நந்தா நதியுடன் பாகீரதி நதிசங்கமமாகும் இடம் தேவபிரயாகை. ராமபிரான் தவம் இயற்றிய தலம், அலகா நந்தாவுடன் மந்தாகினி நதி சங்கமாகும் இடம் ருத்ர பிரயாகை. இங்கே பரமேஸ்வரன் நித்யவாசம் செய்கிறார். அலகா நந்தாவுடன் மந்தாகினி கங்கை சங்கமாகும் இடம் கர்ண பிரயாகை. கர்ணன் தவமியற்றிய தலம், அலகா நந்தாவும் மந்தாகினியும் சங்கமிக்கும் இடம் நந்தப் பிரயாகை. நந்தகோபன் தவம் புரிந்த தலம். அலகா நந்தாவுடன் கருட கங்கை சங்கமிக்கும் இடம் விஷ்ணு பிரயாகை, மகாவிஷ்ணு தவம் புரிந்த இடம். சரஸ்வதி நதி அலகா நந்தாவுடன் சேரும் இடம் கேசவ பிரயாகை. வியாசரும், கணபதியும் சேர்ந்து மகாபாரதத்தை அருளிய புனித பூமி. ஆக இந்த ஐந்து பிரயாகைகளும் ‘பஞ்சப்பிரயாகை’எனப் போற்றப்படுகின்றன. இங்கு நீத்தார் கடன் செய்தால் மிகுந்த புண்ணியமுண்டு.

* வடபாரதத்தில் உள்ள சிந்து, யமுனை, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, நர்மதா, மகாநதி, தபதி, பிரம்மபுத்ரா போன்ற நதிகளின் சங்கமத்துறைகளிலும், நதிக்கரைகளில் உள்ள புண்ணியத் திருத்தலங்களிலும், நீத்தார் கடன் செய்வது மிகவும் உத்தமமாகும்.
* தமிழ்நாட்டில், ராமேஸ்வரம் தலத்தில் 64 தீர்த்தங்கள் இருக்கின்றன. இவற்றில் சிறப்பாகப் பேசப்படுவது அக்னி தீர்த்தமும், கோடி தீர்த்தமும் ஆகும். அக்னி தீர்த்தமான கடலில் மூழ்கி நீராடி தர்ப்பணம் முதலிய காரியங்களைச் செய்தால் சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்பர்.

* தில தர்ப்பணபுரி என்ற திருத்தலம் நாகை மாவட்டத்தில்  பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ளது. இத்தலத்தில் முத்தீஸ்வரர் கோயிலுக்கு வெளியே சந்திர தீர்த்தம் உள்ளது. இங்கு அரசலாறு ஓடுகிறது. இங்குதான் ராமனும், லட்சுமணனும் தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயுவுக்கும் தில தர்ப்பணம் செய்தனர். அரசலாற்றில் நீராடி தர்ப்பணம் செய்து முக்தீஸ்வரரையும் சுவர்ண வல்லியையும் வழிபட்டால் சகல நலன்களும் உண்டாகும்.
* திருவெண்காடு, புதன் கிரகத்திற்குரிய தலமாகும். இங்கே உள்ள சிவன் கோயிலில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கும். சந்திர தீர்த்தத்துக்கு அருகில் ஓர் ஆலமரம் இருக்கிறது. இம்மரத்தின் அடிப்பகுதியில் ‘ருத்ர பாதம்’ இருக்கிறது. இங்கே சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இந்த ஆலமரத்தின் அருகில் திதி, தர்ப்பணங்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* கும்பகோணத்தில் உள்ள மகாமகக்குளத்தில் நீராடி அங்குள்ள படித்துறையில் தர்ப்பணம் தருவது சிறப்பாகக் கருதப்படுகிறது. இங்குள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் நீத்தாரை நினைத்து வழிபட்டு, தான தர்மங்கள் செய்வதை சாஸ்திரங்கள் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றன.
* காவிரி நதிக்கரையில் திதி, தர்ப்பணம் செய்வதற்கும் புனித நீராடுவதற்கான திருத்தலங்களும் நிறைய இருக்கின்றன. காவிரியில் தர்ப்பணம் செய்வது மற்ற அனைத்தையும்விடச் சிறந்ததாகும். அருள்மிகு அரங்கநாதர் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் சாஸ்திர சம்பிரதாயத்துடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல செளபாக்கியங்களும்் கிட்டும் என்பர். திருவானைக்கா, சப்தஸ்தானம், மாயூரம், சாயாவனம், திருவிடைமருதூர், பசுபதீச்சரம், தலைக்காவிரி போன்ற இடங்களில் செய்தல் மிகவும் சிறப்புக்குரியதாகும்.

* காவிரி நதியும் பவானி நதியும் சங்கமிக்கும் பவானிக்கூடல் மிகச்சிறந்த புண்ணியத்தலமாகும். இங்கு எல்லா நாட்களிலும் ஏராளமான மக்கள் வருகை தந்து திதி, தர்ப்பணம் கொடுக்கிறார்கள். மேலும் காவிரி கொள்ளிடம் சங்கமிக்கும் திருச்சிக்கு அருகில் உள்ள முக்கொம்பு என்ற இடமும், திருவையாற்றுப் படித்துறையும், காவிரிப்பூம்பட்டினமும் நீத்தார் கடன் வழிபாடுகளுக்குச் சிறந்த இடங்களாகும்.
* கோவை நகருக்கு அருகில் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள பேரூர் திருத்தலம் திதி, தர்ப்பணம் செய்ய சிறந்த இடமாகும்.
* முக்கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரி முனையும் நீத்தார் கடன் செய்ய சிறப்பான இடமாகும்.
* பித்ரு தர்ப்பண க்ஷேத்திரம் என்று சொல்லப்படும் ‘திருவல்லம்’ பரசுராமர் ஆலயம் பித்ரு காரியங்கள் செய்வதற்கு உகந்த தலமாக சொல்லப்படுகிறது.

எல்லா நாட்களிலும் ஏராளமான மக்கள் இங்கு வந்து பித்ரு தர்ப்பணம் செய்துவிட்டுச் செல்கிறார்கள். இதற்கென ஆலயத்திலேயே வேறு எங்கும் காண முடியாத ‘எள் ஹோமம்’ செய்யப்படுகிறது. ஆலயத்தின் வளாகம் முழுக்க ஒரே தர்ப்பைப்புல், ஹோமப்புகை, பரிகாரம் செய்ய வந்த கூட்டம் என்று எந்த நேரமும் பரபரப்பாக இருக்கிறது. ஆலயத்தின் வெளிப்பக்கம் பிண்டம் வைப்பதற்கான பெரிய பெரிய மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வைதீக காரியங்கள் முடிந்ததும், பிண்டங்களை இங்கு வைத்து விடுகிறார்கள்.

இதற்கெனவே காத்திருக்கும் நம் முன்னோர்கள் காக்கைகள் வடிவில் வந்து அவற்றைச் சாப்பிட்டுத் திருப்தி கொள்கிறார்கள். இங்கே ஆலயத்தினுள்ளும், ஆலயத்தின் வெளியிலும் நதிக்கரையிலும் தர்ப்பண காரியங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இப்படி நம்முடைய பாரததேசமெங்கும் எண்ணற்ற புண்ணியத் தலங்களும் புனித நதிகளும் நிறைந்து காணப்படுகின்றன. இங்கெல்லாம் நீத்தார் கடன் செய்து பலன் பெறலாம்.

‘‘மகாளய அமாவாசை போன்ற புனித நாட்களில் இறந்தவர்களின் ஆத்மா மகிழ்ச்சியுடன் தன் வம்சத்தினரைக் காணப் போகிறோம் என்று ஆவலோடு வருவார்கள். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கினால் நமது வம்சத்திற்கே எந்த தீங்கும் ஏற்படாது. திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாத நிலை, நோய், வறுமை போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பது முன்னோர்களை வணங்காமல் இருப்பதே. நம்முன்னோர்களுக்கு உகந்த புனித நாளில் தர்ப்பணம் செய்யும்போது தரப்படுகின்ற பிண்டமும், பசுவுக்கு வழங்குகிற கீரையும், அன்னதானம் போன்றவையும் இறந்துபட்ட முன்னோர்களைச் சென்று அடைகிறது.

அத்துடன் எத்தனையோ பல ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன நம் முன்னோர்கள் இன்றைய காலத்தில் வேறு எங்கோ பிறந்து இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கிற உணவு, அவர்கள் சாப்பிடுகிற உணவு, நாம் புனித காலங்களில் தர்ப்பணம் செய்த பலனால் கிடைக்கிறது. அதனால் அவர்கள் பசிக்கொடுமை இல்லாமல் வாழ்வார்கள். சுருக்கமாகச் சொல்வதானால், நமக்கு வறுமை நிலை இல்லாமல் பசிக்கொடுமையின்றி சரியான நேரத்தில் உணவு கிடைக்கிறது என்றால், அதற்குக் காரணம்,

நம் வம்சத்தினர் நீத்தார் கடனை முறையாக செய்து வருவதால்தான்!’’ என்று கருட புராணம் கூறுகிறது.  ‘‘முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது’’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் பகீரதன் கடும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களைச் சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற எளிய தர்ப்பணம் செய்து நம்முன்னோர்களின் அருளாசி பெற்று நலமும் வளமும் பெற்று மகிழ்வோம்!