குழவிக் கல்லில் குடியமர்ந்த மாரியம்மன்



- மோ.வன்னஞ்சூர்

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சிக்கு அருகிலுள்ள மோ.வன்னஞ்சூர் கிராமத்தில் கோமுகி நதியின் வடகரையில் சக்தி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு சங்கராபுரத்திற்கு பக்கத்திலுள்ள பாலப்பட்டு என்னும் கிராமத்திலிருந்து தினந்தோறும் மோ.வன்னஞ்சூருக்கு பாட்டி ஒருவர் கருவாடு விற்க வருவார். ஒருசமயம் தன் தலையின் மீதிருந்த கூடையின் கனம் அதிகமாயிற்று.

திடீரென்று இப்படி கனக்கிறதே என்று, அந்தப் பாட்டியின் தலையிலிருந்த கூடையை இறக்கி வைத்துப் பார்த்தபோது கூடையினுள்ளே இரண்டடி உயரமுள்ள குழவிக்கல் இருந்தது. அந்தக் கல் எப்படி கூடைக்குள் வந்தது என்று புரியாததாலும், அது தனக்குத் தேவையில்லாதது என்பதாலும், பாட்டி அந்த குழவிக்கல்லை சப்பாத்திக் கள்ளி நிறைந்த புதரில் தூக்கி வீசிவிட்டுச் சென்றாள். மறுநாள் அந்த கிராமத்தில் வசிக்கும் லட்சுமண சித்தரின் கனவில் மாரியம்மன் தோன்றினாள்.

‘‘நான் இந்த ஊரிலேயே குடியிருக்க விரும்புகிறேன், அந்தப் பாட்டி என்னை சப்பாத்திக்கள்ளி புதரில் போட்டு விட்டுச் சென்று விட்டாள். புதரிலிருந்து என்னை எடுத்து எனக்கொரு கோயில் கட்டுங்கள். சுற்றியுள்ள கிராமங்களுக்கு மாரியம்மனான நான் வந்துள்ளேன் என்று தண்டாரோ போட்டு தெரியப்படுத்துங்கள்,’’ என்று சொல்லிவிட்டு மறைந்தாள். அன்று முதல் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள கிராம மக்கள் கோயிலுக்கு வந்து தங்களின் குறைகளைச் சொல்லி பலன் பெற்றுச்செல்கின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்மனுக்கு பொம்மை வைப்பதாக வேண்டிக்கொண்டு  அம்மன் அருளால் அந்தப் பேறு கிடைக்கப்பெற்றபின், பெற்றோராக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் அம்மை நோய், கண் பார்வை குறை உள்ளவர்கள், இங்கு இரவு தங்கி எண்ணெய் அபிஷேகம் செய்து பலன் பெறுகிறார்கள். திருவண்ணாமலையிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும், கள்ளக்குறிச்சியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் மோ.வன்னஞ்சூர் உள்ளது.

- ப.பரசுராமன்