திருமணங்களில் காசியாத்திரை சடங்கு செய்வதன் ஐதீகம் என்ன?



தெளிவு பெறு ஓம்

- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

மாப்பிள்ளை கோபித்துக்கொண்டு காசியாத்திரை செல்வதாக நம்மில் பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். காசியாத்திரை எனும் சடங்கின் தாத்பர்யம் அதி அற்புதமானது. அக்காலத்தில் ஒரு ஆண்மகன் தனது குருகுலத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியில் வந்தவுடன் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். திருமணம் செய்து கொள்வதற்கும், பெண்ணின் தகப்பனாரிடம் பொற்காசுகளைத் தந்து பெண்ணை மணமுடிப்பதற்கும் அந்த ஆண்மகனுக்கு பணம் தேவை.

அவனோ இப்பொழுதுதான் பள்ளிப்படிப்பினை முடித்துவிட்டு வந்திருக்கிறான். எனவே காசிக்குச் சென்று போஜராஜனிடம் தான் கற்ற வித்தையினைக் காண்பித்து பொன்னும், பொருளும் பெற்று வருவதற்காக காசிக்குச் செல்கிறான். அந்த நேரத்தில் பெண்ணின் தகப்பனார் அல்லது மைத்துனர் வழிமறித்து தங்களுக்கு பொன், பொருள் எதுவும் வேண்டாம் என்றும், தனது மகளை அல்லது சகோதரியை கன்னிகாதானம் செய்து தருவதாகவும் வாக்களித்து உபசாரங்கள் செய்து மாப்பிள்ளையை அழைத்து வருவார்கள்.

இதில் மற்றொரு கருத்தும் நிலவுகிறது. அக்காலத்தில் பள்ளிப்படிப்பினை முடித்த மாணவன் உயர்கல்வி கற்பதற்கு காசிமாநகரத்திற்குச் செல்வான். ஏனெனில் காசி நகரத்தில்தான் கற்றறிந்த பண்டிதர்கள் பலரும் வசித்து வந்தார்கள். அப்படி இந்த மாணவன் மேற்படிப்பிற்காக காசிக்குச் சென்றால் திரும்பி வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தம்பதியராக காசிக்குச் செல்லவேண்டும் என்பதற்காகவும் இந்த காசியாத்திரை சம்பிரதாயமானது நிகழ்த்தப்படுகிறது. இதனை இடையில் தோன்றிய சம்பிரதாயம் என்று ஒதுக்க இயலாது. காசியாத்திரை சடங்கிற்கான ஆதாரம் ஸ்மிருதிகளில் காணப்படுகிறது.

* உலகில் பல மதங்களும், கடவுள் வழிபாடுகளும் இருப்பதேன்?
- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வருவதற்கு தரைவழியில் பேருந்து மூலமாகப் பயணிக்கலாம், ரயில் பயணத்தின் மூலமாகவும் ராமேஸ்வரம் சென்றடையலாம். வான்வழியில் ஹெலிகாப்டர் மூலமாகவும் வந்து சேரலாம், அவ்வளவு ஏன் நீர் வழியில் படகு அல்லது கப்பல் மூலமாகவும் வர இயலும். ஒருவருக்கு தரைவழி மார்க்கம் பிடிக்கிறது, மற்றொருவருக்கு ஆகாய மார்க்கம் சௌகரியமாய் இருக்கிறது, நீர்வழியில் சென்றால் மேலும் பல நன்மைகளை அடையலாம் என்பது இன்னொருவரின் கணக்கு.

அவரவருக்கு பிடித்தமான வழியில், தங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப பயணத்தினை அமைத்துக் கொள்கிறார்கள். வெவ்வேறு மார்க்கத்தில் பயணித்தாலும் இவர்களது நோக்கம் ராமேஸ்வரம் சென்றடைய வேண்டும் என்பதே. அதேபோல மதம் என்பதும் இறைவனை அடைவதற்கான ஒரு மார்க்கமே. யார் யாருக்கு எந்தெந்த மார்க்கம் பிடித்திருக்கிறதோ, அந்த மார்க்கத்தினை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். மார்க்கம் வேறாக இருந்தாலும் இவர்களின் நோக்கம் இறைவனின் அருளைப் பெறவேண்டும் என்பதே.

அவரவர் வசிப்பிடமும், வாழ்வியல் முறையும்தான் வழிபாட்டு முறையையும் உருவாக்குகிறது. மதங்கள் என்பது இறைவனைச் சென்றடைவதற்கான வெவ்வேறு பாதைகள். அவற்றில் எந்தவொரு மதமும், எந்தவொரு வழிபாட்டு முறையும் ஒன்றுக்கொன்று குறைந்தது அல்ல என்பதை நாம் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

* ஆண்கள் எப்போதும் அணிந்துகொள்ளும் ருத்ராட்சம் இருக்கிறதா?
- கே.விஸ்வநாத், பெங்களூரு.

பஞ்சமுக ருத்ராட்சத்தை ஆண்கள் நிரந்தரமாக அணிந்து கொள்ளலாம். சிறு பிள்ளைகள், பிரம்மச்சாரி வாலிபர்கள், திருமணமான குடும்பஸ்தர்கள், வயோதிகர்கள் என வயது வேறுபாடு இன்றி எல்லோரும் பஞ்சமுக ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம்.

* இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு, இறந்தவர் வழிபாடு - எதை அவசியம் மேற்கொள்ள வேண்டும்? உதாரணத்தோடு விளக்குங்களேன்..
- பொன்.நடேசன், சின்னஅய்யம்பாளையம்.

உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இருப்பிடம் இவற்றில் உங்களுக்கு எது அவசியம் வேண்டும்? ஒரு மனிதன் உயிர்வாழ எவ்வாறு இந்த மூன்றும் அவசியமோ, அதேபோல ஒரு மனிதன் நிம்மதியாக வாழ நீங்கள் சொன்ன இறை வழிபாடு, குலதெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு இம்மூன்றும் அவசியம் தேவை. இந்த மூன்றினையும் எவன் ஒருவன் தவறாமல் மேற்கொள்கிறானோ அவன் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இன்றி நிம்மதியாக வாழ இயலும். ஒரு மனிதனின் உடலில் உயிர் தங்குவதற்கு உணவு முக்கியம். இறைவனின் கருணையின்றி சரியான நேரத்திற்கு சரியான அளவிலான உணவு கிடைக்காது.

நாம் உண்ணும் உணவே நமது உடல் சக்தியை நிர்ணயம் செய்கிறது. அதுபோல இறைவழிபாடு என்பது நம் உடல் இயக்கத்தை நிர்ணயிக்கிறது. உடுக்க உடை இருந்தால்தான் ஒரு மனிதன் மானத்தோடு வாழ இயலும். குலதெய்வ வழிபாடு என்பது அந்த மனிதனின் குலப்பெருமையைக் காப்பதோடு அவனை மரியாதையுடன் தலைநிமிர்ந்து வாழ வழி செய்கிறது. உணவும், உடையும் இருந்தால் மட்டும் போதுமா, குடியிருக்க இருப்பிடம் வேண்டாமா? வாடகை வீடேயானாலும் அந்த வீடுதான் அவன் எந்த மன உளைச்சலுமின்றி இரவில் நிம்மதியாக உறங்கி, மனமகிழ்ச்சியோடு வாழ வைக்கும்.

இந்த மனநிம்மதியைத் தரக்கூடியது முன்னோர் வழிபாடு. இறந்தவரை வழிபட மறந்தவர் இல்லங்களில் நிம்மதி என்பது துளிகூட இருக்காது என்பது கண்கூடு. ஆக இறை வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இறந்தவர் வழிபாடு ஆகிய மூன்றுமே ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அவசியம் தேவை. இதனை உணர்ந்து இம்மூன்றையும் சரிவரச் செய்து வருபவர்கள் எந்தவிதக் குறையுமின்றி வளமுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

* வீட்டில் செய்து எடுத்து வரும் நைவேத்தியங்களை கோயிலில் படைத்து விநியோகிக்கலாமா?
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

விநியோகிக்கலாம். வைதீகப்ரதிஷ்டை உள்ள ஆலயங்களில் உள்ள கருவறைக்குள் வீட்டில் செய்து எடுத்து வரும் நைவேத்தியங்களை அனுமதிக்கமாட்டார்கள். ஆலய மடைப்பள்ளியில் மிகுந்த ஆசாரத்துடன் செய்யப்படும் நைவேத்தியங்களை மட்டுமே கருவறையில் வைத்து நைவேத்யம் செய்வர். நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும் இறைவனின் பிரசாதமே என்பதால் சாமானிய மனிதர்கள் தங்கள் வீட்டில் செய்து எடுத்துவரும் நைவேத்தியங்களை கோயிலில் படைத்து விநியோகிக்கலாம் என்பது அடியேனின் கருத்து. ஆனால் அந்த நைவேத்தியத்தினை சமைப்பவர்கள் இதனை இறைவனுக்காக செய்கிறோம் என்ற பக்திசிரத்தையுடனும், ஒழுக்கத்துடனும் சமைக்க வேண்டும். உண்மையான பக்தியோடு கொண்டு வரும் எந்த நைவேத்தியமும் இறைவனுக்கு உரியதே.

* குழந்தை பிறந்து எத்தனை நாள் வரை தாய் பூஜையறைக்குச் செல்லக்கூடாது?
- வாசுகி வாசுதேவன், சீர்காழி.

ஆண் குழந்தையாக இருந்தால் 21 நாட்கள் வரையிலும், பெண் குழந்தையாக இருந்தால் 41 நாட்கள் வரையிலும் குழந்தையைப் பெற்ற தாய் பூஜையறைக்குள் சென்று பூஜை செய்யக்கூடாது.

* அரசமரத்தையும், வேப்பமரத்தையும் குறிப்பிட்ட நாட்களில்தான் வலம் வரவேண்டும் என்கிறார்களே, அப்படியா? அப்படி அவற்றை வலம் வருவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?
- வா.பிரியதர்சினி, கும்பகோணம்.

அரசமரத்தையும், வேப்பமரத்தையும் குறிப்பிட்ட நாளில்தான் வலம் வரவேண்டும் என்பதில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் வலம் வந்து வணங்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனையுடன் வலம் வரும்போது நாள் பார்க்க வேண்டும். அரசமரம் என்பது இறைசக்திகளில் புருஷ ரூபமாகவும், வேப்ப மரம் என்பது ஸ்திரீ ரூபமாகவும் பார்க்கப்படுகிறது. தனக்கு அருகில் வேறெந்த மரத்தையும் வளரவிடாத அரசமரம் வேப்பமரத்தினை மட்டும் தனக்குள்ளேயே வளர அனுமதிப்பது இந்த விஞ்ஞான உலகிலும் நாம் காணும் இயற்கை அதிசயங்களில் ஒன்று.

அரசும், வேம்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தாலும் அவற்றின் கிளைகளும், இலைகளும் அவற்றிற்குரிய தனித்தன்மையோடுதான் இருக்கும். இவை இரண்டும் ஒன்றாக கலந்து ஒரு புதிய கலப்பின மரத்தினை உருவாக்குவதில்லை. இங்கே ஆண் வடிவம் ஆணாகவும், பெண் வடிவம் பெண்ணாகவுமே வளர்கின்றன, ஆனால், வேம்பின் வேர் கூட அரசமரத்தினை ஒட்டியவாறே வளர்வது ஆச்சரியப்பட வைக்கும் அறிவியல் கடந்த உண்மை. சிவசக்தியின் ஐக்கியமாக அரசு-வேம்பின் இணைவினை நாம் காண்கிறோம்.

இறைசக்திகள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றின் தனித்துவம் மறைவதில்லை. ஆணாதிக்கமாக அரசமரம் வலிமையோடு பிரமாண்டமாக காணப்பட்டாலும், அதனுடனேயே செழித்து வளரும் வேம்பின் வடிவில் பெண்ணுரிமையும் அங்கே நிலைநாட்டப்படுகிறது. அதேபோல அரசமரமும், வேப்பமரமும் எல்லா இடங்களிலும் ஒன்றாக இணைந்து வளருவதில்லை. இறை சாந்நித்தியம் நிறைந்த பகுதிகளில் மட்டுமே இவை இரண்டும் இயற்கையாக ஒன்றோடொன்று இணைந்த நிலையில் வளர்ந்திருக்கும்.

அத்தகைய இடங்களில் வளர்ந்திருக்கும் மரங்களைச் சுற்றி வந்து வணங்கினால் மட்டுமே பலன் கிடைக்கும். இது சிவசக்தியின் இணைவாக இருப்பதால் இவற்றை சுற்றி வந்து வணங்குவோரின் குடும்ப ஒற்றுமை சிறக்கும். கணவன்-மனைவிக்குள் பிணக்கு காணாமல் போகும். தம்பதியருக்குள் சண்டை சச்சரவுகள் நீங்கி தாம்பத்யம் மேம்படும். திருமணத்திற்காக காத்திருப்போருக்கு மனதிற்கு பிடித்த வரன் வந்து சேரும். முக்கியமாகப் பிள்ளைப்பேறு வேண்டி காத்திருப்போர் அமாவாசை நாளில் ஸ்நானம் செய்து ஈரத்துணியுடன் வலம் வந்து வணங்குவதால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அமாவாசை என்பது சூரியனும், சந்திரனும் இணையும் நாள். அதாவது, பசுபதி எனும் ஈசனை பிரத்யதி தேவதையாகக் கொண்ட சூரியனும், கௌரீ எனும் அம்பிகையை பிரத்யதி தேவதையாகக் கொண்ட சந்திரனும் ஒன்றாக இணைகின்ற நாள் அமாவாசை என்பதால் இந்நாளில் பிள்ளைப்பேறு கிட்டாத தம்பதியர் நீர்நிலைகளில் ஒன்றாக ஸ்நானம் செய்து கரையோரத்தில் ஒன்றாக இணைந்து வளர்ந்திருக்கும் அரசு-வேம்பு மரங்களைச் சுற்றி வந்து வணங்கினால் சிவசக்தியின் அருளால் விரைவில் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதுவும் சோமவாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமை நாளில் வரும் அமாவாசை மிகவும் விசேஷமான நாளாகும். பிள்ளைப்பேறு வேண்டி காத்திருப்போர் அமாவாசை நாளிலும், திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்கள் திங்கட்கிழமையிலும், திருமணத்தடை காணும் பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், பொதுவாக குடும்ப ஒற்றுமைக்காக பிரார்த்திப்பவர்கள் எல்லா நாட்களிலும் இவ்வாறு இணைந்திருக்கும் அரச-வேப்ப மரத்தைச் சுற்றி வந்து வணங்கலாம். இயற்கையின் அதிசயத்தில் ஒன்றான இந்த இணைவு இரு உள்ளங்களை ஒன்றாக இணைக்கும் வல்லமை பெற்றது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

* மகர சங்கராந்தி, மகர ஜோதி என்று பொங்கல் திருநாளையும், சபரிமலை ஜோதி தரிசனத்தையும் குறிப்பிடுகிறார்களே, இந்த விழாக்களுக்கும் மகர ராசிக்கும் உள்ள தொடர்பு என்ன?
- ஆர்.எஸ். பாலாஜி, ஆரப்பாளையம்.

சித்திரை முதல் பங்குனி வரை உள்ள தமிழ் மாதம் ஒவ்வொன்றும் சூரிய சுழற்சியின் அடிப் படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. சித்திரை மாதம் முதல் தேதியன்று சூரியன் மேஷ ராசிக்குள் அடியெடுத்து வைப்பதால் சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்று அழைப்பார்கள். ரிஷபத்தில் சூரியன் நுழையும் காலம் வைகாசியின் துவக்க நாளாக இருக்கும். அதனால் வைகாசி மாதத்தினை ரிஷப மாதம் என்று குறிப்பிடுவர்.

இந்த வரிசையில் தை மாதம் முதல் தேதியன்று சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பதால் இதனை மகர சங்கராந்தி என்று சொல்வார்கள். சங்க்ரமணம் என்றால் இணைவு என்று பொருள். மகர ராசியில் சூரியன் இணையும் காலம் மகர சங்கராந்தி ஆகும். அந்த நேரத்தில் நாம் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்வதால் பொங்கல் திருநாளை மகர சங்கராந்தி என்று சொல்கிறார்கள். சபரி மலையில் ஜோதி தரிசனம் தை முதல் தேதி அன்று நிகழ்வதால் இதனை மகர ஜோதி என்று அழைக்கிறார்கள்.

* பஞ்சாங்கத்தில் ராகுகாலம், எமகண்டம் போல குளிகை காலம் என்றும் ஒன்று இருக்கிறதே, அந்த காலத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?
- எஸ்.சங்கரன், அம்பாசமுத்திரம்.

ராகுகாலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் எதைச் செய்தாலும் அதில் ஏதேனும் ஒரு தடை உண்டாகும் அல்லது அசம்பாவிதம் ஏதேனும் நிகழக்கூடும் என்ற பயத்தினால் அந்த நேரங்களில் சுபநிகழ்வுகளைத் தவிர்ப்பது நமது மாநிலத்தில் வழக்கமாக இருக்கிறது. அதேபோல குளிகை காலத்தில் எந்த நிகழ்வினைச் செய்தாலும், அது தொடர்ந்துகொண்டிருக்கும் என்ற நம்பிக்கை நம்மிடையே உள்ளது. குளிகன் என்று அழைக்கப்படுபவன் சனியின் குமாரன் என்றும், சனியைப் போலவே ஸ்திரத்தன்மையைத் தருபவன் என்றும், அதனால் அவனுக்கு உரிய நேரத்தில் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அந்தச் செயலானது ஸ்திரமாக நிலைப்பெற்றுவிடும் என்றும் சொல்வார்கள்.

உதாரணத்திற்கு ஒருவன் தனது நோய் குணமாக வேண்டி முதன்முதலில் மருந்து சாப்பிடத் தொடங்குகிறான் என்று வைத்துக் கொள்வோம், குளிகை காலத்தில் மருந்து எடுத்துக் கொண்டால் அவன் காலம் முழுவதும் தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நிரந்தரமாக அவன் மருந்து சாப்பிட நேர்ந்தால் அவனது உடம்பு குணமாவது எப்போது? ஆகையால் குளிகை காலத்தில் நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு விஷயம் தொடர்ந்து நிகழக் கூடாதோ அந்த நிகழ்வினை குளிகை காலத்தில் தவிர்க்க வேண்டும். கல்வி கற்றல், வியாபார ஆரம்பம் போன்றவற்றை குளிகை காலத்தில் செய்யலாம்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா