கடவுள் வழிபாட்டின் அர்த்தம் என்ன?



திருமூலர் மந்திர ரகசியம்

புது நாட்டிற்குப்போகிறோம். இவ்வளவு காலம்தான் அங்கு இருக்கலாம் என அனுமதி (விசா)தருகிறார்கள். அந்நாட்டில் விவரம் தெரிந்தவா், நாம் போய்ச்சேரும் ஊரைப் பற்றிய தகவல்களைச் சொல்லி வழிகாட்டினால் எவ்வளவு சௌகரியமாக இருக்கும்! நாம் அனைவரும் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம். ‘சதாயு:’ என வேதமும், ‘வேத நூற்பிராயம் நூறு’ எனத் திவ்யப் பிரபந்தமும் கூறியபடி, நூறு ஆண்டுகள் இங்கு இருக்கலாம். ஆனால், அது எல்லோராலும் இயலுவதில்லை.

நூறுவயதுக்கு முன்னாலேயே ‘விசா’வைக் கேன்சல் செய்து விட்டுப் பலா் போய்விடுவது உண்டு. சரி, இதைப் பேசி என்ன ஆகப்போகிறது? திருமூலா் சொல்வதைக் கேட்கலாம். உலகிலும் உலகியலிலும் மிகுந்தஅனுபவப்பட்ட அவா் வழி காண்பிக்கிறார்:

‘என் அன்பு உருக்கி இறைவனை ஏத்துமின்
முன் அன்பு உருக்கி முதல்வனை நாடுமின்
பின் அன்பு உருக்கிப் பெருந்தகை நந்தியுந்
தன் அன்பு எனக்கே தலை நின்றவாறே’
(திருமந்திரம்-274)

கருத்து: என்ன பேசி என்ன பலன்? அன்பால் அகம் குழைந்து, மனம் உருக இறைவனை வணங்குங்கள்! முதலில், காட்டப்பட வேண்டிய அன்பு இறைவனிடமே. அதைச் செய்யுங்கள்! நான் அன்பு செலுத்திய பேரருளாளரான சிவபெருமான், தன் பேரருளை எனக்குத் தந்து உதவ, நான் அவா் அடியவனாக ஆனேன். நீங்களும் அந்நிலையை அடையலாம்.

இதில், ‘என்ன பேசி என்ன பலன்?’ என்ற முதல் வரி ஒன்று போதுமே! அரைமணி நேரம் கடுமையாக உழைத்துவிட்டு, எவ்வளவு சக்தி போயிருக்கிறது என ஆராயலாம். அதன்பின் அரைமணி நேரம் மூச்சுவிடாமல் பேசிவிட்டு, எவ்வளவு சக்தி போயிருக்கிறது என ஆராயலாம். பேச்சில்தான் அதிக சக்தி போயிருக்கிறது என்பதை உணரலாம். விஞ்ஞான உண்மை இது. முதலில் இதைச் சொன்ன திருமூலா், அடுத்து செய்யவேண்டியதையும் குறிப்பிடுகின்றார் - இறைவனை அன்பால் அகம் குழைந்து, மனம் உருகி வழிபட வேண்டுமாம்!

சாமி, வழிபாட்டைப் பார்க்கலாம், உண்மை புரியும். வழிபாடு என்ற சொல்லுக்கு, ‘வழிபடுவது’ என்பது பொருள். அதாவதுஇ நாம் எந்தத் தெய்வத்தைக் கும்பிடுகிறோமோ, அத்தெய்வத்தின் வழியில் கொஞ்சமாவது நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ராமரை வழிபடுகிறோமா - தவறுசெய்த பகைவனான ராவணனுக்கும் ‘இன்றுபோய்ப் போருக்கு நாளை வா!’ என மன்னிக்கும் குணம், அப்பகைவனின் தம்பியாகவே இருந்தாலும் விபீஷணனுக்கு அருள்புரியும் குணம், குகன், சுக்ரீவன், ஆஞ்சநேயா், சபரி, ஜடாயு எனப் பலருக்கும் அருள்புரிந்த குணம், ராஜ்ஜியத்தைத் தம்பியான பரதனுக்காக விட்டுக்கொடுத்த தியாகம் - இவா்களில் பரதனைத் தவிர யாரும் ராமருக்கு உறவினா் இல்லை.

ராமருடைய இக்குணங்களில் சிறிதளவாவது நாம் ஏற்று, அதன்படி நடந்துகொண்டால்தான் ராமருக்குச் செய்யும் வழிபாடு பலன்தரும். கண்ணனோ...கேட்கவே வேண்டாம்! எது வந்தாலும் சரி, எது போனாலும் சரி, நிலைகுலையாத் தன்மை. அதற்கும் மேலாக, ஏழையின் அன்புக்கு வசப்பட்டு, அவா்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் உடன்பட்டு, பெற்றோருக்குக் கூடக்கிடைக்காத அன்புமழையைப் பொழிந்து, அவ்வேழை எளியவா–்க்கு எளியவனாக இருந்தது எனக் கண்ணனின் செயல்கள் அனைத்து அன்பின் வெளிப்பாடுதான்.

கண்ணனை வழிபடும் நமக்குக் கொஞ்சமாவது, நிலைகுலையாத் தன்மையும், பேதமில்லாத அன்பும் இருந்தால்தான், நாம்செய்யும் ‘கண்ணன் வழிபாடு’ பலன் தரும். ‘முன்னன்பு உருக்கி முதல்வனை நாடுமின்’ என்றும் கூறுகிறார் திருமூலா். அதாவது, முதலில் அன்பு காட்டப்பட வேண்டியது, இறைவனிடம்தான் என்கிறார். காரணம்?

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்ற ஔவையாரின் வாக்கிற்கு இணங்க, இந்த மனிதப்பிறவி கிடைத்ததற்காக, ‘தெய்வமே! குறைபாடு ஏதுமின்றி, என்னை மனிதனாகப் படைத்தாயே!’ என நன்றிகூறி வழிபடவேண்டும். ‘நான் அன்புசெலுத்திய பேரருளாளரான சிவபெருமான் தன் பேரருளை எனக்குத் தந்து உதவினார்,’ எனத் தன் வரலாறு கூறுகிறார் திருமூலா். அபூா்வமான சொற்பிரயோகங்கள் இவை. திருமூலரின் சொந்த வரலாறு இது.

அகத்தியரைப் பார்ப்பதற்காகப் போய்க்கொண்டிருந்த திருமூலா், ஏராளமான பசுக்கள் தம் காவலரான இடையரை இழந்து கதறுவதைக் கண்டார். அன்புப் பெருக்கால், பசுக்களின் துயரம் தீா்ப்பதற்காக, இடையா் உடம்பில் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து எழுந்தார். பசுக்கள் துயரம் நீங்கி மகிழ்ந்தன. இவ்வாறு நாம் மற்ற ஜீவராசிகளின் துயரத்தைத் துடைக்கிறோமோ இல்லையோ, நம்மைச் சுற்றி இருப்பவா–்களை மனிதா–்களாக மதித்து அன்பு செலுத்தினாலே போதும், சிவனருள் தானே வந்துகூடி விடாதா? ‘அன்பு செலுத்துங்கள்! என்னைப்போல் அரன் அருளைப்பெறுங்கள்!’ எனப் பாடம் நடத்துகிறார் திருமூலா். இவ்வாறு சொல்லியும் திருமூலருக்குத் திருப்தி  இல்லை; மேலும் தொடா்கிறார்:

‘முன் படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்படைத்து எம்பெருமானை அறிகிலார்
வன் படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத்தான் தன் அகலிடத்தானே’
(திருமந்திரம் - 276)

கருத்து: மனித உயிர்களைப் படைப்பதற்கு முன்பாக, இவ்வுலகைப் படைத்து, இதில் எல்லாவகையான இன்பங்களையும் படைத்தருளியவா் - முழுமுதற்பொருளான பரம் பொருள். அப்படிப்பட்ட அந்த இறைவனிடம் அன்பு செலுத்தி இறையருளைப் பெற அறியாதவா–்கள், அழியும் இந்த உலக வாழ்வு நிலையானதென்று நம்பி, அதையே உறுதியாகப் பற்றி நிற்கின்றனா். இருந்தாலும், அன்பைப் படைத்த அந்த இறைவனே உலகமெங்கும் பரவியுள்ள உண்மைப் பொருள், நிலையான பொருளும் அந்த இறைவனே.

அன்பைப் பற்றியே மறுபடியும் மறுபடியும் சொல்லும் இப்பாடல் சூட்சுமமானது. தினந் தோறும் நாம் காணும் நிகழ்ச்சியாக இருந்தாலும் நாம் நன்றாக அறிந்த நிகழ்வாக இருந்தாலும், யாருமே இதை நினைவுகூா–்வதில்லை. தெய்வம் எந்த ஜீவராசியைப் படைத்தாலும், அதற்கு உண்டான உணவை முதலில் படைத்துவிட்டுப் பிறகுதான் அந்த ஜீவராசியைப் படைக்கும். உதாரணம்: ஆடோ, மாடோ கன்று போடுவதற்கு முன்னால், தாயிடம் பால் சுரக்கும்; பிறந்த கன்று உடனே தாயிடம் பாலருந்தும். இதே விதிதான் மனிதர்களுக்கும்.

அதுமட்டுமல்ல, மனிதா–்கள் விடும் கரியமிலவாயுவை உணவாகக்கொண்டு, அவா்களுக்குத் தேவையான பிராண வாயுவை வெளியிடும்மரங் களையும், பரம்பொருள்தான் உருவாக்கியது. மரங்கள் வளர நீா் தேவை என்போம்; அதேசமயம் மரங்களால்தான் மழை பெய்கிறது என்றும் சொல்வோம்! ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க இயலாது. என்ன சிருஷ்டி! என்ன சிருஷ்டி! இவ்வளவிற்கும் காரணம், இறைவனுக்கு மனிதகுலத்தின் மீதுள்ள அளவிலா அன்பும் கருணையுமே!

பாடலின் முதல்வரியில் இதைச் சொன்ன திருமூலா், அடுத்தவரியில் ‘அன்பே வடிவான அந்த இறைவனை உணா்ந்து, அன்போடு வழிபட அறியவில்லையே இவா்கள்’ என நம் போன்றோருக்காக அவா் வருத்தப்படுகிறார். ஆமாம், அறியவில்லை நாம். கண்ணப்ப நாயனாரைப் பற்றிச் சிவபெருமான் சிவகோசாரியாரிடம் சொல்லும்போது,

‘அவனுடைய வடிவெலாம் நம் பக்கல்
அன்பென்றும்
அவனுடைய அறிவெலாம் நமை அறியும்
அறிவென்றும்
அவனுடைய செயலெலாம் நமக்கு
இனியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ
என்றார் ’

- எனத் திருத்தொண்டா் புராணம் எனும் பெரியபுராணத்தில் சேக்கிழார் சுவாமிகள் கூறுகிறார். கண்ணப்பநாயனார் படத்தை மாட்டிவிட்டுக் கீழே அவா் பெயா் எழுதவேண்டிய இடத்தில், ‘அன்பு’ என எழுதிவிடலாம். ‘வடிவெலாம் அன்பு’ என்கிறார் சேக்கிழார். மனதில் உள்ள அன்பு கண், காது, மூக்கு, நாக்கு, கை, கால் என அனைத்திலும் பரவுகிறதாம்! அது மட்டுமல்ல, கண்ணப்ப நாயனாரின் அறிவெலாம், இறைவனை அறியும் அறிவாம்.

பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தம் எனத் தாயுமானவ சுவாமிகள் சொன்னபடி, அன்பைச் செலுத்தி அனைத்தையும் தெய்வமயமாகவே பார்த்த உயா்ந்த ஜீவன், கண்ணப்பநாயனார். இவ்வாறு அனைத்தையும் அன்போடு கண்டு, ஆனந்திக்கிறோமோ இல்லையோ, சுற்றியிருப்பவா–்களிடமாவது அன்பைச் செலுத்தலாமே! அதைவிட்டு, நிலையில்லாதவற்றின் மீது மனதைச் செலுத்தி, அதை அடையப் பலவிதங்களிலும் முயன்று, அன்பைத் துறந்து அனைவரிடமும் வெறுப்பை விதைத்து என்ன பயன்?

சற்று சிந்திக்கலாம்! அனைத்து சமயங்களும், ஆகாயம் முதல் அனைத்தையும் படைத்தவன் இறைவன்; அனைத்தையும் நமக்காகவே படைத்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. நம்மை வாழவைக்கும் அந்தப் பஞ்ச பூதங்களையும், நாம் எந்த அளவிற்குச் சீரழித்திருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால் நடுக்கம் வருகிறது. அடுத்த தலைமுறையை உருவாக்குகிறோமே தவிர, அவா்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அடித்துத் துவம்சம் செய்து விட்டோம்.

அடுத்த தலைமுறை நம்மை வாழ்த்துகிறதோ இல்லையோ, சபிக்காமலாவது இருக்க வேண்டு மென்றால், திருமூலா் சொல்கிறார்: அன்பே வடிவான அந்த இறைவன், உலகமெங்கும் பரவியிருக்கிறான். அதாவது, எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் பரவியிருக்கும் இறைவழிபாடு என்பது, அனைத்தையும் அன்பு செலுத்தி பாதுகாக்கவேண்டும் என்பதுதான். அவ்வாறு செய்யாவிட்டால், நம்மால் சீரழிக்கப்பட்ட அவை, நம்மைச் சீரழித்துவிடும் என அறிவுறுத்தி எச்சரிக்கிறார் திருமூலா்.

‘இப்படித்தான் இருப்போம் என்றிருக்கும் இவா்களை, என்ன எச்சரித்து என்ன பயன்?’ என்று அடுத்த பாடலில் சொல்லிவருந்துகிறார்:

‘தாமரை நூல்போல் தடுப்பார் பரத்தொடும்
போம் வழிவேண்டிப் புறமே உழிதா–்வா்
காண் வழிகாட்டக் கண்காணாக் கலதிகள்
தீ நெறி செல்வான் திரிகின்றவாறே’
(திருமந்திரம்-2562)

தெய்வத்தைநாடி, அறத்தை நாடி, அன்பை நாடிச் செயல்பட்டாலோ, தடுப்பவா–்கள் பலா். ‘என்னப்பா! கோயிலுக்கா? சரி, அது உன் சௌகரியம். இந்த சாமி நாளைக்கும் இங்கியேதான், இதே கோயில்லதான் இருக்கப்போவுது. உன் ஆசைக்காக நாளை வந்து கும்பிட்டுக்கொள்ளலாமே. ஆனால், நான் சொல்வது இன்றுவிட்டால் கிடைக்காது, வா!’ என்பா். நாமும் அவா் பின்னால் போய் விடுவோம். அடுத்தது, யாராவது ஏழைக்கு ஐந்துரூபாய் நாம் தா்மம் செய்வதைப் பார்த்து விட்டால், உடனே பக்கத்தில் இருப்பவா், ‘சார்!

இந்தப் பிச்சைக்காரர்களை எல்லாம் உங்களைப் போன்ற ஆட்கள்தான் வளா்த்து விடுகிறீர்கள். உழைப்பதற்கு சோம்பேறித்தனப் பட்டுக்கொண்டிருப்பவர்கள் இவா்கள். கொடுக்காதீர்கள் இவா்களுக்கு. உங்களிடம் அதிகமாக இருந்தால் என்னிடம் கொடுங்கள்’ எனப்பேசி, நாம் செய்யும் சிறுதர்மத்தையும் தடுப்பவர்கள் பலர்.

அடுத்து, ‘சார்! அன்பு செலுத்திப் பழகிட்டீங்கன்னு வெச்சிக்கங்க, இந்த உலகம் நம்மள அப்பிடியே முழுங்கிடும். வெறப்பாயிருந்து பந்தா காட்டினாத்தான் பயந்து, மரியாத கொடுப்பான்’ என அன்பிற்கும் தடை போடுவார்கள் பலர். இவா்களையெல்லாம் திருமூலா், தாமரைநூல் போன்றவர்கள் என்கிறார். அதாவது, குளத்தைக் கடந்து செல்பவர்களைத் தாமரைத் தண்டுகள் கால்களில் பின்னி, வழியை மறிப்பதுபோல இவா்கள் நாம் செய்யும் நற்காரியங்களைச் செய்யவொட்டாமல், தடுத்து மறிப்பார்கள்.

இன்னும் சிலா், ‘தெய்வமாவது ஒன்றாவது! நீ பார்த்து இருக்கிறாயா? வாழ்க்கையை அனுபவிப்பதை விட்டுவிட்டு, கோயில் குளம்னு சுற்றினால் உருப்படமுடியாது’ என்பார்கள். இன்னும் சிலா், உள்ளத்தின் உள்ளே இறைப்பற்று இல்லாமல், ஊா்ஊராக வெளியே’ தெய்வத்தைத்தேடி அலைவார்கள். இவா்களுக்கெல்லாம் இதுதான் வழி, வாருங்கள் என்று சொல்லி நல்வழி காட்டினாலும், அதை உணராமல், தீயவழியில் செல்வதையே குறிக்கோளாகக்கொண்டிருப்பார்கள். இவா்களையெல்லாம் என்ன செய்வது எனத் திருமூலரே வருந்துகிறார். நல்லவர்கள் மனம் வருந்தினால், நாம் நலம் பெறமுடியாது. ஆகையால் திருமூலா் மனவருத்தம் நீங்குவதற்காகவாவது, நல்வழியில் நடக்க முயல்லோம். அவா் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வார்.

(மந்திரம் ஒலிக்கும்)