ஆயுளை அதிகரிக்கும் அற்புத ஆலயம்



-நல்லாத்தூர்

தமிழகத்தில் நடுநாடு என்றழைக்கப்படும் கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் நெல்வளமும், செங்கரும்பும் தழைத்து முப்போகம் விளையக் கூடியவை. அவற்றில் உன்னத பூமியாக பொற்புடை திருவூரில் நல்லாத்தூரும் ஒன்று. இங்கே உள்ள ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில், பல்லவ சிற்றரசர்களால் சுமார் 8ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டதும், பல்லவ சிற்பிகளின் கைவண்ணத்தில் குழைத்தெடுத்ததுமான ஓர் அற்புதம். நல்லாத்தூர், பல்லவர்களின் ஆட்சி காலத்தில் ‘சின்ன காஞ்சிபுரம்’ என சிறப்புப் பெயர் பெற்றிருப்பதாக புதுவையின் வரலாற்றுக் கருவூலம் எனப் போற்றப்படும் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் காணப்படுகிறது.

இவ்வூரின் மற்றொரு பெயர் அஸ்வரனிபுரி ஆகும். ஆலய நுழைவாயில் தெற்கு முகமாக அமைந்துள்ளது. இது இரட்டை பஞ்சாங்க வேலை முறையில், சுட்ட செங்கற்களினால் அடுக்கப்பட்ட மிக அற்புதமான வேலைப்பாடாகும். சுந்தர விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சூரியன், பைரவர், தனி சந்நதியில் சனி பகவான், சங்குமுனி, சாய்முனி ஆகியோர் வரிசையாக தரிசனம் தருகிறார்கள்.

திரிபுரசுந்தரி உடனுறை ஸ்வர்ணபுரீஸ்வரர் என்கிற பொன்னம்பலநாதர் மிகச் சாந்நித்யத்தோடு எழுந்தருளியுள்ளார். இவரின் கருவறை இரண்டு நிலைகளில் அமைந்துள்ளது. இதன் தத்துவம் சிவசக்தி வழிபாட்டைக் குறிப்பிடுகின்றது. மகாமண்ட-பத்தில் தென்-கிழக்கு திசையில் மிக அழகாக  காலசம்ஹார மூர்த்தியாகிய சிவபெருமானும் மார்க்கண்டேயரும், யமன் மற்றும் யம தூதர்கள் ஆகியோருடன் அமைந்துள்ள புடைப்புச் சிற்பம் பார்க்கப் பார்க்க அழகு. தற்போது அறுபது வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு சாந்தி யாகங்கள் நடைபெற்று கொண்டு வருகின்றன. 

நால்வரில் ஒருவரான அப்பரடிகள் ‘இவ்வாலய இறைவனை வழிபட்டால்  இடர்கள் தொடராது’ என்று தமது 6ம் திருமுறை, 77ம் பதிகம் 4வது பாடலில் பாடியுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பகோடா என்ற ஆங்கிலேயர் கடலூரின் கலெக்டராக பணியாற்றினார். பார்வை இழந்திருந்த அவரது மகள் இவ்வாலய இறைவனை வழிபட்டு பார்வை பெற்றாள். இதில் மனம் மகிழ்ந்த கலெக்டர் ஆலயத்தின் நித்ய பூஜைக்காக நஞ்சை, புஞ்சை நிலங்களை எம்பெருமான் பொன்னம்பலநாதரின் பெயரில் எழுதி வைத்தார்.

இந்த நிலங்களுக்கு நிலவரி வசூலிக்கக் கூடாது என்றும் சட்டம் பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி இங்கிலாந்திலிருந்து தண்டவாள இரும்பினால் செய்த மணியினை 1907ம் ஆண்டு இவ்வாலயத்திற்கு அளித்துள்ளார். ஆலயத்தின் பூஜை காலங்களில் மட்டுமே அடிக்கப்படும் இம்மணியின் ஓசை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்கிறது. இவ்வாலயத்தின் நுழை வாயிலையும், மகா மண்டபத்தையும் 12 கால் மண்டபம் ஒன்று இணைக்கிறது. மூன்றுநிலை ராஜகோபுரம், பைரவர், சூரியன், சனி பகவான், சமயக்குரவர் நால்வர் ஆகிய மூர்த்தங்களுக்கும் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சைவ- வைணவ ஒற்றுமையை காட்டும்படியாக காலசம்ஹார மூர்த்தியின் உக்கிரத்தைக் குறைக்கும் வகையில் அவருக்கு எதிரில் பாமா-ருக்மணி, பசுக்களுடன் கூடிய வேணுகோபால சுவாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டபத்தில் சூர்ய -சந்திர கிரகண விளக்கம் காணப்படுகிறது.  திரிபுரசுந்தரி அம்பிகையின் திருவடியில் ஸ்ரீசக்ர மஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பது இக்கோயிலின் மிகச் சிறப்பு அம்சமாகும்.

மகா மண்டபத்தின் நடுவே 28 இதழ் கொண்ட மூன்றடுக்கு கவிழ்ந்த நிலை தாமரை மலரும், நடுவில் அன்னாசிப் பழத்தைக் கொத்தும்  இரண்டு கிளிகளும் அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் திகழ்கிறது. திருக்கடையூரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் காலசம்ஹார மூர்த்தியின் திருவருள் இவ்வாலயத்தில் நிலவுவதால், ஆயுள் விருத்திக்கான  யாகங்களும், ஹோமங்களும் இங்கு நடைபெற்று வருகின்றன. காலசம்ஹார மூர்த்திக்கு ஒவ்வொரு மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று பஞ்சாட்சர ம்ருத்யுஞ்ஞய ஹோமம் நடைபெற்று வருகிறது.

பிரதோஷம், கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, வளர்பிறை சஷ்டி, தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசன விசேஷங்களின்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். பிரம்மோத்சவமாக சூரசம்ஹாரப் பெருவிழா ஐப்பசி மாதம் 9 தினங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த விழாவில் கொடியேற்றுதல், வேல் வாங்கும் நிகழ்ச்சி, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவம் ஆகியவை சிறப்பம்சங்கள்.

பக்தர்களின் எம பயம் நீங்கவும், அவர்களுடைய சஷ்டிஅப்தபூர்த்தி, ஆயுள் ஹோமம், பீமரதசாந்தி, சதாபிஷேகம் ஆகிய விசேஷங்கள் இத்தலத்தில், காலசம்ஹார மூர்த்தி ஆசியுடன் செய்து வைக்கப்படுகின்றன. புதுச்சேரி - கடலூர் பிரதான சாலையில் உள்ள தவளகுப்பத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது, இக்கோயில்.

- என்.ராதாகிருஷ்ணன்