மனிதர்களில் தெய்வம் யார், மனிதர் யார்?



குறளின் குரல் - 52

திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்கள் இருந்தாலும் அவற்றில் நான்கு முக்கியமான குறட்பாக்களில் மட்டும் ஒருவிதமான ஒற்றுமை காணப்படுகிறது. அவைமட்டும் `வைக்கப்படும்’ என்ற சொல்லோடு முடிகின்றன. மனிதர்களை யார் யார் என வரையறை செய்யும் குறட்பாக்கள் அவை. மனிதர்கள் தோற்றத்தில் மனிதர்களாக இருந்தாலும் எல்லோரும் மனிதர்களா? இல்லை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. மனிதர்களை மூவகைப் படுத்துகிறார் அவர். மனிதர்களில் தெய்வம் உண்டு. உயிரோடிருக்கும்போதே இறந்தவர் உண்டு. மனித வடிவில் பேய் கூட உண்டு!

எலும்பாலும் சதையாலும் குருதியாலும் உருவாக்கப்பட்ட உடலைக் கண்டு எல்லோரையும் மனிதர் என நம்பாதே, உண்மையான மனிதர் யார் என்பதைப் புரிந்துகொள், நீ உண்மையான மனிதனாக மாற முயற்சிசெய் என்பதே உலகப் பொதுமறையான குறள் தரும் நீதி. மனிதரில் தெய்வம் யார்? இரண்டு குறட்பாக்களால் தெய்வம் எனத்தக்க மனிதர் யார் என விளக்குகிறார் வள்ளுவர்.
 
`வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.’
(அதிகாரம் 5 இல்வாழ்க்கை.)

தர்மநெறி தவறாது வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் வானுறையும் தெய்வத்திற்கு ஈடாக மக்களால் எண்ணப்படுவான்.

`முறைசெய்து காப்பாற்றும்
மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.’
(அதிகாரம் 39 இறை மாட்சி.)
 
இன்னார் இனியார் என்று கருதாமல் நடுவு நிலைமையோடு ஆட்சி செய்யும் மன்னவனை குடிமக்கள் தெய்வமாகவே போற்றுவர். வள்ளுவர் சொல்லும் இந்தக் கருத்து உண்மைதானா? தர்ம நெறிப்படி வாழ்பவரை மக்கள் தெய்வமாய்க் கொண்டாடுகிறார்களா? ஆம் என்கின்றன நமக்குக் கிடைக்கும் சான்றுகள். அறநெறி தவறாது வாழ்ந்தவன் அயோத்தியை ஆண்ட ராமபிரான்.

நடுநிலை தவறாத மன்னனாக விளங்கியவனும் கூட. ராஜநீதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தன் காதல் மனைவி சீதாதேவியையே தியாகம் செய்ய முன்வந்தவன். ஏக பத்தினி விரதத்தை அனுசரித்து ஒரு இல், ஒரு வில், ஒரு சொல் என வாழ்வாங்கு வாழ்ந்தவன். மகுடாபிஷேகம் என்றபோதும் இல்லை, வனம் போ என்று சொன்ன போதும் இரண்டையும் ஒரே மனநிலையில் ஏற்று சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போன்ற முகத்தோடு கானகம் நோக்கி நடந்தவன். தந்தைசொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கியத்தின் இலக்கணமாக வாழ்ந்து காட்டியவன்.

அதனால் அவனை தெய்வமாகவே போற்றுகிறோம். ராமன் தெய்வம் என்பதில் சந்தேகமுண்டா? ராமனுக்கு பாரத தேசமெங்கும் கோயில் கட்டி வழிபடுகிறோம். வாழ்வாங்கு வாழ்ந்தவன் தெய்வமாகவே கொண்டாடப்படுவதற்கு இந்த ஓர் உதாரணம் போதாதா? இது இதிகாச உதாரணம். அண்மைக் கால உதாரணம் வேண்டுமா? அதற்கும் எடுத்துக்காட்டு இருக்கிறது.

வாழ்வாங்கு வாழ்ந்து தன் வாழ்வையே சத்திய சோதனை என்ற தலைப்பில் தன் வரலாறாகவும் எழுதி, வாசித்தவர்களை வியக்க வைத்தவர் மகாத்மா காந்தி. உலக மக்கள் குலம் அவரது உயரிய பண்புகளை எண்ணியெண்ணி அவரைப் போற்றுகிறது. அவரது தனிமனித ஒழுக்கத்தாலும் சமுதாய ஒழுக்கத்தாலும் கவரப்பட்டு அவருக்கு மகாத்மா என்ற பட்டத்தைக் கொடுத்து மகிழ்ந்தவர் நோபல் பரிசு பெற்ற வங்கக் கவியரசர் ரவீந்திரநாத் தாகூர். கோட்சேயால் சுடப்பட்டுக் காலமான அவர், தம் அருங்குணங்களால் தெய்வமாகி விட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் என்ற சிற்றூரில் மகாத்மா காந்திக்கு ஓர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலயத்தில் அவர் தெய்வமாகவே வழிபடப்படுகிறார். 1996ல் அந்தக் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின் 1997ல் அதற்குக் கும்பாபிஷேகமும் நிகழ்ந்தது. அக்காலத்தில் பத்து லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது அந்தத் திருக்கோயில். காந்தி சந்நதி, கஸ்தூரிபா சந்நதி என இரு சந்நதிகள் அங்கு உள்ளன. தவறாமல் நாள் தோறும் மூன்று வேளை பூஜை நடைபெறுகிறது. அதற்கெனவே ஓர் அர்ச்சகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய் தொடர்பான தோத்திரங்களைச் சொல்லி அவர் சிலைகளுக்கு அர்ச்சனை செய்கிறார்.

ஒவ்வோராண்டும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜயந்தியன்று அந்த ஆலயத்தில் மிகப்பெரிய உற்சவம் நடத்தப்படுகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி, ஆலயத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளியுள்ள நதியிலிருந்து பத்துக் குடங்களில் பக்தர்கள் நீரைச் சுமந்து வருகிறார்கள். காந்தி சிலைக்கு அந்தப் புனித நீரால் அன்று விமரிசையாக சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
 
பெண்கள் காந்தி சிலைமுன் பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்த்துகிறார்கள். கோயில் வளாகத்தில் காந்தி தொடர்பான பேச்சுப் போட்டிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பெரும் காந்தி பக்தரான வையாபுரி என்ற பெரியவர்தான் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்படக் காரணமாக இருந்தவர். வாழ்வாங்கு வாழ்ந்தவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டதற்கு வரலாற்று உதாரணம் மகாத்மா காந்தி.

மகாத்மா காந்தியைத் தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு அவரது கொள்கைகளின் படி வாழ்ந்த முன்னோடிப் பெண் எழுத்தாளர் வை.மு. கோதைநாயகி. 117 நாவல்களை எழுதியவர். ஜகன்மோகினி என்ற பத்திரிகையை நடத்தியவர். அவர் தமது புத்தகங்கள் பலவற்றில் தொடக்கத்தில், `ஸ்ரீகஸ்தூர்பா சமேத மகாத்மா காந்தி யுக புருஷாய நம’ என்றே எழுதிய்ருக்கிறார்! வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த காந்தி தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார் என்பதற்கு இந்த மந்திரமே சான்று.

தெய்வத்தை வழிபடுவது என்பது அந்த தெய்வத்தின் ஆசி பெற்று அத்தெய்வத்தின் உயரிய குணத்தைச் சிறிதளவேனும் நாம் பெற வேண்டும் என்பதற்காகவே. அறிவுக் களஞ்சியமான சரஸ்வதி தேவியை வழிபட்டு, அறிவைப் பெறுகிறோம். லட்சுமியை வழிபட்டு செல்வத்தைப் பெறுகிறோம். சிங்க வாகனத்தில் உலா வரும் சக்தி நிறைந்த பார்வதி தேவி நமக்கும் சக்தியை நல்குகிறாள்.

அவ்வகையில் காந்தி வழிபாடு மூலம் நாட்டில் வன்முறை நீங்கி சத்தியம் மேலோங்க வேண்டும் என்பதே காந்திகோயில் அன்பர்களின் மனமார்ந்த பிரார்த்தனை. தெய்வ நிலை அடையக் கூடிய ஆற்றல் உள்ள மனிதர்களில் பலர் அதை உணர்வதில்லை. தம் தவறான வாழ்வினால் தாம் வாழும்போதே உயிரற்றவர் போல் கருதப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் யார் யார்? ஆராய்கிறார் வள்ளுவர்.

`ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.’
(அதிகாரம் 22 ஒப்புரவு அறிதல்.) 

உலகப் பொதுநலம் கருதி உதவி செய்பவன் எவனோ அவனே உயிர் வாழ்பவனாகக் கருதப்படுவான். பிறர் படும் துன்பம் கண்டும் உதவி செய்யாமல் வாழ்பவன் உயிரோடிருக்கும் போதே இறந்தவனாகவே கருதப்படுவான் என்கிறார் வள்ளுவர். சென்ற ஆண்டு சென்னையைப் பெருவெள்ளம் தாக்கியது. மக்கள் அடைந்த அல்லல்கள் சொல்லி மாளாதவை. அந்நேரத்தில் முகம்மது யூனுஸ் என்ற முஸ்லிம் இளைஞர் ஜாதி மத பேதம் பாராமல் ஏராளமான மக்களுக்கு உதவி செய்தார். அவர் சரியான தருணத்தில் செய்த உதவி வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டியது.

`காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’ என்கிறது வள்ளுவம். சித்ரா, மோகன் இருவரும் இந்து தம்பதியர். வெள்ளப் பெருக்கில் சிக்கிக்கொண்ட ஏராளமானவர்களில் இவர்களும் இருவர். சித்ரா அந்நேரத்தில் நிறைமாத கர்ப்பிணியும் கூட. விறுவிறுவென்று வெள்ளம் அவர்கள் வீட்டைச் சூழ்ந்து கொண்டு அவர்களையும் சூழத் தொடங்கியது. என்ன செய்வதென்று தெரியாத இக்கட்டான நிலைமை.

இவர்கள் வீட்டையும் சேர்த்து ஏறக்குறைய 400 வீடுகள் ஊரப்பாக்கத்தில் வெள்ளத்தால் மூழ்கலாயின. மின்சாரம் இல்லை. எங்கும் இருள். குடும்பங்கள் தத்தளித்தன. மரங்களின் கிளை களைப் பற்றியவாறும் மாடிச் சுவரில் மேலேறி உதவி தேடிக் கதறியவாறும் பலர் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்த இடத்திற்குப் படகை எடுத்துக் கொண்டு வர யாரும் துணியவில்லை. படகோட்டிகளுக்கே தைரியமில்லை.

ஆனால், யூனுஸ் தம் நண்பர்களோடு களமிறங்கினார். படகுகளைச் சேகரித்துக் கொண்டு ஊரப்பாக்கத்திற்கு விரைந்தார். பலரைத் தம் நண்பர்களின் உதவியோடு பாய்ந்து பாய்ந்து காப்பாற்றினார். அப்போது கழுத்தளவு நீரில் மூழ்கும் நிலையில் இருந்தார்கள் சித்ராவும் மோகனும். அவர் களைக் கண்டு அதிர்ந்த யூனுஸ், தாமே நீந்திச் சென்று அவர்களைப் படகில் ஏற்றினார். அப்போதுதான் கவனித்தார் - சித்ரா நிறைமாத கர்ப்பிணி. இன்னும் ஓரிரு தினங்களில் பிரசவத்தை எதிர்பார்த்திருந்தார் அவர்.

வெள்ள பாதிப்பைக் கண்டு கடும் மன அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். யூனுஸ் அவரைக் கவலைவேண்டாம் எனச் சொந்த சகோதரர் போல ஆறுதல் சொல்லித் தேற்றினார். அவரையும் அவர் கணவரையும் படகில் ஜாக்கிரதையாக அழைத்துச் சென்று பெருங்களத்தூருக்குக் கொண்டு சேர்த்தார். சகோதரி சித்ரா உடனடியாக பெருங்களத்தூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டே தினங்களில் அவருக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்களைத் தக்க நேரத்தில் உதவி செய்து காப்பாற்றிய யூனுஸை அவர்கள் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார்கள். தங்கள் பெண் குழந்தைக்கு அவர்கள் யூனுஸ் என்றே பெயர் வைத்தார்கள். இப்போது பெரிய யூனுஸ் செய்த உதவியால் சின்ன யூனுஸ் ஒரு வயது நிறைந்த குழந்தையாக வளர்ந்து வருகிறாள். 

கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றிக் கரைசேர்த்த முகமது யூனுஸ் அல்லவோ வாழ்கிறவர்? அந்தக் கடும்வெள்ளக் காலத்தில் தங்களை மட்டும் ஜாக்கிரதையாகக் காப்பாற்றிக் கொண்டு மற்ற யாரையும் கவனியாதவர்கள் பலர் இருந்ததுண்டு. அவர்களெல்லாம் செத்தவர்களுக்கு சமானம் என்கிறது வள்ளுவம்.

`சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில்
சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே செய்கை
மறந்தாரடி!’

- எனப் பாடினாரே பாரதி? அத்தகையவர் களுக்கு உதாரணங்கள் நிறைய உண்டு. முகமது யூனுஸ் போன்ற பெருமக்கள் அபூர்வம். அவர்களே உண்மையில் வாழ்கிறவர்கள். மனிதர்களில் தெய்வம் யார், மனிதர் யார் எனத் தெரிந்துகொண்டு விட்டோம். உயிர்வாழும் போதே நடைப்பிணமாகக் கருதப்பட வேண்டியவர் யார், வாழும்போதே செத்தவராக உணரப்பட வேண்டியவர் யார் என்பதையும் வள்ளுவர் வரையறுத்து விட்டார். வள்ளுவர் பேய்க்கு நிகரானவர் என்று கருதுவது யாரை என அறிய வேண்டாமா?

`உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்.’
(அதிகாரம் 85 புல்லறிவாண்மை)

உலகத்தோர் உண்டு என்று தெளிவாகச் சொன்னவற்றை இல்லையென்று மறுத்து வேறு நெறியில் வாழ்பவன் இப்புவியில் பேயாகக் கருதப்படுவான் என்கிறார் வள்ளுவர். பேயின் இலக்கணம் என்ன? பேயைக் கண்டு எல்லோரும் மிரள்வார்கள். யாரும் அருகே வரமாட்டார்கள். எனவே யாரும் அருகே நெருங்காத தன்மையை ஒருவன் பெற்றிருந்தால் அவன் பேய்க்குச் சமானம் என்கிறது வள்ளுவம்.

பிறர் பொருளைத் திருடலாகாது, வன்முறையில் ஈடுபடலாகாது என்பன போன்ற பல நல்ல கோட்பாடுகள் நம்மிடையே இருக்கின்றன. இந்த நற்குணங்களையெல்லாம் உயர்வானவை என்று போற்றுகிறோம் நாம். ஆனால், சிலர் இதை அனுசரிப்பதில்லை. ரயிலில் குண்டு வைக்கிறார்கள். மனித வெடிகுண்டாகி தலைவர்களைக் கொல்கிறார்கள். பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்.
 
இத்தகையவர்களைப் பொதுமக்கள் மதிப்பதில்லை. அவர்களிடம் நெருங்குவது கூட இல்லை. அஞ்சி விலகுகிறார்கள். அவர்களுடைய தொடர்பால் தங்கள் நற்பெயர் கெட்டுவிடுமோ என பயப்படுகிறார்கள். மக்கள் நெருங்குவதற்கு அஞ்சுகிற நிலையில் இருந்தால், அப்படிப்பட்டவர்கள் பேய்க்கு சமானம் தானே? வள்ளுவர் சொல்வது சரிதானே? வள்ளுவத்தின்படி மனிதர்கள் மூன்று பிரிவுகளில் வைக்கப்படுகிறார்கள்.

முதல்வகை - மனிதரில் தெய்வம். இரண்டாம் வகை - மனிதரில் உயிரோடிருக்கும் போதே இறந்தவர். மூன்றாம் வகை - மனிதரில் யாரும் நெருங்காத பேய். எந்த வகை மனிதராக மாறவேண்டும் என்னும் சுதந்திரம் எப்போதும் நம்மிடம்தான் உண்டு. மனித உடல் பெற்றுள்ள நாம் மனிதாபிமானத்தோடு மனிதராக வாழ வழிகாட்டுகிறது வள்ளுவம். வாழ்வில் உயர ஒரே வழி வள்ளுவத்தைப் பின்பற்றுவதுதான்.

(குறள் உரைக்கும்)

-திருப்பூர் கிருஷ்ணன்