சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் ஸ்க்ரீன் டைம் அதிகரிப்பு!



தொலைக்காட்சி முன் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல், அதிக நேரம் தொலைபேசியை பயன்படுத்துதல் அல்லது கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் தொடர்ச்சியாக பணியாற்றுதல் உள்ளிட்டவை சர்க்கரை நோய் பாதித்த டைப் 2 நோயாளிகளின் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மோசமாக பாதிக்கிறது என்று சென்னை க்ளெனீகில்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
 மருத்துவர்கள் அஸ்வின் கருப்பன், ஆப்ரின் ஷபீர், தீபிகா கணேஷ் மற்றும் ஹரிஹரன் சுகுமாரன் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், குறிப்பாக வார இறுதி நாட்களில் நீண்ட நேரம் தொலைக்காட்சி அல்லது கம்ப்யூட்டரை பயன்படுத்துவது ரத்த சர்க்கரை அளவை எவ்வாறு அதிகரிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் அஸ்வின் கருப்பன்.

டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 217 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டதில் அவர்களின் தினசரி டிவி நேரம், தூக்க பழக்கம் மற்றும் சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவை குறித்து கேட்கப்பட்டது.  

இந்த ஆய்வு குறித்து அவர்களிடம் விரிவாக கூறப்பட்ட பிறகு, மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் உட்பட பலதரப்பட்ட குழுவிடமிருந்து பங்கேற்பாளர்கள் ஆலோசனைகளைப் பெற்றனர்- அதிகம் டிவி பார்ப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது, சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் தூக்க வழக்கங்களை மேம்படுத்துவது குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் டிவி பார்ப்பதை குறைத்ததினால் ரத்த சர்க்கரையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அறிந்து கொள்ள அதன் முந்தைய முடிவுகளுடன் அவை ஒப்பிடப்பட்டு பார்க்கப்பட்டன.  

அந்த முடிவுகள் என்ன காட்டின என்றால், வார இறுதி நாட்களில் திரைகளின் முன் அதிக நேரம் செலவிட்டவர்களுக்கு அதிக சர்க்கரை அளவு இருந்தது.

ஆலோசனைக்குப் பிறகு, அவர்களின் சர்க்கரை சராசரி அளவு 7.47 சதவீதத்திலிருந்து 7.21 சதவீதமாக குறைந்தது.திரை முன் அமர்ந்திருக்கும் நேரம் ஒரு நாளைக்கு சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் குறைக்கப்பட்டது, குறிப்பாக வார இறுதி நாட்களில்.இதன் காரணமாக பங்கேற்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வந்தது.

நீண்ட நேரம் திரை முன் அமர்ந்திருப்பது என்பது குறைவான உடல் செயல்பாடு, அதிக உணவு, மோசமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது, இவை அனைத்தும் சர்க்கரை கட்டுப்பாட்டைப் பாதிக்கின்றன. 

குறிப்பாக படுக்க செல்லும் முன் அல்லது வார இறுதி நாட்களில் திரை முன் அமர்ந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது என்பது இயற்கையாகவே சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது என்பதை ஆய்வு தெளிவாகக் காட்டுகிறது, ஏனெனில் திரை நேரத்தைக் குறைப்பது என்பது உடல் செயல்பாடு, உணவு முறை மற்றும் ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றைக் காட்டுகிறது. 

உங்கள் தொலைபேசி அல்லது தொலைக்காட்சி உங்கள் சர்க்கரை அளவை அமைதியான முறையில் பாதிக்கலாம். திரை முன் அமர்ந்திருக்கும் நேரத்தைக் குறைத்து, அதிக உடல் செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், உங்கள் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் ஒரு தெளிவான முன்னேற்றத்தைக் காணலாம் என்று ஆய்வின் முதன்மை ஆசிரியரான டாக்டர் 
அஸ்வின் கருப்பன் தெரிவித்துள்ளார்.

உங்கள் தொலைபேசி உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடாது. அதை கீழே வைத்துவிட்டு, நகராமல் அப்படியே உங்கள் சர்க்கரை அளவு குறைவதைப் பாருங்கள் என்று ஆய்வு ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் ஆப்ரின் ஷபீர் தெரிவித்தார்.

திரை நேரத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும். (அனைவருக்கும், குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் நபர்களுக்கு)விழித்தெழுந்த முதல் ஒரு மணி நேரம், தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக டிவி அல்லது கம்ப்யூட்டர் பார்ப்பதை தவிர்த்திடுங்கள்.20-20-20 விதியைப் பின்பற்றுங்கள்: ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 விநாடிகளுக்கு ஒருமுறை 20 அடி தூரத்தில் பாருங்கள்.

நீங்கள் கட்டியிருக்கும் கைகடிகாரத்தில் நேரத்தை பாருங்கள்; தொலைபேசியில் அல்ல.அத்தியாவசியமற்ற செய்திகளை பார்க்காதீர்கள். ஸ்க்ரோலிங் செய்வதற்கு பதிலாக நடை பயிற்சிக்கு மாறுங்கள் - நீங்கள் அதை பார்க்க விரும்பும் ஒவ்வொரு முறையும், ஒரு சிறிய நடைப்பயணத்தை மேற்கொள்ளுங்கள்.சாப்பாட்டுப் பகுதி மற்றும் படுக்கை அறைக்கு வெளியே டிவி அல்லது கம்ப்யூட்டரை வைத்திருங்கள்.

உங்களின் தினசரி டிவி பார்க்கும் நேரத்தைக் கண்காணிக்கவும் - அது உங்கள் பயன்பாட்டைப் உணர்வுப்பூர்வமாகக் குறைக்க உதவும்.வார இறுதி நாட்களில் பொழுதுபோக்கிற்காக அரை நாளை ஒதுக்குங்கள்.

நள்ளிரவு வீடியோக்களுக்குப் பதிலாக புத்தகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.இரவு உணவை டிவி பார்க்காமல் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுங்கள்.உங்கள் கண்களுக்கும் சர்க்கரைக்கும் ஓய்வு தேவை - மன அழுத்தத்திலிருந்து மட்டுமல்ல, திரைகளிலிருந்தும்.

-  ஸ்ரீதேவிகுமரேசன்