மீன் பேஸ்ட் உடலுக்கு நல்லதா?



மீன்கள் அதிகம் கிடைக்கும் காலங்களில் அவற்றைப் பதப்படுத்தி பிறகு பயன்படுத்துவதற்கு, உப்பு சேர்த்து சூரிய ஒளியில் உலர்த்தி கருவாடு தயாரிப்பது பழைய முறை. இதுதான் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த மீன் பதப்படுத்தும் முறை. 
அதைத் தொடர்ந்து வினிகர் சேர்த்து ஊறுகாய் போடும் முறை. இன்றைய நவீன உணவு யுகத்தில், மீன் முள், மீன் தோல், மீன் கண், மீன் கல்லீரல், மீன் கொழுப்பு, மீன் கழிவு என்ற மீனின் ஒவ்வொரு உறுப்பும் ஏதேனும் ஒருவகையில் பக்குவப்படுத்தப்பட்டு மதிப்பூட்டப்பட்ட பொருளாக விற்பனைக்கு வருகிறது. 

அவ்வகையில் மீனின் தோல், முள், கழிவு நீக்கப்பட்டு, சதைப்பகுதியை மென்மையான பசை போல் அரைத்துப் பிறகு திடமான ஒரு உருளையாகவோ, நீள் சதுரத் துண்டுகளாகவோ தயாரித்து, தேவையான நேரத்தில் அவற்றை மீண்டும் சமைத்து ஒரு உணவுப்பொருளாக தயாரித்துக் கொள்ளலாம். இந்த பசை அல்லது பேஸ்ட்தான் “சுரிமி” என்றழைக்கப்படுகிறது. 

மீனைப் பசைபோல் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் ஜப்பானில்தான் இருந்தது என்றாலும், சீனாவில், மீனை அரைத்து உருண்டைகளாக்கிப் பிறகு பயன்படுத்தும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால் அவற்றின் ஆயுட்காலம் குறைவாகவே இருந்தது. உறை வெப்பநிலையில் மீன் பசையைப் பதப்படுத்திப் பயன்படுத்தும் முறை 1960 காலத்தில்தான் ஜப்பானில் பிரபலமாகியது. 2000 கால கட்டங்களில் மீன் சுரிமியின் விற்பனையும் சந்தையும் உச்சத்திற்குச் சென்றன. 

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் மூன்று மில்லியன் டன் அளவில் சுரிமி தயாரிக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளும் ஜப்பானும் சுரிமி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், தாய்லாந்தும் சீனாவும் அதிக அளவில் சுரிமி தயாரித்து ஏற்றுமதி செய்துகொண்டு வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இதில், லூதியானா, வியட்னாம், பிரான்ஸ், மலேசியா போன்ற நாடுகளும் களத்தில் இறங்கியுள்ளன. 

மீன் சுரிமியில், 76% தண்ணீர், 15% புரதச்சத்து, 6.85 % கார்போஹைடிரேட் மற்றும் 0.9% கொழுப்பு உள்ளது. மீனிலுள்ள தசை நார்ப்பொருளில் இருக்கும் மையோசின் (Myosin) என்னும் புரதத்தின் அளவை வைத்தே, சுரிமி தயாரிப்பதற்குத் தேவையான மீன்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மீன் கழிவு, தோல், முள் போன்றவற்றை நீக்கியபிறகு கிடைக்கும் சதைப்பகுதியில் 70 % தசை நார்ப்பொருள் இருக்க வேண்டும். 

அப்போதுதான் அதில் கிடைக்கும் 50-60% மையோசின் புரதம், சுரிமி தயாரிப்பதற்குத் தேவையான கொழகொழப்பான பசை போன்ற தன்மையைக் கொடுக்கும். அதுவே, வெப்பப்படுத்தும்போது, திடமான மற்றும் மென்மையான சுரிமியை உருவாக்குவதற்குத் தேவையான மூலப்பொருளாக இருக்கிறது. 

சுரிமி தயாரிப்பதற்காக பெரும்பாலும் Alaskan Pollock என்ற மீனே பயன்படுத்தப்படுகிறது. நெத்திலி மீன் குடும்பத்தைச் சார்ந்த பெருவியன் அன்கோவிடா என்னும் மீன் தான் உலகளவில் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டு அதிக வருமானம் அளிக்கும் மீன் வகை. இதற்கு அடுத்ததாக பொல்லாக் வகை மீன்கள்; மீன் உணவுச் சந்தைக்கு மூலதாரமாக இருக்கின்றன. இதற்குக் காரணம், அவற்றில்தான் மதிப்புக் கூட்டப்பட்ட சுரிமி மீன் உணவுகள் அதிகமாகத் தயாரிக்கப்படுகின்றன. 

சுரிமி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மீன்கள், தோல், முள், குடல் பகுதி நீக்கப்பட்டு, நன்றாக சுத்தம் செய்யப்படுகிறது. பிறகு பல முறைகள் கழுவப்பட்டு கொழுப்பு, ரத்தம் போன்றவையும் நீக்கப்படுகிறது. இந்த சதைப்பகுதி, திருகுகள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டு, அதிகப்படியான நீர் பிரித்தெடுக்கப்பட்டு, அடர்த்தியான மீன் பசை தயாரிக்கப்படுகிறது.

இந்தப் பசையுடன் உப்பு, உருளைக்கிழங்கு அல்லது மரவள்ளிக்கிழங்கின் ஸ்டார்ச், முட்டை வெள்ளைக்கரு, சோயாபுரதம் போன்றவை சேர்க்கப்பட்டு, தேவையான வடிவங்களில் வார்க்கப்பட்டு 18 டிகிரி வெப்பநிலைக்கும் கீழே உறைநிலையில் பதப்படுத்தப்படுகிறது. 

இவ்வாறாக விற்பனை செய்யப்படுவதையும் வாங்கி சமைத்து உபயோகப்படுத்தலாம். அல்லது, இந்த உறைவெப்பநிலை துண்டுகளை மீண்டும் எண்ணெய், சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்த்து மீண்டும் வேகவைத்து, குளிர்வித்து, உறை வெப்பநிலையில் சேமிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றையும் வாங்கி, சூப், சாலட், பாஸ்தா, கேஸரோல், சாண்ட்விச், கிரேவி போன்ற உணவுகளை சமைத்துக்கொள்ளலாம். 

மீன்கள் மட்டுமே சுரிமி 

செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்று கருதக்கூடாது. நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளும் சுத்தம் செய்யப்பட்டு, சதைப்பகுதி பதப்படுத்தப்பட்டு, சுரிமி தயாரிக்கப்படுகிறது. இவற்றில் போலிகளும் உண்டு. 

மீன் சுரிமியை துண்டுகளாக்கி, அவற்றின்மேல் நண்டின் நிறம் பூசப்பட்டு, நண்டின் சுவையும் செயற்கையாக சேர்க்கப்படுகிறது. இவை, மலிவு விலை சுரிமி உணவுகள் என்று விற்பனை செய்யப்படுகிறது. சுரிமி வாங்கி உபயோகப்படுத்துபவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். 

மீன்கள் பொதுவாகவே முதல் தர புரத உணவுகள் வகையில் வருவதால், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் எளிதில் செரிக்கக்கூடிய புரதம் போன்றவை சுரிமி உணவில் கிடைத்துவிடுகின்றன. 

100 கிராம் சுரிமியில் ஏறக்குறைய 11 - 15 கிராம் புரதம் கிடைப்பதுடன், லியூசின், லைசின், வேலின் போன்ற முக்கிய அமினோஅமிலங்களும் உள்ளன. மேலும், 99 கிலோ கலோரி ஆற்றல், 1 கிராம் அளவில் பல்நிறைவுறா கொழுப்பு அமிலம் போன்றவையும் கிடைக்கிறது. 

இவ்வாறு குறைவான கொழுப்பும், குறைவான கலோரியும் இருப்பதால், உடல் பருமன், நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும் ஏற்றது. மேலும், சுரிமி உணவில் அயோடின், பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களும், பி வகை வைட்டமின்கள், வைட்டமின் ஈ போன்றவையும் உள்ளதால், நுண்சத்துக்களைக் கொடுக்கும் மிகச் சிறந்த அசைவ உணவாகவும் கருதப்படுகிறது. 

உறை வெப்பநிலையில் சுரிமி பாதுகாக்கப்படும்போது, மீன் சதைப்பகுதியின் புரதங்கள் பாதிப்படையும். இதைத் தவிர்ப்பதற்காக, cryoprotectants என்னும் குளிர்நிலையில் உணவுப் பொருட்களைப் பாதுகாக்கும் வேதிப்பொருட்களான சுக்ரோஸ், சார்பிடால், சோடியம் டிரைபாலிபாஸ்படேஸ் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பொதுவாகவே, இதில் சோடியம் அதிகம் சேர்க்கப்படுவதால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகள் இருப்பவர்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

மீன் சாப்பிட்டவுடன் ஒவ்வாமை ஏற்படும் என்பவர்களும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. உணவுத் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையில், நவீன பதப்படுத்துதல் முறைகளை மீன் உணவுக்கும் பயன்படுத்திக்கொள்வது நல்லதுதான்.  என்றாலும், அதிகப்படியான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிப்பது உடலுக்கும் கேடு என்பதால், சுரிமி உணவுகளை எப்போதாவது மட்டும் உணவாகப் பயன்படுத்துவது நல்லது. 

உணவியல் நிபுணர் பா. வண்டார்குழலி