கொழுப்பு கல்லீரல் நோயை வெல்லலாம்!



நம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரலில் அதிகரிக்கும் கொழுப்பு பல்வேறு உபாதைகளையும், பாதிப்புகளையும் உண்டாக்கும். கொழுப்பு கல்லீரல் (ஃபேட்டி லிவர்) தொடர்பான விழிப்புணர்வு இருந்தால் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை மூலம் கொழுப்பு கல்லீரல் நோயின் கடும் விளைவுகளைத் தடுத்து, பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்கிறார் மூத்த ஆலோசகர், HPB அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர், மருத்துவர் ரஜினிகாந்த் பாட்சா.

கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty Liver) என்பது நமது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேருவதைக் குறிக்கிறது. இதை மருத்துவத் துறையில் Hepatic Steatosis என்று அழைப்பார்கள். பொதுவாக கல்லீரலில் குறைந்த அளவு கொழுப்பு இருப்பது இயல்பானதுதான். 

ஆனால், அதிக அளவில் கொழுப்பு சேருவது கல்லீரல் வீக்கம், கல்லீரல் சேதம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட நீண்டகாலப் பாதிப்புகளை உண்டாக்கும். மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்டவை காரணமாக உலக அளவில் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 கொழுப்பு கல்லீரலுக்கான காரணங்கள்?

பொதுவாக கொழுப்பு கல்லீரல் நோயை  இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். மதுபான வகைகளால் (ஆல்கஹால்) ஏற்படும் கொழுப்பு கல்லீரல் நோய் (AFLD) மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD).இதில் ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் என்பது அதிக அளவில் மது அருந்துவதால் ஏற்படும் நோயாகும்.

 அதிக மதுவால் கல்லீரலில் கொழுப்பு அதிகரித்து, வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் கல்லீரல் செல்கள் பாதிக்கப்படுகின்றன.ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என்பது மதுபானப் பயன்பாட்டுடன் தொடர்புடையது அல்ல...

 உடல் பருமன்

*டைப்-2 நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு

*உடலில் கொழுப்பு சேருதல்

*உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை

*ஆரோக்கியமற்ற உணவுகள் (குறிப்பாக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது)

*குறிப்பிட்ட சில மருந்துகள் (ஸ்டீராய்டு வகை மருந்துகள் மற்றும் சில புற்றுநோய் மருந்துகள்)

*உடனடி உடல் குறைப்பு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு

*மரபியல் மற்றும் சில வளர்சிதை மாற்றக் கோளாறுகள்.

இதுபோன்ற காரணங்களால் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கொழுப்பு கல்லீரலின் அறிகுறிகள்

பொதுவாக கொழுப்பு கல்லீரல் நோய்க்கு குறிப்பிடத்தக்க அறிகுறிகள் எதுவும் இருக்காது. குறிப்பாக, ஆரம்ப கட்டத்தில் நோய்க்கான அறிகுறிகளைத் தெரிந்துகொள்ள முடியாது. அதேநேரத்தில், நோயின் பாதிப்புகள் கடுமையாகும்போது பல்வேறு அறிகுறிகளை உணரலாம்.

 உடல் சோர்வு

 வயிற்றுப் பகுதியில் லேசானது முதல் மிதமான வலி மற்றும் அசௌகரியம். குறிப்பாக, வயிற்றின் மேல் வலது பக்கத்தில் அசௌகரியமான நிலையை உணர்தல்.

 விவரிக்க முடியாத எடை இழப்பு

 உடல் பலமின்மை

 கல்லீரல் பெரிதாவது. (மருத்துவரால் கண்டறியப்படும்)

கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்புகள் அதிகரிக்கும்போது மஞ்சள் காமாலை, கால்களில் வீக்கம் பிரச்சினைகள் ஏற்படும். மேலும், கொஞ்சம் கொஞ்சமாக கல்லீரல் செயலிழப்பதால் ஏற்படும் உடல் உபாதைகளை உணரலாம்.

கொழுப்பு கல்லீரலைத் தடுக்கும் வழிமுறைகள்…

ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் கொழுப்பு கல்லீரல் நோயைத் தடுக்கலாம். இதற்கான வழிமுறைகள்:

சரியான உடல் எடையைப் பராமரித்தல்: உடல் பருமன் என்பது இந்நோய்க்கான முக்கியக் காரணியாகும். எனவே, உடல் எடையில் 5 முதல் 10 சதவீதத்தை குறைப்பது கல்லீரல் கொழுப்பைக் கணிசமான அளவுக்கு குறைக்கும்.

 சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம்: பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த அளவு புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு இருக்கும் உணவுகளைப் பயன்படுத்தல் அவசியமாகும். அதேநேரத்தில், அதிக சர்க்கரை, சத்துகள் நீக்கப்பட்ட மாவு வகைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும்.

தொடர் உடற்பயிற்சி: முடிந்தவரை தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். குறிப்பாக 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது கல்லீரலில் உள்ள கொழுப்பைக் கரைக்கச் செய்யும்.

மது அருந்துவதைக் கட்டுப்படுத்தல் அல்லது முற்றிலுமாக தவிர்ப்பது: குறிப்பாக, கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பவர்கள் மதுபானங்கள் அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

சர்க்கரை நோய் மற்றும் அதிக கொழுப்பை கட்டுப்படுத்தல்: ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதேபோல, தேவையற்ற கொழுப்பு சேராத அளவுக்கு ஆரோக்கியமான உடல்நிலையைப் பராமரிக்க வேண்டும்.

தேவையற்ற மருந்துகள் மற்றும் மாத்திரைகள் பயன்பாட்டைத் தவிர்ப்பது: மருத்துவர் பரிந்துரைக்காத மாத்திரைகளைப் பயன்படுத்துவது, மூலிகைகள் நிறைந்த மருந்துகளை உரிய மருத்துவப் பரிந்துரையின்றிப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

 இரவு 7 மணிக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு கல்லீரலுக்கான சிகிச்சை முறைகள்:

தற்போது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் எதுவுமில்லை.  ஆனால், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் கொழுப்பு கல்லீரல் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும். 

எடையைக் குறைத்தல்: நமது அதிகப்படியான எடையைக் குறைப்பது கொழுப்பு கல்லீரல் பாதிப்புகளைத் தடுப்பதற்கான பயனுள்ள சிகிச்சையாகும். குறிப்பாக, கல்லீரலில் கொழுப்பு அதிகரித்தல், கல்லீரல் வீங்குதல் மற்றும் வடு அல்லது தழும்புகள் ஏற்படுவதைக் குறைக்கிறது.

உணவு முறை மாற்றம்: பாரம்பரிய உணவு முறையைக் கடைப்பிடித்தல், குறிப்பாக, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், பாதாம்-முந்திரி வகைகள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். 

இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி: தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது கல்லீரல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. திடீரென எடையைக் குறைக்க முடியாதவர்கள்கூட தொடர்ந்து உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் கல்லீரலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கலாம்.

உடல்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது: சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 மருந்துகள்: ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு குறிப்பிட்ட மருந்துகள் இல்லை என்றாலும், நோய் பாதிப்புகளைத் தடுக்கவும், குறைக்கவும் டாக்டர்கள் சில மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் கண்காணிப்பு

அல்ட்ராசவுண்ட் அல்லது ஃபைப்ரோ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மூலம் கல்லீரல் செயல்பாடுகளை சோதித்துக் கொள்வது, ஆரம்ப கட்டத்திலேயே நோய் பாதிப்புகளைக் கண்டறிய உதவும். 

மேலும், கல்லீரல் செயல்பாடுகளை அவ்வப்போது பரிசோதிப்பது கொழுப்பு கல்லீரல் நோய் உபாதைகளைத் தடுப்பது தொடர்பான வழிமுறைகளையும் கண்டறிய உதவும்.
மதுவைத் தவிர்க்கவும்: கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மதுவைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

இவற்றையெல்லாம் தாண்டி, கொழுப்பு கல்லீரல் நோய் முற்றிய சூழலில் அல்லது கல்லீரல் செயலிழக்கும் சூழலில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே நோய்க்கான ஒரே தீர்வாக இருக்கும்.

முடிவுரை

தற்கால சமூக வாழ்க்கை முறையில் கொழுப்பு கல்லீரல் நோய் என்பது வளர்ந்து வரும் ஒரு சுகாதாரப் பிரச்னையாகும். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். 

அதேநேரத்தில், ஆரம்ப கட்டத்திலேயே இந்நோய் கண்டறியப்பட்டால், வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் நோய் பாதிப்புகளில் இருந்து மீளமுடியும். குறிப்பாக, நோய் குறித்த விழிப்புணர்வு, ஆரம்பத்திலேயே கண்டறிதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை மூலம் கொழுப்பு கல்லீரல்நோய் பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

- ரிஷி