45-50 வயது பெண்கள்…
செவ்விது செவ்விது பெண்மை!
பெரிமெனோபாஸை எதிர்கொள்வது எப்படி?
45 முதல் 50 வயது வரையிலான காலகட்டம் பெண்களின் வாழ்க்கையில் உயிரியல், உளவியல், சமூக மாற்றங்கள் ஒன்றிணையும் மிக முக்கியமான கட்டம் ஆகும். இந்த வயதில் பல பெண்கள் சந்திக்கும் மனநிலை மாற்றங்கள், பல நேரங்களில் “வயசு காரணம்”, “மனசு பலவீனம்” என தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஆனால் மனநல மருத்துவக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இவை பெரும்பாலும் Perimenopauseசார்ந்த மனநிலை மாற்றங்கள் ஆகும்.
 பெரிமெனோபாஸ் என்றால் என்ன?
மாதவிடாய் முற்றிலும் நிற்பதற்கு முன்பாக ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காலமே பெரிமெனோபாஸ் ஆகும். இது சில பெண்களுக்கு 25 ஆண்டுகள் கூட நீடிக்கலாம்.இந்த காலத்தில் எஸ்ட்ரஜன் மற்றும் புரொஜெஸ்டெரோன் ஹார்மோன்களின் திடீர் ஏற்ற இறக்கங்கள், மூளையின் Serotonin, Dopamine போன்ற நியூரோடிரான்ஸ்மிட்டர்களை நேரடியாக பாதிக்கின்றன. இதன் விளைவாக மனநிலை, தூக்கம், உணர்ச்சி கட்டுப்பாடு ஆகியவை பாதிக்கப்படுகின்றன.
பெரிமெனோபாஸ் காலத்தில் காணப்படும் முக்கியமான மனநல அறிகுறிகள்
1. மனநிலை ஏற்ற இறக்கங்கள் (Mood Swings) ஒரே நாளில் அல்லது ஒரே நேரத்தில்,
*அதிக கோபம்
*காரணமில்லா அழுகை
*உடனடி எரிச்சல்
*மனசு “கட்டுப்பாட்டில்
இல்லாதது” போன்ற உணர்வு
இவை பெரிமெனோபாஸ் காலத்தின் அடையாள அறிகுறிகள். இதை பெண்களே “நான் மாறிட்டேனா?” என குழம்பி விடுவார்கள்.
2. பெரிமெனோபாஸ்சார்ந்த மனச்சோர்வு (Perimenopausal Depression)
இந்த வயதில் ஏற்படும் மனச்சோர்வு, இளமையில் வரும் மனச்சோர்வை விட சற்று வேறுபட்டது.
சிறப்பம்சங்கள்
*காலை நேரங்களில் அதிக சோர்வு *முன்பு பிடித்த விஷயங்களிலும் ஆர்வமின்மை *தன்னைப் பற்றிய குற்ற உணர்வு *எதிர்காலம் குறித்து பயம் *உடல் வலி + மன வேதனை சேர்ந்து வருதல்
பல பெண்களுக்கு முன்பு மனச்சோர்வு இல்லாவிட்டாலும், இந்த வயதில் முதன்முறையாக தோன்றலாம்.
3. பதற்றம் மற்றும் Panic Symptoms பெரிமெனோபாஸ் காலத்தில் Anxiety Disorders அதிகரிக்கும்.
*இதயம் வேகமாக துடிப்பது
*மூச்சுத் திணறல்
*“எனக்கு ஏதோ ஆகப் போகிறது” என்ற அச்சம்
*மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் சாதாரணமாக இருந்தும் பயம் குறையாத நிலை
இவை பெரும்பாலும் panic symptoms ஆகும். ஆனால் பலர் இதய நோய் என பயப்படுவார்கள்.
4. தூக்கக் கோளாறுகள் மற்றும் அதன் மனநல விளைவுகள்
*இரவில் அடிக்கடி விழித்துக்கொள்வது
*வெப்ப அலைகள் (Hot flashes) காரணமாக தூக்கம் பாதிக்கப்படுதல்
*தூக்கம் இல்லாததால் பகலில் கோபம், கவனம் சிதறல்
தூக்கமின்மை நீடித்தால், அது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும்.
மனநல நோயா? ஹார்மோன் பிரச்னையா? மனநல மருத்துவரின் பார்வை முக்கியமான ஒரு விஷயம் —
பெரிமெனோபாஸ் மனநிலை மாற்றங்கள் “மன பலவீனம்” அல்ல; அது உயிரியல்மனநல மாற்றம்.
*எல்லா பெண்களுக்கும் மருந்து தேவையில்லை
*ஆனால் சிலருக்கு மனநல சிகிச்சை அவசியம்
*ஹார்மோன் மாற்றம் + வாழ்க்கை அழுத்தங்கள் சேர்ந்தால் நோய் தீவிரமடையும்.
கையாளும் முறைகள் Psychiatric Management
1. சரியான நோயறிதல் (Correct Diagnosis)
*இது பெரிமெனோபாஸ்சார்ந்த மனநிலை மாற்றமா?
*Major Depression / Anxiety Disorder ஆக மாறியுள்ளதா?
என்பதை மனநல மருத்துவர் மதிப்பீடு செய்வது அவசியம்.
2. உளவியல் ஆலோசனை (Psychotherapy) CBT (Cognitive Behaviour Therapy) பெண்களின்:
*எதிர்மறை எண்ணங்களை
*வயது, தோற்றம், பயன்பாடு குறித்த தவறான நம்பிக்கைகளை மாற்ற உதவுகிறது.
3. மருந்து சிகிச்சை தேவைப்படும்போது மட்டும் சில பெண்களுக்கு:
*குறைந்த அளவு antidepressants
*anti-anxiety மருந்துகள்
பாதுகாப்பாக, குறுகிய காலத்திற்கு வழங்கப்படலாம்.
“எல்லா மனநிலை மாற்றத்துக்கும் மருந்து தேவையில்லை; ஆனால் தேவையான போது மருந்தை தவிர்ப்பதும் சரியானது அல்ல.”
4. குடும்ப ஆதரவு மிக முக்கியமான அம்சம் இந்த காலத்தில் பெண்களுக்கு:
* “நீ மாறிட்ட” என்ற விமர்சனம் அல்ல
* “உனக்கு புரிகிறது” என்ற ஆதரவு தேவை
கணவன், பிள்ளைகள் புரிந்து கொண்டால் சிகிச்சையின் பலன் அதிகரிக்கும்.முடிவுரை 45-50 வயது என்பது பெண்களின் வாழ்க்கையின் முடிவு அல்ல; அது மனநல ரீதியாக மறுசீரமைப்பு நடைபெறும் காலம். பெரிமெனோபாஸ்சார்ந்த உளவியல் மாற்றங்களை சரியான அறிவோடு அணுகினால், இந்த வயது பெண்களுக்கு ஒரு உள் வலிமையின் ஆரம்பம் ஆக மாறும்.மனநல சிக்கல்கள் இருந்தால் உதவி தேடுவது பலவீனம் அல்ல . அது அறிவின் அடையாளம்.
மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி
|