பெண்களின் இதய ஆரோக்கியம்... ஒரு பார்வை!
இதயமே… இதயமே… ஹெல்த் கைடு!
இதய நோய் என்பது பெண்கள் மரணமடைவதற்கு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. இருப்பினும், பெண்களில் பலர், இன்றும் ஆண்களுக்கு வருவது போன்ற‘‘வழக்கமான” கடுமையான நெஞ்சு வலியையே மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறியாகக் கருதுகின்றனர்.
 ஆனால், உண்மை அதுவல்ல என்பதே யதார்த்தம். பெண்களுக்கு பெரும்பாலும் மிக நுட்பமான (subtle) எச்சரிக்கை அறிகுறிகள் ஏற்படுகின்றன. இந்த நுட்பமான அறிகுறிகளை பெண்கள் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுவதால், அவர்கள் தகுந்த சிகிச்சை பெறுவதைத் தாமதமாக்குவதுடன், மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். என்னென்ன அறிகுறிகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதை அறிந்துகொண்டு, சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது ஒரு உயிரைக் காப்பாற்ற உதவும்.
 பெண்களிடையே மார்பு வலி அல்லது அழுத்தம் போன்ற அறிகுறிகள் மாரடைப்பின் பொதுவான அறிகுறியாக இருந்தாலும்,, அது கடுமையானதாக இல்லாமலோ அல்லது முக்கிய பிரச்சினையாக தெரியாமலோ இருக்கலாம்.. ஆண்களை விட தாடை, கழுத்து, தோள்பட்டை, மேல் முதுகு அல்லது மேல் வயிற்றில் அசௌகரியம் (discomfort), மூச்சுத் திணறல், குமட்டல் அல்லது வாந்தி, தலைச்சுற்றல், வியர்வை, அல்லது வழக்கத்திற்கு மாறான சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த அறிகுறிகள் அவர்கள் ஓய்வாக இருக்கும்போது கூட ஏற்படலாம் அல்லது தூக்கத்திலிருந்து எழுப்பும் அசெளகரியமாகவும் இருக்கலாம்.
சில சமயங்களில் இவை அமிலத்தன்மை (acidity), காய்ச்சல் அல்லது மன அழுத்தம் தவறாக கருதப்படலாம்.. குறிப்பாக, மூச்சுத் திணறல், குமட்டல் மற்றும் முதுகு அல்லது தாடை வலி ஆகியவற்றுடன் வழக்கத்திற்கு மாறான அசெளகரியத்தை உணர்ந்தால், அதை உடனடியாக சரிசெய்வதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும். முன்கூட்டிய எச்சரிக்கை அறிகுறிகள்
(Early Warning Signs)
மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்கள் முதல் வாரங்களுக்கு முன்பு, பொதுவாகக் காணப்படும் வழக்கத்திற்கு மாறான சோர்வு, தூக்கம் தொடர்பான தொந்தரவுகள், மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு மற்றும் பதட்டம் கவலை ஆகியவை மிகவும் பொதுவான ஆரம்ப எச்சரிக்கைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, பல பெண்களுக்கு நீண்ட நேரம் வரை மார்பு அசௌகரியம் இல்லாமல் வெகு தாமதமாகவே அதை உணர முடிந்திருக்கிறது. இதனால் இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்துவதை இனியாவது பெண்கள் பின்பற்றவேண்டும். மேலும், சோர்வு, வழக்கமான அசெளகரியம் என்று சாதாரணமாகக் கடந்து செல்லாமல் கவனத்துடன் இருப்பது சரியான நேரத்தில் சிகிச்சை பெற உதவும். நோயைக் கண்டறிவதில் நம் முன் இருக்கும் சவால்கள்
(Challenges in Diagnosis)
சில பெண்களுக்கு, பரிசோதனை முடிவுகள் கூட இதுதான் பிரச்சினை என்று குறிப்பிடாமல், சாதாரணமாகத் தோன்ற கூடியவையாக இருக்கலாம். முடிவுகள் சாதாரணமாகத் தோன்றலாம். வழக்கமான ஆஞ்சியோகிராம் கூட, இதயத்தின் மிகச் சிறிய இரத்தக் குழாய்களில் உள்ள பிரச்சனைகளை (coronary microvascular disease) வெளிக்காட்டாமல் மறைக்கக்கூடும்,இது உடற்பயிற்சியின் போது நெஞ்சு வலி அல்லது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
இது கண்டறியப்படாமல் போனால்,, தொடர்ச்சியான அறிகுறிகள் மற்றும் நோயைக் கண்டறிவதில் உண்டாகும் தாமதத்திற்கு வழிவகுக்கும். உங்களுக்கு வலி இருந்தும், முடிவுகள் தெளிவாக இல்லாத பரிசோதனைகள் இருந்தால், நீங்கள் மைக்ரோவாஸ்குலர் ஆஞ்சைனா (microvascular angina) பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அடைப்புகள் வெளிப்படையாக தெரியாமல் இருந்தாலும் மாரடைப்பு ஏற்படலாம். இந்த நிலை மையோகார்டியல் இன்பார்க்ஷன் வித் நான்-ஆப்ஸ்ட்ரக்டிவ் கொரோனரி ஆர்டெரிஸ் [MINOCA (myocardial infarction with non-obstructive coronary arteries)] என்று அழைக்கப்படுகிறது.
இப்பிரச்சினையினால் பெண்கள் அளவிற்கு அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மாரடைப்பு ஏற்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு MINOCA இருக்கலாம். இது பிளேக் சிதைவு அல்லது இரத்தக் குழாய் பிடிப்பு (vessel spasm) ஆகியவற்றின் காரணமாக ஏற்படுகிறது. இதற்கான சிகிச்சை மாறுபடலாம் என்பதால், இந்த நிலையை சரியாக கண்டறிவது முக்கியம், எனவே MINOCA தனக்கு இருக்கிறதா என்று கேட்க பெண்கள் தயங்க வேண்டாம். பிற தனித்துவமான மாரடைப்பு வகைகள் (Other Unique Heart Attack Types)
‘தன்னிச்சையான கரோனரி தமனி பிளவு’ (Spontaneous coronary artery dissection - SCAD) என்பது இதயத் தமனியில் ஏற்படும் ஒரு கிழிந்துப் போகும் நிலையாகும். இது பொதுவான இதயப் பிரச்சினைக்கான அபாயக் காரணிகள் இல்லாத இளம் அல்லது நடுத்தர வயது பெண்களைத் தாக்குகிறது.
இது, நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் அல்லது இதயத் துடிப்பு விரைவாக அடிப்பது போன்ற அறிகுறிகளுடன் திடீர் மாரடைப்பை ஏற்படுத்தும்‘உடைந்த இதய நோய்க்குறி’ (Broken-heart syndrome) அல்லது டகோட்சுபோ கார்டியோமயோபதி (Takotsubo cardiomyopathy), பொதுவாக மாதவிடாய் சுற்று நின்ற பெண்களுக்குத் தீவிரமான உணர்ச்சி அல்லது உடல் அழுத்தத்திற்குப் பிறகு ஏற்படுகிறது. தமனிகள் அடைப்புகள் இல்லாவிட்டாலும், இது நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறலுடன் மாரடைப்பைப் போலவே இருக்கும். இருப்பினும், இவ்விரண்டுக்கும் அவசர சிகிச்சை மற்றும் சிறப்பு கண்காணிப்பு தேவை. பெண்களின் வாழ்க்கைக் கட்டங்கள் மற்றும் ஆபத்துகள்
(Women’s Life Stages and Risk)
பெண்களின் வாழ்க்கையின் கட்டங்கள் இதய நோய் அபாயம் மற்றும் அறிகுறிகளை வடிவமைக்கின்றன. கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள், குறிப்பாக ப்ரீஎக்ளாம்ப்சியா (preeclampsia), ஒரு பெண்ணுக்குப் பிற்காலத்தில் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இருமடங்காக்குகிறது. அதனால்தான் பெண்கள் தங்களது கர்ப்ப கால வரலாற்றை அவர்களது மருத்துவரிடம் பகிர்ந்துகொள்வது அவசியம் என பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த விவரங்கள் அனைத்தும் உங்களது இதய ஆபத்து தொடர்பான விவரப்பட்டியலில் (cardiac risk profile) சேர்க்கப்பட வேண்டும். மாதவிடாய் சுற்று நின்ற பிறகு, ஈஸ்ட்ரோஜன் அளிக்கும் பாதுகாப்பு குறைந்து, இருதய நோய் அபாயம் அதிகரிக்கிறது. அதனால்தான் உங்கள் 40, 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் ஏற்படும் புதிய அல்லது மாறிவரும் அறிகுறிகள் தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
எப்போது செயல்பட வேண்டும்? (When to Act?)
’நான் எப்போது தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?’ இதற்கான விடை மிகவும் எளிதானது. நெஞ்சு அசௌகரியம், மூச்சுத் திணறல் அல்லது உடலின் மேல் பகுதிகளில் வலி ஆகியவை சில நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், அல்லது வந்து வந்து போகிறதென்றால், குறிப்பாக வியர்வை, குமட்டல் அல்லது அசாதாரண சோர்வுடன் இருந்தால், அதை மருத்துவ அவசர நிலையாக புரிந்து கொள்ளுங்கள்.
இத்தகைய சூழலில், மருத்துவமனைக்குச் செல்ல நீங்களே வாகனம் ஓட்ட வேண்டாம். அவசர உதவிக்கு 112 என்ற எண்ணை அழைக்கவும். விரைவான நடவடிக்கை இரத்த ஓட்டத்தை மீட்டெடுத்து, இதயத் தசைக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கும். இனி நீங்கள் செய்ய வேண்டியது (The Bottom Line)
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விஷயம் மிக எளிமையானது - உங்கள் இதயம் வலியில் துடிப்பதற்கு முன் லேசாக சலசலப்பை உங்களுக்கு உருவாக்கலாம். விளக்க முடியாத சோர்வு, தூக்கக் கோளாறு, லேசாக ஏதாவது செய்யும் போதும் கூட இருக்கும் மூச்சுத் திணறல், அல்லது தாடை, கழுத்து, முதுகு, தோள்கள் அல்லது மேல் வயிறு வரை பரவும் அசௌகரியம் ஆகியவற்றை ‘‘வெறும் மன அழுத்தம்” என்று புறக்கணிக்காதீர்கள்.
உங்களுக்குக் கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் அல்லது ப்ரீஎக்ளாம்ப்சியா போன்ற அபாயக் காரணிகள் இருந்தால், உங்கள் இதய ஆரோக்கியத்திற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்வதில் அக்கறை காட்டுங்கள்.
அறிகுறிகள் தோன்றும்போது, ‘‘வழக்கமான” நெஞ்சு வலிக்குக் காத்திருக்காமல் உடனடியாக உதவி கேளுங்கள். உதவிக்கு அவசர கால அழைப்பு விடுத்து, உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்கள் இதயம் உங்களுக்கு நன்றி சொல்லும்!
|