கனமான கைப்பைகள் கவனம்



ஒரு தோள்பட்டை மீது மட்டும் அதிக எடையுள்ள பையை சுமப்பது, பல மாதங்களாக தொடரும்போது அந்த நபரின் கழுத்து தோள்பட்டைகள் மற்றும் முதுகின் தசைகள் அழுத்தத்திற்கு ஆளாவதால் மேற்புற முதுகிலும், தோள்பட்டையிலும் வலி உருவாகிறது.
இந்த சமநிலையின்மையானது காலப்போக்கில் முதுகுத்தண்டில் பிரச்னைகளும், பாதிப்புகளும் வருவதற்கு வழிவகுக்கிறது. மேலும், கழுத்துப் பகுதியில் வலி மற்றும் நரம்புகள் அழுத்தத்திற்கு ஆளாவது ஆகிய பிரச்னைகளும் தீவிரமானதாக ஏற்படுகின்றன.

கனமான கைப்பைகளை தொடர்ந்து நீண்டகாலமாக பயன்படுத்துவதனால் அத்தகைய நபரின் உடலில் மரத்துப்போகும் பிரச்னையும் மற்றும் கைகளில் சிலிர்ப்புத் தன்மையும் வரக்கூடும்.
மனித தண்டுவடம் இயற்கையாகவே சமநிலையுடன் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருபகுதியில் மட்டும் மீண்டும் மீண்டும் சமச்சீரற்ற அழுத்தம் ஏற்படும்போது, அது தண்டுவட வட்டுசிதைவு மற்றும் தசைச்சோர்வு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 

இதனால் ஒருவருக்கு நாள்பட்ட தோள்பட்டை வலி என்று அழைக்கப்படும் செர்விகல் ஸ்பான்டைலோசிஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இது படிப்படியாக தசை மற்றும் எலும்பு சார்ந்த பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.

சில பொதுவான அறிகுறிகள் 

தோள்கள் சரிதல்: தொடர்ந்து சமமற்ற எடையைச் சுமப்பதால், ஒரு தோள்பட்டை மற்றொன்றை விடத் தாழ்ந்து காணப்படும். இது அந்தத் தோள்பட்டையில் அதிக களைப்பை உண்டாக்கும். 

தலைவலி: கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் தொடங்கும் தசை இறுக்கமானது, தலைப்பகுதிக்குப் பரவும்போது தலைவலி உண்டாவது இயல்பு. 

முன்னோக்கி வளையும் தோள்கள்: நீண்ட காலமாகப் பையை ஒரே தோளில் சுமந்து செல்வதால், உடலை ஒருபுறமாகச் சாய்க்கும் பழக்கம் ஏற்படுகிறது. காலப்போக்கில் இது தோள்களை முன்னோக்கி வளைத்து, கூன் விழுந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

கனமான கைப்பைகளினால் வரக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க ஆலோசனைகள்

கைப்பையின் எடையைக் கட்டுப்படுத்துதல்:  கைப்பையின் எடை, உங்கள் உடல் எடையில் 10 சதவீதத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.

சுமையைச் சமமாகப் பகிர்தல்: இரு தோள்களிலும் எடையைச் சமமாகப் பிரிக்க, இரண்டு பட்டைகள் கொண்ட முதுகுப் பைகளைப் (Back bag) பயன்படுத்துவது சிறந்தது.

சரியான பட்டைகள் உள்ள பையை தேர்ந்தெடுத்தல்: குறுகிய பட்டைகள் தோளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், அகலமான, மென்மையான (Padded) பட்டைகள் கொண்ட பைகளைப் பயன்படுத்தவும்; அவை எடையைச் சமமாக இரு தோள்பட்டைகளுக்கும் பகிர உதவும்.

தோள்களை மாற்றிப் பயன்படுத்துதல்: ஒருபக்க கைப்பையை பயன்படுத்தினால் ஏற்படும் தசை சமநிலையின்மையைத் தவிர்க்க, அடிக்கடி ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு பையை மாற்றவும்.

தேவையற்ற பொருட்களை தவிர்த்தல்: பையின் எடையைக் குறைக்க, அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துச் செல்வதை உறுதி செய்யவும்; இதற்காகப் பையை அடிக்கடிச் சரிபார்த்து தேவையற்ற பொருட்களை அகற்றவும்.

உடல் தோரணையில் கவனம்: பையுடன் நடக்கும்போதும், அமரும்போதும் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க, உங்கள் உடல் தோரணையை (Posture) சரியான முறையில் வைத்திருக்கவும்.

நீட்சிப் பயிற்சிகள்: தினமும் மென்மையான கழுத்து மற்றும் மேல் முதுகுக்கான நீட்சிப் பயிற்சிகளைச் செய்வது, கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் தசை இறுக்கத்தைப் பெரிதும் குறைக்கும்.பாதிப்புகள் குறித்து மருத்துவரின் மதிப்பீடும், ஆலோசனையும் எப்போது தேவைப்படும்?

கனமான பைகளை எடுத்துச் செல்வதால் இலேசான அசௌகரியம் உருவாகலாம். இது எப்போதாவது நிகழ்வது சாதாரணமானதே. ஆனால் மோசமாகும் அறிகுறிகளினால் வலி நிலையாக அல்லது விடாப்பிடியாக இருக்குமானால் மருத்துவ ஆலோசனை அவசியமாக இருக்கும். 

எடுத்துக்காட்டாக ஒருவார காலமாக மேற்புற முதுகில் தொடர்ந்து இருக்கும் வலி, மரத்துப்போன உணர்வு, தசை பலவீனம், இயக்க அல்லது நடமாட்டத்திறனை கட்டுப்படுத்துவதற்கு ஒருபக்கமாக உடல் சாய்ந்திருக்கும் தோரணை மற்றும் பல நாட்களாக தொடரும் தலைவலி ஆகிய அறிகுறிகளுக்கு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

இத்தகைய அறிகுறிகள் இருக்கும்போது ஆரம்ப நிலையிலேயே மருத்துவ நிபுணரின் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதும், எளிமையான வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்வது நல்லது. பல ஆண்டுகளாக தொடரும் நாட்பட்ட வலி மற்றும் முதுகுத்தண்டு சிக்கல்கள் வராமல் இது தடுக்கும். எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகள், இயன்முறை சிகிச்சை மற்றும் உடல் தோரணையை சரியான முறைக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் பெரிதும் உதவும்.

கனமான கைப்பைகளின் பாதிப்பானது வேறுபட்ட வயது பிரிவினருக்கு மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது. 20 வயதுகளிலுள்ள இளம் தலைமுறையினருக்கு தற்காலிகமானதாக தோன்றுகிறவாறு தோள்பட்டையில் வலி மற்றும் அசதியோடு இது தொடங்கக்கூடும். தொடர்ந்து ஏற்படும் அழுத்தமானது முதுகுத் தண்டின் ஒழுங்கமைப்பை மாற்றிவிடக்கூடும்.

30 மற்றும் 40 வயதிலுள்ள பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் உடல் ரீதியாக காணப்படக் கூடியவையாகவே தொடங்கும். ஒருபக்க தோள்பட்டையில் கனமான பையை சுமப்பது, தோள்பட்டை மூட்டு இறுக்கம் வருவதற்கான இடர்வாய்ப்பை அதிகரித்துவிடும். அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் வீட்டிலும், பல்வேறு பணிகளை செய்ய வேண்டிய தேவை இருக்கும்போது அவர்களிடம் இந்த பாதிப்பு பெரும்பாலும் காணப்படுகிறது.

 50 வயது மற்றும் அதைக் கடந்த பெண்களுக்கு அவர்களது 20 மற்றும் 40 வயதுகளில் தொடங்கிய அழுத்தம் நீண்டகாலமாக நீடித்ததால் விடாப்பிடியான வலி மற்றும் சுழற்சிப் பட்டை காயங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்; மிகவும் கடுமையான நிலைகளில், இது இளம் வயதிலேயே மூட்டுவாதம் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும். ஏனெனில், வயது அதிகரிக்கும்போது உடலின் இயற்கையான அதிர்ச்சித் தடுப்பு அமைப்பு வலுவிழந்து தேய்மானம் அடைகிறது. 

ஆகவே, கனமான கைப்பைகளை சுமந்து செல்வது பொதுவாக தீங்கற்றதாக தோன்றினாலும் கூட காலப்போக்கில் இதன் பாதிப்பு விளைவுகள் படிப்படியாக அதிகரிக்க தொடங்கும் என்பதை நாம் அறிய வேண்டும். 

பணியாற்றும் பெண்கள் இதுபற்றி இளவயதிலேயே அறிந்து விழிப்புணர்வோடு இருப்பதும், சில சிறிய வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்வதன் மூலம் பாதிப்புகள் வராமல் தடுப்பதும் அவசியம். இதன் வழியாக தங்களது முதுகுத்தண்டை பாதுகாக்கவும், வலியைக் குறைக்கவும் மற்றும் கடுமையான சிக்கல்கள் தோன்றாமல் தடுக்கவும் பணியாற்றும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

 - ஸ்ரீதேவி குமரேசன்