40-45 வயது பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள்!
பெண்களின் வாழ்க்கை ஒரு இயற்கைச் சுழற்சி போலவே தொடர்ந்து மாறிக்கொண்டே செல்கிறது. குழந்தை பருவத்திலிருந்து மாதவிடாய் தொடக்கம், தாய்மை, குடும்பப் பொறுப்புகள் என பல்வேறு கட்டங்களை கடந்து, 40-45 வயதுக்குள் வரும்போது ஒரு புதிய மாற்றக் கட்டம் தொடங்குகிறது. இது பெரும்பாலும் முன்-மெனோபாஸ் (Perimenopause) என்று அழைக்கப்படுகிறது - அதாவது மாதவிடாய் முடிவதற்கு முன் உடல் அனுபவிக்கும் ஹார்மோன்கள் சார்ந்த மாற்றங்கள். இந்தக் காலத்தில் உயிரியல், மனநலம், உடல் வடிவம், பாலியல் வாழ்க்கை என பல பரிமாணங்களிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. *ஹார்மோன்களின் மாற்றம்
இந்த வயதில், முட்டைப்பை (ovary) ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் (Estrogen) மற்றும் புரோஜெஸ்ட்ரோன் (Progesterone) உற்பத்தி குறையத் தொடங்குகிறது. இதுவே பெரும்பாலான உயிரியல் பிரச்சினைகளின் அடிப்படை காரணம். மாதவிடாய் முறை மாறலாம் - சில மாதங்களில் மிகுந்த ரத்தப்போக்கு, சில மாதங்களில் தாமதம் அல்லது தவிர்ப்பு ஏற்படலாம். சில பெண்களுக்கு இது மனஅழுத்தம், எரிச்சல்(Irritation) , தூக்கமின்மை போன்ற பிரச்னைகளாக வெளிப்படும்.
 *உடல் மாற்றங்கள்
ஹார்மோன் குறைபாடு உடலின் பல பாகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
1. எடை அதிகரிப்பு - குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரும்.
2. தோல் மற்றும் முடி மாற்றம் - ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் தோல் உலர்ந்து நெகிழ்வுத்தன்மை குறையும், முடி மெல்லியதாக மாறும்.
3. எலும்பு பலவீனம் (Osteopenia / Osteoporosis) - ஈஸ்ட்ரோஜன் குறைபாடு எலும்பு வலிமையை குறைக்கும், இதனால் எலும்பு முறிவு அபாயம் உயரும்.
4. மூட்டு வலி - பல பெண்கள் 40 வயதுக்குப் பிறகு “joint stiffness” எனும் மூட்டு வலியை உணர தொடங்குகின்றனர்.
*இதய நோய்களின் அபாயம்
இளமைக் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் இதயத்தைக் காப்பாற்றும். ஆனால் 40 வயதிற்குப் பிறகு அதன் அளவு குறையும்போது கொலஸ்ட்ரால் (Cholesterol) அளவு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை தோன்றலாம். இதனால் இதய நோய்களின் அபாயம் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களிலும் அதிகரிக்கிறது.
*பாலியல் மற்றும் இனப்பெருக்க மாற்றங்கள்
பல பெண்கள் 40-45 வயதில் பாலுணர்ச்சி குறைவு அல்லது வலி உடனான உடலுறவு குறித்து புலம்புகிறார்கள். இது ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் யோனியின் ஈரப்பதம் குறைவதாலும், தசைச் சுருக்கம் ஏற்படுவதாலும் நிகழ்கிறது. இதுபோன்ற பிரச்சினைகள் “taboo” என கருதப்படுவதால் பல பெண்கள் அதை சொல்லாமல் தாங்கிக் கொள்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இது ஒரு சாதாரண உயிரியல் மாற்றம் - அதற்கான சிகிச்சைகள், ஈரப்பதம் தரும் கிரீம்கள், ஹார்மோன் மாற்று சிகிச்சைகள் போன்றவை கிடைக்கின்றன.பாலியல் ஆர்வம் என்பது உடலின் ஆரோக்கியமான உயிரியல் வெளிப்பாடு ஆகும். இது குறைபட்டால் தாழ்வு உணர்ச்சி அல்லது உறவுப் பிரச்னைகள் தோன்றலாம். எனவே இதைப் பற்றி திறந்த மனதுடன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். *மனநலப் பிரச்னைகள்
ஹார்மோன்களுடன் மனமும் நெருக்கமாக இணைந்துள்ளது. இந்த வயதில் பல பெண்கள் மனஅழுத்தம், துயர உணர்வு, கவலை, கோபம், மறதி, தூக்கமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். குடும்பத்தில் குழந்தைகள் வளர்ந்து வேறு நகரம் செல்லுதல், பெற்றோர்கள் முதுமையடைதல், கணவர் தொழில் அழுத்தம், தங்களின் உடல் மாற்றங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து “mid-life stress” உருவாக்கும்.
மனநலக் கவனம் இவ்வயதில் மிக முக்கியமானது. தினமும் குறைந்தது 30 நிமிட நடைபயிற்சி, யோகா, தியானம், சமூக உறவுகள் மற்றும் நெருங்கியவர்களுடன் உரையாடல் ஆகியவை மனநலத்தை காக்கும்.
*உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம்
40 வயதிற்கு பிறகு மெட்டபாலிசம் குறைவதால் எடை கட்டுப்படுத்துவது கடினமாகிறது. எனவே சீரான உடற்பயிற்சி முக்கியம்.
நடைபயிற்சி, நீச்சல், யோகா போன்றவை உதவும். உணவில் - கால்சியம், வைட்டமின் D, புரோட்டீன் சேர்த்தல் அவசியம். காபி, புகையிலை, மதுபானம் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் சேர்த்த சத்தான உணவு எலும்பு மற்றும் இதய நலனைக் காக்கும்.
*மார்பக மற்றும் கருப்பை சோதனைகள்
இந்த வயதில் மார்பக புற்றுநோய், கருப்பை வாயில் புற்றுநோய் (Cervical cancer) ஆகியவற்றின் அபாயம் அதிகம்.
எனவே ஆண்டுக்கு ஒருமுறை மார்பக பரிசோதனை / மாமோகிராம் (Mammogram). 3 ஆண்டுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் (Pap smear) பரிசோதனை. தவிர தைராய்டு, கொலஸ்ட்ரால், எலும்பு அடர்த்தி பரிசோதனை ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டும்.
*புது நோக்குடன் வாழும் காலம்
40-45 வயது என்பது முடிவு அல்ல - மாற்றத்தின் தொடக்கம். குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளரும்போது, பெண்கள் தங்கள் மீது கவனம் செலுத்தும் நேரம் கிடைக்கிறது. இந்தக் காலத்தில் உடல் மற்றும் மனநல பராமரிப்பு மூலம் அடுத்த 20-30 ஆண்டுகளுக்கான ஆரோக்கிய அடித்தளம் அமைக்கலாம்.
இங்கு “மெனோபாஸ்” என்றால் “நிறுத்தம்” அல்ல; இது புதிய வாழ்க்கையின் அத்தியாயம் - அனுபவம், ஞானம், தன்னம்பிக்கை நிறைந்த கட்டம். ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய உடல் மாற்றங்களை வெட்கமின்றி ஏற்றுக் கொண்டு, மருத்துவ அறிவை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தால், 40 வயதுக்குப் பின் வாழ்க்கை இன்னும் அழகாகவும் அமைதியாகவும் மாறும்.
40-45 வயது பெண்களின் உயிரியல் பிரச்சினைகள் இயற்கையின் ஓர் அங்கம். ஆனால் அவற்றை கவனிக்காமல் விடுவது தவறு. உடல், மனம், குடும்பம் - இம்மூன்றிலும் சமநிலை கொண்டால், “மெனோபாஸ்” ஒரு சிரமமான கட்டமல்ல, அது ஒரு புதிய தொடக்கம்.
மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி
|