வரலாறே கோளாறா? Histrionic Personality Disorder



ஒரு நுண்பார்வை

அகமெனும் அட்சயப் பாத்திரம்


அமெரிக்கன் சைக்கியாடிக் அசோசியேஷன் வகுத்த ஆளுமைக் கோளாறுகளின் பட்டியலில் தொகுப்பு B பிரிவில் இடம் பெற்றுள்ள HPD மிகை உணர்ச்சிவசப்படும் தன்மை, கவன ஈர்ப்பில் தீவிரம், தொடர்பற்ற /குழப்பமான பேச்சு போன்ற அடிப்படை அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இந்த அறிகுறிகள் இதர ஆளுமைக் கோளாறுகளுக்கும் இருக்கும் என்பதால் வரலாற்று ஆளுமைக் கோளாறினை தனியாகப் பிரித்தறியும் சில பண்புகளை அறிந்து கொள்வோம்.

இவர்களுக்கு உணர்வுபூர்வமானவற்றைப் பேசினாலோ, பார்த்தாலோ தானாக கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்துவிடும். பூஞ்சை மனசு, வெள்ளந்தி குணம் என்பார்களே.. அந்தப் பட்டியலில் HPD பாதிப்பு கொண்டவர்களை நிச்சயம் சேர்க்கலாம். 
ஆனால்,  தான் நடு நாயகமாக கவனம் பெறும் இடத்தில் இல்லை என்ற நிலை வந்தால், இவர்கள் அதிருப்தி அடைந்து மனமுடைந்து விடுவார்கள். இதைச் சொல்லும்போது Narcissitic personality disorder, Borderline personality disorder எல்லாம் இதே தன்மை கொண்டவைதானே என்று கேட்கத் தோன்றும்.

ஆனால், NPD கொண்டவர் கவனம் கிடைக்கவில்லை என்ற போது அடுத்தவருக்கு எதிராக மறைமுகமாக எதிர்வினையாற்ற ஆரம்பிப்பார். BPD கொண்டவரோ யோசிக்காமல் உடனே அதிகக் கோபம் கொண்டு வெளிப்படையாக சண்டையிடுவார். சுய ஆபத்தை (Self harming) ஏற்படுத்திக் கொள்ள முயல்வார். HPD நபரோ பெரும்பாலும் அழுகையைத்தான் முதலில் வெளிப்படுத்துவார். அதன்பின்னும் யாரும் தன்னைக் கவனிக்கவில்லை எனில் கத்திப் பேசுவார். பிறகு நாடகத்தனமாக நடந்து கொள்வார். 

இப்படிப் படிப்படியாக அவரின் நடத்தையில் தீவிரம் ஏற்படும். கவனிக்காமல் விட்டால் இறுதியில் ‘Hysteria’ எனப்படும் வெறி பிடித்தவராக மாறிவிட வாய்ப்புண்டு. எனவே, வரலாற்று ஆளுமைக் கோளாறின் வரலாறு என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.‘Histrionic’ என்ற இலத்தின் மொழிச் சொல்லுக்கு நடிப்பு/நாடகம் என்று பொருள். 

இயற்பியல் வல்லுநர் Hypocrites தான் முதன் முதலில் ‘Hysteria’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பண்டைய கிரீஸ் மற்றும் ரோம் நாடுகளில் காலங்காலமாக  பெண்களுக்கு ஏற்படும் கருப்பை மாற்றங்கள் தொடர்பான மன பாதிப்புகளை ‘Hysterical disorders ’ என்று குறிப்பிட்டார்கள். இந்தக் கோளாறு ‘சுற்றிக்கொண்டேஇருக்கும் கருப்பை’  (Wondering Womb) என்று பெயரிடப்பட்டு பண்டைய எகிப்திலும் பெரிதும் பேசப்பட்டது.

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் Jaen Martin Charcot இது பெண்களோடு மட்டும் தொடர்பு கொண்ட உளநோய் அல்ல என்று கண்டறிந்தார். 

‘ Hysteria ‘எனப்படும் வெறித்தன்மையை அறிவியல் பூர்வமான காரணிகளோடு அவர் விளக்கி வேறுபடுத்தியும் காட்டினார்.19 -:ஆம் நூற்றாண்டின் மைய காலகட்டத்தில் 1845 ஆம் ஆண்டு Ernst Von Feuchtersleben அவர்கள் எழுதிய Medical Mythology என்ற புத்தகம் வரலாற்று ஆளுமைக் கோளாறு குறித்து மேலும் தெளிவான சில குறிப்புகளைக் கொடுத்தது. 

1968 ஆம் ஆண்டு DSM - 2 தொகுப்பில் இடம்பெற்ற  இக்கோளாறு ,  1980 ஆம் ஆண்டு DSM 3 பட்டியலிடுதலின் போதுதான் ‘Histrionic Personality Disorder’ என்று முறையாகப் பெயரிடப்பட்டது.

1974 ஆம் ஆண்டு உளவியல் வல்லுநர்  Paul Chodoff பெண்களோடு மட்டுமே இந்தக் கோளாறினை தொடர்புப்படுத்துவது சரியல்ல என்று தீர்க்கமாக வாதிட்டார். அவரின் வாதங்களின் பலனாக  இருபதாம் நூற்றாண்டில் ‘Hysteria’ என்ற கடுமையான  சொல் மருத்துவ உலகில் உளவியல் துறையில் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.

மேலும், தற்கால சர்வதேச உளவியல் வல்லுநர்கள் NPD - யின் உட்பிரிவின் கீழ் அதிகக் காட்சிப்படுத்தும் விழைவினால் ( Exhibitionism ) ஏற்படும் மாறுபட்ட நடத்தையாக HPD - யை வைக்க வேண்டுமென்றும் சொல்கிறார்கள். இது தனிப்பெரும் ஆளுமைக் கோளாறு இல்லை என்றும் சிலர் கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

புகழ்பெற்ற அமெரிக்க நடிகை Amber Heard தன் கணவர் Jhonny Depp உடனான சில பிரச்னைகளால் நீதிமன்றத்தை நாடினார்.அவ்வழக்கில் சட்ட வல்லுனர் குழு மற்றும் தடவியல் குழு பல கட்டங்களில் உளவியல் பரிசோதனைகளை நிகழ்த்தியது. அதன் முடிவில் நடிகை Amber தீவிர HPD மற்றும் BPD பாதிப்பில் இருக்கிறார் எனத் தெரிய வந்தது. 

நீதிமன்றத்தில் அமர்த்தப்பட்ட உளவியல் வல்லுநர்கள் கொடுத்த முடிவினை எதிர்த்து அவரின் வாதம் பல காலம் தொடர்ந்தது. எனவே இந்த வழக்கு 2022 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு பதிவுகளும், மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டன. Amber உலகெங்கும் பலரால் விமர்சிக்கப்பட்டார். அதன்பின் HPD பலரால் கவனிக்கப்பட்ட ஒரு ஆளுமைக் கோளாறாக மட்டுமின்றி ‘Amber Heard  Personality Disorder’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

Gone with the wind (1939), A street named desire (1951) The Birdcage (1996), Small sacrifies (1989)  போன்ற சர்வதேசத் திரைப்படங்கள் வரலாற்று ஆளுமை கோளாறுகள் குறித்த புரிதலை உண்டாக்கும் கதாபாத்திரங்களை திரைப்படங்களில் உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.

நம் நாட்டில் திரைப்படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் அதிகம் உணர்ச்சிவசப்படுவதும் எதற்கெடுத்தாலும் அழுவதுதையும் நிறைய பார்க்கிறோம். இது வெகு இயல்பாக நம்மோடு ஊறிப்போன ஒன்றாக இருக்கிறது. தற்காலத்தில்  அதிக உணர்ச்சிவசப்படும் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்றாலும் நாடகத்தனமான நடத்தைகளின் மரபியல் தொடர்ச்சியைப் பல இடங்களில் காண நேரிடுகிறது.

HPD - யில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய  பண்பு ஒன்று உள்ளது. அதைப் பார்ப்போம். ‘ உன்னை நான் எப்படி எல்லாம் நினைத்தேன் நீ இப்படியா ‘,  ‘ நான்தான் உன்னை ரொம்ப முக்கியமான இடத்தில் வைத்திருக்கிறேன்.

 நீ அந்த அளவுக்கு இல்லை ‘ நீயும் என்னிடம் அன்பு வைத்திருக்கிறாய் என்றுதான் நான் நினைத்தேன், நான் தப்பு கணக்குப் போட்டு ஏமாந்து விட்டேன்’, ‘அன்று அப்படி பேசினாயே இப்படி பேசினாயே அது காதல் இல்லையா எல்லாமே நாடகமா’ - இப்படியான புலம்பல் வசனங்களைக் காதலிலும், நெருக்கமான உறவுகளிலும்  அதிகம் கேட்டிருப்போம்.