சுவாசமே... சுவாசமே... நுரையீரல் நலன் காப்போம்!
வலியை வெல்வோம்
சமீபகாலமாக அதிக கூட்டங்களில் சிக்கிக் கொண்டவர்கள் மயங்கி விழுவதையும், மூச்சுத் திணறல் ஏற்படுவதையும் பார்க்கிறோம்.தீபாவளி பர்சேஸுக்கு சென்றாலும் நெரிசலான கூட்டத்தில் அலை மோதும் வாய்ப்புள்ளது. அப்படி கூட்டத்தில் மூச்சுத் திணறலை எவ்வாறு உணர்கிறோம்? ஒரு வேளை மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டியதை பற்றி தெரிந்து கொள்வோம். கூட்டத்தில் மக்கள் மூச்சுத் திணறலை (Suffocation) எவ்வாறு உணர்கிறார்கள்?
கூட்டத்தில் மக்கள் மூச்சுத் திணறலை உணருவது உடலியல் (Physiological) மற்றும் மனோவியல் (Psychological) காரணங்களால் ஏற்படுகிறது என மருத்துவ கட்டுரைகளும் ஆய்வுகளும் கூறுகின்றன. இது குறிப்பாக குறைந்த காற்றோட்டம், மன அழுத்தம் மற்றும் கூட்டத்தில் இருக்கும் சூழலால் தூண்டப்படுகிறது.
1.உடலியல் காரணங்கள் (Physiological Reasons)
குறைந்த ஆக்ஸிஜன் (Reduced Oxygen Availability)
கூட்டமான இடங்களில் (எ.கா., பேருந்து, கோவில் அல்லது மக்கள் நெரிசல் உள்ள இடங்கள்) காற்றோட்டம் (Ventilation) குறைவாக இருக்கலாம். இதனால் காற்றில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து, கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கிறது.நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காதபோது, மூச்சு விடுவது கடினமாக உணரப்படுகிறது, இது மூச்சுத் திணறல் உணர்வை ஏற்படுத்துகிறது.
மார்பு குழி அழுத்தம் (Restricted Chest Expansion)
கூட்டத்தில் மக்கள் நெருக்கமாக இருக்கும்போது, உடல் இயக்கம் (Body Movement) கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் வயிற்று தசை (Diaphragm) மற்றும் விலா எலும்பு தசைகள் (Intercostal Muscles) முழுமையாக விரிவடைய முடியாமல், மூச்சு உள்ளிழுத்தல் குறைகிறது.
அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் (Increased Heat and Humidity)
கூட்டத்தில் உடல் வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக சுற்றுச்சூழலில் வெப்பநிலையும் ஈரப்பதமும் அதிகரிக்கிறது. இது சுவாசிக்க தேவையான முயற்சியை அதிகரித்து, மூச்சுத் திணறலை உருவாக்குகிறது.
இதய-நுரையீரல் அழுத்தம் (Cardio-respiratory Stress)
கூட்டத்தில் இருக்கும்போது இதயத் துடிப்பு (Heart Rate) மற்றும் சுவாச வேகத்தின் அளவு (Respiratory Rate) அதிகரிக்கலாம், குறிப்பாக உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ அழுத்தம் ஏற்படும்போது , ஆக்ஸிஜன் தேவையை அதிகரித்து, மூச்சுத் திணறல் உணர்வை ஏற்படுத்துகிறது.
2.மனோவியல் காரணங்கள் (Psychological Reasons)
கிளாஸ்ட்ரோபோபியா (Claustrophobia) கூட்டமான இடங்களில் சிலருக்கு மூடப்பட்ட இடத்தில் இருப்பதைப் போன்ற பயம் ஏற்படுகிறது. இது மன அழுத்தத்தை உருவாக்கி, சுவாசத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
பதற்றம் மற்றும் பீதி (Anxiety and Panic)
கூட்டத்தில் இருக்கும்போது, மக்கள் நெருக்கம், இட நெருக்கடி அல்லது கட்டுப்பாடு இழப்பு உணர்வு (Loss of Control) ஆகியவை பதற்றத்தைத் தூண்டலாம். இது Panic Attacksஐ ஏற்படுத்தும் மூச்சு வேகமாகி, மூச்சுத் திணறல் உணர்வை உருவாக்குகிறது.
சமூக அழுத்தம் (Social Stress)
கூட்டத்தில் தனிப்பட்ட நபரின் இடத்தின் பரப்பளவு குறைவதால், மனரீதியாக அசௌகரியம் ஏற்படுகிறது. இது சுவாசத்தை பாதித்து, மூச்சு விடுவது கடினமாக உணரப்படலாம்.
3. சுற்றுச்சூழல் காரணங்கள் (Environmental Factors)
காற்று மாசு (Air Pollution)
கூட்டமான இடங்களில், குறிப்பாக திறந்தவெளி நிகழ்வுகளில், புகை, தூசு, அல்லது மாசு காற்று இருக்கலாம். இது காற்றுப்பாதைகளை எரிச்சலடையச் செய்து (Airway Irritation), மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.
குறைந்த காற்றோட்டம் (Poor Ventilation)
மூடிய இடங்களில் (எ.கா., அரங்கங்கள்) காற்று பரிமாற்றம் குறைவாக இருப்பதால், ஆக்ஸிஜன் அளவு குறைந்து, மூச்சுத் திணறல் உணரப்படுகிறது.
4. நோய்க்கூறியியல் காரணங்கள் (Pathological Factors)
முன்பே உள்ள நோய்கள்
ஆஸ்துமா, COPD அல்லது இதய நோய்கள் உள்ளவர்களுக்கு கூட்டத்தில் மூச்சுத் திணறல் எளிதில் ஏற்படலாம், ஏனெனில் அவர்களின் சுவாச அமைப்பு ஏற்கனவே பலவீனமாக இருக்கும்.
அதிக உணர்திறன் (Hypersensitivity)
சிலருக்கு காற்று மாசு அல்லது வாசனைகளுக்கு (Perfumes, Chemicals) ஒவ்வாமை (Allergy) இருக்கலாம், இது காற்றுப்பாதைகளை சுருக்கி மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. கூட்டத்தில் மூச்சுத் திணறலைத் தவிர்க்கும் முறைகள்
காற்றோட்டமான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
முடிந்தவரை ஜன்னல்கள், விசிறிகள் அல்லது திறந்தவெளி உள்ள இடங்களைத் தேர்ந்தெடுக்கவும். காற்றோட்டம் (Ventilation) ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்யும்.
தனிப்பட்ட இடத்தை பராமரிக்கவும்
கூட்டத்தில் முடிந்தவரை தனிப்பட்ட இடத்தை தெரிவு செய்யவும், இது மன அழுத்தத்தையும் கிளாஸ்ட்ரோபோபியா (Claustrophobia) உணர்வையும் குறைக்கும்.
கூட்டத்தின் விளிம்பில் இருக்கவும்
கூட்டத்தின் மையத்தில் இருப்பதைத் தவிர்த்து, விளிம்பில் (நுழைவாயில் அல்லது வெளியேறும் பாதைக்கு அருகில்) இருக்க முயற்சிக்கவும். இது மன அழுத்தத்தைக் குறைத்து, தேவைப்பட்டால் வெளியேற உதவும்.
நீரேற்றம் (Hydration)
கூட்டத்திற்கு முன் போதுமான தண்ணீர் குடிக்கவும். நீரிழப்பு (Dehydration) மூச்சுத் திணறல் உணர்வை அதிகரிக்கும்.
தொடர்ந்து சுவாசப் பயிற்சி
வயிற்று தசை மற்றும் நுரையீரல் வலிமையை மேம்படுத்த, தினமும் சுவாசப் பயிற்சிகளை செய்யவும். இது கூட்டத்தில் சிக்கிக் கொண்டாலும் சுவாசிக்கும் திறனை மேம்படுத்த உதவும்.
மருத்துவ பரிசோதனை
ஆஸ்துமா, COPD அல்லது இதய நோய்கள் உள்ளவர்கள் கூட்டத்திற்கு முன் மருத்துவரை அணுகி, மருந்துகள் (எ.கா., Inhalers) தயாராக வைத்திருக்கவும்.
ஒவ்வாமை கட்டுப்பாடு
தூசு, மாசு அல்லது வாசனைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் முன்கூட்டியே மருந்து எடுத்துக் கொண்டு, மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.
பிசியோதெரபி ஆலோசனை
இயன்முறை மருத்துவரின் வழிகாட்டுதலுடன் சுவாசப் பயிற்சிகளை பயிற்சி செய்யவும், குறிப்பாக நுரையீரல் நோய் உள்ளவர்கள்.ஒரு வேளை கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறலின் அறிகுறியை ஓரளவு கணித்து விட்டால் மூக்கின் வழியே மூச்சை இழுத்து , உதட்டை சுழித்து வாயின் வழியாக வெளியேற்றும் மூச்சுப்பயிற்சியை மெதுவாக முயற்சி செய்து கொண்டே கூட்டத்தில் இருந்து வெளியேற முற்பட வேண்டும்.
மயக்கம் வரும் நிலையில் அருகில் உள்ளவர்களிடம் மருத்துவ உதவி கோரலாம்.ஏற்கனவே நுரையீரல் சுவாச நோய் உள்ளவர்கள் அல்லது தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் கூட்டத்தில் செல்ல நேர்ந்தால், ஒரு சிறிய பேப்பரில் நோயின் தன்மை எடுத்துக் கொள்ளும் மருந்துகளைப் பற்றி சிறிய குறிப்பாக எழுதி சட்டைப்பையிலோ அல்லது பையிலோ வைத்துக் கொள்ளலாம் அல்லது tag காக அணிந்து கொள்ளலாம்.பெரும்பாலும் சுவாச பிரச்னை, இதய நோய் உள்ளவர்கள் கூட்ட நெரிசலான பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பதே சிறந்தது.
‘வரும் முன் காப்பதே சிறந்தது‘ எனவே தினமும் மூச்சுப் பயிற்சி செய்வது உடலுக்கு நல்ல பிராண வாயுவை அளித்து நன்மை பயக்கும்.தினமும் மூச்சுப் பயிற்சி செய்வதால் தொற்றுக்கள் வராது என்று எந்த மருத்துவரும் கூறுவது இல்லை ஆனால் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.சமீபத்திய ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டபடி இந்த மூச்சு இயக்கம் வைரஸ்களுக்கு எதிராக உடலின் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாக கண்டறிந்துள்ளனர்.
இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
|