இளவயது மாரடைப்பு…
அலெர்ட் ப்ளீஸ்!
முன்பெல்லாம் மாரடைப்பு என்பது பொதுவாக வயதானவர்களை பாதிக்கும் நோயாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இளைய தலைமுறையினர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியூட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. மருத்துவ துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள், நவீன வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் பல உயிர்களை காப்பாற்றுகின்றன என்றாலும், நோயின் தாக்கத்தினால் நமக்கு உண்டாகும் பாதிப்பு நீண்டகாலம் இருக்கத்தான் செய்கின்றன.
இந்த பாதிப்பு நம்முடைய இயல்பான, ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடர்வதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடுகிறது. இந்த சூழ்நிலையில், இளம் வயதில் மாரடைப்பால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா, முன்னிலை வகிக்கிறது. உலகின் இளம் மாரடைப்புகளுக்கான தலைநகரம் என்ற துரதிர்ஷ்டவசமான பட்டத்தைப் பெற்றுள்ளது.இன்றைய இளைய தலைமுறையினரும், உடல் ஆரோக்கியமுள்ளவர்களும் ஏன் ஆபத்தில் உள்ளனர்?
சமீப காலமாகவே மனதைக் கனக்கச் செய்யும் ஒரு போக்கு உருவாகி வருகிறது. ’இப்படிதான் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்’ என்று மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறும் வகையில் தங்களது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இளைஞர்கள், அதிலும் குறிப்பாக உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் உள்ளவர்கள், தீவிர உடற்பயிற்சியை செய்யும் போது மாரடைப்பினால் மரணமடைவது அதிர்ச்சியளிக்கிறது. இவர்களது திடீர் மரணம் இப்போது பேசுப்பொருளாகி இருக்கிறது.
இது போன்ற திடீர் மரணங்களுக்கு தீவிர உடற்பயிற்சிதான் காரணமா என்ற கேள்விகள் எழும்பியுள்ளன. இந்த கேள்வி “உடற்பயிற்சி குறித்த முரண்பாடு” என்ற கருத்தை முன் வைக்க வழிவகுத்திருக்கிறது. அதாவது, உடற்பயிற்சி என்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற பொதுவான நம்பிக்கைக்கு எதிராக, இதயம் தொடர்பான பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்த நெருக்கடிக்குப் பின்னால் உள்ள காரணங்கள்
தமனிகளில் பிளேக் சேர்வதால் உண்டாகும் பெருந்தமனி தடிப்பு (Atherosclerosis), மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு முதன்மையான காரணமாகும். நம்முடைய வாழ்க்கையில் அபாயத்தை எதிர்கொள்ள வைக்கும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவு முறைகள், புகைபிடித்தல் மற்றும் பல மணி நேரம் அமர்ந்த நிலையிலேயே வேலை பார்க்கும் வாழ்க்கை முறை போன்ற அம்சங்கள் இன்றைய இளைஞர்களிடையே மிக வேகமாக அதிகரித்து வருகிறது., இந்தப் போக்கு, இளைய தலைமுறையினரிடையே இருதய நோய் (in cardiovascular disease (CVD)) மற்றும் மாரடைப்பு அதிகம் உண்டாவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.
வரும் முன் காப்பது என்றைக்குமே நல்லது: அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
மாரடைப்பிற்குப் பிறகு மருந்துகள், ஆஞ்சியோபிளாஸ்டி, அறுவை சிகிச்சை போன்றவை நம்முடைய இதய நோய் பராமரிப்பிற்கு உதவக்கூடும். ஆனால், இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலைமைகளை வராமல் முதலிலேயே தடுப்பது என்பதே மிகச்சிறந்த அணுகுமுறையாகும். இதைதான் ஆரம்பநிலைத் தடுப்பு [Primary Prevention] என்று நாம் அழைக்கிறோம்.
இந்த ஆரம்பநிலைத் தடுப்பு அணுகுமுறை என்பது நம் அனைவருக்கும் பொதுவானது. அதிலும், குறிப்பாக குடும்பத்தில் இதய நோய் மற்றும் உடல் நலத்தைப் பாதிக்கும் பிற ஆபத்துக் காரணிகள் கொண்டவர்கள் இந்த பழக்கவழக்கங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதய நோயின் அபாயத்தை நாம் குறைக்கலாம், இதற்கு நாம், ஆரோக்கியமான உணவு முறை, தினமும் உடற்பயிற்சி, புகைபிடிப்பதை தவிர்ப்பது, மன அழுத்தம் நம்மைப் பாதிக்காத வகையில் அதை நிர்வகிப்பது, நம்முடைய உடலில் ஏதாவது பிரச்சினை உருவாக்கும் அறிகுறிகள் மற்றும் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையைப் பெறுவது போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும். இவற்றை நாம் கடைப்பிடிக்கும் போது எதிர்காலத்தில் வரவிருக்கும் அபாயங்களைத் தவிர்க்கும் வாய்ப்புகளை உருவாக்க முடியும். எந்தளவிற்கு உடற்பயிற்சி செய்வது சரியானது? என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம்?
நம்முடைய இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க, உடலின் இயக்கங்களும், செயல்பாடுகளும் மிக மிக அவசியமானவை. அதற்காக நாம் கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டிய தேவையில்லை.
தினமும் நம்முடைய உடற்பயிற்சியானது சீரான நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல், உடலை வலிமைப்படுத்தும் பயிற்சி மற்றும் உடல் இயக்கங்களை எந்தவித அசெளகரியமும் இல்லாமல் மேற்கொள்ள உதவும் ஃப்ளெக்ஸிபிடிட்டி பயிற்சிகள் போன்ற ஏரோபிக் பயிற்சிகளைக் கொண்டிருந்தாலே போதுமானது. பொதுவாக, வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான-தீவிர உடற்பயிற்சி செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இருப்பினும், அதிகப்படியான உடற்பயிற்சி செய்யும் போது, சில நேரங்களில் அது நமக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். \”J அல்லது U-வளைவு\” [J or U-curve] என்ற கருத்தாக்கம், மிதமான உடற்பயிற்சி உடல்நல அபாயங்களைக் குறைக்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அதே வேளையில், அதிகப்படியான தீவிர உடற்பயிற்சியானது, மாரடைப்பு மற்றும் திடீர் மரணம் போன்ற அபாயங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, மாரத்தான் ஓட்டம் அல்லது பவர் லிஃப்டிங் போன்ற அதிக தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபடும் இளைஞர்கள் இதை கவனத்தில் கொண்டு உடற்பயிற்சியை முறைப்படுத்துவது நல்லது. தீவிர உடற்பயிற்சியினால் உண்டாகும் மறைமுக ஆபத்துகள்
சமீப காலமாக, தங்கள் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் இளைய தலைமுறையினர் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், தீவிரமான உடற்பயிற்சிகளின் போது மாரடைப்பினால பாதிக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் அதிகரித்து இருக்கின்றன, மேலும் எதிர்பாராத வகையில் திடீரென தமனி கிழிந்துப் போதல், இதய தமனியின் சுவர்கள் கிழிதல், [spontaneous coronary artery dissections (SCAD),] (SCAD) மற்றும் தீவிர உடற்பயிற்சியால் நம் உடலில் இருக்கும் பிளேக் சிதைதல் போன்றவை மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
திவீரமான உடற்பயிற்சியைச் செய்யும் போது, அது தமனிகளில் கால்சியம் படிவதற்கும் வழிவகுக்கும், இத்தைகைய நிலைமையானது, நம்மிடையே இதயம் தொடர்பான பிரச்சினைகளை அதிகரிக்க செய்கிறது.
உடற்பயிற்சியின் போது நிகழும் திடீர் மரணத்திற்கு, பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஒரு பொதுவான காரணமாக இருந்தாலும், அரித்மியாஸ், வால்வு பிரச்சனைகள் அல்லது பெருநாடி கிழிதல் [arrhythmias, valve problems, aortic tears] போன்ற இதர இதயம் தொடர்பான பிரச்சினைகளும் தீவிர உடற்பயிற்சியினால் உண்டாகலாம்.
இது போன்ற நிலைமைகளில், நம் உடலில் திவீரமான பாதிப்பை ஏற்படுத்தும் வரை பல அபாயங்கள் கவனிக்கப்படாமல் போகலாம், இதனால் இளம் உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு உடற்பயிற்சிக்கு முந்தைய பரிசோதனைகள் மிகவும் முக்கியமானவை என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். எதிர்பாராத அவசர நிலைகளுக்கு தயாராக இருப்பது உயிர்களைக் காப்பாற்றும் ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள், எதிர்பாராத அவசரநிலைகளுக்குத் தயாராக இருப்பது அவசியம். உடற்பயிற்சிக்கு முந்தைய சுகாதார பரிசோதனைகள், ஒவ்வொருக்கும் பொருந்துகிற வகையில் வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டங்கள் மற்றும் உடற்பயிற்சியின் போது ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்பது குறித்த கண்காணிப்பு [Pre-exercise health screenings, tailored workout plans, surveillance during exercise] ஆகியவை திடீரென ஏற்படும் இதய பாதிப்புகளைத் தடுக்க உதவும்.
அடுத்து, உயிரைக் காப்பாற்றும் அடிப்படை ஆதரவு (Basic Life Support (BLS)) அம்சங்களில் பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்டிருப்பதும், தானியங்கி முறையில் இயங்கும் வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்கள் (Automated External Defibrillators (AEDs)) களை ஜிம்களில் தயாராக வைத்திருப்பதும் உயிர்களைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
சுருக்கமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியவை
இளைஞர்கள் மற்றும் உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால் முழுமையான, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலமான நோய் தடுப்பு பழக்கவழக்கங்கள் இப்போது அதிக முக்கியத்துவம் பெற ஆரம்பித்திருக்கின்றன.
மிதமான உடற்பயிற்சி நமக்கு பல்வேறு பலன்களை அளிக்கும் அதேவேளையில், தீவிர உடற்பயிற்சியானது பல எதிர்பாராத ஆபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றன. இதுகுறித்து, உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் உடற்பயிற்சி பணியாளர்கள் இருவரும் அறிந்திருக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு முந்தைய பரிசோதனைகள் மற்றும் BLS போன்ற உயிர்காக்கும் நுட்பங்களில் சிறப்புப் பயிற்சி இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். நாம் அன்றாடம் பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சி, இதயம் தொடர்பான அபாயங்கள், அவசர சூழல்களில் நாம் செய்ய வேண்டியவை, போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வாயிலாகவும், இளைஞர்களிடையே இதய நோயின் பாதிப்புகள் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டியது இன்று அவசியமாகி இருக்கிறது.
மூத்த இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் ஒய். விஜயசந்திர ரெட்டி
|