உயிர்காக்கும் நவீன இதய அறுவைசிகிச்சை!
இதயமே… இதயமே… ஹெல்த் கைடு!
பல ஆண்டுகளாக, திறந்த இதய அறுவைசிகிச்சை என்பது நோயாளியின் மார்பின் நடுவே நீண்ட கீறல் மூலம், மார்பக எலும்பு அல்லது மார்பெலும்பைப் பிரித்தோ அல்லது தேவையான அளவில் எலும்பை வெட்டியோ மேற்கொள்ளப்படுவதாக இருந்து வந்தது. 1996 -ம் ஆண்டு முதல் மினிமலி இன்வேசிவ் கார்டியாக் சர்ஜரி (Minimally invasive cardiac surgery (MICS)) எனப்படும் குறைந்தபட்ச ஊடுருவும் இதய அறுவை சிகிச்சை நவீன, வீடியோ உதவியுடன் மிட்ரல் வால்வை சரிசெய்யும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
 இன்று, விலா எலும்புகளுக்கிடையே மேற்கொள்ளும் சிறிய கீறல்கள் மூலம், எண்டோஸ்கோப்புகள் மற்றும் சிறப்பு கருவிகளின் மூலம், அறுவைசிகிச்சை நிபுணர்கள் வால்வுகளை சரிசெய்ய முடியும். அடைப்புகள் உள்ள தமனிகளைத் தாண்டியும் சிகிச்சையளிக்க முடியும். செப்டல் குறைபாடுகளை சரிசெய்ய முடியும்.
 இந்த குறைந்தபட்ச ஊடுருவும் அறுவைசிகிச்சையானது மார்பெலும்பைக் காப்பாற்றும். அதே வேளையில் பாதிப்படைந்த வால்வுகளை மாற்றவும் உதவுகிறது. இதன் மூலம் நோயாளிகள் மிக விரைவாக குணமடைய முடியும். அறுவைசிகிச்சையினால் உண்டாகும் காயமும் வெகுவாக குறைக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் தங்களது அன்றாட வாழ்க்கையை வெகு சீக்கிரமே தொடங்கும் வாய்ப்புகளை இந்த மருத்துவ முன்னேற்றங்கள் அளிக்கின்றன.
 குறைந்தபட்ச ஊடுருவும் இதய அறுவைசிகிச்சையின் மிகப்பெரும் பலன்களில் ஒன்று, கரோனரி தமனி நோயை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதுதான். குறைந்தபட்ச ஊடுருவும் கரோனரி தமனி பைபாஸ் கிராஃப்டிங் (minimally invasive coronary artery bypass grafting (MICS-CABG)-ல், அறுவைசிகிச்சை நிபுணர்கள் நோயாளியின் இடது மார்பு பக்கம் ஒரு சிறிய கீறல் மூலம் இதயத்தை நெருங்குகிறார்கள்.
பெரும்பாலும் இதயம் துடிக்கும் போதே அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் மார்பெலும்பை வெட்டுவதற்கான தேவையையும் தவிர்க்க முடிகிறது. எண்டோஸ்கோபிக் நரம்பு மருத்துவ நடைமுறை (endoscopic vein harvesting (EVH) மூலம் கீ ஹோல் எனப்படும் சிறிய துளையிடும் நுட்பத்தைக் கொண்டு காலில் இருந்து நரம்புகள் எடுக்கப்படுகின்றன.
திறந்த முறையிலான சிகிச்சையுடன் ஒப்பிடும்போது காலில் உண்டாகும் காயத்தின் காரணமான தொற்றுகள் மற்றும் காயம் தொடர்பான சிக்கல்களை இது குறைக்கிறது. மேலும் நீரிழிவு நோயின் பாதிப்பு அல்லது உடல் பருமன் உள்ள நோயாளிகளுக்கு இம்முறை நல்ல பலன்களை அளிக்கிறது.
பொதுவாக மருத்துவமனைகள் இந்த மருத்துவ முறையில் ஆழ்ந்த அனுபவத்தைப் பெறுவதால், ஒன்றிற்கு மேற்பட்ட கரோனரி தமனிகள் ப்ளேக்கினால் அடைபட்டு குறுகலாகும் சிக்கல்களை சிறிய கீறல்கள் மூலம் சரி செய்யமுடியும். இது வழக்கமான அறுவைசிகிச்சையுடன் ஒப்பிடும் போது நல்ல விளைவுகளை கொடுக்கின்றன என தெரியவந்திருக்கிறது. இந்த சிகிச்சை பலனளிக்கும் வகையில் இருக்கும் நோயாளிகளுக்கு இம்முறையைச் செய்வதன் மூலமும், சரியான திட்டமிடல் மூலமும் பெரும் அபாயங்களைக் குறைக்கமுடியும்.
டிரான்ஸ்கேத்தெட்டர் பெருநாடி வால்வு மாற்று அறுவைசிகிச்சை (Transcatheter aortic valve replacement (TAVR)) பல வயதான அல்லது அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு பொதுவான சிகிச்சையாக மாறியுள்ளது. மிட்ரல் வால்வு பாதிப்பை சரிசெய்வதில், ரோபோட்டி முறையானது அறுவைசிகிச்சை நிபுணர்கள் முப்பரிமாண பார்வை மற்றும் துல்லியமாக சுழலும் ரிஸ்ட்டட் கருவிகளுடன் [wristed instruments] பென்சில் முனை அளவிற்கு துளையிட்டு சிகிச்சையைத் தொடர உதவுகின்றன.
இதனால் மிகவும் நுட்பமான, துல்லியமான முறையில் மிட்ரல் வால்வு பாதிப்பை சரி செய்யமுடியும். ரோபோடிக் மிட்ரல் பழுதுபார்ப்பு வழக்கமான ஸ்டெர்னோடமியை விட ஓரளவு சிறந்த பலன்களை கொடுக்கிறது. அதே நேரம் அறுவைசிகிச்சையில் இருக்கும் சிக்கல்களைக் குறைப்பதோடு, நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் தங்கும் காலத்தையும் வெகுவாக குறைக்க உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே எந்தவொரு மார்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் நோயாளிக்கு உண்டாகும் வலி மற்றும் சுவாசப் பிரச்சினை, அவர்களுக்கு அசெளகரியத்தைக் கொடுப்பதோடு சிகிச்சைக்குப் பிறகு மீண்டுவரும் சூழலையும் பாதிக்கின்றன. மினிமலி இன்வேசிவ் கார்டியாக் சர்ஜரியில் மார்பக எலும்பைப் பிளவுபடுத்துவதைத் தவிர்ப்பதால், நோயாளிகள் பொதுவாக மார்புச் சுவர் பலமற்று இருப்பது போன்ற உணர்வை அதிகம் எதிர்கொள்வது இல்லை.
மேலும் அவர்களால் செளகரியமாக சுவாசிக்க முடிகிறது. பிசியோதெரபி சிகிச்சையை எளிதில் மேற்கொள்ள உதவுவதோடு, சிகிச்சைக்குப் பிறகு தொடங்கும் நடைப்பயிற்சியையும் எளிதாக்குகிறது. இருப்பினும்,. விலா எலும்புகள் விரிவதால் சிறிது வலி இருக்கலாம். விலா எலும்புகளுக்கு இடையேயான நரம்பு எரிச்சல் இருப்பதாலும் இந்த வலியை நோயாளிகள் உணரலாம். நரம்பில் பாதிப்பு இல்லாமல் மேற்கொள்ளும் சிகிச்சை, தமனிகளில் இருக்கும் அடைப்புகள், மல்டிமோடல் வலி நிவாரணம் போன்ற புதிய நுட்பங்கள் நோயாளி சிகிச்சையிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வருவதை எளிதாக்குகின்றன.
அறுவைசிகிச்சைக்கு முன் சிறந்த திட்டமிடல், வீரியமுள்ள வலி நிவாரணிகளைக் குறைத்தல் மற்றும் சிகிச்சைக்குப் பின் ஆரம்ப நடைப்பயிற்சியை ஊக்குவித்தல் போன்றவை நோயாளிகள் விரைவாக குணமடைவதோடு, மருத்துவமனையிலிருந்து சீக்கிரமே வீட்டுக்குத் திரும்பும் சூழலை உருவாக்குகின்றன, அல்ட்ராசவுண்ட் மற்றும் 3D இமேஜிங் போன்ற தொழில்நுட்பங்கள் மருத்துவர்கள் நோயாளியின் நிலையை துல்லியமாக கண்டறிய உதவுகின்றன. மேலும், அறுவைசிகிச்சையின் போது உண்டாகும் இரத்த இழப்பை குறைப்பதோடு, பாதிப்புகளையும் குறைக்க உதவுகின்றன.
குறிப்பிட்ட சிகிச்சைக்கு நோயாளி பொருத்தமானவராக இருக்கிறாரா என்று தேர்வு செய்வதில் இருந்து சிகிச்சையின் பலன்கள் ஆரம்பமாகின்றன. அறுவை சிகிச்சை நிபுணர்கள் முந்தைய அறுவைசிகிச்சைகள், மார்புச்சுவர் வடிவம், பெருநாடி கால்சிஃபிகேஷன், இதய செயல்பாடு மற்றும் நோய் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது MICS சிறப்பாகச் செயல்படுகிறது. உதாரணமாக, இறுக்கமான பெருநாடி வால்வு கொண்ட 80-களில் உள்ள பலவீனமான நோயாளிகள் டிரான்ஸ்ஃபெமரல் TAVR-லிருந்து அதிகம் பயனடையலாம்.
மிட்ரல் வால்வு நோயால் பாதிக்கப்பட்ட இளம் வயதுடைய நோயாளிகள் மினி-தோராக்கோட்டமி மூலம் ரோபோட்டி முறையில் சரிசெய்வதில் சிறப்பாகச் செயல்படலாம். தீவிரமான கரோனரி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட கால முடிவுகளுக்கு குறைந்தபட்ச ஊடுருவும் பல-தமனி பைபாஸ் தேவைப்படலாம். அறுவை சிகிச்சை நிபுணர்கள், இருதயநோய் நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், இமேஜிங் நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட இதயக் குழுக்கள் ஒவ்வொரு நோயாளியின் தேவைகளையும் அபாயங்களையும் மதிப்பிடுகின்றன.
MICS இன்னும் குறைந்த அளவு ஊடுருவும் வசதி, துல்லியமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அறிவார்ந்த வழிகாட்டும் அம்சங்களை நோக்கி முன்னேற்றம் கண்டு வருகிறது. உயர்-வரையறை எண்டோஸ்கோபி, 3D இமேஜிங் மற்றும் மேம்பட்ட ரோபாட்டிக்ஸ் ஆகியவை சிறிய துளைகள் மூலம் சிக்கலான நடைமுறைகளை சாத்தியமாக்குகின்றன. மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு திட்டங்கள் மற்றும் தரவு அடிப்படையில் சரிபார்த்து அறிய உதவும் பட்டியல்கள் போன்றவை சிகிச்சையில் நல்ல பலன்களைப் பெற உதவுகின்றன.
இப்போது பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகள் குறைந்த வலி, குறைவான சிக்கல்கள், குறுகிய கால மருத்துவமனை சிகிச்சை மற்றும் விரைவாக குணமடையும் வாய்ப்புகள் என மேம்பட இதய சிகிச்சைகளைப் பெறுகிறார்கள். துல்லியமான முறை, தொழில்நுட்பம் மற்றும் குழுப்பணி என இவை ஒவ்வொன்றிலும் முன்னேற்றம் கண்டு வருவதால், இப்போது, குறைந்தபட்ச ஊடுருவும் இதய அறுவைசிகிச்சை நம்முடைய வழக்கமான மருத்துவ பராமரிப்பில் இணைந்த ஒன்றாக முக்கியத்துவம் பெற்று வருகிறது.
இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது
|