பெண்களின் எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு!
அகமெனும் அட்சயப்பாத்திரம்
கடந்த இதழில் எல்லைக் கோட்டு ஆளுமைக் கோளாறு என்பது எப்படி பெண்களை பாதிக்கிறது என்று பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் பார்ப்போம்.மட்டக்கேலி (Sarcasttic )பார்வைகள் பெண்கள் என்றாலே இப்படித்தான் என்று முடிவின் சலிப்பை இருவருக்கும் தந்து விடும். அது அறிவியல் சார்ந்த காரணிகளை உணர விடாது. மேலும், இவ்வாறான பெண்களைக் கேலி செய்வது அவர்களின் BPD அறிகுறிகளை மேலும் அதிகப்படுத்தும் என்பதை ஆண்கள் நினைவில் நிறுத்த வேண்டும். பிபிடி பாதிப்புக் கொண்ட பெண்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை விடவும் ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்ற கோணமே மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டியது இன்றைய சமத்துவப் பாலின உலகில் மிக அவசியம்.நம்மோடு இருப்பவர், அடிக்கடி கோபப்பட்டு வருந்தி மனநோய்க்கு ஆளானால் அது நம்மையும், நம் வருங்கால சந்ததிகளையும்தான் பாதிக்கும் என்பதை ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.
 நம் நாட்டில் இன்னமும் பெரும்பான்மை மக்கள் குடும்ப அமைப்பு என்பதில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே, BPD யின் ஆதிக்கமான பரவலைக் கட்டுப்படுத்துவதில் நம் எல்லோருடைய பங்களிப்பும் அவசியமாகிறது.
நம்மிடையே யாருக்கேனும் பிபிடி அறிகுறி, பாதிப்பு ஏற்பட்டால், குற்றம் சொல்லாமல் கருணையோடு பார்க்க வேண்டும். காரணத்தைக் கண்டறிந்து கைக்கொடுக்க முன்வர வேண்டும். அவர்களை முறையான சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். இதற்கென உலகம் முழுவதும் பிபிடிக்கான பயிற்சி மையங்கள், உளவியல் மருத்துவ மனைகள் இருக்கின்றன.
“ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு” என்பது பழமைவாதம். உண்மையில் ஆத்திரப்படக்கூடிய BPD பாதிப்பு அடைந்தவர்கள் பலர் அறிவாளிகளாகவே இருக்கிறார்கள் என்பதே நவீன மாற்று அறிவியல்.
அதாவது, தான் நம்பக்கூடிய / வலியுறுத்தக்கூடிய உணர்வு சார்ந்த/அறிவு சார்ந்த கருத்துகளை நிரூபிப்பதற்கான உள்உந்துதலின் காரணமாகவே பலரும் ஆத்திரப்படுகிறார்கள் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. எனவே, ஆத்திரக்காரனுக்கும் /ஆத்திரக்காரிக்கும் அறிவு இருக்கக்கூடும் என்ற நோக்கில் அவர்களை மதிப்புடன் நடத்தலாம்.
அவர்களின் நோக்கம் சிறந்ததாக இருந்தாலும், செயல்படுத்தும் விதம், நடைமுறை ஆதிக்க செயல்களின் பின் விளைவுகள், பிறருக்கு ஏற்படும் பாதிப்புகள் (Creating Consequences awareness) போன்றவற்றைப் பொறுமையாக விளக்கிச் சொன்னால் மாற்றங்கள் ஏற்படும் என்ற உளவியல் உண்மையை முதலில் நம்ப வேண்டும்.
ஏனெனில், நாம் முன்பே குறிப்பிட்டது போல், BPD கொண்டவர் அடிப்படையில் பிறரோடு தான் நல்ல விதமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உடையவரே. இதுவே உடன் இருப்பவர்களுக்கான சாதகமான நிலை.
எல்லைக் கோட்டு ஆளுமைக் கோளாறுக்கான முதற்கட்ட சிகிச்சை அவர்களின் கோபத்தைக் கட்டுப்படுத்துவதில்தான் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
கோபத்தில் இருந்து விடுபட எளிய நடைமுறைப் பயிற்சிகளாக , 1. பலூன் ஊதிப் பறக்க விடுவது, குத்துச்சண்டை விளையாட்டு , குச்சிகளை உடைப்பது, 2 தனிமையான இயற்கைப் பிரதேசங்களுக்குச் சென்று உரக்கக் கத்துவது, 3. தயக்கமின்றி வாய் திறந்து பாடுவது/ இசை கேட்பது, 4. நடனம் ஆடுவது, 5. வியர்வை வரும்வரை உடற்பயிற்சி செய்வது, 6. இதமான வெந்நீரில் நாளுக்கு இரண்டு முறை குளிப்பது 7.புத்தகங்கள் வாசிப்பது, 8. ஓவியம் வரைவது, 8. சூழல் இடத்தை மாற்றுவது ஆகியவற்றை ஜாலியாக மேற்கொள்ளலாம்.
பொங்கி எழும் கோபத்தைச் சமாளிக்க உதவும் முதல் தாரக மந்திரம் ‘ உன் உள்ளே நடப்பதை உற்றுக் கவனிக்கத் தொடங்கு’ என்பதே.உளவியல் நிபுணர் Alisa Ruby Bash அவர்கள் “உன் கோபத்தை நீ முறையாகக் கையாளாமல் பிடித்துக் கொண்டே இருந்தால், வெளியே வித்தியாசமாக நடந்து கொள்வதோடு எளிய மனிதர்களிடமும், முன்பின் தெரியாதவர்களிடமும் அதைக் கொட்டி உன்னை இழப்பாய்” என்கிறார்.
மேலும் அவர், “சுய தற்காப்பு அனிச்சை செயல் (Self - Defence Mechanism ) நிலைமாறிவிடுவதே கோபம்” என்று குறிப்பிட்டதோடு, அலுவலகத்தில் முதலாளி திட்டியதற்கு சாலையில் யாரோடோ சண்டை போடும் பிரசித்தி பெற்ற நகைச்சுவை எடுத்துக்காட்டினையும் முதன் முதலில் குறிப்பிட்டார்.
எனவே, BPD - யில் இருந்து விடுபட மன அமைதிக்கான யோகா, தியானப் பயிற்சி, மனப்பதட்ட தடுப்பு மேலாண்மை (Stress Management), சுற்றி உள்ளவர்களிடம் வெளிப்படையான கலந்துரையாடல் போன்றவற்றை அவரவர் வீட்டிலேயே தொடங்கலாம்.
கோபத்தைத் தூண்டும் விவாதமோ, சர்ச்சையோ ஏற்படும்பொழுது, அது சார்ந்து மட்டுமே பேச வேண்டும், தொடர்பற்றவற்றையோ, முன்பு நிகழ்ந்தவற்றையோ பேசக்கூடாது என உறுதிமொழி எடுத்துக்கொள்வது நல்ல பலனைத்தரும்.
அதேபோல், அடுத்தவரை உணர்வு ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் சொற்களையோ, செயல் வடிவிலான துன்பறுத்தலோ (Psysical abuse) ஒருபோதும் செய்யக்கூடாது என தனக்குத்தானே சொல்லிக் கொள்ள வேண்டும் (Self Corrective - talk). கோபக் காரணிகளை (Triggering factors): பட்டிலியலிட்டு எழுதி ஒவ்வொன்றாக கவனித்து படிப்படியாக குணப்படுத்துவதும் சீரான பலனைத் தரும். மேலும், BPD பாதிப்புக்குள்ளானவர்களை குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் என வயதுவாரியாகப் பிரித்து அவரவர் தனித்தன்மைக்கேற்ற சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.உரிய நேரத்தில், உளவியல் துறைசார் மருத்துவர்கள், பயிற்சியாளர்களிடம் Dilectical Therapy, Mindfullness techniques, Personal skills development, Cognetive behavioual therapy, Psycho-Theraphy போன்ற மனநலப் பயிற்சிகளும் சிகிச்சை முறைகளும் எடுத்துக் கொள்வது நலம்.
நிறைவாக, எல்லைக் கோட்டு ஆளுமையின் தீவிர பாதிப்பு கொண்டவர்களை சிகிச்சை அளித்த பின்னரும், மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை உளவியல் ஆலோசகரின் நெருங்கிய கண்காணிப்பிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்குப் பிறகும் BPD அறிகுறிகள் இல்லை என்றால் மட்டுமே பூரண குணம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இது அந்நியன் திரைப்படத்தின் Climax - இல் நாசர் விக்ரமைத் தொடர்ந்து கண்காணித்து அவருடைய மனைவிக்கு அழைப்பு விடுப்பதை நினைவுபடுத்துகிறது இல்லையா? ஆம்..எல்லாம் தொடர்புடையவையே. வாழ்வின் கூறுகளே திரைப்படங்கள். அதைத்தாண்டி தொடர்ந்து நல்ல மனிதர்களோடு தொடர்பு கொண்டிருப்பதே நலமான வாழ்வு.
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
|