தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பிகள்
குல்கந்து ஜாமூன் தேவையானவை: பிரட், குல்கந்து, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு, நெய், எண்ணெய்.
செய்முறை: சூடான வாணலியில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்கவிடவும், பிறகு அதில் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்து பாகு பதம் வந்ததும் இறக்கி தனியாக வைத்துவிட்டு அதில் ஒரு துளி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். பின்னர், பிரட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு அதனுடன் பால் சேர்த்து மென்மையான மாவு பதத்திற்கு பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
இந்த உருண்டைகளுக்குள் சிறிதளவு குல்கந்து வைத்து மீண்டும் உருட்டிக்கொள்ளவும். சூடான எண்ணெய் அல்லது நெய்யில் குல்கந்து உருண்டைகளை பொன்னிறமாக பொரிக்கவும். பின்னர், உருண்டைகளை சர்க்கரைப் பாகில் சேர்த்து, அரை மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். குல்கந்து ஜாமூன் தயார்.  மடக்கு பூரி
தேவையானவை: கோதுமை மாவு, துருவிய தேங்காய், சர்க்கரை, நெய், முந்திரி, எண்ணெய், உப்பு.
செய்முறை: முதலில், கோதுமை மாவு, நெய், தேவையான அளவு உப்பு அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீரை கலந்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், சர்க்கரை, பொடித்த முந்திரி ஆகியவற்றை கலக்கவும். துருவிய தேங்காய் ஈரப்பதமின்றி நன்கு உலர்ந்திருந்தால் பலகாரம் நீண்ட நாள் நன்றாக இருக்கும். இப்போது மடக்கு பூரி தயாரிப்பதற்கான பூரணம் தயார்.
பின்னர், பிசைந்து வைத்துள்ள மாவில் சின்ன சின்ன பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும். அதில், பூரணத்தை வைத்து மடித்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு அதில் பூரியை சுட்டு எடுத்தால் மடக்கு பூரி தயார்.
முந்திரி கொத்து
தேவையானவை: பச்சை பயறு, வெல்லம், அரசி மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய்.
செய்முறை: வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லத்தை கொதிக்கவைத்து வெல்ல பாகு தயாரித்துக்கொள்ளவும். பின்னர், பச்சை பயறை நன்கு வறுத்து பொடியாக அரைக்கவும். பின்பு தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அதில் அரைத்து வைத்துள்ள பாசி பயறு மாவு மற்றும் ஏலக்காய் பொடி போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் சூடுபடுத்தி அதனுடன் கலக்கி வைத்துள்ள பாசிப்பயறு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து, அவை அனைத்தும் வெல்ல பாகோடு சேருமாறு நன்கு கலக்கவும்.
அவை நன்கு கலந்த பின்பு வெதுவெதுப்பான சூடுடன் இருக்கும் போதே சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். பின்பு வேறு பாத்திரத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் கலந்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். பின்னர், தயாரித்த உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கொத்தாக வேண்டுமென்றால் இரண்டு மூன்று உருண்டைகளை சேர்த்து ஒன்றாக பொரிக்கவும். சீப்பு சீடை
தேவையானவை: அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுந்து பொடி, பாசி பருப்பு பொடி, தேங்காய் பால், உப்பு, எண்ணெய்.
செய்முறை: உளுந்தையும், பாசி பருப்பையும் வறுத்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து பொடி, பாசி பருப்பு பொடியுடன் உப்பு, தேங்காய் பால், சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி அதனுடன் தண்ணீர் தெளித்து மாவை மிருதுவாக பிசையவும். பின்னர், சீப்பு சீடை வடிவ தட்டுடைய முறுக்கு குழலில் வைத்து பிழியவும். பின்பு பிழிந்த மாவை மோதிர வடிவ அளவிற்கு பாதி பாதியாக வெட்டவும். பின்னர், விரலில் வைத்து மோதிரம் போல் சுருட்டி இரு புறங்களும் இணையுமாறு மடக்கிக்கொள்ளவும். பின்னர், எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
தீபாவளி லேகியம்
தேவையானவை: சுக்கு - 1 துண்டு, சீரகம் - இரண்டரை மேஜைக் கரண்டி, மிளகு - 2 தேக்கரண்டி, தனியா(மல்லி) - இரண்டரை மேஜைக்கரண்டி, ஓமம் - ஒரு கப் (சுமார் 25 கிராம்), கிராம்பு - 2, ஏலக்காய் - 2, சித்தரத்தை - 10 கிராம், நெய் - ஒரு கப், வெல்லம் - தேவைக்கேற்ப.
செய்முறை: மேலே சொன்ன பொருட்களையெல்லாம் நன்றாக இடித்து நொறுக்கி பொடி செய்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறிய பின் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு போதிய அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு போல் கரைத்து, மண் சட்டியிலிட்டு கொதிக்கவிடவும். அதை அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் சுண்டி கெட்டியாக வந்தபின், வெல்லத்தூளைப் போட்டுக் கிளறி நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாகச் சுண்ட விட வேண்டும். சுண்டக்காய்ச்சிய பிறகு இறக்கவும்.
- தவநிதி
|