ஷாம்புவில் இத்தனை வகைகளா?
பெரும்பாலான நபர்களுக்கு தலைமுடி உதிர்வு பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நாம் பயன்படுத்தும் ஷாம்புதான். பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கருமையான கூந்தலுக்கு சீயக்காய், வெந்தயம், காய்ந்த செம்பருத்திப் பூ என்று இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி வந்தோம்.
 ஆனால், இன்றைய அவசர உலகில், இதை எல்லாம் தேட நேரம் இல்லாமல், ஒவ்வொரு வீட்டுக் குளியல் அறையிலும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது ஷாம்பு. ஆனால், ஷாம்புவில் என்ன இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அழகான பாட்டில், கண்ணைப் பறிக்கும் ஸ்டிக்கர், பிடித்த விளம்பரம் போன்றவற்றை பார்த்து ஷாம்புவை வாங்குகின்றனர். இந்த விஷயங்களை தவிர்த்துவிட்டு, முக்கியமாக கவனிக்க வேண்டியது ஷாம்புவின் மூலக்கூறுகள் என்னென்ன என்பதைதான். ஏனென்றால், தலைமுடியில் பல வகைகள் உள்ளன. உடைந்த கூந்தல், அடர்ந்த முடி, சுருட்டை முடி, அடர்த்தி குறைந்த கூந்தல் என பல ரகங்கள் உண்டு. இவற்றில் ஒவ்வொரு விதமான கூந்தலுக்கும் பொருந்தும் சரியான ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல் அவசியமாகும்.
ஷாம்பு வகைகள்
*கிளென்ஸிங் ஷாம்பு (Cleansing): மிதமானது, வீரியமிக்க ரசாயனங்கள் இருக்காது.
*ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பு (Anti-dandruff): பொடுகு இருந்தால் அகற்ற உதவுகிறது. மேலும், தலையில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்றவற்றைப் போக்க ஏற்றது.
*ஆன்டி செபொரிக் ஷாம்பு (Anti seborrheic): அதிகமான பொடுகு, பூஞ்சைத் தொற்று இருந்தால், அவற்றைப் போக்க உதவுகிறது.
*கெரடோலிடிக் ஷாம்பு (Keratolytic): சொரியாசிஸ் நோயாளிகள், செதில் செதிலாகத் தலையில் தோல் உரியும் பிரச்னை இருப்பவர்கள் பயன்படுத்தலாம்.
*வால்யூமைசிங் ஷாம்பு (Volumizing): குறைந்த முடி கொண்டவர்கள் இதைப் பயன்படுத்துகையில், முடி அடர்த்தியாகத் தெரியும்.
*மாய்ஸ்சரைசிங் ஷாம்பு: வறண்ட முடி கொண்டவர்களுக்கான பிரத்யேக ஷாம்பு. இதனால், மென்மையான கூந்தலைப் பெறலாம்.
*ரிவைட்டலைசிங் ஷாம்பு (Revitalizing): கூந்தலுக்கு கலரிங் செய்தவர்கள், ஸ்ட்ரைட்டனிங், பர்மிங் போன்ற கெமிக்கல் சிகிச்சை எடுத்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ஷாம்பு.
*2 இன் 1 ஷாம்பு: இதில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் இரண்டுமே கலந்திருக்கும்.
*ஸ்விம்மர் ஷாம்பு (Swimmer): நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் கூந்தலில் படுவதால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்.
*சுருட்டை முடிக்கு, சிக்கு விழும் கூந்தலுக்கு எனப் பிரத்யேகமான ஷாம்புக்கள் உள்ளன.
ஷாம்புவை தேர்ந்தெடுக்கும் விதம்
அடர்த்தி குறைந்த கூந்தலுக்கான ஷாம்பு: அடர்த்தி குறைந்த கூந்தலை உடையவர்கள், கூந்தலை அடர்த்தியாக்க உதவும் புரோட்டின் மற்றும் பாலிமர்கள் கொண்ட ஷாம்புவை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஷாம்புவின் முக்கிய மூலக்கூறாக மரைன் கொலாஜென் எனும் பொருள் இருக்கும்; இது கூந்தலை அடர்த்தியாக்க உதவும்.
உடைந்த முடிக்கான ஷாம்பு: தலைமுடி வறட்சியாக உள்ளவர்களுக்கு முடியின் இறுதியில் பிளவுபட்டு காணப்படும். எந்த சூழல் ஆனாலும், எக்காலமானாலும் இதன் தன்மை மாறாது இருக்கும். இவ்வித முடிக்கு அதிக ஈரப்பதம் கொண்ட, முடியை நன்கு ஈரப்பதத்துடன் வைக்கும் ஷாம்பு தேவை. இதற்கு, எண்ணெய், ஷியா வெண்ணெய் போன்ற மூலக்கூறுகளைக் கொண்ட ஷாம்புவை தேர்ந்தெடுத்தால் கூந்தல் உடைவதை தடுக்க முடியும்.
நிறத்துக்கு தகுந்த ஷாம்பு: கூந்தல் கருப்பு நிறமாக, பிரௌன் நிறமாக அல்லது நிறம் குறைந்தோ கூடியோ இருந்தால், உங்கள் கூந்தலை சரியான மெலனின் அளவு கொண்டதாக மாற்றும் ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல் வேண்டும். இந்த விதமான ஷாம்பு முடியின் நிறத்தை காப்பதாக இருக்கும்; முடியின் ஆழம் வரை சென்று நிறமிழப்பை தடுக்கும்.
எண்ணெய்ப்பசை கொண்ட முடிக்கான ஷாம்பு: எண்ணெய்ப்பசை மற்றும் அடர்த்தி குறைந்த கூந்தலுக்கு, கற்றாழை, பருத்தி எண்ணெய், மூலிகைகள் போன்ற மூலப்பொருட்களை கொண்ட ஷாம்புவை தேர்ந்தெடுக்க வேண்டும். இது முடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.
பழுப்பு நிற கூந்தலுக்கான ஷாம்பு: இந்த வகை கூந்தல் ஒல்லியாக, அதிக சென்சிட்டிவாக இருக்கும். எனவே, இதற்கென்றே ஒரு சிறப்பான ஷாம்பு தயாரிக்கப்பட்டு, சந்தைகளில் விற்கப்படுகிறது. இந்த ஷாம்பு நீலம் அல்லது ஊதா நிற கூறுகள் சேர்த்து, கூந்தலின் மஞ்சள் - பழுப்பு நிற கூறுகளை நீக்கி, முடியின் நிறத்தை சரியானதாக மாற்றுவதாக இருக்கும்; முடியின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.
முடியின் வேர்கால்களுக்கான ஷாம்பு: முடியின் வேர்கால்கள் சென்சிட்டிவாக இருந்தால், அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் போன்றவை ஏற்படும். இந்த விதமான முடி கொண்டவர்கள் ப்ரோ வைட்டமின் B5, பைசாபோலொள், கற்றாழை போன்ற மூலக்கூறுகள் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. இது தலையின் சென்சிட்டிவிட்டியை குறைத்து முடி வளர்ச்சியை தூண்ட உதவும்.
முடிக்கு முழு சுத்தம் தரும் ஷாம்பு: அதிகமுறை தலைக்கு குளிப்பதோ, தினந்தோறும் ஷாம்பு பயன்படுத்துவதோ முடிக்கு தூய்மையான சுத்தத்தை தராது. முடி தூய்மையான சுத்தம் அடைந்து விட்டதை தலையில் உள்ள பொடுகு, பேன், உலர்ந்த தன்மை போன்ற அனைத்தும் நீங்கும் போதே உணரலாம். எனவே, தங்கள் தலைமுடிக்கு ஏற்ற சரியான ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால், கூந்தல் முழுமையான சுத்தத்தை பெறும்.ஆனால், இவை எல்லாவற்றையும் விட, நாம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளும் சீயக்காய்த் தூள்தான் எப்போதுமே பெஸ்ட்.
அவை எப்படி தயாரிக்கலாம் பார்ப்போம்
சீயக்காய் - 1 கிலோ, காய்ந்த ரோஜா மொட்டு, செம்பருத்திப் பூ, செம்பருத்தி இலை, ஆவாரம் இலை, வெட்டிவேர், துளசி, வேப்பிலை, கறிவேப்பிலை - (உலர்ந்தது) தலா 50 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ, வெந்தயம் - தலா 100 கிராம் சேர்த்து, அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு கூந்தலை அலசலாம்.
பொடுகை விரட்டும் ஷாம்பு
லெமன் கிராஸ் ஆயில் மற்றும் சிடர் வுட் தலா 50 மி.லி அளவு, நல்லெண்ணெய் மற்றும் ஈவ்னிங் ப்ரைம்ரோஸ் தலா 100 மி.லி அளவு கலந்து, கூந்தலில் தடவிய பின் வேப்பிலை, செம்பருத்தி இலைகள், பூந்திக் கொட்டை போட்டுக் கொதிக்க வைத்த நீரில் தலையை அலச, பொடுகு நீங்கும்.
- ஸ்ரீதேவி குமரேசன்
|