காற்றே என் நாசியில் வந்தாய்...நுரையீரல் காப்போம்!
வலியை வெல்வோம்!
உடலில் காற்று தானாகவே மூக்கின் வழியே உள்ளே செல்கிறது, வெளியேறுகிறது எதற்காக மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும் என்றொரு கேள்வியை / கேலியை சமூக வலைத்தளத்தில் படித்தேன். காற்றை உள்ளிழுத்து, வெளியேற்றுவது எளிதான காரியம் போல தோன்றினாலும் உடலுக்கு மிகப் பெரிய ஆற்றலை வழங்குகிறது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் 60 கோடிக்கும் மேற்பட்ட முறை மூச்சு விடுவார். ஒவ்வொரு மூச்சும் நுரையீரலை விரிவாக்கி, பின்னர் தளரவைக்கிறது. இந்த மூச்சு இயக்கமானது நுரையீரலின் வளர்ச்சி, காற்று பரிமாற்றம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
வளிமண்டலத்தில் இருந்து உள்ளிழுக்கப்படும் தூய்மையான காற்றானது உள்ளே சென்று இரத்தத்தின் மூலம் செல்களுக்குள் சென்று வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. பின் அங்கு உருவாக்கப்படும் கார்பன்டை ஆக்சைடை வெளியே தள்ளுகிறது. இந்தச் செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும் சில காரணிகளால் சில நேரங்களில் தடை படும் அல்லது குறையும்.
இந்த சுவாசம் உடற்செயலில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை முதலில் அறிந்து கொள்வோம். சுவாச அமைப்பானது ஆக்ஸிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறது என்பதை பார்த்தோம் சுவாச அமைப்பில் செயல்படும் முக்கிய உறுப்புகள்
*மூக்கு (nostril),
*மூக்குக் குழி (nasal cavity)
*தொண்டை (parynx)
*குரல்வளை (larynx)
*காற்றுக்குழாய் (Trachea / wind pipe),
*நுரையீரல்(Lungs)
*முதன்மை மூச்சுக்குழல்,
*கிளை மூச்சுக்குழாய்கள்
*காற்றுப்பைகள் (alveoli)
1.மூக்கு மற்றும் மூக்கு குழி: காற்றை வடிகட்டி, வெப்பப்படுத்தி, ஈரப்பதமாக்குகிறது. 2.தொண்டை (Pharynx): காற்று மற்றும் உணவுக்கான பொதுவான பாதை. 3.குரல்வளை (Larynx): குரல் நாண்கள் உள்ள இடம், காற்றை காற்றுக்குழாய்க்கு அனுப்புகிறது. 4.காற்றுக்குழாய் (Trachea): காற்றை நுரையீரலுக்கு கொண்டு செல்லும் குழாய். 5.மூச்சுக்குழாய் மற்றும் கிளைகள் (Bronchi/Bronchioles): நுரையீரலுக்குள் காற்றை பரவலாக்குகின்றன. 6.காற்றுப்பைகள் (Alveoli): ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு பரிமாற்றம் நடைபெறும் இடம். 7.நுரையீரல்கள் (Lungs): காற்றுப்பைகள் உள்ள பஞ்சு போன்ற உறுப்பு. 8.வயிற்று தசை மற்றும் விலா எலும்பு தசைகளும் சுவாசத்திற்கு உதவுகின்றன.
சுவாசம் நான்கு நிலைகளை உள்ளடக்கியது
1.வெளிப்புற சுவாசம் (Pulmonary Ventilation): வயிற்று தசை மற்றும் விலா எலும்பு தசைகள் மூலம் காற்று உள்ளிழுக்கப்பட்டு (Inspiration) வெளியேற்றப் படுகிறது (Expiration).
2.வெளி காற்று பரிமாற்றம் (External Respiration): காற்றுப்பைகளில் ஆக்ஸிஜன் இரத்தத்திற்கும், கார்பன் டை ஆக்ஸைடு இரத்தத்திலிருந்து காற்றுப்பைகளுக்கும் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
3.காற்று பரிமாற்றம் (Gas Transport): ஆக்ஸிஜன் ஹீமோகுளோபினுடன் இணைந்து உடல் முழுவதும் செல்கிறது; கார்பன் டை ஆக்ஸைடு நுரையீரலுக்கு திரும்புகிறது.
4.உள் சுவாசம் (Internal Respiration): ஆக்ஸிஜன் செல்களுக்கு வழங்கப்பட்டு, வளர்சிதை மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது; கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது.
காற்று பரிமாற்றத்தின் செயல்முறை:
வெளிப்புற காற்று பரிமாற்றம் (External Respiration)
*நுரையீரலின் காற்றுப்பைகளில் (Alveoli) நடைபெறுகிறது.
*உள்ளிழுக்கப்பட்ட காற்றில் உள்ள ஆக்ஸிஜன் காற்றுப்பைகளிலிருந்து அருகிலுள்ள நுண்குழல்களுக்கு (Capillaries) பரவுகிறது (Diffusion). இது ஆக்ஸிஜனின் உயர் செறிவில் (காற்றுப்பைகளில்) இருந்து குறைந்த செறிவை (இரத்தத்தில்) நோக்கி நடைபெறுகிறது.
*இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு (உயர் செறிவு) காற்றுப்பைகளுக்கு (குறைந்த செறிவு) பரவுகிறது, பின்னர் வெளியேற்றப்படுகிறது.
*இந்த பரிமாற்றம் காற்றுப்பைகளின் மெல்லிய சுவர்கள் மற்றும் நுண்குழல்களின் மெல்லிய சுவர்கள் மூலம் எளிதாக நடைபெறுகிறது.
*காற்றுப்பைகளின் பரந்த மேற்பரப்பு (சுமார் 70-100 சதுர மீட்டர்) பரிமாற்றத்தை மேலும் திறன் வாய்ந்ததாக்குகிறது.
*காற்றுப்பைகள் மற்றும் நுண்குழல்களின் மெல்லிய சுவர்கள் (0.5 மைக்ரோமீட்டர்) பரவலை எளிதாக்குகின்றன.
*செறிவு வேறுபாடு (Concentration Gradient) அதாவது ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு செறிவு வேறுபாடுகள் காற்று பரிமாற்றத்தை இயக்குகின்றன.
*நுரையீரல் நுண்குழல்களில் தொடர்ச்சியான இரத்த ஓட்டம் பரிமாற்றத்தை தொடர்ந்து நடைபெறச் செய்கிறது.
*ஆக்ஸிஜன் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் (Hemoglobin) இணைந்து உடல் முழுவதும் உள்ள செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
*கார்பன் டை ஆக்ஸைடு, இரத்தத்தில் கரைந்த நிலையில், பைகார்பனேட் (Bicarbonate) வடிவில், அல்லது ஹீமோகுளோபினுடன் இணைந்து நுரையீரலுக்கு திரும்புகிறது.
உள் காற்று பரிமாற்றம் (Internal Respiration)
இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் உடல் திசுக்களுக்கு பரவி, அங்கு செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கு ஆக்ஸிஜனை பயன்படுத்துகின்றன. செல்களில் உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்ஸைடு இரத்தத்திற்கு பரவி, நுரையீரலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
முக்கியத்துவம்
ஆக்சிஜன் விநியோகம், உடலின் ஆற்றல் உற்பத்திக்கு (ATP உருவாக்கம்) ஆக்சிஜன் அவசியம்.
*கழிவு அகற்றம்
கார்பன் டை ஆக்ஸைடு அகற்றப்படாவிட்டால், இரத்தத்தின் pH அளவில் மாறுபாடு ஏற்பட்டு உடலிற்கு தீங்கு விளைவிக்கும்.
*உடல் சமநிலை
காற்று பரிமாற்றம் உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்தத்தின் அமில-கார சமநிலையை (pH Balance) பராமரிக்கிறது.ஆக்ஸிஜன் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைக்கப்படுகிறது இதை ஆக்ஸி - ஹீமோ குளோபின் என்போம்.
இதன் மூலமாகத்தான் 97% ஆக்சிஜன் உடலின் செல்களுக்கு கடத்தப்படுகிறது., மீதமுள்ள 3% ப்ளாஸ்மாவுடன் கரைந்து விடும்.செல்லில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் போது வெளியேற்றப்படும் விளை பொருளான பை-கார்பனேட் (70%) மற்றும் கார்பாக்சி ஹீமோகுளோபின் (30%) தான் கார்பன்டை ஆக்சைடாக வெளியேறுகிறது.மேற்குறிப்பிட்ட உறுப்புகள் மட்டுமல்லாது, மேலும் சில தசைகளும் எலும்புகளும் கூட சுவாசத்திற்கு உதவுகிறது.
1.வயிற்று தசை (Diaphragm)
சுவாசத்தின் முதன்மை தசை.இதை உதரவிதானம் என்றும் அழைப்பர் நுரையீரல் மற்றும் இதயத்தை வயிற்றுப்பகுதியில் இருந்து பிரிக்கும் முக்கியமான மெல்லிய தசை அல்லது சவ்வு ஆகும்.இது முதுகெலும்பு மற்றும் கீழ் விலா எலும்புகளுடன் இணைந்துள்ளது.
2.விலா எலும்பு தசைகள் (Intercostal Muscles)
வெளிப்புற மற்றும் உட்புற விலா எலும்பு தசைகள் விலா எலும்புகளை இயக்கி மார்பு குழியை விரிவாக்குகின்றன.
3.துணை சுவாசத் தசைகள் (Accessory Muscles)
ஸ்டெர்னோகிளைடோமாஸ்டாய்டு (Sternocleidomastoid), ஸ்கேலீன் (Scalene), மற்றும் பெக்டோராலிஸ் (Pectoralis) தசைகள் தேவைப்படும்போது உதவுகின்றன. (எ.கா., மூச்சுத் திணறலின் போது).
4.விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்பு
விலா எலும்புகள் மார்பு குழியை உருவாக்கி, சுவாச இயக்கத்திற்கு அடித்தளமாக உள்ளன.
5.நுரையீரல் மற்றும் ப்ளூரல் குழி (Pleural Cavity)
நுரையீரல் மற்றும் ப்ளூரல் குழியில் எதிர்மறை அழுத்தம் (Negative Pressure) சுவாசத்தை எளிதாக்குகிறது.பிசியோதெரபியில் சுவாசப் பயிற்சிகள் இதய-நுரையீரல் நோயாளிகளுக்கு நுரையீரல் செயல்பாடு, சுவாசத் திறன் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.பிசியோதெரபியில் பயன்படுத்தப்படும் முக்கிய சுவாசப் பயிற்சிகள்
1.வயிற்று சுவாசம் (Diaphragmatic Breathing)
*வயிற்று தசையைப் பயன்படுத்தி ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக வெளியேற்றுவது. மார்பு அசைவதைத் தவிர்த்து, வயிறு மேலும் கீழும் அசைய வேண்டும்.
*நுரையீரல் திறனை அதிகரிக்கிறது, மூச்சுத் திணறலை (Dyspnea) குறைக்கிறது.
2.பர்ஸ்டு லிப் ப்ரீதிங் (Pursued Lip Breathing)
*மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுத்து, உதடுகளை சுழித்து (Pursed Lips) மெதுவாக வெளியேற்றுவது (2-4 வினாடிகள்)
*காற்றுப்பாதைகளைத் திறந்து மூச்சு வெளியேற்றத்தை எளிதாக்குகிறது, மேலும் ஆக்ஸிஜன் செறிவை மேம்படுத்துகிறது.
3.ஆக்டிவ் சைக்கிள் ஆஃப் ப்ரீதிங் (Active Cycle of Breathing Technique - ACBT)
*ஆழமாக மூச்சுக்காற்றை உள்ளிழுத்து சிறிது அந்தக்காற்றை கட்டுப்படுத்திய பின் இருமல் (Huffing) மூலம் காற்றை வெளியேற்றுவது.
*நுரையீரலில் உள்ள சளியை (Mucus) அகற்ற உதவுகிறது, காற்றுப்பாதைகளை தூய்மையாக்குகிறது.
இவை தவிர்த்து பிராணயாமா பயிற்சியில் கற்றுத் தரப்படும்
1.நாடி சுத்தி: ஒரு மூக்கு துவாரத்தை மூடி மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுத்து, மாறி மாறி வெளியேற்றுதல்.
2.கபாலபதி: வயிற்றை உள்ளிழுத்து வேகமாக மூச்சு வெளியேற்றுதல், உள்ளிழுத்தல் செயலற்றதாக இருக்கும்.
பிசியோதெரபியில் கற்றுத்தரப்படும் சுவாசப் பயிற்சிகளின் நன்மைகள்
1. நுரையீரல் திறன் மேம்பாடு
வயிற்று தசை மற்றும் விலா எலும்பு தசைகளை வலுப்படுத்தி, நுரையீரல் திறனை அதிகரிக்கிறது.
2. மூச்சுத் திணறல் குறைப்பு காற்றுப்பாதைகளை திறந்து, சுவாசத்தை எளிதாக்குகிறது (எ.கா., COPD, ஆஸ்துமா).
3. சளி அகற்றல்
நுரையீரலில் உள்ள சளியை அகற்றி, தொற்று அபாயத்தைக் குறைக்கிறது.
4. இதய ஆரோக்கியம்
இரத்த அழுத்தம் மற்றும் இதயத்தின் பணிச்சுமையைக் குறைக்கிறது.
5. மன அழுத்த குறைப்பு
பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்தி, மன அமைதியை ஏற்படுத்துகிறது.
6. உடல் செயல்திறன்
உடற்பயிற்சி மற்றும் புனர்வாழ்வு (Rehabilitation) திறனை மேம்படுத்துகிறது.தினமும் 5-10 நிமிடங்கள் அமைதியான, காற்றோட்டமான இடத்தில் பயிற்சி செய்யலாம். ஆஸ்துமா, COPD, அல்லது இதய நோய் உள்ளவர்கள் இயன்முறை மருத்துவரின் ஆலோசனையுடன் பயிற்சி செய்யவும்.நீண்டகால நன்மைகளுக்கு தொடர்ந்து பயிற்சி செய்வது சிறந்தது.உயர் இரத்த அழுத்தம் அல்லது கடுமையான நுரையீரல் நோய் உள்ளவர்கள் முதலில் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின் மூச்சுப் பயிற்சி செய்யவும்.
இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
|