ஃலைப் ஸ்டைல் பாதிப்புகள் காரணமும் தீர்வும்!
இன்றைய காலசூழலில் உணவு முறை, வாழ்க்கை முறை என எல்லாமே நவீன மயமாகிவிட்டது. அதற்கு தகுந்தாற்போல் உடல் உபாதைகளும் மாறிவிட்டது. அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளைவிட தற்போது பல மடங்கு உடல் நல பிரச்னைகள் அதிகரித்து காணப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது.  உதாரணமாக, அம்மாவின் உணவு ஊட்டல் முடிந்து தாங்களாகவே உணவை உண்ண தொடங்கிய பருவத்திலிருந்தே பாதிப்புகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.  எனவே, மக்களுக்கு ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது என்கிறார் பொது நல மருத்துவர் ராஜேஷ் குமார். அவர் மேலும், நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
நான் மேலே சொன்னது போன்று, இன்றைய சூழலில் 5 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை பலவித உடல் நல குறைவுகளை சந்திக்க தொடங்கியுள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க காரணம் நமது இன்றைய உணவு கலாசாரமும், வாழ்க்கை முறை மாற்றங்களும்தான்.
அந்தவகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பெரிய பிரச்னை என்றால் அது உடல்பருமன்தான். அதிலும், குழந்தைகள் பலரும் உடல்பருமன் காரணமாக, மன அழுத்தத்திற்கு ஆளாவதை சமீபமாக நாங்கள் பார்த்து வருகிறோம். உடல்பருமனுக்கு உணவு பழக்கமும், மன அழுத்தத்துக்கு செல்போன் உபயோகமும்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
அடுத்து, 15 - 25 வயதில் உள்ளவர்கள் பலருக்கும், சர்க்கரை நோயிலிருந்து, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட்அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற பல பிரச்னைகள் அதிகரித்துள்ளது. இதைத் தவிர, மன அழுத்தத்துக்கும் ஆளாகிவருகின்றனர். இதற்கும், சோஷியல் மீடியா அடிக்சன், ஃபாஸ்ட் ஃபுட் உணவு பழக்கம் என பல விஷயங்கள் காரணமாகின்றன.
இதில், இளம் வயதினர் அதிகமாக சந்திப்பது சர்க்கரைநோய் பிரச்னைதான். கடந்த ஓராண்டில் 20-25 வயதில் இருக்கும் இளைஞர்கள் 200-க்கும் மேற்பட்டோர் புதிதாக சர்க்கரை நோயாளிகளாக எங்கள் மருத்துவமனையில், என்னிடம் மட்டுமே சிகிச்சைக்காக வந்துள்ளனர். அப்படியென்றால், இன்னும் எத்தனை மருத்துவமனைகளில், எத்தனைப் பேர் பாதித்திருப்பார்கள் என்று நினைக்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.
இதுகுறித்த சமீபத்திய ஆய்வுகளை பார்க்கும்போது, உலகளவில் இளம் வயது சர்க்கரை நோயாளிகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
இதே நிலையில் தொடர்ந்தால், அடுத்த 2030க்குள் இந்தியா முதலிடத்தில் வந்துவிடும் எனவும் கணித்துள்ளனர். அதற்கு அடுத்த நிலையில், 25 முதல் 40 வயதினர் சந்திக்கும் பிரச்னைகள் என்றால், சர்க்கரைநோய், ரத்தக்கொதிப்பு மற்றும் அதிககொழுப்பு, புற்றுநோய் போன்ற பாதிப்புகளாகும்.
இவை எல்லாவற்றுக்கும் காரணம், இப்போதுள்ள வாழ்க்கைமுறை மாற்றங்கள்தான். இன்று பெரும்பாலான இளைஞர்களின் வேலை நேரங்கள் மாறிவிட்டது. இதனால், தூக்கம் நேரம் மாறிவிட்டது.
இரவில் விழித்திருந்து பகலில் தூங்குகின்றனர். சிலர் ஒரு வாரம், இரவு, ஒரு வாரம் பகல் என்று வேலை செய்கின்றனர். இதனால், தூக்கம் சமநிலை அற்று போகிறது. இதன்காரணமாக, ஸ்ட்ரெஸ் லெவல் அதிகரிக்கிறது. இதனால், மன அழுத்தத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
அதுபோன்று, உணவுப் பழக்கம் மாறிவிட்டது. நேரங்கெட்ட நேரத்தில் உணவு உண்பது, இரவு வெகுநேரம் கழித்து உணவு உண்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது போன்றவை உடலில் பலவித உபாதைகளை ஏற்படுத்துகிறது. இன்று அதிகளவில் உடல் பருமன் ஏற்படவும் இதுவே காரணமாகிறது.
குழந்தைப் பருவ உடல்பருமன் தற்போது அதிகரித்து காண்பதற்கும், உணவுப்பழக்கம்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டங்களில் நாட்டில் உணவுப் பஞ்சம் இருந்தது. இதனால், குழந்தைப் பருவத்தினர் பலருக்கும் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் நலிவுற்றனர். பல குழந்தை மரணங்களும் நிகழ்ந்தது. ஆனால், தற்போதைய நிலைமை வேறு, பெரும்பாலான குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து ஏற்பட்டு உடல்பருமன் ஏற்படுகிறது. இது தேவைக்கு அதிகமாக உண்பதினால் ஏற்படுகிறது. அதாவது, முந்தைய காலங்களில் ஒரு பெற்றோருக்கு குறைந்தபட்சம் 6- 10 குழந்தைகள் வரை இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு கிடைக்கும் உணவுகளை பகிர்ந்து கொடுத்தார்கள். ஆனால், இன்று அப்படியில்லை.
இருப்பதே ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான். அதனால், அவர்கள் குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டி ஊட்டி திணிக்கின்றனர். மேலும், தற்போது ஆர்டர் செய்தால் வீட்டுக்கே உணவுகள் வந்துவிடுகிறது. இதனால், வேண்டிய உணவுகளை வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கமும் ஒரு காரணமாகிறது. மேலும், ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதும் ஒரு காரணமாக உள்ளது.
அதுபோன்று, உடல் உழைப்பு என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை குறைந்து போனதும் ஒரு காரணம். தேவைக்கு அதிகமான உணவு, குறைந்த உடல் உழைப்பு இதனால், உடல் பருமன், மன அழுத்தம் போன்றவை அதிகரித்துள்ளது. அதுபோன்று குழந்தைகளுக்கு சுதந்திரமாக, காற்றோட்டமாக விளையாடும் வாய்ப்பும் தற்போது கிடையாது.
இதனால், குழந்தைகளிடம் மூட் சேஞ்சஸ் ஏற்படுவதையும் சமீபகாலமாக பார்த்து வருகிறோம். இதற்கு, சோஷியல் மீடியாக்களில் குழந்தைகள் மூழ்கிவிடுவதும் ஒரு காரணம். பொதுவாக, உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க, மூளை வளர்ச்சி குறைகிறது. இதனால் மன அழுத்தத்துக்கான ஹார்மோன் அதிகமாக சுரந்து, மன அழுத்தம் ஏற்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்பதே பல பெற்றோருக்கும் தெரிவதில்லை. அதை குழந்தைகளுக்கும் உணர தெரியாது. இதனால், படிப்பில் கவனமின்மை, உடல் நல கோளாறுகள் ஏற்படுகிறது. அதனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மனநிலையை கவனித்து சரிசெய்ய வேண்டும். அதற்கு மன நல மருத்துவர்களை அணுகி ஆலோசனையும் பெறலாம்.
சமீபகாலமாக பக்கவாதமும் அதிகரித்து காணப்படுகிறது. அதற்கும் நமது வாழ்க்கைமுறை மாற்றங்கள்தான் காரணம். இளம் வயதில் ஸ்ட்ரெஸ் அதிகரிப்பதும் பக்கவாதம் வர முக்கிய காரணமாக இருக்கிறது.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், மாறுபட்ட தூக்கம், புகை பழக்கம், மது பழக்கம் போன்றவை அதிகரிக்கும்போது மூளைக்கு செல்கிற ரத்தக் குழாய்களில் அடைப்போ அல்லது வேறு ஏதும் பிரச்னையோ ஏற்படும்போது சிலருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்கு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை கட்டுப்படுத்தினாலே பக்கவாதத்தை நிச்சயம் கட்டுப்படுத்தலாம். தீர்வுகள்
குழந்தைகளுக்கு ஏற்படுகிற உபாதைகளைப் பொருத்தவரை, வீட்டில் இருந்துதான் மாற்றம் வர வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்தி தர வேண்டும். கேட்ஜெட் பயன்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். வெளி உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதில் இன்னொரு விஷயமும் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால், எவ்வளவு உணவுகளை சாப்பிட்டாலும், என்ன உணவுகளை சாப்பிட்டாலும் குழந்தைகள் நன்கு ஓடியாடி விளையாடும்போது, அவை அவர்களுக்கு செரிமானம் ஆகிவிடுகிறது. இதனால், உடல் பருமன் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. மன அழுத்தமும் தவிர்க்கப்படுகிறது. அவர்களின் செல்போன் பயன்பாடும் குறைகிறது. இதனால், குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும்.
இதை செய்தாலே, ஓரளவுக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும். குழந்தைகளின் படிப்புக்கு மட்டுமே செலவு செய்வது என்பது பெற்றோரின் பொறுப்பு அல்ல. மற்ற விஷயங்களிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்து டீன் ஏஜ் பருவ வயதினரின் பிரச்னைகள் என்று எடுத்துக் கொண்டால், பெற்றோருக்கு பொறுப்புகள் இன்னும் கூடுதல் ஆகிறது. இந்த வயதில், அவர்களுக்கு உணவு பழக்கம் மற்றும் மற்ற அனைத்து பழக்கவழக்கங்களுக்கும் சரியான புரிதலை ஏற்படுத்தி தர வேண்டும். ஏனென்றால், இந்த பருவத்தில்தான் வெளியுலகை அவர்கள் சந்திக்க தொடங்குகின்றனர். இதனால், பார்க்கும் பல விஷயங்கள் அவர்களை ஈர்க்கத் தொடங்கும். அதனால், நல்லது எது கெட்டது எது என்பதை பெற்றோர் மிக கவனமாக புரிய வைக்க வேண்டும். முக்கியமாக அவர்கள் வெளி உணவுகளுக்கு அடிக்ட் ஆகாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்.
மற்ற வயதினரும் இதுபோன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை தவிர்த்து விட வேண்டும். அதைவிடுத்து, தற்போதுள்ள இதேநிலை தொடர்ந்தால், 2030 -இல் இருந்து 2050-க்குள் உடல்பருமன், சர்க்கரை நோய் மற்றும் மற்ற லைஃப் ஸ்டைல் நோய்களில் இந்தியா முதலிடத்திற்கு வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
இதனால், மக்கள் இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். சோஷியல் மீடியாக்களில் மூழ்கிக் கிடக்காமல், தங்கள் கவனங்களை நல்ல விஷயங்களில் செலவிட வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
இதில் அரசாங்கமும், கவனம் செலுத்த வேண்டும், ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகள் குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும்.
மார்க்கெட்டில் கிடைக்கும் உணவுப்பொருட்களின் மூலப் பொருட்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்வி கூடங்களில் குழந்தைகளுக்கு உடல் உழைப்புக்கான பயிற்சி வகுப்புகளை கூடுதல் படுத்த வேண்டும்.
- ஸ்ரீதேவி குமரேசன்
|