நலம் தரும் கீரை சூப் வகைகள்!
 மணத்தக்காளி சூப் தேவையானவை
மணத்தக்காளி கீரை -ஒரு கட்டு வெங்காயம் -1 தக்காளி - 1 உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு மிளகாய் வற்றல் - 2 மிளகுத் தூள் - சிறிது தண்ணீர் - 2 டம்ளர் எலுமிச்சை - அரை மூடி நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப பெருங்காயத் தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை: மணத்தக்காளி கீரையைச் சுத்தம் செய்து இலையை மட்டும் நறுக்கி வைக்கவும். வாணலியில், நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலையைத் தாளிக்கவும். பின், வெங்காயத்தை வதக்கவும். அடுத்து, தக்காளியை வதக்கவும். அத்துடன் மணத்தக்காளி கீரையைச் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், 2 டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அத்துடன் அரைத்த கீரைக் கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பின்னர், தேவையான உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலந்து இறக்கவும். இறக்கியவுடன் எலுமிச்சைச் சாறு 3 சொட்டு விட்டு கலந்து பரிமாறவும். சுவையான சத்தான மணத்தக்காளி சூப் தயார். பயன்கள்: மணத்தக்காளி கீரை, செரிமான நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இது குடல் இயக்கங்களை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலை போக்குகிறது. இது பசியை மேம்படுத்தவும், வயிற்றுக் கோளாறுகளைப் போக்கவும் உதவும். இது வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும்.
பசலைக்கீரை சூப்
தேவையானவை
பசலைக் கீரை (பொடியாக நறுக்கியது) -1 கிண்ணம் பயத்தம் பருப்பு - 50 கிராம் தண்ணீர் - 500 மி.லி. தக்காளிப் பழம் (பொடியாக நறுக்கியது) -2 மல்லிப் பொடி - 1 தேக்கரண்டி சீரகப் பொடி - அரை தேக்கரண்டி வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி பூண்டு - 2 பற்கள் வெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1 எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை: கீரையை சுத்தம் செய்து, வேக வைத்த பருப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய கீரையைச் சேர்த்து வேகவிடவும்., பின்னர், வாணலியில் வெண்ணெயை உருக்கி, வெங்காயத்தையும் பூண்டையும் அதில் வதக்கவும்.
அத்துடன் சீரகப்பொடி, மல்லிப் பொடி, பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் வேக வைத்துள்ள பருப்பு கீரையை தண்ணீரை சேர்த்து, அதனுடன் தேவையான உப்பு சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் விடவும். பின்னர் இறக்கி வைத்துவிட்டு மிளகுத்தூள், எலுமிச்சைப் பழச்சாற்றைச் சேர்க்கவும். பசலைக் கீரை சூப் தயார். பயன்கள்: பசலைக்கீரை, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து என பல சத்துக்களின் ஒரு நல்ல மூலம், இது செரிமானத்தை மேம்படுத்துவது, எலும்புகளை வலுவடையச் செய்வது, ரத்த சோகைக்கு ஒரு தீர்வாக இருப்பது போன்ற பல நன்மைகளைத் தருகிறது.
பருப்புக் கீரை சூப்
தேவையானவை
பருப்புக் கீரை - கட்டு அல்லது தேவையான அளவு மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 சிறு துண்டு (பொடியாக நறுக்கியது) வெங்காயம் - 1 தக்காளி - 2 கொத்துமல்லி, புதினா - ஒரு கைப்பிடி அளவு உப்பு, எண்ணெய், மஞ்சள் தூள் - தேவையான அளவு.
செய்முறை: கீரையை சுத்தம் செய்து அலசி, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பிறகு அரைத்த கீரை விழுதையும் சேர்த்து, தேவைக்கேற்ப நீர் சேர்த்துக் கொதிக்க வைத்தபிறகு கொத்துமல்லி மற்றும் புதினாவை நறுக்கி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
பயன்கள்: கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் பருப்புக் கீரையைப் பயன்படுத்தினால் எளிதில் கால்சியம் கிடைக்கும். பருப்புக்கீரையில் அபரிமிதமான அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கக்கூடியவை. மலச்சிக்கலைப் போக்குகிறது, குடற்புழுக்களை அகற்றுகிறது.
- ஸ்ரீதேவி குமரேசன்
|