குழந்தைகள் அதிகநேரம் செல்போன் பார்க்கிறார்களா?



Parenting Tips!

இன்றைய அறிவியலின் அதீத வளர்ச்சியின் கண்டுபிடிப்புகளில், செல்போன் பயன்பாடும் ஒன்று. உட்கார்ந்த இடத்திலிருந்தே அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள உதவும் செல்போன் நம்மை ஒருபுறம் சோம்பேறியாக மாற்றினாலும் இன்னொருபுறம் நமக்கே தெரியாமல் செல்போனுக்கு அடிமையாக்கிவிட்டது. 
இந்த நிலை குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. அதிலும், தற்போது, பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், குழந்தைகள் அனைவரும் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு குழந்தைகள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன. எந்த வயது குழந்தைகள் எவ்வளவு நேரம் மொபைல் போன் பார்க்கலாம், செல்போனை தவிர்க்கும் வழிகள் என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி.முன்பெல்லாம் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்போது நிலாவை காட்டுவதும், காக்கா கதை சொல்வதும் வழக்கமாக இருந்தது.

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதற்கும், அவர்களை சமாதானப்படுத்துவதற்கும் ஒரு கருவியாக கைப்பேசி மாறிவிட்டது. அங்கிருந்தே குழந்தைகளின் செல்போன் பயன்பாடு தொடங்கிவிட்டது.

குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பார்க்கலாம் செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. இதனால், அதிகநேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதம், மனநல குறைபாடு, குழப்பம் மற்றும் சிந்தனை தடைபடுதல், ஆட்டிசம், கற்றல் குறைபாடு ஏற்படுகிறது. மேலும், உடல் செயல்பாடு குறைவதால் உடல் பருமன் மற்றும் எலும்பு ஆரோக்கியம் பலவீனமாகிறது.

அதிலும் குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு அதிகளவு ஆபத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் குழந்தைகளின் மூளை பெரியவர்களின் மூளையை விட இரண்டு மடங்கு அதிகளவு கதிர்வீச்சுகளை உறிஞ்சக்கூடிய சக்தி கொண்டது. 

இதனால் குழந்தைகளின் வழக்கமான நடவடிக்கைகள் கூட சில நேரங்களில் பாதிக்கக்கூடும். இது தெரியாமல் பெற்றோர் பலரும் குழந்தைகள் அழுகையை நிறுத்த பயன்படுத்தும் ஆயுதமாகவே செல்போனை உபயோகிக்கின்றனர்.

செல்போனில் தீமைகள் இருந்தாலும் இன்று செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இதை குழந்தைகளிடம் இருந்து எப்படி தவிர்ப்பது என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அவர்களுக்கு விளையாட செல்போன் கொடுக்கலாம்.அதாவது செல்போன் மடிக்கணினி இவை அனைத்தும் ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே உபயோகிக்க கொடுக்கலாம்.

அதேபோல வீட்டில் உள்ள அனைவரும் ஞாயிற்றுக்கிழமைகளில், விடுமுறை தினங்களில் கைப்பேசியை பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு நிர்ணயிக்க வேண்டும். இதற்கு பதிலாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள பூங்கா அல்லது வெளி இடங்களுக்கு அழைத்து செல்லலாம். 

அல்லது உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம். இதனால் சமூகத்தில் எல்லோருடனும் எப்படி பழக வேண்டும் என்ற புரிதல் குழந்தைகளுக்கு ஏற்படும். இதன்மூலம் குழந்தைகள் வாழ்வியலை கற்றுக்கொள்வார்கள்.

வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களுடன் குழந்தைகள் அதிக நேரம் செலவிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால், பெரியோர்களை மதிப்பது, அக்கம்பக்கத்தினருடன் அன்பாக பழகுவது, ஏழை எளியவருக்கு உதவுவது போன்றவற்றை கற்றுக் கொள்ள உதவும். இந்த கோடை விடுமுறை இதற்கான சிறந்த நேரம் என்பதை பெற்றோர் உணர்ந்து தங்கள் குழந்தைகள் வாழ்வில் சிறந்து விளங்க வழிகாட்ட வேண்டும்.

படுக்கையறையில் கைப்பேசி, தொலைக்காட்சி பார்ப்பதை அனுமதிக்கக்கூடாது. கைப்பேசி பார்க்கும் நேரத்தை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். அதற்கு பெற்றோரும் சில விஷயங்களை கையாள வேண்டும். குழந்தைகள் முன்பு அதிக நேரம் டிவி பார்ப்பது, செல்போன் போன்றவற்றில் அதிக நேரம் செலவிழிக்கக்கூடாது.

பெற்றோரும் உடற்பயிற்சி செய்தல், புத்தகங்கள் வாசித்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், கதை எழுதுதல், நீதி நெறிக் கதைகளை சொல்லித் தருதல், நீச்சல், தற்காப்பு கலைகள் போன்றவற்றை பயிலச் செய்ய வேண்டும். மேலும், தடகள போட்டிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும். 

அதுபோன்று, இசைக் கருவிகள் வாசித்தல், வாய்ப்பாட்டு சொல்லித் தருதல் போன்றவற்றில் ஊக்கப்படுத்தினால் அவர்கள் சமூகத்தோடு கலந்து இந்த கலைகளை எல்லாம் கற்கும்போது, கைப்பேசி, தொலைக்காட்சியில் நேரத்தை செலவழிப்பது குறைந்துவிடும்.

செல்போன் பார்க்கும் நேரம் குறைந்தால் அவர்களின் உடல் நலம், மன நலம், வாழ்க்கையில் சவால்களை சந்திக்கும் திறன் ஆகியவை மேம்படும்.2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைளுக்கு செல்போனில் கல்வி சம்பந்தமான பாடல்கள், நிகழ்ச்சிகள் மட்டும் பார்க்க அனுமதி தரலாம். அதேசமயம், 1 மணி நேரம் மட்டுமே அனுமதி தர வேண்டும்.

6-12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மணி நேரம் செல்போன் பார்க்க அனுமதி தரலாம். குழந்தைகள் பலரும் அந்த பருவத்துக்கே உரிய விளையாட்டுகளை எல்லாம் தொலைத்துவிட்டு செல்போனில் மூழ்கி கிடப்பதால், குழந்தைகளுக்கு மூளையின் திறனும் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கைப்பேசியை அதிகமாக பயன்படுத்துவதால், மூளையின் செயல்பாடு குறையும் என்ற விழிப்புணர்வு எல்லோருக்கும் வர வேண்டும்.

கைப்பேசியை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும். எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து செயல்படுவதே அறிவுப் பார்வையை விரிவுபடுத்தும்.

குழந்தைகளின் விளையாட்டுத் திறனை அதிகரிக்க வேண்டும்

விளையாடுதல் என்பது முந்தைய காலகட்டத்தில் வாழ்வியலோடு ஒன்றி இருந்தது. பள்ளிவிட்டு வீட்டிற்கு வந்ததும், பையை வைத்துவிட்டு, தெருவில் எல்லா பிள்ளைகளும் கூடி நொண்டி ஆடுதல், பல்லாங்குழி, கல்லாங்காய் விளையாடுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள். அந்த அழகிய காலங்கள் திரும்பி வராதா.. என்று எண்ண வேண்டி உள்ளது.
உலகம் வீட்டுக்கு வெளியில் இருந்த காலம் அது.

இன்று உலகம் வீட்டுக்கு உள்ளே அதுவும் நம் உள்ளங்கையிலேயே சுருங்கிவிட்டது. இதனால், நம் பார்வையும் எண்ணமும் சுருங்கிவிட்டது. ஓடி ஆடி விளையாடுவதால் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், சமூகத்துடன் கலந்து வாழ்வது, தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம், வெற்றி பெற மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் தன்மை, விதிகளை மதிக்கும் பழக்கம், ஆரோக்கியமான ஆழ்ந்த தூக்கம், அதிகாலை கண் விழிக்கும் பழக்கம் போன்றவை இயல்பாகவே ஏற்படுகிறது.

 எனவே, குழந்தைகளை அதிகளவில் விளையாட்டில் ஈடுபடுத்தினாலே, செல்போன் பார்க்கும் நேரம் குறைந்துவிடும். அதற்கு வழிவகையை ஏற்படுத்தித் தருவதே பெற்றோரின் கடமையாகும்.

- ஸ்ரீதேவி குமரேசன்