கோவைக் கீரையின் மருத்துவ குணங்கள்!
கோவைக் கீரை (coccinia grandis), நாம் அனைவராலும் அறியப்பட்ட ஒரு சாதாரணமான கீரையாகும். ஆனால், அதற்குள் அடங்கியுள்ளது பல்வேறு அசாதாரணமான மருத்துவ நன்மைகள்.
 கோவைக்கீரை இந்தியா முழுவதும் காணப்படும் கொடிவகையைச் சார்ந்த கீரையாகும். பொதுவாக கிராமங்களில் வேலியைச் சுற்றி நன்கு செழிப்பாக வளர்ந்து காணப்படும்.
இது வறண்ட மற்றும் ஈரப்பதமான சூழல்களை தாங்கி வளரும் இயல்புடையதால் அனைத்து காலங்களிலும் கிடைக்கப்பெறும். இதன் இலை, வேர் மற்றும் காய் என அனைத்துமே மருத்துவ தன்மையுடையதாக திகழ்கிறது. இதன் இலை கசப்பு மற்றும் இனிப்பு சுவை கலந்து இருக்கும்.  கோவைக்கீரையில் காணப்படும் சத்துக்கள் மற்றும் மூலக்கூறுகள்
கோவைக் கீரையில் வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் சி காணப்படும். உடலுக்கு வலிமையைத் தரும் தாதுக்களான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்து உள்ளன. மேலும் மருத்துவ பண்புகளுக்கு காரணமான ஃப்ளேவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டெரிபினாய்டுகள், சாப்போனின் உள்ளிட்ட மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன.
கோவைக்கீரையின் மருத்துவ குணங்கள்
சர்க்கரைநோய் கட்டுப்பாடு: கோவைக்கீரை மற்றும் அதன் காய்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் பான்கிரியாஸின் செயல்பாட்டினை தூண்டி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. வைரஸ் கிருமிகளை அழிக்க : வைரஸ் கிருமிகளின் தாக்கத்தை குறைத்து சளி, ஜலதோஷம் போன்ற பிரச்னைகளுக்கு இயற்கை தடுப்பூசி போன்று கோவைக்கீரை செயல்படுகிறது.
கோடை வெப்பத்தை சமாளிக்க: உடல் வெப்பத்தினை குறைத்து உடலுக்கு போதிய குளிர்ச்சியை கொடுப்பதில் கோவைக்கீரை சிறந்து விளங்குகிறது. மேலும், வெப்பம் அதிகரிப்பினால் ஏற்படும் சருமம் சார்ந்த பிரச்னைகளையும் குறைக்கின்றது.
செரிமானம் தொடர்பான பிரச்னைகள் தீர்வாக...
கோவைக்கீரையில் நார்ச்சத்து நிறைந்து உள்ளதால் செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் நல்ல ஒரு தீர்வாக திகழ்கிறது. மேலும், மலச்சிக்கலை தடுக்கிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் மிகுதியாக உள்ளது. உடலுக்கு போதிய வலிமையை கொடுக்கின்றது.
ரத்த சோகையை தடுக்க உதவுகிறது.ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துகிறது. இதனால் மாதவிடாய் சார்ந்த பிரச்னைகள் தடுக்கப்படுகிறது. மேலும் பசியை தூண்ட உதவுகிறது.
வயிற்றுப்புண், கண் சார்ந்த பிரச்னை, சரும பிரச்னை, ரத்தத்தை சுத்தப்படுத்த என பல்வேறு நன்மைகளை அளிப்பதில் கோவைக்கீரை சிறந்து விளங்குகிறது.
கோவை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி எடுத்து படை, சொரி, சிரங்கு இவைகளுக்குப் பூசலாம். இவ்விலை சாறுடன் வெண்ணெய் சேர்த்துச் சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் சாற்றை வியர்வை உண்டு. பண்ணுவதற்கு உடலில் பூசுவது உண்டு, கோவை இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய் கூட்டிக் காய்ச்சி வடித்து படர்தாமரை புண்ணுக்குப் பூசலாம். இலையை காயவைத்து பொடித்தும் புண்கள் மீது தடவ காயம் நீங்கும்.
கோவை இலையைக் கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுக்க உடல்சூடு, சொரிசிரங்கு, நீரடைப்பு, இருமல்
ஆகியவை நீங்கும். கோவைக்காயின் இலையை அரைத்து சாறாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சம அளவு தேங்காய் எண்ணெயை எடுத்து அதனுடன் கலந்து இந்த சாறை நன்கு காய்ச்ச வேண்டும்.
பின்னர், காய்ச்சிய கோவை இலை எண்ணெயை ஆறவிட்டு வடிகட்டி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த எண்ணெயை காலை மாலை என இரண்டு வேளையும் தேய்த்து வர எப்பேர்ப்பட்ட சொரி, சிரங்குகளும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
அல்சர் பிரச்னை உள்ளவர்களுக்கு கோவை இலை நல்ல அருமருந்து. கோவைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதைப் போன்று, கோவை இலைகளை பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண், வாய்ப்புண் ஆகியவை விரைவில் ஆறும்.இத்தகைய பயன்களை தரக்கூடிய கோவைக்கீரையை பொரியல், சாம்பார் என செய்தும், இலைச்சாற்றினை தேனுடன் கலந்தும் உட்கொள்ளலாம்.
மேலும், தோசை மாவில் கலந்து சத்துமிக்க உணவாக குழந்தைகள் முதல் அனைவருக்கும் கொடுக்கலாம். ஆகையால் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் கீரை வகைகளில் கோவைக்கீரையையும் சேர்த்தால் கூடுதல் நன்மையை நாம் பெறலாம்.கோவைக்கீரையின் மருத்துவ சிறப்பினை பதார்த்த குணபாட நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடல்... கோவைக் கீரை காயம் தீர்க்கும் கொழும்பை சுழலில் சுடர்போல் வாழும், வீரம் சேரும் நெல்லிக்கனி போல், வேதன் கூறும் வாழ்நாள் நீடும்.
உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா
|