கொரோனாவுக்கு மருந்து!



நம்பிக்கை

பிரச்னை இருக்கும்போது தீர்வு மட்டும் இல்லாமல் போய்விடுமா? அல்லது அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டு கையறுநிலையில்தான் மனித சமூகம் திகைத்துப் போய்விடுமா?காலில் முள் குத்திய பிறகுதான் செருப்பு தயாரிக்க வேண்டும் என்றே தோன்றியது என்பார்கள். அதுபோல் திடீரென ஒரு வைரஸ் தாக்குதல் நிகழ்ந்திருப்பதால் எல்லோரும் புரியாமல் தடுமாறியது உண்மைதான். ஆனால், கொரோனாவுக்கு எதிரான போரில் நம்பிக்கை தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

உலகமெல்லாம் அமெரிக்காவில் வாஷிங்டனில் நாவல் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருக்கு, ரெம்டீசைவீர்(Remdesivir) என்ற எபோலா வைரஸிற்கான மருந்து கொடுக்கப்பட்டு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மருந்து வைரஸின் பெருக்கத்திற்கு காரணமான புரதங்களை தடுக்கிறது. மேலும், இந்த மருந்து வெளவால் உடலிலும் வைரஸ் பெருக்கத்தைக் குறைக்கிறது. அதேபோன்று தாய்லாந்தில் எய்ட்ஸ் வைரஸிற்கு எதிராக செயல்படும் சில மருந்துகள்(Lopinavir, Ritonavir) கொடுத்து 70 வயது பெண் ஒருவர் உடல்நலம் தேறியுள்ளார்.

ஆகவே, ஏற்கனவே உள்ள பல்வேறு வைரஸ்களுக்கு எதிரான மருந்துகளை பயன்படுத்தி புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் வெற்றிகரமாகவே நடைபெற்று வருகின்றன.சீனா இந்த புதியரக வைரஸின் மூலக்கூறுகளை கண்டறிந்து வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா நோய்த் தொற்று ஏற்பட்டவரின் உடலில் இருந்து இந்த வைரஸை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் இந்த வைரஸ் வகைக்கு தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகளும் விரைவில் முடுக்கி விடப்படும்.

இதேசமயத்தில் மாற்று மருத்துவத்தில் இருக்கும் நிபுணர்களும் கொரோனாவைத் தடுக்கும் மருந்துகள் இயற்கை மருத்துவத்தில் இருப்பதாக தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகிறார்கள். உலகமெல்லாம் கொரோனா பீதி கிளம்பியிருக்கும் இந்த தருணங்களில் நல்ல முயற்சிகளும் நடைபெறாமல் இல்லை என்ற நம்பிக்கையை இந்த செய்திகள் தந்திருக்கின்றன.நல்ல செய்தி காத்திருக்கிறது!

- கௌதம்