வியப்பூட்டும் மலர் மருத்துவம்!



Centre Spread Special

பூக்கள் என்றால் அழகு... பூக்கள் என்றால் வர்ணம்... பூக்கள் என்றால் வாசனை என்று நமக்குத் தெரியும். அதனால்தான் அவற்றை சூடிக் கொள்கிறோம். விசேஷங்களில் பயன்படுத்துகிறோம். இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறோம். இந்த பயன்களை எல்லாம் தாண்டி பூக்கள் அபாரமான மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம்.

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் எட்வர்ட் பாச். அடிப்படையில் ஆங்கில மருத்துவரான எட்வர்ட், மலர்களின் மீதான காதலால் அவற்றை ஆராய்ச்சி செய்து தன் மருத்துவ வாழ்க்கையையே திசை திருப்பிக் கொண்டார். இன்று மலர் மருத்துவம் பற்றி ஓரளவு தெரிந்திருக்க எட்வர்ட் முக்கிய காரணம்.

இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு சீன மலர் மருத்துவம் பலன் தருகிறது என்று சொல்கிறார்கள். நவீன விஞ்ஞானிகளாலும் இதனை மறுக்க முடியவில்லை. இதுகுறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது என்று அதுபற்றி நடுநிலையாக ஒரு கருத்து கூறியிருக்கிறார்கள்.

மாற்று மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அரோமா தெரபி பூக்களின் நறுமண எண்ணெயை வைத்தே செய்யப்படுகிறது. பூக்களை நேரடியாக பயன்படுத்தும் Flower Therapy-யும் தற்போது பரவலாகி வருகிறது. ஹோமியோபதி மருந்துகளுடன் மலர்களும் சேர்த்தே பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தாண்டி கொசுக்களைக் கட்டுப்படுத்தவும் பூக்கள் உதவும் என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். கொசுக்கள் பூக்களிலிருந்து கிடைக்கும் தேனையும் பருகி வாழ்கின்றன. இதை அடிப்படையாக வைத்து, கொசுக்களை தடுக்கும் மருந்துகளை உருவாக்கலாம் என அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

‘இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுவது இயல்புதான். கொசுக்கள் எல்லா மலர்களையுமே நாடுவதில்லை. குறிப்பிட்ட சில வகை நறுமண மலர்களின் தேன் மட்டுமே கொசுக்களின் விருப்பமாக இருப்பதை கண்டுபிடித்திருக்கிறோம். அந்த மலர்களின் நறுமணத்தில் நூற்றுக்கணக்கான வேதிப்பொருட்கள் இருக்கின்றனதான். அவற்றிலும் Nonanal, Lilac aldehyde என்ற இரண்டு வேதிப் பொருட்கள் கொண்ட பூக்களையே அதிகம் கொசுக்கள் தேடுகின்றன.

கொசுக்களை கட்டுப்படுத்த இந்த வழியே போதும். எனவே, இந்த Nonanal, Lilac aldehyde வேதிப் பொருட்களை பயன்படுத்தி கொசுக்களை ஈர்த்து அழிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்’. வைரஸும், கொசுவும்தான் இப்போது நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அவற்றை பூக்களைக் கொண்டே வெல்ல முடியும் என்றால் இது குறித்த ஆராய்ச்சிகளை இன்னும் வேகமாக மருத்துவ உலகம் முன்னெடுக்க வேண்டும்!

- ஜி.ஸ்ரீவித்யா