பார்க்கின்ஸன் ப்ளஸ்...



நரம்புகள் நலமாக இருக்கட்டும்!

பரவலான நரம்பியல் பிரச்னையாக உருவாகி வருகிறது பார்க்கின்ஸன் என்னும் நடுக்குவாதம். பெரும்பாலும் முதியவர்களைத் தாக்கும் இந்நோயை கண்டறிய வழிகள் உள்ளனவா, சிகிச்சைகள் என்னவென்பதைப் பற்றி பார்ப்போம்...

பார்க்கின்ஸன் நோய் என்பது மூளையில் உள்ள சிறிய பகுதியான சப்ஸ்டான்ஷியா நைக்ரா(Substantia nigra) என்னும் இடத்திலிருந்து டோபமைன் என்னும் ஹார்மோன் சுரக்கும் சக்தி குறைவதால் ஏற்படுகிறது. கை நடுக்கம், உடல் உறுப்புக்கள் இறுக்கமடைதல், உடல் இயக்கங்கள் குறைவது, நிற்பதில் நடப்பதில் தடுமாற்றம் போன்றவை பார்க்கின்ஸன் நோயின் முக்கிய அறிகுறிகள் என்பதையும், டோபமைன் என்னும் ஹார்மோன் குறைபாடு ஒருவரின் வாழ்க்கையை முழுவதுமாக புரட்டிப் போட்டு விடும் என்பதையும் அறிந்தோம்.

பார்க்கின்ஸனால் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டிக்கு Levodopa என்னும் மாத்திரையை தினம் இரண்டு வேளை பரிந்துரைத்தேன். மறுநாள் காலை அவர் தானாகவே மாடியேறி என் வீட்டுக்கு வந்தார். உணர்ச்சி பொங்க நன்றியும் சொன்னார். டோபமைன் ஹார்மோன் குறைபாட்டை சரி செய்யும் மருந்தை நான் Levodopa என்னும் மருந்தை டோபோமைனுக்கு மாற்றாக மாத்திரை வடிவில் கொடுத்தவுடன் அவரது உடலில் அத்தனை ஆச்சரிய மாற்றங்கள் ஏற்பட்டன. முதன்முதலாக பார்ப்பவர்களுக்கு இது ஒரு மாயாஜால வித்தை போலத்தான் இருக்கும்.

ஆனால், இது தற்காலிகமானதுதான். மாத்திரையின் செயல்திறன் குறையும்போது பழையபடி நடுக்கம், செயல்வேகம் குறைவது, தடுமாற்றம் ஆகிய அனைத்தும் திரும்பவும் வந்துவிடும். கீ கொடுத்தால் ஓடும் பொம்மையை போலத்தான் பார்க்கின்ஸன் நோய் வைத்தியமும், மாத்திரை போட்டால் நடமாட, செயலாற்ற ஆரம்பிப்பார்கள் மாத்திரை இல்லையெனில் சுருண்டு போய் விடுவார்கள்.

காலை உணவுக்குப்பின் போட்ட Levodopa மாத்திரை மாலை வரை வேலை செய்யும். அதன் பிறகு, மாலை உணவுக்குப்பின் திரும்ப இன்னொரு மாத்திரை போட்டாலன்றி பார்க்கின்ஸன் நோய் கட்டுக்குள் வராது. ஆரம்பத்தில் காலையில் போட்ட மாத்திரை மாலை வரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும், மாலையில் போடும் மாத்திரை இரவு முழுதும் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தி மறுநாள் காலை வரை செயலாற்றும். வருடங்கள் செல்லச் செல்ல மாத்திரையின் பலன் சிறிது சிறிதாக குறைந்து, காலையில் போட்ட மாத்திரை மதியம் வரை மட்டுமே வேலை செய்யும் என்பதால், மதியம் ஒரு மாத்திரை கூடுதலாக போடவேண்டிய நிலைமை வரும்.

காலப் போக்கில் நோயின் வீரியம் அதிகரிக்க, அதிகரிக்க மாத்திரைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் லீவோடோபா மாத்திரையின் வீரியம் இரண்டு மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் மட்டுமே தாக்குப்பிடிக்கும். பார்க்கின்ஸன் நோய்க்கு தற்போது லீவோடோபாவைப் போலவே நிறைய மாத்திரைகள் வந்துவிட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயல் வழிமுறைகள் கொண்டவை. என்னதான் பல மாத்திரைகள் சந்தைக்கு பார்க்கின்ஸன் நோயை கட்டுப்படுத்தி வைக்க முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது. பார்க்கின்சன் நோயும் சர்க்கரை நோயை போன்றதுதான்.

மாத்திரைகளினால் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியுமே தவிர, முழுமையாக குணப்படுத்துவது சாத்தியமற்ற ஒன்று. வயதின் காரணமாக சப்ஸ்டான்ஸியா நைக்ரவில் உள்ள டோபமைன் சுரக்கும் செல்கள் சிறிது சிறிதாக சீர்கெட்டு அழிந்து போவதே இதற்கான காரணம்.
செல்கள் அழிவதை தடுப்பதற்கான மருந்து மாத்திரைகள் இதுவரை இவ்வுலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.

பார்க்கின்ஸன் இரண்டு வகைகள்

பார்க்கின்ஸன் நோயை இரு வகைப்படுத்துவர். 1) முதன்மை பார்க்கின்ஸன் நோய் 2) பார்க்கின்ஸன் ப்ளஸ் நோய்கள். இதில் முதன்மை பார்க்கின்ஸன் நோய் என்பதுதான் நாம் மேற்கூறியது... அதாவது, சப்ஸ்டான்ஸியா நைக்ரா(Substantia nigra) மட்டும் செயலற்றுப் போவது. பார்க்கின்ஸன் ப்ளஸ் நோய்கள் என்றால் Substantia nigra மட்டுமல்லாமல் மூளையின் மற்ற பகுதிகளும் சேர்ந்து செயலற்றுப்போவது. பார்க்கின்ஸன் நோயில் காணப்படும் அறிகுறிகளோடு சேர்ந்து பார்வை மேலும் கீழும் அசைவதில் குறைபாடு, அடிக்கடி கீழே விழுதல், மனக்கோளாறு, பேச்சு மற்றும் விழுங்குவதில் தொந்தரவு, தனது கையோ(Alien hand) அல்லது தனது உடலின் ஒரு பகுதியோ தன்னுடையது இல்லை என்று கூறுவது போன்ற பல்வேறு அறிகுறிகள் இணைந்தால் பார்க்கின்ஸன் ப்ளஸ் என்று கூறுவோம்.

பார்க்கின்ஸன் ப்ளஸ் நோயுள்ளவர்களுக்கு நோயின் தன்மை வீரியமாக இருக்கும். இவ்வகை நோய்கள் மருந்து மாத்திரைகளுக்கு பெரிதாகக் கட்டுப்படாது. பார்க்கின்ஸன் நோயைக் கண்டறிய புதிய பல பரிசோதனை முறைகள் வந்தாலும், மருத்துவர் நேரடியாக நோயாளியைப் பார்த்து ஆராய்ந்தாலே 90 விழுக்காடு முதன்மை பார்க்கின்ஸன் நோயையும், பார்க்கின்ஸன் ப்ளஸ் நோய்களையும் கண்டறிந்து விட முடியும்.

பரிசோதனை முறைகள்

DAT ஸ்கேன் என்னும் புதிய பரிசோதனை முறை, மூளையில் உள்ள சப்ஸ்டான்ஷியா நைக்ராவில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டுபிடித்து இது ‘முதன்மை பார்க்கின்ஸன் நோய்தான்’ என்பதை உறுதி செய்ய உதவுகிறது. பார்க்கின்ஸன் ப்ளஸ் நோய்களை அறிய மற்றும் வகைப்படுத்த பெட்(PET), FDG ஸ்கேன் (Fluorodeoxyglucose) பெரிதும் உதவுகிறது. இந்த புதிய வகையான ஸ்கேன்கள் சென்னையிலேயே உள்ளன. மூளை நுண்ணோக்கி படங்களான சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியன முதன்மை பார்க்கின்ஸன் நோய் உள்ளவர்களுக்கு சாதாரணமாகவே இருக்கும்.

சிகிச்சைகள்

பார்க்கின்ஸன் நோய்க்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். இதுவும் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போல் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நோயாகும். ஒருவேளை மருந்து உட்கொள்வதை மறந்துவிட்டால் கூட கைநடுக்கம், இறுக்கம், தடுமாற்றம் அதிகமாகும். டோபமைனை மூளைக்கு எடுத்துச் செல்வதற்கு பல்வேறு வழிகளில் வேலை செய்யும் மாத்திரைகள் உள்ளன. நோயின் தீவிரத்திற்கு ஏற்ப மாத்திரைகளின் எண்ணிக்கை கூடும் அல்லது குறையும்.

தற்போது வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் ஊசி மூலம் குணப்படுத்தும் Apo pen மற்றும் Apo pump சிகிச்சை முறைகள் இந்தியாவிலும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டன. சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி போடுவதைப் போன்று பார்க்கின்ஸன் நோய் உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரைகளுடன் Apo morphine என்னும் ஊசியை நோயின் தீவிரத்திற்கு ஏற்ப இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ உடம்பில் செலுத்தினால் பார்க்கின்ஸன் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

சில நோயாளிகளுக்கு நோய் தீவிரம் ஆகும்போது கை, கால் மற்றும் உடம்பு பல கோணங்களில் அசைந்து கொண்டிருக்கும். இதற்கு Dyskinesia என்று பெயர். இதுபோல் கை, கால் ஆட்டம் உள்ளவர்களுக்கு Apo morphine ஊசி ஒரு வரப்பிரசாதம். ஊசி செலுத்திய சில வினாடிகளிலேயே ஆட்டம் குறைந்து சாதாரண நிலைக்கு வந்துவிடுவார்கள். இவ்வகை ஊசிகள் இப்பொழுதுதான் இந்தியாவில் பிரபலமடைந்து வருகின்றன.

Deep brain stimulation என்னும் சிகிச்சை முறையானது மூளையின் மண்டையோட்டில் சிறிய துவாரமிட்டு அதன் வழியாக மூளைக்குள்ளே ஒரு சிறிய சிப் (தகடு) வைத்து அதன் மூலமாக மூளையில் இருக்கும் இயக்க சக்திக்கான பகுதிகளை தொடர்ந்து தூண்டுவதால் பார்க்கின்ஸன் நோயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்ற கோட்பாட்டின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இதய நோயாளிகளுக்கு இதய துடிப்பினை சரி செய்ய பொருத்தப்படும் ஹார்ட் பேஸ்மேக்கர் போல Deep Brain Stimulation மூலம் பொருத்தப்படும் சிப்பினை பிரைன் பேஸ்மேக்கர் என்று கூறலாம். இந்தியாவில் மிகச்சில இடங்களிலேயே பார்க்கின்ஸன் நோய்க்கான இவ்வகை சிகிச்சை முறைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த கீரை வகைகள், பழங்கள், வேக வைத்த காய்கறிகள் ஆகியவற்றை தினமும் கொடுக்கலாம். பிசியோதெரபி சிகிச்சை மூலம் தசைகளில் மற்றும் மூட்டுகளில் உள்ள இறுக்கத்தை குறைக்க முடியும். கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை வலுவாக்கி கூன் விழுவதை தடுக்க முடியும்.

பேலன்ஸ் செய்வதற்கான பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து தடுமாற்றத்தை தவிர்க்க முடியும். எழுந்திருக்க வசதியாக உயரம் சற்று குறைவான கட்டில், கைப்பிடியுடன் கூடிய நாற்காலி, படுக்கைக்கு அருகிலேயே கழிப்பறை, கழிப்பறை இருக்கையிலிருந்து எளிதாக எழுந்து கொள்ள அருகில் ஒரு கைப்பிடி, தடுமாறாமல் கையாள்வதற்கு நீண்ட கைப்பிடியுடன் கூடிய பாத்திரங்கள் ஆகிய சிறுசிறு மாற்றங்களினால் பார்க்கின்ஸன் நோயாளிகளின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை தடுமாற்றம் இல்லாமல் செய்வதற்கு உதவ முடியும்.

பார்க்கின்ஸன் நோயாளிகளை மனச்சோர்வு அடையாமல் பார்த்துக் கொள்வதும், இல்லத்தில் நடைபெறும் விசேஷங்கள், முக்கிய பண்டிகை ஆகியவற்றில் அவர்களை தவிர்க்காமல் உற்சாகத்துடன் கலந்து கொள்ள வைப்பதும் அவர்களுக்கு மன தைரியம் கொடுப்பதுமே நாம் அவருக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்!

(நலம் பெறுவோம்!)