குழம்பும் குணம் தரும்!



முன்னோர் அறிவியல்

தாத்தா, பாட்டி காலத்தில் சிறு தும்மல் அல்லது இருமல் என்றாலோ ஆடு, நாட்டு கோழி இறைச்சியுடன் தேவையான அளவுக்கு மிளகு, தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைப்பார்கள்.
இந்தக் கலவையில் உருவான சூப் அல்லது குழம்பின் வெப்பம் சிறிதும் குறைவதற்கு முன்னால், அருந்த காய்ச்சலுக்கு அடித்தளமாகும் தும்மல் மற்றும் இருமல் வந்த சுவடு காணாமல் போகும். அன்று நம் முன்னோர் செய்து வந்த இந்த நடைமுறையை இன்று அறிவியல்பூர்வமாகவும் சில ஆய்வுகளில் நிரூபித்து வருகிறார்கள்.

அவற்றில் ஒன்றுதான் சமீபத்தில் மலேரியாவைக் குணப்படுத்தும் ஆற்றல் சூப்புக்கு இருக்கிறது என்ற கண்டுபிடிப்பும்...

லண்டனில் செயல்பட்டு வரும் இம்பீரியல் கல்லூரி மற்றும் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனை ‘சுவை’ மிகுந்த அறிவியல் அடிப்படையில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. இதற்காக லண்டன் பிரைமரி பள்ளியைச் சேர்ந்த பல்வேறு பாரம்பரியத்தைப் பின்புலமாக கொண்ட குழந்தைகள் தத்தம் வீட்டில் தயாரிக்கப்பட்ட 60 வகையான குழம்புகளைக் கொண்டு வந்திருந்தனர். இக்குழந்தைகள், ஐரோப்பியா உட்பட தென்னாப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் இனப்பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள்.

இந்த சிறுவர், சிறுமியர் மலேரியா காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டு இருந்ததும் கண்டறியப்பட்டது.
மேலே குறிப்பிடப்பட்ட பள்ளியைச் சேர்ந்த மழலையர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கொண்டுவந்த சாறுகளில்(Soup) தக்காளி, காளான், வாழைத்தண்டு என பலவிதமான காய்கறிகள்  சூப், அசைவ சூப்புகளில் கோழி சூப் என வகைவகையான சாறுகள் அடங்கும். இவை பல தலைமுறைகளாக வீட்டு தயாரிப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நீர் ஆகாரங்கள் மலேரியாவால் ஏற்படுகிற 99 சதவீத உயிரிழப்புக்குக் காரணமாக உள்ள பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம்(Plasmamodium Falciparum) என்ற நச்சுப்பொருளின் வாழ்க்கை சுழற்சியைத் தடுக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தவை என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
வீடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் இத்தகைய தீர்வுகள் மலேரியா காய்ச்சலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆர்டெமிசினின் (Artemisinin) என்ற மருந்துப்பொருளின் கண்டுபிடிப்பைத் தூண்டக்கூடியதாக உள்ளன. சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டு மூலிகை மருத்துவத்தில் காய்ச்சலைக் குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் கியூன்காவோ(Qinghao) என்ற தாவரத்தின் மூலமாக இம்மருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்தப் புதுமையான ஆய்வினை மேற்கொண்டவர்கள், மலேரியா காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுண்ணிகள் தத்தம் வளர்ச்சி நிலையை நிறுத்திக்கொள்கின்றனவா என்பதைக் கண்டறிய 56 வகையான குழம்பு வகைகளில் இருந்து பெறப்பட்ட சாற்றினைப் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் மூன்று நாட்கள் வரை இன்குபேட்டரியில் வைத்திருந்தனர்.

அவற்றில் 5 வகை குழம்புகள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ச்சி அடைவதில் தடையை ஏற்படுத்துவதாகவும், இரண்டு வகை குழம்புகள் மலேரியாவைக் கட்டுப்படுத்த உதவும் டிஹைட்ரோடெமிஸினின் என்ற மருந்தினை உருவாக்குவதில் சிறந்து விளங்குவதாகவும் மற்ற 4 வகையான குழம்புகள் மலேரியா காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுண்ணிகளின் முதிர்ச்சியை 50 சதவீதத்துக்கும் அதிகமாக தடை செய்வதாக கண்டறிந்தனர்.

எனவே, கொசுக்கள் மூலமாக நமக்கு மலேரியா பரவுவதை உறுதியாக எதிர்கொள்ள முடியும். மேலும் பாரம்பரிய குழம்பு வகைகள் கியூன்காவோ(Qinghao) என்ற தாவரத்தைப் போன்று மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குகின்றன. ஏனெனில் ஒவ்வொரு குழம்பும்(சூடுடன் கூடியவை) மலேரியா போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் வியக்கத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது!

- விஜயகுமார்