டியர் டாக்டர்




ஒல்லி மோகத்தைப் படம் பிடித்துக் காட்டி உஷார் படுத்தியது கவர் ஸ்டோரி. இனியேனும் மக்கள் அந்த  மாயையில் விழாமல் இருந்தால் சரி... சுறுசுறுப்புக்கு என்ன வழி என்பதை ரஜினி மூலம் எடுத்துக்காட்டியது ‘காலா’ காலத்துக்கும் மறக்க முடியாதது.
- சிம்ம வாஹினி, வியாசர் காலனி.

கோடைகால கண் நோய்கள் பற்றி விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம் எடுத்துக் கூறியிருந்தது விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. மெட்ராஸ் ஐ போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருக்க, தனிநபர் சுகாதாரம் முக்கியமானது என்பது எல்லா நோய்களுக்குமே பொருந்தும் என்பதே என்னுடைய கருத்து.
- கோ. உத்திராடம், வண்டலூர்.

‘சுகப்பிரசவம் இனி ஈஸி’ தொடரைத் தவறாமல் படித்து வருகிறேன். ஒவ்வொரு அத்தியாயத்திலும் இளம்தாய்மார்களுக்கு தேவையான தகவல்கள் பல விளக்கமாக இடம் பெறுகின்றன. அந்த வரிசையில், கடந்த இதழில், கர்ப்பிணிகளுக்கு வருகிற காய்ச்சல், அறிகுறிகள், செய்ய வேண்டிய முதலுதவி, உணவு விஷயத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் போன்றவற்றை டாக்டர் கூறி இருந்தது மிகவும் அருமை. கர்ப்பிணிகளை அதிகம் பாதிக்கும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பற்றியும் வெளியிட்டால் உதவியாக இருக்கும்.
- செண்பகவள்ளி, நாகை மாவட்டம்.

குழந்தைகள், நோயாளிகள் என எத்தனையோ பேரின் உயிரைக் காப்பாற்றும் உன்னத விஷயம் பால். அதிலும் இத்தனை கலப்படம் என்றால் என்னதான் செய்வது? யாரைதான் நொந்துகொள்வது?
மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருளான பாலில் கலப்படம் செய்கிறவர்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களின் நலம் காப்பாற்றப்படும்.
- சி.கோபாலகிருஷ்ணன், கிழக்கு தாம்பரம்.

பீரியட்ஸை சிம்பிளாக்கும் பல்வேறு யோகாசனங்களை செய்முறை விளக்கத்தோடு கூறியது மட்டுமில்லாமல், அவற்றின் பயன்களையும் சொல்லி இருந்தது என்னை போன்ற பெண்களுக்கு வரப்பிரசாதம். நன்றி குங்குமம் டாக்டர்.
- ஷோபனா மற்றும் சாந்தி, சென்னை. 

திடீர் மினி தொடராக இருந்தாலும் பல்வேறு பயனுள்ள தகவல்களை அளித்து வந்தது வீகன் டயட் தொடர்.  திடீரென முடிந்தது ஏமாற்றம் தந்தது. இன்னும் சில மாதங்கள் இத்தொடர் இடம் பெற்றிருக்கலாம்.
- எல்ஜின் ஜோசப், திருநெல்வேலி.