முதியோருக்கு எளிய உடற்பயிற்சிகள்



வழிகாட்டி

உடல் நலப் பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்து மிகப் பரவலாகப் பேசப்பட்டு, அவை குறித்த விழிப்புணர்வும் அதிகமாகி வரும் இன்றைய சூழலில் உடற்பயிற்சிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இளம் வயதினரும் நடுத்தர வயதினரும் அவரவர் வயதுக்கேற்ப பலம், உடலுக்கேற்பவும் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதேபோல முதியவர்களும் உடற்பயிற்சிகள் செய்யலாமா? அவர்களுக்கென்று
தனி உடற்பயிற்சிகள் உள்ளனவா?
- முதியவர் நல இயன்முறை மருத்துவர் டேவிட் விஜயகுமார் பதிலளிக்கிறார்.

‘‘60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெரும்பாலும் முதலில் வரக்கூடிய பிரச்னை Imbalance என்கிற நடையில் தடுமாற்றம். நடக்கும்போது நாம் தடுமாற்றம் இல்லாமல் நடக்க நம் சிறுமூளையின் செரிபெல்லம்தான் உதவுகிறது. வயதாக ஆக சிறுமூளை பகுதி தளர்வடையும்
போதுதான் சிலர் மிகவும் மெதுவாக நடக்கிறார்கள். சிலரால் சரியாக நடக்க முடிவதில்லை. பெரும்பாலானவர்கள் தனித்து நடக்க முடியாமல், எதையாவது பிடித்துக் கொண்டு நடக்கிறார்கள். சிலருக்கு காதுகளிலும் பாதிப்பு ஏற்படலாம். அதை Middle ear infection என்பார்கள். இந்த தொற்று காரணமாகவும் நடக்கும்போது தடுமாற்றம் ஏற்படலாம்.

இது தவிர வயதாகும்போது மூட்டுத் தேய்மானம், கணுக்கால் மூட்டு இறுகுதல், கண் பார்வை பாதிப்பு, குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைதல், உடலில் ரத்த ஓட்டம் குறைதல் போன்ற பிரச்னைகளும் முதியவர்களுக்கு ஏற்படுகிறது.

மேற்கண்ட பிரச்னைகளை எல்லாம் கருத்தில் கொண்டுதான் முதியவர்களுக்கான உடற்பயிற்சிகளை வரையறுக்க முடியும். உடல் தள்ளாடுவதைக் குறைக்க Balance training programme என்ற முறையில் பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு வகை உண்டு. நின்றுகொண்டே செய்யும் பயிற்சிகள், நடந்து கொண்டே செய்யும் பயிற்சிகள்.

நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள். குதிகாலில் நிற்பது, முன்னங்கால் அல்லது விரல்களில் நிற்பது, முன்னங்காலை வைத்து அதன் பின்பகுதியைத் தொடுமாறு நேர்க்கோட்டில் மற்றொரு காலின் விரலை வைத்து நின்றுகொள்ளுதல், நின்ற இடத்திலேயே காலை மாற்றி மாற்றி தூக்குதல், நின்ற இடத்திேலயே தன்னைத்தானே சுற்றிக்கொள்வது போன்ற பயிற்சிகள் இவற்றில் அடங்கும்.

நடந்து கொண்டே செய்யும் பயிற்சிகள் நேராக நடப்பது, பக்கவாட்டில் நடப்பது, பின்புறமாக நடப்பது ஒரு கோடு கிழித்து அதன் மேல் நடப்பது, நடந்துகொண்டே கழுத்தை மேலேயும் கீழேயும் அசைத்தல், கைகளை ஆட்டிக்கொண்டே நடப்பது, முன்னங்காலில் நடப்பது, குதிகாலில் நடப்பது போன்ற பயிற்சிகள் இந்த வகையில் அடங்கும்.

இந்த பயிற்சிகளை டிரெயினர் ஒருவரின் ஆலோசனையின்படி ஒருமுறை கற்றுக் கொண்டுவிட்டு, பிறகு வீட்டிலேயே தொடர்ந்து செய்யலாம். சிறப்புப் பயிற்சிகள் தேவைப்பட்டால் அதற்குரிய இயன்முறை மருத்துவ மையங்களில் சென்று சில சிறப்பு சாதனங்கள் / உபகரணங்களின் உதவியுடன் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம்.

இவை தவிர உடலை உறுதியாக்கும்(Strengthening) பயிற்சிகளும் உள்ளன. 1 கிலோ அல்லது 500 கிராம் எடையுள்ள டம்புள்ஸ் எனும் எடைகளைப் பயன்
படுத்தி இப்பயிற்சிகளைச் செய்யலாம். மேலும், டெர்ராபேண்ட்/ எலாஸ்டிக் பேண்ட்களைப் பயன்படுத்தி தசை நார்களை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் செய்யலாம்.

நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும் பயிற்சிகள் உடலில் உள்ள எலும்புகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளை தசைகளின் நெகிழ்த்துத் தன்மையை அதிகப்படுத்தும் பயிற்சிகளும் அவரவர் தேவைக்கேற்ப வழங்கப்படும். இவை போன்ற உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் முதியோர்கள் உடலை உறுதியுடன் வைத்துக் கொள்ள முடியும்.

மேலும், நடக்க முடியாத முதியவர்கள், ரத்த ஓட்டம் குறைந்த முதியவர்கள், பிற காரணங்களுக்காக மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெற்று முடிந்த பிறகு இயல்பு வாழ்க்கைக்கு மாறும்போது இதுபோன்ற உடற்பயிற்சிகள் மிகுந்த பலன் அளிக்கும். இவற்றை தினமும் காலை ஒரு மணிநேரமும் மாலை ஒரு மணி நேரமும் செய்வது நல்லது.’’

- க.இளஞ்சேரன், படம்:ஆர்.கோபால்