மெடிக்கலில் என்ன லேட்டஸ்ட்?



அறிவோம்

உணவு ஆசையைத் தீர்மானிக்கும் பாக்டீரியாக்கள்

வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள், நாம் உண்ணும் உணவை செரிக்க உதவுகின்றன என்பது தெரிந்தது தான். அதே பாக்டீரியாக்கள், ‘இந்த உணவு வேண்டும்’ என்றும் மூளைக்குத் தகவல் தெரிவித்து சாப்பிடத் தூண்டுகிறது என்ற சுவாரஸ்யமான உண்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஈக்களின் வயிற்றிலுள்ள பாக்டீரியாக்களை வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், குறிப்பிட்ட உணவுகளை உண்ணும்படி பாக்டீரியாக்கள் ஈக்களின் மூளைக்குத் தகவல் அனுப்புவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

மூளையை சிதைக்கும் இணையம்

இணையதளங்களை அதீதமாகப் பயன்படுத்துவதால் மூளையின் திசுக்கள் பாதிக்கப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. நம் பழக்க வழக்கங்களைத் தீர்மானிக்கும் மூளையின் பகுதியில் உள்ள திசுக்களின் வளர்ச்சி, இணைய பயன்பாட்டால் சேதமடைகிறது என்பதை ஜெர்மனியைச் சேர்ந்த ULM பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆண்கள் 46 பேரிடமும், பெண்கள் 39 பேரிடமும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி முடிவுகள் Behavioural brain research இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

கொசுக்களைக் கட்டுப்படுத்த புதிய வழி

டெங்கு, சிக்குன்குன்யா, ஜிகா போன்ற ஆபத்தான நோய்களைப் பரப்பும் ஏடிஸ் எகிப்தி வகை கொசுக்களைத் தடுக்க புதிய வழி ஒன்றை அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கொசுக்கள் பழைய டயர்கள், தேங்காய் மட்டைகள் போன்ற நீர் தேங்கியிருக்கும் இடங்களில் முட்டையிடக் கூடிய குணம் கொண்டவை.

அதன்மூலம்தான் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கிறது. இயற்கையாக நடக்கும் இந்த நிகழ்வின் அடிப்படையில், கொசுக்களை முட்டையிட வரவழைக்கும் வகையில் செயற்கையான பொறி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் இப்போது வடிவமைத்திருக்கிறார்கள்.

சிறிய பிளாஸ்டிக் கோப்பையில் Pyriproxyfen என்ற வேதிப் பொருளை தடவி வைத்தால், அதில் நீர் தேங்கியதும் பெண் கொசுக்கள் வந்து தாமாகவே முட்டையிடும். பைரிப்ரோக்சிபென் மருந்தில் விழுந்ததுமே கொசு முட்டையின் வீரியம் அழிந்துவிடும். இதன்மூலம் கொசுவின் இனப்பெருக்கமும் நின்றுவிடும் என்பதுதான் அந்த ஐடியா.