உங்களுக்கு சகிப்புத்தன்மை இருக்கிறதா?



டயட் டைரி

மேற்கத்திய நோயாக கருதப்பட்ட Gluten intolorence பிரச்னை இப்போது இந்தியர்களையும் விட்டுவைக்கவில்லை. 10 சதவிகிதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் க்ளூட்டன் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

க்ளூட்டன் இன்டாலரன்ஸ் பற்றி பலருக்கும் தெரியாததால், இந்த பிரச்னை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதும் இல்லை. அதெல்லாம் சரி... Intolorence என்ற ஆங்கில வார்த்தைக்கு சகிப்புத்தன்மையின்மை என்பது உங்களுக்குத் தெரியும். க்ளூட்டன் இன்டாலரன்ஸ் என்பது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

கோதுமை, பார்லி, அரிசி போன்ற உணவுகளில் காணப்படும் ஒரு வகை புரதம்தான் க்ளூட்டன்(Gluten). இந்த புரதத்தை நம் உடல் ஏற்றுக் கொள்ளாதபோது, வயிற்றின் விளிம்பில் உள்ள செல்களைத் தாக்கி கடுமையான எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. இதையே க்ளூட்டன் சகிப்புத்தன்மை என்கிறோம்.

க்ளூட்டன் சகிப்புத்தன்மை இருக்கிறதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இது குழந்தைகளுக்கு வேறு மாதிரியாகவும், பெரியவர்களிடம் வேறு மாதிரியும் தென்படும்.வாயு, அடிவயிற்று வீக்கம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படும்.

சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் குழந்தையின் வருங்கால உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புண்டு. தாமதமாகப் பருவமடைதல், குறைவான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதன் காரணமாக பாதிக்கப்பட்ட வளர்ச்சி, மன அழுத்தம் மற்றும் எரிச்சல், ஆரோக்கியமற்ற எடை இழப்பு போன்றவை குழந்தைகளிடம் ஏற்படக் கூடும்.

பெரியவர்களிடம் காணப்படும் அறிகுறிகள்

வீக்கம், தலைவலி, மூட்டு வலி, சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற அறிகுறிகள் தென்படும். கூடுதலாக ஆஸ்துமா, தோல் எரிச்சல் மற்றும் தடிப்புகள் ஏற்படும். முறையற்ற மாதவிடாய் சுழற்சிக்கும் காரணமாகிறது. ஆரோக்கியமற்ற எடை இழப்பும் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்று. சரியான நேரத்தில், இந்த பிரச்னையை உணர்ந்து சிகிச்சை அளிக்கவில்லையென்றால் வயிற்று அசௌகரியம், இதய நோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்ற கடுமையான நிலைகளுக்கு இட்டுச் செல்லலாம்.

க்ளூட்டன் சகிப்புத்தன்மை ஏற்படுவதற்கான காரணிகள்

*இந்தியர்கள் HLADQ 2.2  அல்லது HLADQ 8 என்ற மரபணுவைக் கொண்டவர்கள். இந்த மரபணு கொண்ட 5 சதவிகிதம் பேர் க்ளூட்டன்  சகிப்புத்தன்மை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

*வைரஸ் தொற்று, அதிர்ச்சியான உணர்வு, அறுவை சிகிச்சை போன்றவற்றால் Trigger எனப்படும் ஒரு வகையான தூண்டுதலுக்கு ஆளாகலாம்.

*க்ளூட்டன் உள்ள உணவு பொருட்களை உண்ணுதலும் சகிப்புத்தன்மையைத் தீர்மானிக்கும்.

இந்த மூன்று முக்கிய காரணிகள் இருந்தால் மட்டுமே Celiac disease என்ற பிரச்னை ஏற்படும். இந்த தூண்டுதல் எல்லா வயதிலும் ஏற்படலாம். வயது வரம்பு எதுவும் இல்லை. க்ளூட்டன் சகிப்புத்தன்மை அல்லது கோலியாக் நோய் இருக்கிறதா என்பதை எவ்வாறு கண்டறிவது?

*டி.என்.ஏ சோதனைக்ளூட்டன் சகிப்புத்தன்மையைத் தெரிந்துகொள்ள பரிசோதனை செய்துகொள்வது நல்லது. டி.என்.ஏ. சோதனை மூலம் அறிகுறிகள் இல்லாத நிலையில் கூட ஆபத்து காரணிகளை நீங்கள் அடையாளம் காணலாம். இது அறிகுறிகள், அவற்றின் தூண்டுதல்கள் மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றை புரிந்துகொள்ள உதவும்.

* ரத்தப் பரிசோதனை

tTG-IgA Antibody பரிசோதனையின் மூலம் க்ளூட்டன் சகிப்புத்தன்மை மற்றும் கோலியாக் நோயை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இது மட்டுமில்லாமல் பயாப்ஸி மூலமும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் ரத்த பரிசோதனையின் முடிவு எதுவாக இருப்பினும் பயாப்ஸி மூலம் உறுதி செய்வது மிக அவசியமாகும். முக்கியமாக குடும்ப உறுப்பினர்களுக்கு கோலியாக் நோய் இருந்தால் கண்டிப்பாக பயாப்ஸி அவசியமாகிறது.

அப்போதுதான் க்ளூட்டன் அல்லாத உணவுப்பழக்கத்தின் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.இன்றைய சந்தையில் க்ளூட்டன் இல்லாத பல மாற்று உணவுகள் இருக்கின்றன. உங்களுக்கு க்ளூட்டன் சகிப்புத்தன்மை குறைவாக இருந்தால், கோதுமை அடிப்படையிலான பொருட்களை மீண்டும் ஒருபோதும் அனுபவிக்க முடியாது என்று அர்த்தமில்லை.

காலப்போக்கில் உணவியல் நிபுணரின் ஆலோசனையோடு கொஞ்சம் கொஞ்சமாக உணவில் ஒரு பகுதியாக கோதுமை உணவுகளை மீண்டும் அறிமுகப்படுத்தலாம். ஆனால், கோதுமையை பிரதான உணவாக உண்ணுதல் கூடாது. எனவே, மரபணு பரிசோதனை செய்துகொண்டு உங்கள் சகிப்புத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.க்ளூட்டன் பிரச்னை கொண்டவர்கள் எந்த உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

* பீன்ஸ், விதைகள், இயற்கை, பதப்படுத்தபடாத உணவுப்பொருட்கள், கொட்டைகள்
* முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கோழி
* பழங்கள் மற்றும் காய்கறிகள்
* கார்ன்
* பெரும்பாலான பால் பொருட்கள்
ராகி, கம்பு, குர்முரா, வெள்ளை அவல், ஜவ்வரிசி, சோயா மாவு, சாமை, பொரி, சோள மாவு, தினை மாவு, அமராந்த விதை, அரிசி மாவு போன்ற க்ளூட்டன் இல்லாத உணவுகளையும் க்ளூட்டன் உணவுக்கு மாற்றாக உண்ணலாம்.இவற்றை அறவே தவிர்ப்பது நல்லது

* மைதாவினால் செய்த ரொட்டி வகைகள்
* கேக் வகைகள்
* இனிப்புகள்
* துரித உணவு வகைகள்/தானிய வகைகள்
* பிஸ்கெட்டுகள்
* பீட்சா மற்றும் பாஸ்தா வகைகள்
* ஐஸ்கிரீம் வைத்து தரும் வாபுல்கள் (waffles)
* சாஸ் வகைகள்
* க்ளூட்டன் உணவுகளான பார்லி, கோதுமை, கம்பு போன்றவற்றை அறவே நீக்குவது நல்லது.
* பார்லியினால் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்களை தவிர்க்கவும். ரெய்(Rye), Triticale போன்ற கோதுமையைச் சார்ந்த தானிய வகையை தவிர்க்கவும்.

க்ளூட்டன் இல்லாத உணவுகளை தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்

1.இயற்கையான உணவுகளை தேர்வு செய்யுங்கள்.
2.உணவுப்பொருட்களின் மேல் உள்ள லேபிள்களை சரியாக படிப்பது மிக அவசியம். ஓட்ஸில் க்ளூட்டன் இல்லை. ஆனால் தயாரிக்கப்படும் இடத்தில் கலப்படம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
3.Gluten free என லேபிள்களில் குறிக்கப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுங்கள்.

குறிப்பாக சேமியா, வெள்ளை ரவை உப்புமா, சப்பாத்தி, பரோட்டா, பிஸ்கெட்டுகள், ஸீப் பாக்கெட்டுகள், கோதுமை மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட நூடுல்ஸ், பாஸ்தா, பீட்ஸா வகைகள் இவை அனைத்திலும் க்ளூட்டன் இருக்கிறது.

அதனால் இவற்றைத் தவிர்க்க வேண்டும். எனவே, இனியேனும் க்ளூட்டன் சகிப்புத்தன்மை மற்றும் கோலியாக் பற்றி தெரிந்துகொண்டு அதன்படி நோயின்றி ஆரோக்கியமாக வாழுங்கள்.

(புரட்டுவோம்!)