குளியலே சிகிச்சைதான்!



வாட்டர் ட்ரீட்மென்ட்

சிகிச்சை என்பது மாத்திரைகள், மருந்துகள், தெரபிக்கள் மட்டுமே அல்ல. அன்றாட வாழ்வில் நாம் செய்துகொண்டிருக்கும் சின்னச்சின்ன விஷயங்களிலேயே ஆச்சரியப்படத்தக்க பல மருத்துவ குணங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த ஆச்சரியப்பட்டியலில் ஒன்று குளியல். தினசரி கடமைகளில் ஒன்றாக செய்துவரும் குளியலின் பின்னால் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. விளக்குகிறார் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் பிரபு.

* சருமம், நுரையீரல், மலக்குடல், சிறுநீரகப்பை  என நான்கு முக்கியமான கழிவு நீக்க உறுப்புகள் நம் உடலில் உள்ளன. இவற்றில் சருமத்தில் உள்ள கழிவுகளை நீக்குவதுதான்குளியலின் முக்கிய நோக்கம். v நம் உடலில் முக்கால் பாகம் நீரால் வடிவமைக்கப்பட்டது.

உடலின் அனைத்து செல்களிலும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் ஏதாவது ஒருவடிவில் அமைந்துள்ளது. இவ்வாறு உடலில் அமைந்துள்ள நீர், சீரான வளர்சிதை மாற்றம், உடல் உஷ்ண கட்டுப்பாடு, உடல் இயக்கத்துக்கான ரத்த உற்பத்தி என  பல்வேறு விதமான செயல்களுக்குப் பயன்படுகிறது.

* உடலின் முக்கிய செயல்களின் பின்னணியில் இருக்கக் கூடிய, உடலுக்குள் இருக்கும் நீரானது உடல் சூடு, ரத்தத்தில் கழிவுகள் தேக்கம் போன்ற
வற்றால் நோய்வாய்ப்பட்டு விடுகிறது. பிரச்னைக்குரிய உட்புற நீரை வெளியேற்றி சுத்தம் செய்வதற்கு குளியல் மிகவும் அவசியமாகிறது.

* அதிகாலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் குளிப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியற்று வாழ்கிறார்கள். இதற்கு காரணம் இருக்கிறது. இரவில் நிகழக்கூடிய உடலின் வெப்ப உயர்வை அதிகாலை குளியல் போக்கிவிடுகிறது. ரத்தக்குழாய்களையும் நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிப்பதால் ரத்த ஓட்டம் சீராகி, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவும் அதிகரிக்கிறது.

* அதிகாலை குளியலின்போது சருமங்களின் துவாரங்களின் மூலமாக நல்ல காற்றோட்டம் மற்றும் பிராண பரிமாற்றங்கள் நிகழ்வதாலும் உடல் உள்ளுறுப்புகள் புத்துணர்வு பெறுகிறது. மூளை விழிப்படைந்துஞாபகத்திறனும் மேம்படுகிறது. v பொதுவாக குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது. குளிர்ந்த நீரில் குளிக்கும்போதுதான் ரத்த ஓட்டம் தூண்டப்படும். இதற்கு மாறாக சுடுநீரானது ரத்த ஓட்டத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது. சுடுநீரில் குளித்த பிறகு தூக்கம் வருவது போன்ற உணர்வுக்கு இதுதான் காரணம்.

* பக்கவாதம், முடக்குவாதம்,ஒற்றைத்தலைவலி, நரம்புத் தளர்ச்சி, ரத்தசோகை, தூக்கமின்மை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் 5 நிமிடம் சுடுநீரில் குளித்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அப்போது நோய் பாதிப்பு கட்டுக்குள் வரும். பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் சுடு தண்ணீரில் குளிக்கலாம்.

* குளிரைத் தாங்கும் திறன்7 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும். அதனால், மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வைப்பதே சரியானது. வயது ஏற ஏற தண்ணீரில் வெப்பத்தைக் குறைத்து குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம். இந்த முறையைப் பின்பற்றினால் குழந்தைகளின் நரம்பு மண்டலம் வலுப்படும். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் மாறும்.

* பெண்கள் தினமும் குளிர்ந்த நீரில் குளித்துவந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். மாதவிடாய் காலம் அதிக ரத்தப்போக்கு இல்லாமலும், அதிக வலி இல்லாமலும் இருக்கும். ஆனால், மாதவிடாய் நடக்கும் நேரத்தில் சுடு நீரில் குளிப்பதே சிறந்தது.

* கர்ப்ப காலத்தில் இதமான சுடுநீரில் குளிப்பது பாதுகாப்பானது. அதிக குளிர்ந்த நீரால் கரு கலையும் அபாயம் உண்டு.

* முதியவர்கள் அதிக குளிரான நீரையும், அதிக வெப்பமான நீரையும் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, இதமான வெப்பம் உள்ள தண்ணீரில் குளிப்பதே சரியானது.

* முதலில் சிறிது தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். பின்பு காலில் இருந்து தொடங்கி இடுப்பு, வயிறு, மார்பு என அதன் பின்பே உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் குளிக்க வேண்டும். இவ்வாறு குளிப்பதால் உடல் சூடு தணியும். மேலும் உடல் உள் உறுப்புகள் தூண்டப்பட்டு ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் கூடும்.

* குளிர் நீரில் குளிப்பதால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. அதுவே நீண்டநேரம் குளிர் நீரில் குளிப்பதால் நரம்பு மண்டலம் மரத்துபோய், மூளையின் நரம்பு துடிப்புகள் குறைந்துவிடும். அதனால் 30 நிமிடங்களுக்கு மேல் தண்ணீரிலேயே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

- க.இளஞ்சேரன்