பாலியேட்டிவ் கேர்



வலி நிவாரண சிகிச்சை

வலி மற்றும் ஆதரவு சிகிச்சை நிபுணர் ரிபப்ளிகா


இன்று இந்தியாவில் 80 சதவிகித நோயாளிகள் நோய் முற்றிய நிலையில்தான் சிகிச்சைக்கு வருகிறார்கள். அதற்கு காரணம், ‘வரும்முன் காப்போம்’ என்கிற விழிப்புணர்வு இன்னும் நம் நாட்டில் முழுமையாக வராததுதான்.

சின்னப் பிரச்னையோ, பெரிய பிரச்னையோ எதுவாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரை நாட வேண்டும் என்கிற விழிப்புணர்வு படித்தவர்களுக்கே இருப்பதில்லை. அந்த நோய் அவர்களது இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கிற அளவுக்குத் தீவிரமாகும்போதுதான் மருத்துவர்களின் நினைப்பே அவர்களுக்கு வருகிறது.

அப்படி முற்றிய நிலையில் செல்கிறபோது பல நோய்களுக்கும் தீர்வுகள் இருப்பதில்லை. அவர்களது வாழ்க்கைத் தரமும் மிக மோசமாகியிருக்கும். வாழ்நாளும் குறைந்து கடைசிக்கட்டத்தில் இருப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் பாலியேட்டிவ் கேரின் தேவை
அவசியமாகிறது.

அதாவது, நோயைக் குணப்படுத்த முடியாத நிலையில் கொடுக்கப்படுவதுதான் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை. நோய் முற்றிய நிலையில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் பராமரிப்பு, நோயின் காரணமான கடுமையான வலியிலிருந்து நிவாரணம் மற்றும் ஆதரவு ஆகியவை அடங்கியதுதான் பாலியேட்டிவ் கேர். மற்ற சிகிச்சை முறைகளில் நோய்களைக் குணப்படுத்துவதற்கான வழிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும். ஆனால், பாலியேட்டிவ் கேரின் முக்கிய நோக்கமே Holistic care என்கிற முழுமையான பராமரிப்புதான்.

வெறும் நோய்களை மட்டுமே பார்க்காமல், நோயாளிகளை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கவனித்துக் கொள்வதுதான் ஹோலிஸ்டிக் கேர்.  அவர்களுக்குத் தேவைப்படுகிற உணர்வு ரீதியான, சமூக ரீதியிலான ஆதரவையும் அளிப்பது ஹோலிஸ்டிக் கேர் என்றும் புரிந்துகொள்ளலாம்.

‘வாழ்வதையே சவாலாக்கிய நோய்களால் தாக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரத்தை, அத்துடன் அவர்களது குடும்பத்தாரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கான ஒரு அணுகுமுறையே பாலியேட்டிவ் கேர். நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பதன் மூலம் நோயின் தீவிரத்தைத் தவிர்ப்பது, நோய் உண்டாக்கும் வலி உள்ளிட்ட அவதிகளில் இருந்து விடுபட சிகிச்சை அளிப்பது ஆகியவற்றை உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக, ஆன்மிக ரீதியாகக் கொடுப்பதே இதன் நோக்கம்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் பாலியேட்டிவ் விளக்கம்.

வெளிநாடுகளில் பாலியேட்டிவ் கேர் சிகிச்சைகள் வெகு பிரபலம். நம் நாட்டில் கடந்த சில வருடங்களாகத்தான் இதைப்பற்றிய விழிப்புணர்வு வரத் தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் ஹாஸ்பைஸ்(Hospice) என்கிற பெயரில் ஒரு விடுதி போன்று அமைத்து பாலியேட்டிவ் கேர் அளிக்கிறார்கள்.

அங்கெல்லாம் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை என்பது புற்றுநோய் வார்டுடன் சேர்ந்தே இருக்கும். மருத்துவத் துறையில் பாலியேட்டிவ் கேர் மிகப் பெரிய வரப்பிரசாதம். புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை இன்று மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று முதியோர்களைக் கவனித்துக் கொள்ளவும் ஆட்கள் இல்லை. மரணம் நிச்சயம் என்கிற நிலையில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்கும் முதுமையில் நோய்களும் சேர்ந்து அவதிக்குள்ளாகிறவர்களுக்கும் பாலியேட்டிவ் கேர் பெரிய அளவில் உதவும்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் நர்ஸ் டேம்ஸ் சிஸ்லி சான்டர்ஸ். அவர் ஒரு ஹாஸ்பைசில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களைப் பார்த்து, ‘இவர்கள் இறுதி வரை ஏன் இப்படி அவதியுடனே நாட்களைக் கழிக்க வேண்டும்?’ என யோசித்திருக்கிறார். அத்தகைய நோயாளிகளுக்கு உண்மையில் என்ன தேவை, என்ன மாதிரியான ஆதரவு தேவை, உளவியல் ரீதியாக எப்படிப்பட்ட ஆதரவு தேவை என்றெல்லாம் ஆய்வு செய்து அதைத் தன் நோயாளிகளுக்கு செயல்படுத்தினார்.

இன்னும் சொல்லப் போனால் நவீன மருத்துவத்தில் பாலியேட்டிவ் கேரின் முக்கியத்துவத்தை அழுத்திச் சொன்னதிலும் அதை நடைமுறைக்குக் கொண்டு வந்ததிலும் டேம்ஸ் சிஸ்லி சான்டர்ஸ் பங்கு மகத்தானது. இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை இன்னும் பிரபலம். அங்கு கிராமங்களில்தான் முதன்முதலில் இந்த சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

இன்று மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா, இதையும் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக அறிவித்த பிறகு, இரண்டு பிரபலமான நிறுவனங்களில் இந்த சிகிச்சையைத் தொடங்கியிருக்கிறார்கள்.பாலியேட்டிவ் கேரில் உரையாடல் மிக முக்கியம். பாலியேட்டிவ் கேரில் பயிற்சி கொடுக்கும்போதே இது வலியுறுத்தப்படும்.

நோயாளியுடன் பேசுவதன் மூலம் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றும், உறவினர்களுடன் பேசுவதன் மூலம் அவர்களது மனநிலையையும், அடுத்து என்ன நடக்கும், அனாவசிய சோதனைகள் மற்றும் சிகிச்சைகளைத் தவிர்ப்பதற்கான ஆலோசனைகளையும் அந்த உரையாடல் மூலம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்.

42 வயதுப் பெண்மணி ஒருவருக்கு பாலியேட்டிவ் சிகிச்சை அளிக்கச் சென்றிருந்தேன். அவருக்கு மலம் வெளியேறும் இடத்தில் புற்றுநோய். அடிவயிற்று வலிக்காக சிகிச்சைக்குச் சென்றிருக்கிறார். கடைசியில்தான் புற்றுநோய் எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அது
அவருக்குத் தெரியாது. அவரது கணவருக்கு மட்டுமே தெரியும்.

புற்றுநோய் முற்றி குடல், நுரையீரல் வரைப் பரவியிருந்தது. அதை அந்தப் பெண்ணிடம் சொல்லாமல் வலிக்காக ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்வதாகச் சொல்லி மலம் வெளியேற கொலாஸ்டமி பேக்(Colostomy bag) என ஒன்றைப் பொருத்தியிருக்கிறார்கள். மயக்கம் தெளிந்த பிறகு இது தெரிந்த அந்தப் பெண்ணால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

‘என் உடம்புல எனக்கே தெரியாம ஓட்டை போட்டு இப்படி ஒரு பையை வச்சிருக்காங்க. தினம் தினம் என் கழிவைப் பார்த்தே நான் வேதனைப்பட்டு செத்துக்கிட்டிருக்கேன்’ எனக் கதறினார். அதாவது, அவருக்கு என்ன பிரச்னை, எதற்காக அந்தப் பை வைத்திருக்கிறார்கள், அதை எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்று எதையுமே சொல்லவில்லை அதற்கு முன் சிகிச்சை அளித்தவர்கள்.

பாலியேட்டிவ் கேரில் அவருக்கு முதல் கட்டமாக கவுன்சலிங் அளிக்கப்பட்டது. அவருக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்த விஷயத்துக்குத் தீர்வு சொல்லப்பட்டது. அதாவது, அந்தப் பையை சுத்தப்படுத்தக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அது ஏன் வைக்கப்பட்டது என்றும் விளக்கப்பட்டது. அது இல்லாவிட்டால் என்ன பிரச்னைகள் வரும் என்பதும் சொல்லப்பட்டது.

அவருக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தாருக்கும் அவரை அனுசரித்து, அரவணைத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் சொல்லப்பட்டது. இதுதான் பாலியேட்டிவ் கேர்.ஆனால், இது மட்டுமே அல்ல பாலியேட்டிவ் கேர்...

(தொடர்ந்து பேசுவோம்!)

எழுத்து  வடிவம்: மாரிமுத்து