மனசு.காம்



புதிய உளவியல் தொடர்

தனியாகப் பேசுகிறார்... சிரிக்கிறார்... குளிப்பது, பல்துலக்குவது இல்லை. யாரோ சூனியம் வைத்துவிட்டதாக அக்கம்பக்கத்தினரை சந்தேகிக்கிறார் என்று டஜன் கணக்கான புகார்களுடன் அழைத்து வரப்பட்டிருந்தார் அந்த 28 வயது இளைஞர். ஏன் இத்தனை நாட்களாக சிகிச்சைக்கு வரவில்லை? என்று கேட்டேன்.

‘கோயில், பூசாரின்னு பார்த்தோமுங்க... சரியாகலை. அதுதவிர, உங்ககிட்ட வந்துட்டுப்போனா அக்கம்பக்கத்துல தப்பா பேசுவாங்களோன்னு ஒரு பயம்... நாளைக்கு பையனுக்கு கல்யாணம், காட்சி ஆக வேண்டாமா?’ என்று எதிர் கேள்வி கேட்டனர் அந்த குடும்பத்தினர்.

மனநோய் இருப்பது வெளியே தெரிந்தால் அவமானம். குடும்பத்தின் மரியாதை, கௌரவம் பாதிக்கப்படலாம். இதனால், திருமணம் முதலான சுப காரியங்கள் தடைபடும். வேலை கிடைப்பதும் கடினம். கிடைத்த வேலை நிலைப்பதும் கடினம். இப்படியான சமூக அச்சமே மொத்த மருத்துவத் துறையிலிருந்து மனநல மருத்துவத்தையே தனிமைப்படுத்தியிருக்கிற ஒரு வினோதம்.

ஸ்டிக்மா(Stigma) என்று இதைச் சொல்கிறோம். களங்கம், இழுக்கு, கறை என்று இதற்கு பொருள் கொள்ளலாம். பண்டைய கிரேக்க நாகரிகத்திலிருந்து வந்ததே இந்த ஸ்டிக்மா. தங்களது அடிமைகளை அவர்களின் தாழ்ந்த சமூக அந்தஸ்து வெளியே தெரிய வேண்டும் என்பதற்காகவும் முதலாளித்துவம் மிகுந்த சமூகத்திடம் இருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் அந்த அடிமைகளின் உடலில் காயத் தழும்புகளையோ அல்லது வேறு
அழிக்க முடியாத அடையாளங்களையோ ஏற்படுத்துவார்களாம். இந்தச் சின்னங்களைப் பார்த்து, பொது சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்கி வைத்து கேவலப்படுத்துகிற காரியங்கள் தொடர்ந்து நடக்கும்.

இன்றைக்கும் மனப் பிணியாளர்களைப் பற்றிய நம் சமூக விமர்சனங்கள் பெரும்பாலான சமயங்களில் கேலிக்கூத்தாக சித்தரிக்கப்படுவது துரதிர்ஷ்டமே. மருத்துவத்தின் வேறு எந்தத்  துறையிலும் இல்லாத அளவுக்கு இந்த களங்கமும் இழுக்கும் மனப் பிணியாளர்களை பெரிதும் பாதிக்கிறது. இதனால், நவீன வசதிகள் இருந்தும் சிகிச்சை அளிக்கப்படாத நோயாளிகள் அதிகமாக இருக்கின்றனர். சிகிச்சை பெற முன்வருபவர்களும் குறைவு. இங்கு நான்கில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மனக்கோளாறு இருக்கின்றன என்கிறது ஆய்வுகள்.

ஆனால், இந்த சமூக அச்சம் காரணமாக நோயாளிகள் சிகிச்சைக்கு முன் வரத் தயங்குகிறார்கள். தங்களுக்கு உளவியல் கோளாறு இருப்பதை நண்பர்கள் மற்றும் பணிபுரியும் இடத்தில் சொல்லாமலேயே இருக்கிறார்கள் பத்தில் இருவர். ‘எங்களுக்கு இந்த பிரச்னை இருப்பது வெளியே தெரிந்தால் பதவி உயர்வு கிடைக்காது. சிறு தவறுகளுக்குக் கூட ‘மென்டல்’ என்ற பட்டம் கிடைக்கும். திறமை இருந்தாலும் அதை வெளிப்படுத்த வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைக்காது...’ என்று காரணம் சொல்கிறார்கள் இவர்கள்.

மனப் பதற்றம், மனச்சோர்வு, எண்ணச் சுழற்சி நோய் போன்ற எளிதில் குணப்படுத்தக் கூடிய உளவியல் பிரச்னைகளை தங்களுக்குள் வைத்துக்கொண்டு நிறைய பேர் அவதிப்பட்டு வருகிறார்கள்.

குடும்பத்தில் நிம்மதியின்மை என்பதிலிருந்து தொடங்கி பணியிடத்தில் சரி வர வேலை செய்ய முடியாமல் போய் ஏகப்பட்ட பிரச்னைகளிலும் சிக்கிக் கொள்கின்றனர் பலர். நோய் தீவிரம் அடைந்து தற்கொலை முயற்சி, மது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாதல், கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தல் போன்ற பெரும் பிரச்னைகளை சந்திக்கும்போதுதான் ஒரு நலம் விரும்பியின் தலையீடு அங்கு ஏற்படுகிறது.

அதன் பிறகுதான் மனநல மருத்துவர் இருக்கும் திசை அவர்களுக்கு தெரிகிறது. அப்படியே மருத்துவரை பார்க்க வந்தாலும் ஏதோ தவறான இடத்துக்கு செல்வதைப் போல தயங்கித் தயங்கிதான் நுழைகின்றனர். எனது ஆசிரியரான மூத்த மன நல மருத்துவர் ஒருவர் கூறிய அதிர்ச்சி தகவல் இது.

‘20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நமது கிளினிக்கில் போர்டு வைக்க மாட்டோம்; மன நல மருத்துவமனை என்று போர்டு வைத்தால் நோயாளிகள் வரமாட்டார்கள்’ என்றார். மற்ற பொது மருத்துவர்களிடம் இருந்து நாம் சற்று விலகித்தான் அமர்ந்திருக்க வேண்டிய சூழல் இருந்தது என்று தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. தற்போதைய நிலைமை அவ்வளவு மோசம் இல்லை என்றாலும் மனநல மருத்துவ சிகிச்சைக்கு முழு மனதுடன் வரும் பிணியாளர்களோ அவரது உறவினர்களோ குறைவுதான்.

மனப்பிணியாளர்களை சொந்தக் குடும்பமே வேறு மாதிரி பார்க்க ஆரம்பிக்கும் எத்தனையோ கதைகள் உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு செல்வது தொடங்கி அக்கா, தங்கையை பெண் பார்க்க வரும்போது வீட்டிலிருந்து தற்காலிகமாக மனப் பிணியாளரை அப்புறப்படுத்துவது வரை நோயாளியின் சிரமம் சொல்லி மாளாது.

ஒருவர் எடுத்து கொள்ளும் சிகிச்சை முறைகளை வைத்து கூட இந்த சமூகம் அவர் மீது இருவேறு பார்வைகளை செலுத்துகிறது. வெளிநோயாளியாக சிகிச்சை எடுத்தால் கொஞ்சம் பரவாயில்லை; அவரே மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்றால் நிலைமை படுமோசம். ‘அவனுக்கு பைத்தியம் முத்திப் போச்சு. கரண்ட் ஷாக் எல்லாம் கொடுத்திருக்காங்களாம். எப்போ என்ன செய்வான்னே சொல்ல முடியாது’ என்கிற ரீதியில் பல்வேறு கதைக் களங்கள் அங்கே உருவாகும்.

உண்மையில் நாங்கள் கொடுக்கும் ஷாக் டிரீட்மெண்ட் ஒரு நோயாளியை குணப்படுத்துகிறது என்றால் அந்த நோயாளி வெளியே சென்ற பிறகு அக்கம்பக்கத்தினர் அளிக்கும் வார்த்தை ‘ஷாக்’கினால் மீண்டும் பழைய நிலைமைக்கே அவர் திரும்பிவிட வாய்ப்புகள் அதிகம்.

அப்படியென்றால், இதற்கு விடிவே இல்லையா என்று கேட்டால், நிச்சயம் உண்டு என்று சொல்லும் அளவுக்கு காட்சிகள் நம்பிக்கை அளிக்கும்விதத்தில் மாறிவருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் நிலைமை வேறாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இப்போதே நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது.

பக்கத்து வீட்டில் மனநல சிகிச்சைக்கு சென்று வந்தவர் மட்டுமே மனப் பிணியாளர் அல்ல. தினசரி சிரித்த முகத்துடன் கைகுலுக்கும் சக பணியாளரோ, அமைதியாக ஆட்டோ துடைக்கும் எதிர்வீட்டுக்காரரோ கூட மனப்பிணியில் சிக்கியிருக்கலாம். அவர்கள் சிகிச்சைக்கு வரவில்லை; இவர் வந்துவிட்டார்.

அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால், சிகிச்சைக்கு வந்தவர்களைவிட வராதவர்களிடம்தான் நீங்கள் நினைப்பது மாதிரி சிக்கல்களும் ஆபத்துக்களும் அதிகம்.எனக்கு இவர் குழந்தைகள் மருத்துவர். இவர் கண் மருத்துவர் என்று வெளிப்படையாக சொல்வது போல எனக்கு இவர் மனநல ஆலோசகர் என்று கம்பீரமாக சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.

(Processing... Please wait...)

டாக்டர் மோகன் வெங்கடாஜலபதி