நோயாவது... நொடியாவது... 100 ஆண்டுகளைத் தாண்டும் ஹன்ஸா இன மக்கள்



அதிசயம்

காஷ்மீரைத் தாண்டி காரகோரம் மலைத் தொடர்களின் மடியில் இருப்பதுதான் ஹன்ஸா பள்ளத்தாக்கு. இங்கு வாழும் மக்களின் சராசரி வயது 120 என்பதையும், பெண்கள் 90 வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் சொன்னால் நம்புவீர்களா?

இது எப்படி சாத்தியம்? இந்த விஷயம் வெளி உலகுக்கு எப்படி தெரிய வந்தது? என்று கேள்வி எழுப்பினால் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கைப் பார்த்துவிடலாம்.1984-ம் ஆண்டில் ஹன்ஸா இனத்தைச் சேர்ந்த அப்துல் என்பவர், லண்டன் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தார்.

‘பிறந்த வருடம் 1932 என்பதற்குப் பதிலாக 1832 என்று தவறாக அச்சாகியிருக்கிறது’ என்று அதிகாரிகள் அப்துலிடம் கேட்டார்கள். ‘இல்லை... 1832 என்பது தான் சரி’ என்று அப்துல் சொன்னதும் கோபம் கொண்ட அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரணம், அப்துல் நடுத்தர வயது மனிதராகவே தோன்றினார்.

அப்துலுக்கு வயதை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு வயது 152-தான் என்பது உறுதியானதும் உறைந்துபோனார்கள்அதிகாரிகள். ஹன்ஸா இன மக்கள் பற்றிய ரகசியம் அதன் பிறகே உலகுக்குத் தெரிய வந்தது. பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது இன்னும் பல அதிசயங்கள் வெளி வந்தது.

இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், கோழி, பால், வெண்ணெய், முட்டை போன்றவற்றையே ஹன்ஸா இன மக்கள் சாப்பிடுகிறார்கள்.அதுவும் வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே சாப்பிடுகிறார்கள்.

ரசாயன உரங்கள் பற்றி இவர்களுக்கு என்னவென்றே தெரியாது. சுவாசிக்க தூய்மையான மலைக்காற்று, பகல்முழுவதும் உழைப்பு, ஜீரோ டிகிரி குளிராக இருந்தாலும் குளிர்ந்த ஆற்றுநீரிலேயே குளிப்பது போன்ற நல்லவாழ்க்கைமுறையே அந்த ரகசியம் என்பதை ஆய்வு புரிய வைத்தது.இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் இதெல்லாம் நமக்கும் சாத்தியம்தானே!

- கௌதம்