மரங்களை வளர்க்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்



வழிகாட்டல்

சமீபகாலமாக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சமூகம் சார்ந்த பணிகள் அதிகமாகியுள்ளது வரவேற்கத்தக்கது. பள்ளிக்கு வருவதும்  மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதும் மட்டுமே வேலை என்று நின்றுவிடாமல் அதையும் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகளிலும் பல ஆசிரியர்கள் ஈடுபட்டுவருவது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று. அந்த வகையில் தருமபுரியில் அரசுப் பள்ளி வளாகத்தில் அழிந்து வரும் மர வகைகளை நடவு செய்து வரும் ஆசிரியர், மாணவர்களையும் தத்தமது வீடுகளில் மரம் வளர்க்க ஊக்குவித்துவருகிறார்.  

மரம் வளர்ப்பு என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாலவாடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வரும் சங்கர் என்பவர், பள்ளி வளாகத்தில் மரங்களை நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த இவர், இயற்கை மீது கொண்ட பேரார்வத்தால் இந்தப் பணியில் ஈடுபட்டுவருகிறார். அழிந்து வரும் நாட்டின் மர வகைகளை மீட்டெடுக்கும் நோக்கிலும் இவர் செயல்பட்டுவருகிறார். அந்த வகையில் பள்ளி வளாகத்தில் வாகை, புங்கமரம், அத்திமரம், அகத்திமரம், நாவல்மரம் என 620 மரங்களை நடவு செய்துள்ளார்.

ஒரு பொருளையோ, இடத்தையோ அடைவது எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு அதனை தக்கவைத்துக்கொள்வதும், பராமரிப்பதும் முக்கியமானது. அந்த வகையில் மரங்களை நடவு செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், உணவு இடைவெளிகளின்போது மரங்களில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை அழிக்க மருந்து தெளிக்கும் பணியிலும் சங்கர் ஈடுபடுகிறார்.

இவரது இந்தப் பணிக்கு சக ஆசிரியர்களும், மாணவர்களும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். முதலில் தேசிய பசுமைப் படை என்னும் பெயரில் 50 மாணவர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்தப் பணியில், தற்போது மாணவர்கள் தங்களை பெருமளவில் இணைத்துக்கொண்டுள்ளனர்.

பள்ளி தொடங்குவதற்கு முன்பும், அதற்கு பின்பும் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவது, உலர்ந்த இலைகளை அப்புறப்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக்குவது என மாணவர்கள் செய்யும் பணி மெச்சத்தக்க வகையில் உள்ளது.

இவர்கள் மர வளர்ப்பை பள்ளியில் மட்டும் மேற்கொள்ளாமல், தத்தமது வீடுகளிலும் மரம் வளர்க்க ஆசிரியர் சங்கர் ஊக்குவித்துவருகிறார்.
இவரைப் போன்ற சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பலவிதமாக களப்பணியாற்றும் ஆசிரியர்களின் செயல்களை வரவேற்பதோடு நாமும் தோள் கொடுத்தால் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்து வறட்சியைப் போக்கலாம்.