சர்வதேச கராத்தே போட்டியில் 2 தங்கப்பதக்கம் வென்ற தமிழக மாணவி!



சாதனை

உலக அளவில் 8 நாடுகள் பங்கேற்ற சர்வதேச ஓப்பன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி மலேசியாவில் கடந்த மே மாதம் நடந்தது. 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியா சார்பாக 21 பெண்கள் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பாக பங்கேற்ற 4 பெண்களில் சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கும் முருகானந்தம் என்ற சுமைதூக்கும் கூலித் தொழிலாளி-கீதா தம்பதியினரின் மகள் இலக்கியாவும் (வயது 13) ஒருவராவார். இந்தப் போட்டியில் பல சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார் மாணவி இலக்கியா.

இளம் தங்க மங்கை இலக்கியாவிடம் பேசியபோது, ‘‘பெரம்பலூர் மாவட்டம் ஆலந்தூர் வட்டம் பிலிமிசை கிராமம்தான் எங்களது சொந்த ஊர். பிழைப்புக்காக சென்னை வந்து கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறோம். அங்குள்ள பாத்திமா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறேன்.

அப்பா முருகானந்தம் கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் கூலிவேலை செய்து வருகிறார். அம்மா வீட்டிலிருந்து எங்களை கவனித்து வருகிறார். எனக்கு இரண்டு தம்பிகள். முகிலன் 5ஆம் வகுப்பும், இலக்கியன் 2ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

எங்கள் பள்ளியில் சீனிவாசன் என்ற கராத்தே பயிற்றுநர் மாணவ மாணவிகளுக்கு பயிற்சியளித்து வருகிறார். சிறு வயது முதலே கராத்தே மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டு என்பதால் நானும் அப்பயிற்சியில் சேர்ந்தேன்.

கடந்த 4 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறேன். முதன் முதலாக 5ஆம் வகுப்பு படிக்கும்போது திருச்சியில் நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இரண்டு ஈவென்ட்களில் கலந்துகொண்டு கட்டா மற்றும் குமிட்டு ஆகிய பிரிவுகள் இரண்டிலும் இரண்டாவது பரிசு பெற்றேன்.

முதன்முறையாக பரிசு பெற்றது, எனக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இன்னும் முயற்சி செய்தால் முதல் பரிசு பெறலாம் என கடுமையாக பயிற்சி செய்தேன். சீனிவாசன் சார் என்னை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் கலந்துகொள்ள வைத்தார். அவற்றில் இரண்டாவது, முதலாவது என பல்வேறு பரிசுகளைப் பெற்றதோடு பதக்கங்களையும் பெற்றேன்.

6ஆம் வகுப்பு படிக்கும்போது சென்னையில் நடைபெற்ற தென்மண்டல கராத்தே போட்டியில் கட்டா மற்றும் குமிட்டு இரண்டு பிரிவுகளில் பங்கேற்று இரண்டிலும் 3வது பரிசு பெற்றேன். அடுத்து மாநில அளவிலான போட்டி சேலத்தில் நடந்தது. அதில் மூன்று பிரிவுகளில் கலந்துகொண்டு கட்டா பிரிவில் மூன்றாவது இடம், குமிட்டு பிரிவில் முதலாவது இடம், டீம்குமிட்டு பிரிவில் முதலாவது இடம் பிடித்தேன்’’ என்று வெற்றிப் படிகளை கடந்துவந்ததை மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.   

மேலும் தொடர்ந்த இலக்கியா, ‘‘இந்த வெற்றிகளைப் பார்த்த பயிற்சியாளர் சீனிவாசன் சார் அடுத்து ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளச் செய்தார். குமிட்டு பிரிவில் மூன்றாவது இடம் பிடித்தேன். அடுத்து கேரளாவில் நடந்த சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதில், குமிட்டு பிரிவில் இரண்டாம் இடத்தையும், டீம்கட்டா பிரிவில் முதல் இடத்தையும் பிடித்தேன். இதில் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு வெள்ளிப்பதக்கமும் பெற்றேன். இதனையடுத்துதான் தற்போது மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் கலந்துகொண்டேன்.

தனியார் நன்கொடையாளர்களின் உதவியால்தான் மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது. பல கட்டமாக நடந்த இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியா சார்பில் பங்கேற்ற நான் குமிட்டுப் பிரிவு மற்றும் கட்டா பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்து இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றேன்.

இந்த வெற்றியில் எனக்குப் பயிற்சி அளித்த பயிற்சியாளர் சீனிவாசன் சாருக்கும் என்னை ஊக்கப்படுத்திய எனது அப்பா முருகானந்தத்துக்கும் பெரும் பங்கு உண்டு. ஏனெனில், பயிற்சியாளர் சீனிவாசன் சார் எனக்கு சிறப்பாக பயிற்சியளித்ததால்தான் என்னால் இந்த வெற்றி பெற முடிந்தது.

தொடர்ந்து பயிற்சி செய்துவருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நம் நாட்டுக்காக தங்கம் வெல்வதே எனது லட்சியம். அதற்காக மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் என்னால் இந்த வறுமையிலும் சாதிக்க முடியும்’’ என்றார்.

தங்கப்பதக்கங்களை வென்று தமது சொந்த ஊருக்கு சென்ற இலக்கியாவுக்கு உறவினர்களும் கிராம மக்களும் மேளதாளங்கள் முழங்க சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து அமர்க்களப்படுத்தினர். அப்போது அவருக்கு மாலை அணிவித்து மலர் தூவி, சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கினர்.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்தும் அரசு, இதுபோன்ற புதிய சாதனையாளர்களை உருவாக்க, முன்னதாகவே உதவித்தொகையை வழங்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 - தோ.திருத்துவராஜ்