கல்வித்துறை மானியக் கோரிக்கையில் வெற்று அறிவிப்புகள்!



சர்ச்சை

தமிழக சட்டப் பேரவை கூட்டம் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடந்தன. அதில் ஜூலை 2ம் தேதி கல்வி மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. நடப்பு 2019-2020ம் கல்வி ஆண்டுக்கான கல்வி மானியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது எந்த அளவுக்கு பயன் தருவதாக அமையும் என கேட்டபோது கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் சு.மூர்த்தி கூறிய கருத்துகளைப் பார்ப்போம்.

‘‘பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.செங்கோட்டையன், முதன்மைச் செயலராக த.உதயச்சந்திரன் ஆகியோர் பொறுப்பேற்ற பிறகு கல்வித்துறை
அறிவிப்புகள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுவந்தன. புதிய பாடநூல்கள் உருவாக்கம், 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு, பொதுத் தேர்வு முடிவு வெளியீட்டில் முதல் மூன்று மதிப்பெண் அறிவிப்பு முறை ஒழிப்பு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. திடீரென்று கல்வித்துறை முதன்மைச் செயலராக இருந்த த.உதயச்சந்திரன் மாற்றப்பட்டு பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டார்.

பிரதீப் யாதவ் பொறுப்பேற்ற பிறகு, 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடுதல், பள்ளிகளை இணைத்தல், மேல்நிலை வகுப்புகளில் 15 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மூடுதல், கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% ஏழைக் குழந்தைகளைச் சேர்ப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைதல், தேசியக் கல்விக் கொள்கை வரைவில் கூறப்பட்டுள்ள மும்மொழித்திட்டம் போன்ற கல்வித்துறை நடவடிக்கைகள் தற்போது அதிகமாக விவாதத்துக்குள்ளாகியுள்ளன.’’ என்று சர்ச்சைக்குள்ளான திட்டங்களைப் பட்டியலிடுகிறார் சு.மூர்த்தி.

மேலும் அவர், ‘‘இதுவரை இல்லாத அளவிற்கு கல்வியில் பெரிய மாற்றங்களை செய்யப்போகிறோம், அரசுப் பள்ளிகளை நோக்கி எல்லோரும் வரும் நிலையை உருவாக்குவோம் என்று கல்வி அமைச்சர் எல்லா மேடைகளிலும் பேசி வருகிறார்.

ஆனால், இதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஒரு கல்வி ஆண்டுக்கும் மேலாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 700 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2017-18ஆம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நலத்துறைப் பள்ளிகளுக்கு இன்றுவரை 9, 10 வகுப்பு
களுக்கு புதிதாக ஆசிரியர்களை நியமிக்கவில்லை.

2009 எப்ரல் முதல் நாளில் நடைமுறைக்குவந்த கல்வி உரிமைச்சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த தமிழக அரசு 2011 நவம்பர் மாதத்தில் விதிகளை அறிவித்தது. கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைத் தரங்களை நிறைவேற்றாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படவேண்டும், அங்கீகாரம் பெறாமல் பள்ளிகள் செயல்படக்கூடாது, அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கல்வி உரிமைச் சட்டம் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது. இன்றுவரை அரசு அங்கீகாரம் பெறாமல் தனியார் பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு அரசு நடுநிலைப் பள்ளியிலும் 6,7,8 வகுப்புகளில் மொழிப்பாடம், கணிதம் அல்லது அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதன்படி ஆசிரியர் நியமனம் இன்று வரை நடைபெறவில்லை. கல்வி உரிமைச் சட்டமே ஏட்டுச் சுரைக்காயாக இருக்கும் நிலையில் சட்டமன்றக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்புகள் மட்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ன?’’ என்று கேள்வி எழுப்புகிறார்.

‘‘கடந்த 2018-19ஆம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடர் கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பள்ளிக் கல்வித்துறை சார்பில் 27 அறிவிப்புகளும் உயர்கல்வித்துறை சார்பில் 18 அறிவிப்புகளும் செய்யப்பட்டன. 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3.55 கோடி செலவில் தொழிற்கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஏற்கனவே மேல்நிலை வகுப்பிலிருந்த வேளாண்மை உள்ளிட்ட தொழிற்பாடப் பிரிவுகள் மூடப்படுகின்றன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்பாடப் பிரிவு ஆசிரியர் பணியிடம் காலி ஏற்பட்டால் அப்பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை நடத்தாமல் பாடப்பிரிவை மூடுவது கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவருகிறது.

மாவட்டத்திற்கு ஒரு விளையாட்டு மேம்பாட்டுப் பள்ளி அமைத்தல், அரசுப் பள்ளிகளில் நூலகம் அமைத்தல், அரசுக் கல்லூரிகளில் 2334 உதவிப் பேராசிரியர்பணியிடங்களை நிரப்புதல், அரசுப் பள்ளிகளை உயர்கல்வி நிறுவனங்களுடன்இணைத்தல் போன்ற கடந்தாண்டு அறிவிப்புகளே இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

  இதேபோல் இவ்வாண்டும் சட்டமன்றக் கூட்டத்தொடர் கல்வி மானியக்கோரிக்கை விவாதத்தின்போது பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழியில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரத்து, மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த நலவாழ்வுத் திட்டம், மாணவர்களின் வருகை குறித்த தகவல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புதல், 88 கல்வி மாவட்டங்களிலும் தலா ஒரு பள்ளியை மாதிரிப் பள்ளியாக்குதல், 2381 அங்கன்வாடி மைய ஆசிரியர்களுக்கு பள்ளி முன்பருவக் கல்விப் பயிற்சி அளித்தல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாட்குறிப்பு வழங்குதல் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுபோன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் இவற்றின் மூலம் கல்வியில் பெரிய மாற்றங்கள் நடந்துவிடாது. வெறும் வெற்று அறிவிப்புகளே’’ என்றார்.

  - தோ.திருத்துவராஜ்