மாணவர்களைக் கவர்ந்துசெல்லும் ஆசிரியர்கள்..!



சர்ச்சை

பாலசண்முகம், ஆசிரியர், கல்வி மேம்பாட்டு சங்கம், நாகப்பட்டினம் ஒருங்கிணைப்பாளர்

எங்க ஸ்கூல் பிள்ளையை அவர் கூட்டிட்டு போயிட்டாரு.... சார்! இந்தக் குரல் கடந்த ஒரு மாதமாக வெவ்வேறு தொலைபேசி எண்களிலிருந்து வெவ்வேறு தொனிகளில் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இது குழந்தைக் கடத்தல் பற்றிய செய்தியா? என்று யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம்.  

பிள்ளையை அழைத்துச் சென்றவர் கடத்தல்காரனில்லை, பிள்ளை பிடிப்பவனில்லை.  அருகிலுள்ள  அரசு/ அரசு உதவி பெறும் பள்ளியின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்தான். என்ன கொடுமை இது.இந்தக் கொடுமைக்கு என்ன காரணங்கள்?

1. ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30. இதைவிட மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் உபரி என்று கணக்கிடப்படுவர். அவர்கள் வேறு பள்ளிக்கோ வேறு ஒன்றியத்திற்கோ வேறு மாவட்டத்திற்கோ நிரவல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
2.பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தால் பள்ளியே மூடப்படும் நிலை ஏற்படும். 3.அதிக குழந்தைகளைச் சேர்த்தால் தலைமை ஆசிரியருக்குப் பெருமை கிடைக்கும்.

குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் கூட்டமாகத் தொல்லை கொடுத்தால் அவற்றைக் குறைப்பதற்கு ஒரு உத்தியை கையாளுவார்கள். குறைவான உணவை வைத்துவிட்டு அருகில் சில குண்டாந்தடிகளை வைத்துவிடுவார்கள். நாம் ஒரு குரங்கைக்கூட தாக்க தேவையில்லை.

உணவுக்கான போட்டியில் குரங்குகளே ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டு சாகும். குரூரமான உத்தி அல்லவா? ஏதாவது வேறுபாடு இருக்கிறதா நமக்கும் குரங்குகளுக்கும்? ஆசிரியர்கள் பணியிடங்களை குறைத்துவிட்டு அவர்களை குரங்குகளாக மாற்றி அடித்துக்கொள்ள வைப்பது யாரென்று சிந்திக்க நமக்கு நேரமில்லை. இப்படி ஒரு திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

ஒரு அரசுப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவனை இன்னொரு அரசுப் பள்ளிக்கு இழுப்பதில் எந்தப் பெருமையும் இல்லை. அது சொந்த வீட்டில் சகோதரனின் பாக்கெட்டிலிருந்து பணம் திருடுவதற்கு சமம். தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி படித்துக்கொண்டிருக்கும் மாணவனை நமது அரசுப் பள்ளியின் செயல்பாடுகளால் ஈர்த்து அழைத்து வருவதுதான் பெருமை. அதுதான் உழைத்து பணம் ஈட்டுவதற்கு சமம். நாம் சொந்த வீட்டில் தான் திருடிக்கொண்டிருக்கிறோம்.

மாணவர்களுக்குப் பண்புகளை கற்பிக்கும் நன்கு கற்றுத் தேர்ந்த ஆசிரியர்களாகிய நாம் எவ்வளவு தொழில் அறனோடு நடந்துகொள்கிறோம்?
மாணவர்களை வேறு பள்ளிகளிலிருந்து அழைத்து வருவதற்கு மதத்தைப் பயன்படுத்துகிறோம், சாதியைப் பயன்படுத்துகிறோம், அதிகாரமிக்க அரசியல் பிரமுகர்கள் உதவியை நாடுகிறோம்.

மாணவர்களை ஓர் அரசுப் பள்ளியிலிருந்து இன்னொரு அரசுப் பள்ளிக்கு மாற்றுவதை கீழ்க்கண்டவாறு ஆக்கப்பூர்வமாக இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஒரு பள்ளியில் 75 மாணவர்கள் இருக்கின்றனர். 3 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். மாணவர்கள் எண்ணிக்கை 65 ஆகக் குறைந்தாலும் 3 ஆசிரியர்கள்தான். 88 ஆக அதிகரித்தாலும் 3 ஆசிரியர்கள்தான். ஓரிரு மாணவர்கள் செல்வதால் பாதிப்பில்லை.

அருகில் உள்ள இன்னொரு பள்ளியில் 59 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் இருக்கின்றனர். முதல் பள்ளியிலிருந்து 2 மாணவர்கள் இப்பள்ளிக்கு மாறி வந்தால் கூடுதலாக ஒரு ஆசிரியர் பணியிடம் கிடைக்கும். இந்த ஏற்பாட்டில் ஒரு ஆசிரியர் பணியிடம் கூடுதலாக பெறுவதற்கு ஆசிரியர்களிடையே ஒத்துழைப்பும் ஒற்றுமையும் இல்லை.

19 மாணவர்கள் மட்டுமே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஓரிரு மாணவர்களை சேர்த்தால் ஒரு அரசுப் பள்ளி மூடுவது தடுக்கப்படும். இதை செய்வதற்கு வாய்ப்பு நம்மிடம் உள்ளது. மனசுதான் இல்லை. பெரும் சுயநலவாதிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.  நமக்கே நம் ஆசிரியர் சமுதாயத்தின் மீது இரக்கம் இல்லாமல் அரசைக் குறை கூறிக்கொண்டிருக்கிறோம்.

எப்படி இருப்பினும் நமது பணியிடப் பாதுகாப்பிற்காக மாணவர்களைப் பந்தாடுவது சுயநலம் தானே‌.முன்பெல்லாம் காலையில் ஒரு மாணவன் வகுப்பிற்கு வரவில்லையென்றால் அவனுக்கு உடல்நிலை சரியில்லையா என்று விசாரிப்பது வழக்கம். இப்போது ஒரு மாணவன் பள்ளிக்கு வரவில்லையென்றால் ஒரு ஆசிரியர் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று இந்த மாணவர் இருக்கிறாரா என்று துப்பறிகிறார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவரைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். இவை வேதனை தரும் நிகழ்வுகள்.  

ஒரே ஒரு முதல் வகுப்பு மாணவனின் பெயர் மூன்று வெவ்வேறு பள்ளிகளின் பதிவேடுகளில் இருக்கிறது. காலை எட்டு மணிக்கு அந்த மாணவனின் வீட்டு வாசலில் இரண்டு பள்ளிகளின் ஆசிரியர்கள் பைக்கிலும் மற்றொரு பள்ளியின் ஆசிரியை ஸ்கூட்டியிலும் காத்திருக்கிறார்.

நல்ல வேளை மாணவனுக்குச் சீருடை அணிவித்து தலைசீவிவிடும் அளவுக்கு இறங்கவில்லை.  பெற்றோர் பெரிய மனது பண்ணி திங்கள் செவ்வாய் உங்க ஸ்கூலுக்கு அனுப்புறேன், புதன் வியாழன் அவங்க ஸ்கூலுக்கு அனுப்புறேன் என்கிறார்கள். மூன்று பள்ளிகளுக்கு இடையே EMIS நம்பர் எடுப்பதில் பெரிய கயிறு இழுத்தல் போட்டியே நடக்கிறது.

புத்தகம் வந்தது லேட் . ஆகஸ்ட் 1 வரை இந்த பஞ்சாயத்து நடக்கும். புள்ள பிடிக்கிற போட்டியில எங்க பாடம் நடத்துவது? இப்படியே முதல் பருவம் முடிந்துவிடும்.நன்றாகப் பள்ளியை நடத்துவோம்... வகுப்பில் கற்பிப்போம்... அதன் விளை வாக நம் பள்ளிக்கு வரும் மாணவர்களை மட்டும் சேர்ப்போம். நம் திறமையைப் பாடம் கற்பிப்பதில் காட்டுவோம்.

இந்த மட்டில் மாணவர் சேர்க்கையில் நமது ஆர்வத்தை மட்டுப்படுத்துவோம். ‘எங்க சென்சஸ் ஏரியாவுலேருந்து புள்ளைய கூட்டிட்டு போயிட்டாங்க சார்!’, ‘EMIS நம்பர திருடிட்டாங்க சார்!’, ‘எங்க ஸ்கூல் இருக்கிற தெருவுலயிருந்து குழந்தைய வேன் வச்சு கூட்டிட்டு போயிட்டாங்க சார்!’ என்று இதுபோன்ற புகார்களுடன் காவல் நிலையம் செல்லாத அளவிற்கு பார்த்துக்கொள்வோம்.ஆசிரியர் மாண்பைக் காப்போம். ஆசிரியர்-மாணவர் உறவை மதிப்போம்.