அன்று பில்டிங் சூப்பர்வைசர்… ஸ்டார் ஓட்டல் உரிமையாளர்!



வெற்றிக் கதை

‘‘எட்டிவிடும் தூரத்தில் வெற்றியும் இல்லை, அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை என்பது லட்சியவாதிகளின் பொன்மொழி. ஆம், நம்முடைய முயற்சியில் வெற்றிபெற வேண்டுமானால் முதலில் இலக்கை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். அதன் பின்னர் இலக்கை அடையவேண்டிய பாதையை முடிவு செய்து அதில் பயணத்தைத் தொடர வேண்டும். அப்படி தொடர்ந்து முயன்றால் வெற்றி நம் வசப்படும்’’ என்கிறார் ஓட்டல் உதயம் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர் ஜே.டி. ஆனந்தராஜ்.

திருச்செந்தூரில் மிகப் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கிறது உதயம் இன்டர்நேஷனல் போர்டிங் அண்ட் லாட்ஜிங். நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள அந்த ஓட்டல் அதிபர் ஆனந்தராஜ் தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் என்ற ஊரில் மிகச் சாதாரண விவசாயக் குடும்பத்தில் தேவராஜ் - கனகமணி தம்பதியருக்குப் பிறந்த  மூன்று குழந்தைகளில் கடைசி மகன்.

அவரது அம்மா கனகமணியின் குடும்பத்தினர் கொழும்புவில் வர்த்தகம் செய்து வசதியாக வாழ்ந்தவர்கள். அதன்பிறகு ஒருசில காரணங்களால் சாதாரண நிலைக்கு வந்துவிட்டாலும் மீண்டும் பொருளாதார ரீதியாக ஓர் உயர்வான நிலைக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தன் மகனின் மனதில் பதியவைத்துள்ளார் தாய் கனகமணி.

‘‘மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.எஸ்சி பிசிக்ஸ், அடுத்து அண்ணாமலை யுனிவர்சிட்டியில் எம்.எஸ்சி பிசிக்ஸ் படித்துக்கொண்டிருக்கும்போது எனக்குப் படிப்பில் கவனம் செல்லவில்லை. தமிழகத்தில் பேர் சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள விஜிபி போலவோ, சிவந்தி ஆதித்தனார் போலவோ நாமும் ஒரு தொழிலதிபராகிவிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடத்தொடங்கியதே அதற்கு காரணம்.

அந்த லட்சியக் கனவினால் படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு தொழில்சார்ந்த படிப்பான பிஜிடிஎம் (PGDM - Post Graduation Diploma In Management) படித்து முடித்தேன். பின்பு சென்னைக்கு  வேலை தேடும் சூழலில் மாமா வீட்டில் தங்கினேன். பயோனீயர் குரூப் (பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன்) ஆஃப் கம்பெனியில் ஸ்டோர் கீப்பர் வேலை கிடைத்தது.

ஸ்டோர் கீப்பர், சூப்பர்வைசர், அசிஸ்டன்ட் மேனேஜர், பர்ச்சேஸ் மேனேஜர் அண்ட் ஸ்டோர் மேனேஜர் என அந்த ஏழு ஆண்டுகள் கடின உழைப்பின் மூலம் பதவி உயர்வை அடைந்தேன். ஒரு மாத சம்பளமாக கிடைக்கும் 1,200 ரூபாயில் 300 முதல் 500 ரூபாய் வரை சேமிப்பேன்.
அந்தப் பழக்கம்தான் பின்னாட்களில் எனக்குக் கைகொடுத்தது’’ எனப் பெருமிதப்படுகிறார் ஆனந்தராஜ்.

மேனேஜர் பதவியில் இருக்கும் காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி ஓர் ஆண்டு ஆகிவிட்ட நிலையில், ஏழு ஆண்டுகளாக கன்ஸ்ட்ரக்‌ஷன் துறையில் பணிபுரிந்து தொழிலில் நல்ல அனுபவமும் கிடைத்துவிட்ட தைரியத்தில் இனிமேல் நாமும் ஏதாவது சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் எழ ஆரம்பித்திருக்கிறது.

ஆனந்தராஜுக்கு. அப்போது அங்கு வேலை பார்க்கும் எஞ்சினியர் நண்பரோடு சேர்ந்து ஒரு கட்டடம் கட்ட அங்குள்ள வழக்கறிஞர் உதவி செய்திருக்கிறார். ஒரு கிரவுண்ட் இடத்தில் கட்டடம் கட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனந்தராஜின் நேர்மை, உழைப்பு அவர்களுக்குப் பிடித்துப்ேபானதாலேயே அந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

தனியாகத் தொடங்கிய தொழிலில் சந்தித்த அனுபவங்களை ஆனந்தராஜ் கூறும்போது, ‘‘என்னோடு ஒருவரை பார்ட்னராக சேர்த்துக்கொண்டு கன்ஸ்ட்ரக் ஷன் தொழிலைத் தொடங்கினேன். 1995ஆம் ஆண்டு முதன்முதலாக சென்னை வளசரவாக்கம் பகுதியில் அப்பார்ட்மென்ட் ஒன்றை முதன்முதலாக கட்டும்போதே தொழில் செய்வதில் உள்ள நெளிவுசுளிவுகள் குறித்த அனுபவம் கிடைத்தது.

இந்த நிலையில், இணைந்து தொழில் செய்த பார்ட்னர் ஒத்துழைப்பு தராமல் விலகிக்கொண்டார். ஆனாலும் முயற்சித்த தொழிலை விட்டுவிடக்கூடாது என்ற வைராக்கியத்தில் தனியாகத் தொழிலைச் செய்ய ஆரம்பித்தேன். வளசரவாக்கத்திலேயே மற்றொரு அப்பார்ட்மென்ட் கட்டும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு வெளியிலிருந்து கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்தேன்.

ஏனென்றால், அன்றைய நிலையில் ஒரு பெரிய தொழிலைச் செய்யக்கூடிய அளவில் முதலீடு என்னிடம் இல்லை, தைரியமும் தன்னம்பிக்கையும் மட்டுமே முதலீடாக இருந்தது. சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் கடனுக்கும் வட்டிக்குமாகவே கொடுத்துவந்தேன். ஆனாலும், விடாமுயற்சியால் தொழிலில் கிடைத்த அனுபவத்தால் சென்னை நகரப் பகுதிக்குள் நுழைந்தேன். 2000 முதல் 2004 வரை சென்னை நகரப் பகுதியின் உள்ளே தரமான கட்டடங்கள் கட்டிக்கொடுத்ததால் வாடிக்கையாளர்கள் பெருக, வருமானமும் கையில் நிற்க ஆரம்பித்தது.

அதற்குக் காலமும் நேரமும் ஒத்துழைத்தது என்றே சொல்ல வேண்டும்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் ஆனந்தராஜ்.
‘‘தனிப்பட்ட முறையில் எனக்கென சொந்தமாக எந்தவொரு அசெட்டும் இல்லாமல் இருந்ததால், முதலில் அதை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என நினைத்து, சொந்த வீடு, அலுவலகம், பள்ளிக்கூடம் கட்டுவதற்கான இடம், திருச்செந்தூரில் ஓட்டல் கட்டுவதற்கான இடம், விவசாய நிலங்கள் என திட்டமிட்டு ஒன்றன்பின் ஒன்றாக வாங்க ஆரம்பித்தேன். ஏனென்றால், வளர்ந்துவிட்ட நிலையிலிருந்து கீழே வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அஸ்திவாரத்தைப் பலமாக்கினேன்.

தொழிலில் எப்படி அகலக்கால் வைக்காமல் முயற்சித்தேனோ அதேபோலத்தான் வாகனம் வாங்குவதில்கூட முதலில் டிவிஎஸ் 50, பைக், மாருதி கார், ஃபோர்டு கார், குவாலிஸ், இன்னோவா இப்படி எல்லாமே படிப்படியாகத்தான் வாங்கினேன். வீடும் அதுபோலவே, முதலில் 3 சென்ட் இடத்தில் வாங்கினேன். அடுத்து 2004-ல் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ரேகாவின் பங்களா வீட்டை வாங்கினேன்.

மேலும் ஒரு தொழில் ய்துகொண்டிருக்கும்போது தனிப்பட்ட முறையில் சொத்துகள் இல்லையென்றால் தொழிலில் பணப்பிரச்னை வந்தால் தாங்கிக்கொள்ள முடியாது, அதனை ஈடுகட்ட  வேண்டுமானால் சொத்துகள் வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு வாங்கினேன். தொழிலில் முதல் 5 ஆண்டுகள் சம்பாத்தியம் எல்லாமே கடனுக்கும் வட்டிக்கும் கொடுத்த அனுபவப் பாடமே அதற்குக் காரணம்’’ என்று சொல்லும் ஆனந்தராஜ் சம்பாதிக்கும் பணத்தை தொழில் வளர்ச்சிக்கு இடையே பிறந்த ஊரின் அடிப்படைத் தேவைகளுக்கு, நண்பர்களுக்கு, ஏழைகளுக்கு குறிப்பாக ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு கட்டணம் செலுத்துவது என உதவிகள் செய்துவருகிறார். தன்னம்பிகையோடு கடின  உழைப்பு, விடாமுயற்சி என ஒரு நிலையான தொழிலபராகிவிட்டார்.

‘‘சென்னையில் கட்டடம் கட்டும் தொழிலைக் குறைத்துக்கொண்டு திருச்செந்தூரில் முதலில் சாதாரணமாக ஒரு ஓட்டல் கட்டவேண்டும் என்று நினைத்தது, இடம் அமைந்ததைப் பார்த்தபோது ஒரு பிரமாண்ட கட்டடம் கட்டத் தோன்றியது. சிவந்தி ஆதித்தனார் போல தொழிலதிபராக வரவேண்டும் என நினைத்து கட்டிய ஓட்டலை அதே சிவந்தி ஆதித்தனாரைக்கொண்டு திறக்கச் செய்ததுதான் சிறப்பு. இன்றைக்கு திருச்செந்தூரில் ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒரே பெரிய ஓட்டல் என்ற பெயரைப் பெற்று உயர்ந்து நிற்கிறது.

ஓட்டல் கட்டி முடித்துவிட்டு சென்னையில் மீண்டும் பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் தொழில் செய்யலாம் என்று வரும்போது அத்தொழில் நலிவடைந்த நிலைக்குப் போய்விட்டது. திட்டமிட்டு முதலீடு செய்த ஓட்டல் தொழில்தான் திரும்பவும் கீழே இறங்கிவிடாதபடிக்கு கைகொடுத்தது. ஆகமொத்தத்தில் வெறும் உழைப்பு மட்டும் போதாது. திட்டமிட்டு உழைத்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்’’ என்கிறார் ஆனந்தராஜ்.

முயன்றால் முடியாதது வாழ்க்கையில் எதுவும் இல்லை. சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம். காரணம், எப்போதும் நூறு சதவிகிதம் யாராலும் தயாராக இருக்க இயலாது. காத்திருக்க தொடங்கினால், எப்போதும் காத்திருக்க வேண்டியதுதான். நமக்கு தெரிந்ததை வைத்து லட்சியத்தை அடைய திட்டமிடுங்கள், உழையுங்கள், அனைத்தும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நம்மை வந்து அடையும்.

  -    தோ.திருத்துவராஜ்