சாதிக்க தூண்டும் வார்த்தைகள்!
வாசகர் கடிதம்
 பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வுகள் இருக்கும் நிலையில் இனி பதினொன்றாம் வகுப்பிற்குப் பொதுத்தேர்வு என்று சொன்னார்கள். ஆனால், தற்போது ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு உண்டு என அறிவித்திருப்பது மாணவர்களின் மீது செலுத்தப்படும் நேரடியான வன்முறை என்பதை தெளிவாக பதிவு செய்கிறது 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேவையா? எனும் கட்டுரை. இப்பிரச்னையின் தீவிரத்தை கல்வியாளர்கள் கோணத்தில் விளக்கியிருப்பது அருமை. -சி.வடிவேலன், திருமங்கலம்.
பார்வையற்றோரின் வாழ்வுக்கு வழிகாட்டும் விதமாக உயர்கல்வி, ஐ.ஏ.எஸ். தேர்வு போன்றவற்றில் வெற்றிபெற வழிவகை செய்யும் தர்ஷினி அமைப்பின் தன்னலமற்ற செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட பெண்களால் மட்டுமே நடத்தப்படும் அமைப்பு என்பது கூடுதல் சிறப்பு. -ஆர். சரவண குமார், புதுக்கோட்டை.
கல்வி-வேலை வழிகாட்டி இதழில் பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் எழுதும் ‘புதிதாய் ப்பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!’ தொடரில் இடம்பெறும் தன்னம்பிக்கை தரும் தகவல்கள் அற்புதம். ‘வாய்ப்புகளைக் கைப்பற்றிக் கொள்பவர்களே வாழ்க்கையில் சாதிக்கிறார்கள்’ என்பது போன்ற சாதிக்கத் தூண்டும் வார்த்தைகள் உத்வேகம் அளிக்கின்றன. -வி. ஜோதி, தஞ்சாவூர்.
பள்ளிப் படிப்பைப் பல போராட்டங்களோடு முடித்து உயர்கல்வி பயில வரும் இளைஞர்களுக்கு வளமான எதிர்காலம் கொண்ட படிப்புகளைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டும் நோக்கில் ‘வேலை வாய்ப்பு பெற என்ன படிக்கலாம்?’ என்ற கட்டுரை சூழ்நிலைக்கேற்ற பதிவு. +2 பொதுத் தேர்வை எழுதி முடிக்கும் மாணவர்களுக்குக் கட்டாயம் பயனளிக்கும். -எஸ். மணிகண்டன், சிவகாசி.
|