சைலன்ட் ஹார்ட் அட்டாக்குக்கு தீர்வு கண்ட சாதனை மாணவன்!சாதனை

எப்போதுமே பிரச்னைகள்தான் ஒரு முழுமையான தீர்வை நோக்கி மனிதகுலத்தை நகர்த்துகிறது. போக்குவரத்து பிரச்னையைத் தீர்க்க சக்கரத்தைக் கண்டுபிடித்த ஆதிமனிதனின் அறிவியல் பிறந்த இடமும் அதுதான். இப்படித்தான் பிரச்னைகள் மனிதனுக்கு அறிவியலைக் கற்றுக்கொடுக்கின்றன.
இந்தக் கூற்றை நிரூபித்திருக்கிறார் ஒரு மாணவர்.

தன் தாத்தா ஹார்ட் அட்டாக்கில் இறக்க, அதைக் கண்டு மனம் துவண்ட பேரன் இனி ஒருவரும் இவ்வுலகில் ஹார்ட் அட்டாக்கினால் இறக்கக்கூடாது என சபதம் ஏற்றார். இதற்காக மூன்று வருடங்கள் திடமான நம்பிக்கையுடன் சலிக்காமல் உழைத்து உருவாக்கிய கருவிக்குக் கடந்த வருட குழந்தைகளுக்கான தேசிய விருதுடன் கூடிய கோல்டு மெடலும் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் ஒரு விருதும் கிடைத்துள்ளது. மேலும் அவரின் இக்கண்டுபிடிப்பு இவ்வாண்டு கொடுக்கப்படவுள்ள பால் விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு கண்டுபிடிப்பிற்கு மட்டும்  இன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருதுகள் என இந்திய அளவில் பல முக்கிய விருதுகள் கொடுக்கப்பட காரணம், இன்றைய நாளில் இந்தியா மட்டுமில்லாது உலகமே எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னையே சைலன்ட் ஹார்ட் அட்டாக் தான்.

மாரடைப்பினால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எனப் பல உயிரிழப்புகள் ஒவ்வொரு நாளும் உலக அளவில் நிகழ்ந்தபடி உள்ளது. இதுபோன்ற உயிரழப்புகளுக்கு என்னுடைய கருவி ஒரு தீர்வாக இருக்கும் என தளராத தன்னம்பிக்கையோடு தொடர்ந்தார்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அசோக் லேலேண்ட் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துவரும் ஆகாஷ் மனோஜ்.

‘‘நீரிழிவும், உயர் ரத்த அழுத்தமும் இருந்தாலும் தாத்தா அன்னைக்கு வரைக்கும் நல்ல ஹெல்த்தியாதான் இருந்தார். எப்பவுமே நல்ல எனர்ஜியோட செயல்படுவார். நான் எட்டாம் வகுப்பு படிச்சிகிட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு சைலன்ட் ஹார்ட் அட்டாக்கினால் இறந்துபோயிட்டார். அதுவரைக்கும் நல்லா ஸ்டெரெங்த்தா இருந்தவரோட திடீர் மரணம் என்னை ரொம்பவே பாதிச்சுது. அந்த பாதிப்புதான் என்னோட அறிவியல் தேடலுக்கு உந்துசக்தியாக இருந்தது.

தாத்தாவோட மரணம் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை எனக்குள்ள ஏற்படுத்துச்சு. இனிமே இந்த உலகத்துல மாரடைப்பால்  ஒரு  உயிர்கூட போகக்கூடாதுன்னு நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது முடிவெடுத்தேன். இணையத்தை தேடும்போது ஹார்ட் அட்டாக் சம்பந்தமான பல புள்ளி விவரங்கள் கிடைச்சுது. சைலன்ட் ஹார்ட் அட்டாக்கினால் பாதிக்கப்பட்ட 85% உலக மக்களுக்கு தான் பாதிக்கப்பட்டிருப்பதே தெரியாது என்று சொன்ன ஒரு புள்ளி விவரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதற்கான தீர்வை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும் என தோன்றியது” என்று வியப்புடன் தெரிவித்தார் ஆகாஷ்.

‘‘மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்பு என்பதால் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நூலகத்திற்குச் சென்று மருத்துவம் குறித்த ஆராய்ச்சிகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் படித்தேன்”என்ற ஆகாஷ் 2013ம் ஆண்டு தன் புராஜெக்ட்டை நாசா ஸ்பேஸ் செட்டில்மென்ட் காண்டஸ்ட்டில் சமர்ப்பித்திருக்கிறார். அப்போட்டியில் தேர்வாகி இரண்டு வாரம் நாசா நடத்திய அறிவியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

தொடர்ந்து மூன்று வருடங்கள் பள்ளி போக கிடைத்த நேரங்களிலெல்லாம் கருவி உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். கருவி செயல்படும் விதம் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஆகாஷ். ‘‘பொதுவாக சைலன்ட் ஹார்ட் அட்டாக்கானது  அவ்வப்போது மூச்சுத்திணறல் மற்றும் மார்பில் வலி என சைலன்டாக எந்தவித முன் அறிகுறியும் காட்டாமல் நோயாளியைத் தாக்கும்.

தொடர்ந்து பிரச்னை கொடுக்காமல் அவ்வப்போது இதுபோன்ற வலியை ஏற்படுத்துவதால் நோயாளிகளும் இதைப் பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால்  திடீரென மார்பில் வலி அதிகமானால் உயிரழப்பு நிச்சயம். இப்படி  சைலன்ட்டாக தாக்குவதால்தான் இது சைலன்ட் ஹார்ட் அட்டாக்.

மனிதனின் ரத்தத்தில் உள்ள புரதமான FABP3ன் அளவைக் கண்டறியும் சென்ஸாரானது கருவியில் பொருத்தப்பட்டுள்ளது. பிளட் டெஸ்ட் இல்லாமல் ஹார்ட் அட்டாக் வருவதைக் கண்டுபிடிக்கும் வகையில் இக்கருவியானது  உருவாக்கப்பட்டுள்ளது. கருவியை மணிக்கட்டில் அல்லது காதின் பின்புறம் இணைத்தால் அவை சிறிய அளவிலான பாஸிட்டிவ் மின்காந்த அலைகளை உடலுக்குள் அனுப்பி ரத்தத்தில் உள்ள புரதமான FABP3ன் நெகட்டிவ் அலைகளை ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்படும் புரதத்தின் அளவு வழக்கத்தை விட அதிகமாகும் போது சென்ஸாரானது நோயாளிக்குத் தகவல்  கொடுக்கும்.

இப்படி சென்ஸாரால் தகவல் கொடுக்கப்பட்டால் அவர் கண்டிப்பாக மருத்துவரை அணுகவேண்டும். இப்படி சைலன்ட் ஹார்ட் அட்டாக் வருவதை முன்கூட்டியே மக்களுக்குத் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கச் செய்யும். அனைவருக்கும் உபயோகப்படும் விதமாக முக்கியமாக நீரிழிவும், உயர் ரத்த அழுத்தமும் இருப்பவர்களுக்கு இக்கருவி மிகுந்த உபயோகமாக இருக்கும்.

இன்று வரை மருத்துவ சந்தையில் உள்ள மற்ற கருவிகளை விட 100% துல்லியத்தைத் தருவதால் இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ கவுன்சிலும் சேர்ந்து முறையாக காப்புரிமை பெற்று 900 ரூபாய்க்கு 24x7 என்ற நேர அடிப்படையில் இயங்கும்  இக்கருவியை  இவ்வாண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது” என்றார்.

மனித வாழ்க்கைக்குச் சவாலாக உள்ள ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான மாணவனின் முயற்சி விருதுகளோடு முடிந்துவிடாமல் அடுத்தகட்டமாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சி மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

  - வெங்கட்