ஸ்டேஷனரி கடை வைக்கலாம்…மாதம் ரூ.25,000 சம்பாதிக்கலாம்!சுயதொழில்

புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும் உருவாக்கவும் கடந்த சில மாதங்களாகச் சுயதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டும் கட்டுரைகளை வழங்கி வருகிறோம். அதில் திட்டஅறிக்கை மற்றும் தொழில் விவரங்களைக் கொடுத்து வந்தோம். தற்போது, தமிழகம் முழுவதும் பல சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ள வெற்றிவிடியல் ஸ்ரீனிவாசனிடம் நேர்காணல் மூலம் சுயதொழில் குறித்த விவரங்களைக் கேட்டோம். அவரிடம் பேசியதில் இருந்து...

*ஒருவர் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்றால் எந்த தொழிலை ஆரம்பிக்கலாம்?

இது ஒரு பொதுவான கேள்வி. குறிப்பான பதிலைச் சொல்ல முடியாது.  ஆனால், சந்தை வாய்ப்புகளில் ஒன்றைப் பார்க்கலாம். அது ஸ்டேஷனரி ஷாப்.  இதில் உற்பத்தி என்று எதுவும் இல்லை. டிரேடிங்தான். அதாவது, பொருளை வாங்கி விற்பது.

*டிரேடிங்காக இருப்பதால் ஸ்டேஷனரி ஷாப் வைப்பதில் என்ன அனுகூலம்?

உற்பத்தி கிடையாது.  அதனால் இயந்திரங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, முதலீடு குறைவு. ஒருவர் தனக்கு வியாபாரம் செய்வது பொருத்தமானதா என்று சோதித்துக் கொள்ளலாம்.

*சரி, எவ்வளவு மூலதனம் தேவைப்படும்?

இதற்கு சுமார் 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை பல விதங்களில் பண்ணலாம். கிராமப்புறமாக இருந்தால் குறைந்த முதலீடு.  நகர்ப்புறமாக இருந்தால் கூடுதல்  பணத்தேவை உண்டு.

*கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்?

அடிப்படைத் தேவைகள் எவை என்று பார்ப்போம். முதலில் தேர்வு செய்யப்பட வேண்டியது கடைக்கான இடம். அது சொந்த இடமாக இருந்தால் வாடகைச் செலவு கிடையாது. வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தால் வாடகை மற்றும் அட்வான்ஸ். அடுத்தது பொருட்களை அடுக்கிவைக்க அலமாரி. 

இதில் இரண்டு கூறுகள் உண்டு. ஷோகேஸ் மற்றும் விற்பனை அலமாரி. இது கண்ணாடியால் மூடப்பட்டு இருக்க வேண்டும். அடுத்தது  கடையின் உட்புறத்தில் உள்ள கோடவுன். இங்குள்ள அலமாரிக்குக் கண்ணாடிக் கதவு அவசியமில்லை.  பொருட்கள் விற்க விற்க உள்ளே இருந்து எடுத்து அலமாரியில் அடுக்கிக்கொள்ளலாம். 

மூன்றாவதாக ஸ்டாக் வைப்பது.  பேனா, பென்சில், அழிப்பான், ஃபைல் என்று பலவகைப் பொருட்கள் உண்டு.  நம்முடைய கடை எங்கு இருக்கிறதோ அதைப் பொருத்து ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளிக் கூடத்திற்கு அருகே என்றால் நோட்டுப் புத்தகத்தில் முதலீடு அவசியம். அலுவலகங்கள் அதிகமாக இருந்தால் ஃபைல், பின், பேப்பர் கிளிப் போன்றவைகளின் தேவை அதிகமாக இருக்கும்.

*வியாபார வாய்ப்புகள் எப்படி இருக்கும்?

ஸ்டேஷனரிப் பொருட்களின் தேவையை ஓரளவிற்குக் கணக்கிட்டுவிடலாம். ஆனால், அது மட்டும் போதாது. வேறு சில சேவை
களையும் செய்ய வேண்டும்.

*வேறு சேவைக்களுக்கு உதாரணம் சொல்ல முடியுமா?

நிச்சயமாகச் சொல்லலாம். கூரியர் சர்வீஸ் ஓர் எளிமையான உதாரணம். இப்போதெல்லாம் கூரியர் சேவை தருபவர்கள் சிறிய கடைகளைக்கூட தம்மோடு சேர்த்துக் கொள்கிறார்கள். அதாவது ஃபிரான்சைஸ். ஒரு அஞ்சல் உறைக்கு ரூ.15 கட்டணம் என்று வைத்துக்கொள்வோம்.  அக்னாலெட்ஜ்மென்ட் ஸ்லிப்பை நமக்கு ரூ.12 க்கு தருவார்கள்.

10 ஸ்லிப்பை வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாள் மாலையிலும் கூரியர் நிறுவனத்திலிருந்து ஆள் வருவார். எவ்வளவு கவர் நம்மிடம் இருக்கிறதோ அவற்றை வாங்கிக்கொள்வார். நாம் வசூலித்த பணத்தில் நம் கமிஷனை கழித்துக்கொண்டு மீதியை அவரிடம் கொடுத்துவிட வேண்டும். இருந்த இடத்திலேயே ஒரு உபரி வியாபாரம்.

*கடனுக்கு ஸ்டேஷனரி பொருட்கள் ஸ்டாக் தருவார்களா?

ஆரம்பத்தில் கிடைக்காது. போகப்போக கிடைக்கும்.  ஆனால், நம் தேவைக்கானதைப் பணத்தைக் கொடுத்து வாங்கினால் சில நன்மைகள் உண்டு. கேஷ் டிஸ்கவுன்ட் கிடைக்கும்.  அது நமக்கு லாபமாக மாறும்.

*வேறென்ன வகைகளுக்குப் பணம் தேவை?

எந்த பொருட்கள் அதிகம் வியாபாரம் ஆகுமோ அந்தப் பொருட்களை பணம் கொடுத்து வாங்கிவிட்டால் அதில் உடனடி லாபம் பார்க்கலாம். இனித் திட்ட அறிக்கையைப் பற்றிப் பார்ப்போம்.

இது ஒரு தோராயமான கணக்கு. கடை அமைக்கும் இடம் மற்றும் ஸ்டாக்குகளைப் பொறுத்து செலவுகள் மாறும்.

*அப்படியானால் ஒருவரிடம் 2,16,000 ரூபாய் இருந்தால் கடையைத் தொடங்கிவிடலாமா?

இரண்டு விஷயங்கள்தான் அதைத் தீர்மானிக்கும். நாம் கடையைத் தொடங்கும் இடத்தில் இன்னொரு கடை இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் வியாபார வாய்ப்பில் நமக்கு ஐம்பது சதவிகிதம்தான் கிடைக்கும். மேலும், அந்தக் கடை நீண்டநெடுங்காலமாக இருந்து வந்திருந்தால் நாம் காலை ஊன்ற கூடுதல் காலம் எடுக்கும்.

அடுத்ததாக, கடையைத் திறந்தவுடனேயே வியாபாரம் நடந்துவிடாது. முதலில் நத்தை வேகம். பிறகு ஆமை வேகம்.  அதன் பின்னர்தான் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்கும். இதற்கு 6 மாதங்கள் எடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த 6 மாதத்திற்குத் தேவையான சுமார் 1 லட்சம் ரூபாயும் தேவை. ஆக, மேற்படிச் செலவுகள் மட்டும் இருந்தால் 3 லட்சம் ரூபாய் முதலீடு தேவை.

*வியாபாரத்தைப் பெருக்க வேறு வழிகள் என்னென்ன?

முதல் நிலையில் டிரேடிங் மட்டும்தான். அது வியாபாரம் நமக்குச் சரிப்பட்டு வருகிறதா என்று சோதிக்க. பின்னர் மேலும் சில சேவைகளைக் கூட்டலாம். உதாரணமாக, ஜெராக்ஸ். சாதாரண மெஷின் ரூ.70,000-ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதில் வெவ்வேறு வகைகள் உள்ளன. நம் சக்திக்கு ஏற்ப வாங்கலாம். இதில் இன்னொரு வழியும் இருக்கிறது.

ஜெராக்ஸ் மெஷின் வாடகைக்குக்கூட கிடைக்கிறது. மாதம் ரூ.5,000 முதல் உண்டு. லீஸுக்கும் கொடுக்கிறார்கள். மாதத் தவணையிலும் மெஷினை வாங்கலாம். இது கூடுதல் வருமானத்திற்கு வழி வகுக்கும். ஆனால், மாத பட்ஜெட்டில் மாத வாடகை அல்லது இஎம்ஐ தொகையைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

*இந்த வியாபாரத்தில் லாப விகிதம் என்ன?

20 முதல் 25 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். இது ஒரு சராசரிக் கணக்குதான். அதாவது, பேனாவில் குறைவாகக் கிடைக்கும். பேப்பரில் கூடுதலாக இருக்கலாம். அதனால் சராசரியாக 20 முதல் 25 சதவிகிதம் என்று வைத்துக்கொள்ளலாம்.

*ஒருவர் தொழிலைத் தொடர்ந்து நடத்த எவ்வளவு வியாபாரம் செய்ய வேண்டும்?

நஷ்டம் ஏதுமில்லாமல் இருக்க, குறைந்தபட்சம் செலவுகளையாவது ஈடுகட்ட வேண்டுமே? அதாவது, ரூ16,000-மாவது கல்லாவில் வந்து விழவேண்டும் அல்லவா?  இப்போது ஒரு எளிய கணக்கைப் போடுவோம்.  20 சதவீத லாபம்.  அது ரூ.16000 என்றால் 100 சதவீதம் எவ்வளவு? 80,000 அல்லவா? அதுவே மாத பில்லிங் தொகையாக இருக்க வேண்டும். மாதத்தில் 4 நாட்கள்  வார விடுமுறை என்று கொண்டால் 25 நாட்கள் சுமாராக. 16,000ஐ 25ஆல் வகுத்தால் 3200. குறைந்தது 3200 ரூபாய் வியாபாரம் நடக்க வேண்டும்.

*இது பெரிய தொகையாக இருக்காதா?

ரூ.10,000 வாடகை உள்ள இடத்தில் ஏராளமான அலுவலகங்கள் இருக்கும். அதனால் இந்த விற்பனையை அடைய முடியும்.  வாடகை குறைந்தால் விற்பனையையும் குறைத்துக் கணக்கிடலாம். அதனால்தான் கூடுதல் முதலீடு தேவையில்லாத கூரியரையும் சேர்த்துக்கொண்டுள்ளோம். 

*போட்டியைச் சமாளிப்பது எப்படி?

தொடர்புகளை விரிவாக்குவது. வாடிக்கையாளர்களின் தேவையைத் தெரிந்துகொண்டு கூடுதல் சேவையையும் அளிக்கலாம். டைப்பிங் வேலை முதல் லேமினேஷன் வரை செய்துகொடுக்கலாம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

*குறைந்தபட்ச மூலதனமாக ஒருவர் எவ்வளவு தொகையைக் கொண்டு வர வேண்டியிருக்கும்?

மினிமம்  ரூ. 1 லட்சம். இது அடிப்படை தேவைகளான  ரூ.25,000 ஸ்டாக் வாங்க. கடை அட்வான்ஸ் கொடுக்க ரூ.50,000. பிறகு அறைகலன்கள் வாங்க ரூ.25,000.

*சரி ஒரு நாளைக்கு ரூ.3500 சேல்ஸ் நடக்கிறது. அதில் வரவும் செலவும் போக தொழில்முனைவோர்க்கு ஏதும் இருக்காதே?

மேலே நாம் பார்த்தது பிரேக் ஈவன் பாயின்ட்.  அதாவது, லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்கிற புள்ளி. ஆனால், சராசரியாக ஒரு வாடிக்கையாளர் ரூ.50-க்கு பொருள் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். நாள் ஒன்றுக்கு 100 வாடிக்கையாளர் வந்தால் ரூ.5,000 பில் போடுவோம்.  ஆக, நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1,000 மீதமாகும். அதாவது, பிரேக் ஈவன் பாயின்டுக்கு மேலே இருக்கும் தொகையே லாபம். 25 நாளில் ரூ.25,000 லாபம். ஆனால், நாள் ஒன்றுக்கு 3,500 ரூபாய்க்கு விற்பனையை அடைந்தே தீர வேண்டும்.

*வங்கிக் கடன் வசதிகள் பற்றிக் கொஞ்சம்  விளக்குங்களேன்?

இது ஒரு டிரேடிங் பிசினஸ். அதனால் முதலில் ஸ்டாக் வாங்க கடன் கிடைக்கும். முத்ரா என்ற திட்டத்தில் கடன் வசதிகள் உள்ளன. வங்கியோடு நல்ல உறவு இருக்கும்பட்சத்தில் அறைகலன்களுக்கும் கடன் கிடைக்கும். 

*இந்த வியாபாரத்தில் ஒருவர் மாதம் 25,000 ரூபாய் வரை சம்பாதிக்க வழியுண்டு என்று சொல்லலாமா?

சிறிய கடையாக இருந்தாலும் ஆரம்பத்தில் ரூ.10,000 வரை லாபம் கிடைக்கும். போகப் போக நாம் போட்ட கணக்கு மாதம் ரூ.25,000 வரை சாத்தியமாகும்.வியாபார யுத்தியைப் புரிந்துகொண்டு விற்பனையை அதிகப்படுத்தினால் அதற்கு ஏற்ப அதிக வருமானம் தரக்கூடிய தொழில் இது என்பது நிதர்சனமான உண்மை என்று தன்னம்பிக்கையை விதைக்கிறார் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்.

- தோ.திருத்துவராஜ்