TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்போட்டித் தேர்வு டிப்ஸ்

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணிகளுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை நடத்துவது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி இந்த வருடம் பிப்ரவரி 11ம் தேதி நடைபெற உள்ள CCSE IV தேர்வுக்கு 21 லட்சத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த முறை போட்டி கடுமையாக இருந்தாலும் கவனத்தோடு தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

இப்படி தமிழக அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்பவர்களுக்கு வழிகாட்டும் இந்தப் பகுதியில் பொது அறிவு சார்ந்த அறிவியல் பாடப் பகுதியைத் தற்போது நாம் பார்த்துவருகிறோம். அதன் தொடர்ச்சியை இனி பார்ப்போம். ஒளியியல் எதிரொளித்தல்: சமதள ஆடியில் படும் ஒளிக்கதிர்கள் எந்த ஊடகத்திலிருந்து வந்ததோ, அதே ஊடகத்திற்கு திரும்பும் நிகழ்ச்சிக்கு எதிரொளித்தல் என்று பெயர்.

எதிரொளித்தல் விதிகள்: படுகதிர், மீள் கதிர், படும்புள்ளியின் வழியே வரையப்படும் செங்குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.

* படுகோணமும், மீள் கோணமும் சமம்.

* சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் மாயபிம்பம் ஆகும்.

* சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது.

* சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் அளவும்  பொருளின்  அளவும்  சமமாக  இருக்கும். அச்சகங்களில் அச்சுக் கோக்கும்போது ஏற்படும் பிழைகளைக் காண்பதற்கு சமதள ஆடிகள் பயன்படுகின்றன.

* கலைடாஸ்கோப்பில் தோன்றும் வடிவங்களை வைத்து ஆடைகளில் டிசைன் அமைக்கிறார்கள்.

கோளக ஆடியின் பயன்கள்

* குழி ஆடிகள் முகச் சவரம் செய்வதற்குப் பயன்படுகின்றன.

* பல் மருத்துவர்கள் குழி ஆடியை உருப்பெருக்கியாகப் பயன்படுத்துகின்றனர்.

* பேருந்துகளின் முகப்பு விளக்குகள், டார்ச் விளக்குகள், பட வீழ்த்திகள், நுண்ணோக்கி ஆகியவற்றில் எதிரொளிப்பான்களாக குழி ஆடிகள் பயன்படுகின்றன.

* பேருந்து, கார் போன்ற வாகனங்களில் ஓட்டுநருக்கு அருகே பின்னே உள்ள பரந்த காட்சிகளைக் காண்பதற்குக் குவி ஆடிகள் பயன்படுகின்றன.

* ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும்போது தனது பாதையிலிருந்து சற்றே விலகிச் செல்கிறது. இதற்கு ஒளிவிலகல் என்று பெயர்.

* ஒளிவிலகல் அடையும்போது சில விதிகளுக்குட்படுகிறது. படுகதிர், விலகு கதிர், குத்துக்கோடு இவை மூன்றும் ஒரே தளத்தில் அமையும்.

* படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையேயுள்ள விகிதம் ஒரு மாறாத எண்ணாகும். இதற்கு ஸ்நெல் விதி என்று பெயர்.

* ஒளி விலகல் எண்: படுகோணத்தின் சைனுக்கும், விலகு கோணத்தின் சைனுக்கும் இடையேயுள்ள விகிதம் ஒரு மாறா எண். இந்த எண்ணிற்கு ஒளி விலகல் எண் என்று பெயர். தண்ணீரின் ஒளி விலகல் எண்.1.33, கண்ணாடி 1.5, பெட்ரோலியம் 1.38, வைரம் 2.4 சமதள ஆடிகள் கலைடாஸ்கோப், பெரிஸ்கோப் போன்ற ஒளியியல் கருவிகளில் பயன்படுகின்றன.

* நிறப்பிரிகையின் விளைவாகத் தோன்றும் வண்ணத் தோற்றம் நிறமாலை எனப்படும்.

* மிக அதிகமாக விலகல் அடையும் நிறம் ஊதா.

* மிகக் குறைவாக விலகல் அடையும் நிறம் சிவப்பு.

* முதன்மை நிறங்கள் சிவப்பு, நீலம், பச்சை இவை கலப்பதால் வெண்மை நிறம் உண்டாகும்.

* எல்லா நிறங்களையும் ஈர்த்துக் கொள்ளும் பொருள் கருமையாகத்  தோன்றும்.

* சிவப்பு நிற தட்டின் வழியாகப் பச்சை நிறப் பொருளையோ, பச்சை நிறத் தட்டின் வழியாகச் சிவப்பு நிறப் பொருளையோ பார்த்தால் கறுப்பாகத் தெரியும்.

லேசர்

* லேசர் கதிரானது ஒற்றை ஒளி, ஓரியல் ஒளி. அடர்வு மிக்கது.

* கண் அறுவை சிகிச்சையில் பயன்படுகிறது.

* மிகச் சிறிய துளையை உண்டாக்கப் பயன்படுகிறது.

* மருத்துவத்துறையிலும், 3டி படங்கள் எடுக்கவும் பயன்படுகிறது.

கண்ணாடி ஒளியிழை

* கண்ணாடி ஒளியிழை, முழு அக எதிரொளிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் ஒளிச்சேர்க்கை, மீச்சிறு அளவு ஆற்றல் இழப்புடன் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பரப்பப்படுகிறது.

கண்ணாடி ஒளியிழைப் பயன்பாடுகள்

* கண்ணாடி ஒளியிழைகள் வளைந்த பகுதியிலும் செல்வதால் நமது உடலின் உள்பகுதியைப் படம்பிடிக்கும் எண்டோஸ்கோப் கருவியில் பயன்படுகிறது.

* இதில் செய்திகள் குறைந்த ஆற்றல் இழப்புடன் எடுத்துச் செல்லப்படுவதால் தொலைபேசி, கணிப்பொறி ஆகியவற்றில் பயன்படுகிறது.

* ஒளியிழைத் தொழில்நுட்பம், நுரையீரல் போன்ற திண்ம உறுப்புகளில் உள்ள புற்றுநோய்க் கட்டிகள் அழிக்கப் பயன்படுகிறது.

* ஒளியிழைத் தொழில்நுட்பம், நுரையீரல் போன்ற திண்ம உறுப்புகளில் உள்ள புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கப் பயன்படுகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ளபடி மேலும் பல அறிவியல் சார்ந்த வினாக்களுக்கு விடையளிப்பதற்கான குறிப்புகளை அடுத்த இதழில் காண்போம்.      
                 

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்